Tamil books

Thursday 21 April 2011

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர்


 ‘திருக்கோவையார்’ நூலை 1860ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த நூலின் இறுதியில் இனி தான் வெளியிடப்-போகும் நூல்-களின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். அதில் புறநானூற்று உரை, கலித்தொகை உரை, சிலப்-பதிகார உரை, சீவக சிந்தாமணி உரை, வளையா-பதி போன்ற நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் சொல். சேனாவரையர் உரை, திருக்குறள் பரிமேலழகர் உரை, நன்னூல், பெரியபுராணம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் போன்ற நூல்களைச் செம்மையான பதிப்பாக வெளியிட்ட நாவலர் முற்குறிப்பிட்ட நூல்-களைத் தன் வாழ்நாளில் அச்சுக்குக் கொண்டு வரவேயில்லை. இதனால் ஐம்பெருங்-காப்பியங்-களில் ஒன்றாகிய ‘வளையாபதி’ இன்றைய தமிழில் இல்லாத நூலாகிவிட்டது. தமிழ்நூல் பதிப்புக் களத்தில் மிகச் சிறந்த முன்னோடியான ஆறுமுக நாவலர் சைவத்தின் மீது கொண்ட வெறியால் மேற்கூறிய நூல்-களைப் புறக்கணித்த-தாகப் பிற்காலத்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஈழ நாட்டின் யாழ்ப்பாணப் பகுதியில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே வெஸ்லியன் மிஷன், சர்ச் மிஷன், அமெரிக்கன் மிஷன் போன்ற செல்வ வளம் படைத்த சங்கங்-களைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தைத் தொடங்கி நடத்தினர். அவர்கள் பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் நிறுவி ஆங்கிலக் கல்வியின் ஊடாக ‘அஞ்ஞானிகளை’த் தெளிவித்துப் ‘பரிசுத்த ஆவி’ புகப் பண்ணி-னார்கள். இதனால் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வெள்ளாளர்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர். ஆங்கிலக் கல்வியும் கிறிஸ்துவ மதமும் அதைத் தழுவிய தமிழர்களுக்குச் செல்வவளம் மிகுந்த வாழ்க்கை-யையும் அரசாங்கப்பணி சார்ந்த அதிகாரத்-தையும் அளித்தன. நாவலருடன் பிறந்த சகோ-தரர்-கள் மூவரும் ஆங்கிலக் கல்வியின் பயனாக அரசாங்க  உத்தியோகங்களைப் பெற்றனர். நாவலரின் மனம் அதில் ஈடுபாடு கொள்ள-வில்லை. “நான் இங்கிலீஷிலே அற்ப விற்பத்தி-யாயினும் பெற் றிருந்தும் என்னோடு இங்கிலீஷ் கற்றவர்க ளுள்ளும் எனக்குப் பின் இங்கிலீஷ் கற்றவர்க ளுள்ளும் அநேகர் தங்கள் தங்கள் சக்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண்டும், நானும் என் சக்திக்கேற்ற உத்தியோகத்-தின் பொருட்டு முயற்சி செய்யின் அது தப்பாது சித்திக்குமென்றறிந்தும், அஃதில்லாமையால் விளையும் அவமதிப்பைப் பார்த்தும் உத்தியோ-கத்தை விரும்பவில்லை.
தமிழ்க் கல்வித்துணை மாத்திரங் கொண்டு செய்யப்படும் உத்தியோகம் வலிய வாய்த்த பொழுதும் அதையும் நான் விரும்பவில்லை.  ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும்போது அந்த மணமகனுக்கு வீடு, விளைநிலம், தோட்டம், ஆபரணம் ஆகியவற்றைக் கொடுத்துத் திருமணம் முடிப்பது யாழ்ப்பாணத் தமிழர்களின் பழக்கமாக இருந்தது. இத்தகைய வசதி வாய்ப்புகள்  நிறைந்த இல்வாழ்க்கையில் நான் நுழையவில்லை. இவைகள் எல்லாவற்றிற்கும் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்’’  (1868)1
திருமண உறவையும் விரும்பாமல் அரசுப் பணிகளையும் ஏற்காமல் அன்றைய யாழ்ப்-பாணத் தமிழர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் பணியில் நாவலர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேலோங்கி நின்றது சைவப்பண்பாடுதான். அதனைக் காத்து நின்ற ‘வேதங்கள்’ என்பன சைவம் சார்ந்த நூல்கள்தான். எனவே நாவலர் சைவ நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்து அச்சுரு ஆக்குவதிலும் அவற்றினடிப்படையில் குழந்தை-களுக்கும் இளைஞர்களுக்குமான பாடத்திட்ட நூல்களை உருவாக்குவதிலும் பாடுபட ஆரம்-பித்தார். கூடவே கிறிஸ்துவ மிஷினரிமார்களைப் போன்று தாமும் பள்ளிக்-கூடங்களை நிறுவி நடத்தத் தொடங்கினார்.
1841இலிருந்து 1851 வரையிலான காலத்தில் பைபிளை மொழிபெயர்ப்-பதில் பெர்சிவல் பாதிரி-யாருக்குத் துணையாக நின்றார். 1848இல் அந்த மொழிபெயர்ப்பு வேலை முடிவு பெற்றது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த பைபிள் 1850ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது.. இந்த வேலைக்காகப் பெர்சிவல் பாதிரியாருடன் நாவலரும் சென்னை வந்ததாகத் தகவல்கள் உள்ளன. இந்த பைபிள் மொழிபெயர்ப்புப் பணியின் அனுபவமானது, தமிழ் உரைநடை-யைக் கையாளும் ஆற்றலை நாவலருக்கு அளித்தது என்று கூறலாம்.
1851இல் நாவலர் எழுதிய ‘பெரியபுராண’ வசனம் தமிழ்மொழியில் முதல் முதலாக வெளிவந்த உரைநடை நூல்களில் முதன்மை-யான பெரிய நூலாகும். இந்தக் காலக்கட்டத்தை அடுத்து நாவலர் சிறுவர்களுக்கும் இளைஞர்-களுக்--கும் போதிப்பதற்காக எழுதிய பால-பாடங்கள் 1, 2, 3 என்பன வெளிவந்தன. தமிழ் உரைநடையில் மிகச்சிறப்பான பங்களிப்பு செய்தவர் ஆறுமுக நாவலர் என்பதை மேற்-கண்ட நூல்கள் உறுதிப்-படுத்துகின்றன.
பைபிள் மொழி-பெயர்ப்புப் பணியில் பெற்ற அனுபவத்தை அவர் பதிப்பித்த பழந்-தமிழ் நூல்களில் வெளிப்-படுத்தினார். 1851-- நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை, 1860 திருக்கோவையார் உரை, 1861 திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற நூல்கள் இன்றைய நவீன காலத்துப் பதிப்புகளையும் விஞ்சி நிற்கின்றன. நன்னூலுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மழைவை மகாலிங்கையரால் வெளி-யிடப்பட்ட தொல்---- _ எழுத்து _ நச்சினார்க்-கினியத்தையும் நாவலரின் நன்னூல் விருத்தியுரை-யையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த மாபெரும் வேறுபாடு பளிச்செனத் தெரியும். மழைவை மகாலிங்கையர் பதிப்பு ஏட்டுச்சுவடியைப் படியெடுத்தது போன்று இருக்கும். நாவலருடைய திருக்குறளில் குறள் தனியான அச்சிலும் அதற்கான பொழிப்-புரை வேறுவிதமான அச்சிலும் விசேடவுரை என்பது மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் மாறான வடிவிலும் அச்சிடப் பெற்றிருக்கும். நிறுத்தற்-குறிகள் போன்ற நவீனக் குறியீட்டு முறைகள் பின்பற்றப்பட்டிருக்கும். 1852இல் வெளிவந்த தேம்பாவணியிலோ, 1860இல் வெளிவந்த சதுரகராதியிலோ இந்த முறைகள் எதனையும் நாம் காண முடியாது.
தமிழறிஞராகவும், பதிப்பாசிரியராகவும் புகழ்பெற்ற நாவலர் தாம் எழுதிய நூல்களைத் தாமே அச்சுக்கூடம் நிறுவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1851இல் யாழ்ப் பாணத்தில் உள்ள வண்ணை நகரத்தில் வித்தியாநுபாலன எந்திரசாலை என்ற பெயரில் அந்த அச்சுக்கூடம் தொடங்கப்பட்டது. 1870ஆம் ஆண்டினை அடுத்தப் பகுதியில் அதே பெயரில் சென்னையிலும் ஒரு அச்சுக்கூடம் தொடங்கப்பட்டது.
குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பதிப்பாக எந்தப் பழந்தமிழ் நூலும் வெளிவராத காலத்தில் நாவலர் பதிப்புகள் வெளிவந்தன என்பதை மனதில் கொள்ள வேண்டும். தஞ்சை சாமுவேல் பிள்ளை வெளியிட்ட தொல்காப்பிய நன்னூல் ஒப்பீடு ஆங்கிலக் குறிப்புகளுடன் கூடிய நூல் மட்டும்தான் நவீன பதிப்புத் தன்மையுடன் வெளிவந்தது. இந்த நூலை நாவலர் பார்த்திருக்க
வாய்ப்பில்லை. எனவே நாவலர் பதிப்புகளை ஒப்பிட்டுச் சொல்லத்தக்க எந்த நூலும் அந்தக் காலத்தில் வெளிவரவில்லை என்று கூறலாம். தனக்கு முன் எந்த முன்னோடியும் இல்லாத நிலையில் வெளிவந்த நாவலர் நூல்கள் பிழையற்ற பதிப்புகள் என்று இன்றுவரை மதிக்கப்படுகின்றன. நாவலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை வெளியிட்ட கலித்தொகை  நச்சினார்க்கினியர் உரையில் உரையாசிரியர் பயன்படுத்திய தொல்-காப்பிய நூற்பாக்களுக்கு மட்டுமே அடிக்-குறிப்புகளில் நூற்பா எண் குறிக்கப்பட்டிருக்கும். மற்ற சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்-கணக்கு, காப்பியங்கள் போன்றவற்றிற்கு எவ்வித அடிக்குறிப்புகளும் இருக்காது. ஆனால் 1875இல்,- 1885இல் வெளிவந்த நாவலர் பதிப்பான திருக்குறள் பரிமேலழகர் உரையில் மேற்குறிப்-பிட்ட எல்லாவகை நூல்களுக்குமான உரை-யாசிரியர் குறிப்புகளுக்கான அடிக்குறிப்புகள் இடம் பெற்றிருக்கும்.
நாவலரின் நன்னூல் காண்டிகையுரை மற்றொரு வகையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதிப்பு முயற்சி எனலாம். இந்நூலின் பின்இணைப்பாக 60 பக்கங்களில் 1. அப்பியாசம், 2. பகுபத முடிவு, 3. சொல்லிலக்கண சூசி, 4. இலக்கணம் கூறிய உதாரணங்கள், 5. உபாத்தியாயருக்கு அறிவித்தல் என்ற பகுதிகள் ஒரு பழைய நூலை நவீன காலத்து மாணவர்-களுக்கு எப்படிக் கற்பிக்க வேண்டும் என்ற குறிப்புகளும் அதற்கான எடுத்துக்காட்டுகளும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்மேலும் ஆசிரியர்களும் மாணவர்களும் இதனை எந்தவகையில் புரிந்துகொள்வது என்ற அறிவுறுத்தல்களும் சொல்லப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறினால் இன்றைய காலத்திய கற்பித்தல் நெறிமுறைகளுக்கு நெருக்கமாக இந்த விளக்கங்கள் உள்ளன. அண்மைக் காலங்களில் நாவலர் பதிப்புகளை, குறிப்பாக நன்னூல் காண்டிகையுரையை வெளியிடுகின்ற பதிப்பாசிரியர்களும் பதிப்பகங்களும் இந்தப் பகுதிகளை நீக்கிவிட்டே வெளியிடுகின்றன. சுமார் 150 ஆண்டுகால நூற்பதிப்பு அனுபவ-முள்ள தமிழ்ச்சூழலில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.
நாவலர் வெளியிட்ட பதினோராந் திருமுறையின் முதல் பகுதியில் “தேவாரத்திற் போலவே பதினோராந் திருமுறை பிரபந்தங்களிற் சிலவற்றினும் சில செய்யுள்களும் அடிகளும் சீர்களும் இறந்து போயின. இறவாதுள்ளவை-களினும் பல மிகப் பிறழ்ந்திருக்கின்றன. பலவிடங்களினின்றும் வருவிக்கப்பட்ட பிரதிரூபங்களெல்லாவற்றினும் இக்குறைவுபாடு ஒத்திருக்கின்றது. ஆதலாற் சிற்றறிவினையுடைய பசுவர்க்கத்துக்குட்பட்ட சிறியேன் சிவாநுபூதிப் பெருவாழ்வுடையோர் திருவாக்கிலே இறந்த-வற்றைப் பூர்த்தி செய்தற்கும் பிறழ்ந்தவற்றை வேறு பிரதிரூபங்காணாது திருத்தி விடுதற்கும் அதிகாரியல்லேன்’’2 என்ற வாக்குறுதி போன்ற ஒரு குறிப்பு உள்ளது. துந்துபி (1922) வருடத்தில் வெளிவந்த மூன்றாம் பதிப்பில் உள்ள குறிப்பு இது. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு குறிப்பாக இதனைக் கருதலாம். இத்தகைய குறிப்புகளைத் தாமோதரம் பிள்ளையும் உ.வே.சாமிநாதையரும் வை.மு.கோ. போன்ற-வர்களும் எழுதியுள்ளனர். தாம் பதிப்பிக்கும் நூல்களில், ஏடுகளில் இல்லாதவற்றை இணைப்பதற்கு அஞ்சிய ஆறுமுக நாவலர் பற்றி 1901இல் வெளிவந்த ‘வருண சிந்தாமணி’ என்ற நூலில் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. நாவலர் பெரியபுராணத்திலும் வில்லிப்புத்தூரார் பாரதத்திலும் சூடாமணி நிகண்டிலும் ஏடுகளில் இல்லாத பாடத்தைப் புகுத்திவிட்டார் என்பது அக்குற்றச்சாட்டுகள். நாவலரின் மாணவராகக் கருதப்பட்ட கதிரைவேற் பிள்ளைக்கும் இராமலிங்க சுவாமியின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்ட மறைமலை அடிகளைச் சார்ந்தவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சச்சரவுதான் இத்தகைய பழியை நாவலர் மீது சுமத்தியதற்குக் காரணமாகும்.
சைவ சமயத்தை வளர்ப்பதில் வெறிகொண்டு உழைத்த நாவலர், தம் பதிப்புகள் எவற்றிலும் தன் கருத்துகளை ஏற்றியதாகச் சான்றுகள் இல்லை. இன்றுவரையில் செம்பதிப்புகளாகச் சிறந்து விளங்கும் நாவலர் பதிப்புகளை மேற்-கூறிய அவதூறுகளைக் கொண்டு சந்தேகப்பட முயற்சிப்பது நியாயமாகுமா? என்பது சிந்திக்கத்தக்கது.

No comments:

Post a Comment