Tamil books

Thursday 21 April 2011

நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள்

ஆ. தனஞ்செயன்


பல்வேறு அறிஞர்கள் கடந்த  பல ஆண்டு களுக்கு முன்னர் எழுதிப் பிரசுரித்த நூல்கள் பலவற்றை, அச்சு ஊடகத் தொழில் நுட்பம் மின்னணுமயப்படுத்தப்பட்ட இன்றைய சூழலில் பருண்மையான தொகுப்புகளாகப் பதிப்பித்து வெளியிடும் தொழில் சார்ந்த வினைப்பாடு அண்மைக் காலத்தில் மிகவும் பெருகி வந்திருக் கிறது.  பண்டைய இலக்கியங்கள்,  இடைக்கால, தற்கால இலக்கியப் படைப்புகள்,  அவற்றைப் பற்றிய அறிஞர்களின் நூல்கள் என்று பல வகையான நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பதிப்பாசிரியர்கள் சமீப காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளனர்.  இந்தப் பதிப்புப் பணியின் வாயிலாக அவர்களுக்கு சனரஞ்சகப் புகழும் கூடியுள்ளது.  ஏற்கனவே அச்சான ஒரு குறிப் பிட்ட ஆசிரியரின் பல்வேறு இலக்கியப் படைப் புகளை அல்லது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை ஒரு தர்க்க ஒழுங்கின் அடிப்படையில் வரிசைமுறைப்படுத்திக் கனிணி அச்சாக்கம் செய்து புத்தக வடிவில் வெளிப்படுத்துவது இன்று மிகவும் எளிதான வேலையாகிவிட்டது.  ஆனால், உ.வே. சாமிநாதைய்யர் போன்ற பதிப்பாசிரி யர்கள் காலத்தில் அது அவ்வளவு எளிதான வேலை இல்லை.  ஒரு குறிப்பிட்ட பனுவலின் பல்வேறு ஓலைச்சுவடிகளைத் தேடிப்பிடித்து, அவற்றில் காணப்பட்ட பாட பேதங்களை ஆராய்ந்து குறிப்புகள், விளக்கம், உரை என்று பல ஆண்டுகள் உழைத்து மிகவும் கவனமாக ஆய்வு செய்து வெளிக்கொண்டு வரவேண்டிய இன்றி யமையாப் பணியாக அன்றைய பதிப்புப்பணி இருந்தது.   இன்றைக்கு அந்த இடர்ப்பாடுகள் இல்லை.  எனவே,  இன்றைய புதிய பதிப்புகளில் அத்தகைய ஆய்வுக் கண்ணோட்டங்களுடன் கூடிய பதிப்புத்திறன் இடம் பெற்றுள்ளதா என்று பார்க்க வேண்டியது விமர்சகர்களின் கடமையாகும்.
எழுத்திலக்கியப் படைப்புகள், வியாக்கியான நூல்கள் உள்ளிட்ட பல வகையான நூல்களுக்கு என்று பதிப்பு முறை சார்ந்த ஒரு நெறிமுறை இருப்பதுபோல், வாய்மொழி இலக்கியங்கள், வாய்மொழி மரபுகள் பற்றிய தொகுப்புகளை வெளிக்கொண்டு வரும் பதிப்புமுறைக்கு என்று ஒரு நெறிமுறை கையாளப்பட்டிருக்கிறதா என்பதை, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திய நாட்டார் வழக்காறுகளின் தொகுப்பு நூல்களை அடிப்படையாகக்கொண்டுதான் அறிந்து கொள்ள முடியும்.  எழுத்து வடிவில் அமைந்த இலக்கியம் முதலிய துறைகள் சார்ந்த ஓலைச் சுவடிகள், காகிதப் பிரதிகள் ஆகியவற்றிலிருந்து பல்வேறு படைப்புகளை அச்சிலேற்றிப் பதிப்பித்தமைக்கு ஒரு நீண்ட வரலாறு இருப்பதுபோல், நாட்டார் வழக்காறுகளைப் பதிப்பித்து நூலாக்கி வெளியிட்டமைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.  ஆனால், இவ்விரண்டு துறைகளிலும் பதிப்புப்பணி என்பது ஒன்றுக் கொன்று வேறுபட்டது.  முன்னது, நூலாசி ரியர்கள் அல்லது புலவர்களின் படைப்புகள் இடம் பெற்ற ஓலைச்சுவடிகள், கையெழுத் துப்பிரதிகள் போன்றவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஆழ்ந்து  படித்து பாடபேதங்கள் இருப்பின் அவற்றைச் சுட்டிக் காட்டியும் சொற்பொருள் மற்றும் விளக்கக் குறிப்புகள் எழுதியும் வாசகர்கள் படிப்ப தற்கு வாய்ப்பாகச் செம்மைப் படுத்தி அச்சிட்டு வெளியிடுவது என்பதை அடிப்படையாகக் கொண்டது.  ஆனால் நாட்டார் வழக்காறுகள் என்று வரும்போது, எழுத்திலக்கியம் போல், அவற்றில் பெரும்பாலானவை முன்னரே ஏட்டில் பதிவு செய்ப்பட்டவை அல்ல. அவை மக்களிடம் வாய்மொழியாக வழிவழியாகப் புழக்கத்தில் இருந்து வருபவை.  உரிய தகவலாளிகளை இனம் கண்டு அவர்களிடமிருந்து முறையாகக் கேட் டெழுதியோ ஒலிப்பதிவு செய்து எடுத்தெழு தியோ பனுவல்களைத் தொகுத்து வகைமைப் படுத்த வேண்டும்.  அவ்வாறு தொகுத்தவற்றின் அடிப்படையில்தான் அவற்றை முறைப்படுத்தி அச்சாக்கம் செய்ய வேண்டும். அச்சாக்கம் செய்வதற்கு முன்னர் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களிலிருந்து வழக்காறுகளை எழுத்து வடிவத்திற்கு மாற்றும் படிமுறை என்பதும் மிகவும் சிக்கலானது.  நாட்டார் வழக்காற்றியல் தனி ஒரு கல்விப்புலமாக வளர்ந்த நிலையில், கடந்த நூற்றாண்டிலேயே  வழக்காறுகளை, சரியான தகவலாளிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து எவ்வாறு சேகரிப்பது, சேகரித்தவற்றை எப்படி எடுத்தெழுதிப் பாதுகாப்பது , அச்சிட்டு வெளியிடுவது என்பன பற்றிய முறையியல் பிரச்சனைகளை விவாதித் துள்ளனர்.  கடந்த 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டு களில் மேலை நாடுகளில், நாட்டார் வழக்காறு களைத் தொகுத்துப் பதிப்பித்து வெளியிடுவது என்பது கல்வி சார்ந்ததாக மட்டும் அமையாமல் அரசியல் கோட்பாட்டுப் பின்புலம் சார்ந்ததாக வும் இருந்தது.  ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில்  நாட்டார் வழக்காற்றியல் தனி ஒரு கல்விப்புலமாக உருவெடுப்பதற்கு முன்னரே, பல்வேறு வகையான வழக்காறுகளைச் சேகரித்துத் தொகுத்து வெளியிடும் முயற்சி, பல வெளிநாட்டு அறிஞர்களின் தன்னார்வம் காரணமாகவும் தமிழறிஞர்களின் நாட்டார் இலக்கியத்தின்பால் ஏற்பட்ட உணர்வு காரணமாகவும் செயல்வடிவம் பெற்றுவிட்டது.
வெளிநாட்டவர்கள் என்று கூறும்போது,  பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் பணியாற்றிய அதிகாரிகளும் கிறி°துவ சமயவியலார்களும் தமிழக நாட்டார் மரபுகளைச் சேகரித்துப் பதிப்பித்து நூல்க ளாக வெளியிட்டுள்ளனர்.  பீட்டர் பெர்சிவல், ஜான் லாசர° ஹெர்மன் ஜென்சன், சார்ல° கோவார், பெர்சி மாக்வீன், ஹென்றி ஒயிட் ஹெட், எட்கர் தர்°டன் போன்றோர் தமிழ் நாட்டார் மரபு களைச் சேகரித்துத் தொகுத்து வெளியிட்ட வர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.   இவர்களுக்குத் துணை புரிந்த தமிழ்நாட்டு எழுத்தறிவாளர்கள், அவர்களுடைய பணியால் உந்தப்பட்டு நாட்டார் மரபுகளைச் சேகரித்துத் தொகுத்து வெளியிடும் ஆர்வத்திற்கு ஆளாயினர்.  அவர்களுள் பண்டித நடேச சா°திரியின் பணியை முக்கியமானதெனக் குறிப்பிடுவர். ( ஆறு. இராமநாதன், 1997 : 24)
வாய்மொழி வழக்காற்றுத் தொகுப்புகள்- பாடல்கள்
குரலிசையை அடிப்படையாகக் கொண்ட தாலாட்டு முதல் ஒப்பாரி வரையிலான பலவகைப் பாடல் வடிவங்கள், தனி ஒருவராலும் பலரின் கூட்டுப் பங்கேற்பு வாயிலாகவும் படைக்கப் படுவன.  குறிப்பிட்ட வட்டாரத்தில் நிலம், நீர் முதலிய இயற்கை ஆதாரங்கள் சார்ந்து குறிப்பிட்ட தொழில், ஏனைய பொருளாதார நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும் மக்களின் உணர்வுகள், உறவுமுறை, உலகக் கண்ணோட்டங்கள் சமய நடைமுறைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் போன்ற வற்றைப் பிரதிபலிக்கும் வண்ணம் அந்தந்தச் சூழலில் பாடப்படும் வாய்மொழிப் பாடல்கள், எழுத்திலக்கிய ரசனை அனுபவப் பயிற்சியில் வளர்ந்த ஆர்வலர்களுக்கு எப்போதும் ஆர்வம் ஊட்டக்கூடியவை.  அதனால்தான், கடந்த சுமார் எழுபத்து ஐந்து ஆண்டுகளில் நாட்டுப்புறப் பாடல்கள் என்ற வாய்மொழிப் பாடல்களைப் பல்வேறு அறிஞர்களும் தொகுப்பாளர்களும் தத்தம் தேவை, விருப்பங்களுக்கு ஏற்ப ஏராளமான தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளனர்.  ஏனைய வாய்மொழி வழக்காறுகளை விட பாடல் கள்தாம் தொகுப்புகளாக அதிகம் வெளிவந்துள் ளன.
பஞ்சாப் மாநிலத்தைத் சேர்ந்த தேவேந்திர சந்தியார்த்தி இந்திய மாநிலங்கள் பலவற்றில் வாய்மொழி வழக்காறுகளைச் சேகரித்த நிகழ்வு அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த சிலரிடம் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் அதன் தாக்கம் இருந்தது.  கி.வா. ஜகந்நாதன், மு.அருணா சலம், பெ.தூரன், தி.நா. சுப்பிரமணியன், போன்றோர் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு களைப் பிரசுரிக்கத் தொடங்கினர்.   மதுரை முதலியார், ர. அய்யாசாமி, தமிழண்ணல், குப்புசாமி  முதலியார், நா. வானமாமலை, மு.வை. அரவிந்தன், செ. அன்னகாமு, ஆறு. அழகப்பன்,, புலவர். இளங்குமரன், மா. வரதராசன்,
சு. கிருட்டிணசாமி, ஆர்.டி. தங்கமுத்து தா°,
தி. நடராசன், ஏ.என்.பெருமாள், மெ. சுந்தரம் என்று நாளடைவில் நாட்டுப்புறப்பாடல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர்.  இன்றுவரையில் அது தொடர்கிறது. 
தமிழகத்தில் தொகுப்புகள் வெளியானது போல், இலங்கையிலும் பாடல்களைப் பதிப் பித்தது பற்றிய ஒரு வரலாறு உண்டு.  தி. சதாசிவ ஐயர் (1940), வ.மு. இராமலிங்கம் (1957).
சு. வித்தியானந்தன்(1960), எல்.எக்°.சி. நடராசர் (1962), செல்லையா மெற்றா° மயில் (1980) போன்றோர் வாய்மொழிப் பாடல் தொகுப்பு களைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டினர்.  1950ஆம் ஆண்டிற்குப் பின்னரே இலங்கையில் நாட்டார் வழக்காறுகள் பற்றிய சேகரிப்பு மற்றும் ஆய்வுப் பணி ஆகியவற்றில் சிலர் முனைப்புடன் செயல்பட்டதாகக் கூறுவர்.  (எ°. முத்துமீரான், 1997 : 27).  இலங்கை நாட்டார் வழக்காற்றியலின் பிதாமக்களாக வட்டுக்கோட்டை மு.இராம லிங்கம், பேராசிரியர். மு.கணபதிப்பிள்ளை போன்றோரைக் குறிப்பிடுகின்றனர்.  மலைநாட்டு மக்கள் பாடல்கள்(1983) என்னும் மலையகத் தமிழரின் வாய்மொழிப் பாடல் தொகுப்பைக் கொண்டு வந்த சி.கே. வேலுப்பிள்ளைக்கு பாடல் சேகரிக்க உந்துதலைத் தந்தவை வட்டுக் கோட்டை ராமலிங்கம், தேவேந்திர சத்தியார்த்தி, வெரியர் எல்வின் போன்றோர் சேகரித்து வெளியிட்ட பாடல் தொகுப்புகளே என்று கூறுவார் (சி.கே. வேலுப்பிள்ளை, 1983 : 12).  பொதுவாக மக்களுடைய பண்பாட்டைப் பிரதிபலிக்கும் அம்சங்களாக வாய்மொழிப் பாடல்களைப் பார்க்கும் அணுகுமுறை தமிழகத் திற்கும் இலங்கைக்கும் பொதுவானதாகத் தோன்றுகிறது.  ‘கிராமிய மக்களின் சமூக உறவு களையும் பண்பாட்டையும் அறிந்து கொள் வதற்கு நாட்டார் பாடல்கள் முக்கியமான ஊற்று மூலமாகத் திகழ்கின்றன என்ற எம்.ஏ.நுஃமானின் கருத்து  அதனை உறுதிப்படுத்துகிறது (மு.பு°ப ராஜன், 1976 : அம்பா, ப. 1).  அதிக எண்ணிக்கையில் வாய்மொழிப் பாடல் தொகுப்புகள் இலங்கையில் வெளிவந்தமைக்கும் இது ஒரு காரணமாகும்.  அதே சமயத்தில் தமிழகத்தில் வெளிவந்துள்ள பல தொகுப்பு நூல்களில் பாடல்களுக்குரிய தகவ லாளிகள், சூழல்சார்ந்த தரவுகள் போன்ற தகவல்கள் எவையும் இடம்பெறாமையைப் போலவே, ஈழத்து வாய்மொழிப் பாடல் தொகுப்புகளிலும் காணப்பட்டது.  மேலும், பாடல்களுக்குப் புனைவுப் பாங்கில் விளக்கம் கொடுக்கும் ஆர்வமும் தொகுப்பாளர்களிடம் மேலோங்கி நின்றது.
ஈழத்து நாட்டார் வழக்காற்றியலார் சேகரித்துத் தொகுத்து வெளியிட்ட வாய்மொழிப் பாடல்களின் நூல்களில் காணப்பட்ட இருவகைப் போக்கினை எம்.ஏ. நுஃமானின் வார்த்தைகளிலேயே அறிந்து கொள்ளலாம்.  “ஈழத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டுப் பாடல்களைச் சேகரித்து அச்சேற்றும் முயற்சிகள் சில நடைபெற்றுள்ளன.  மட்டக் களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய பிரதேசங்களுக்குரிய நாட்டுப் பாடல் தொகுதிகள் சில வெளிவந்துள்ளன.  பத்திரிகை களில் அநேகக் கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன.  வானொலிப் பேச்சுகள் பலவும் ஒலிபரப்பாகி யுள்ளன.   இவற்றில் பொதுவாக நாம் இரு போக்கு களைக் காணலாம்.  கிடைக்கக்கூடிய பாடல் களை எல்லாம் சேகரித்து அவற்றை அச்சிட்டு வெளியிடுவது ஒரு போக்கு.  இலக்கியச் சுவையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட பாடல்களைத் தெரிந்து ஒரு கற்பனைக் கதையைப் புனைந்து அதையே உண்மை எனப் பாவித்து அப்பாடல் களை விளக்க முனைவது மற்றது.  முதலாவது போக்கு வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை இரண்டாவது போக்கு,  தான்தோன்றித்தனமான கற்பனை உலகுள் நாட்டுப்பாடல்களை இழுத்து விட முனைவதால் ஒதுக்கப்பட வேண்டியதாக வும் உள்ளது” ( மு. புஷ்பராஜன், 1976 : அம்பா, பக். ii - iii).
தமிழகத்தில்கூட மு. அருணாசலம், கி.வா. ஜகந்நாதன், பெ. தூரன் உள்ளிட்டோர் தொடங்கி,  நாட்டார் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டவர்கள் செவ்வியல் இலக்கியத்திற்கு இணையானவையாகக் காட்டும் நோக்கத்தில் வாய்மொழிப் பாடல்களைச் செம்மைப்படுத் தியே நூல்களை வெளியிட்டனர்.   இந்நிலை ஏறக்குறைய 1940களில் ஆரம்பித்து அண்மைக் காலம் வரையில் தொடர்ந்தது.  1960களில் நா.வானமாமலை பதிப்பித்த தமிழர் நாட்டுப் பாடல்கள் தொகுப்பில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் இடம்பிடித்தன.  பாடல்களைச் சேகரித்த வர்கள், தகவலாளிகள், அவர்களுடைய வட்டாரம் முதலிய தகவல்கள் கொடுக்கப் பட்டுள்ளன.  இந்நூலினைக் குறித்துச் சில விமர்சனக் கருத்துகளை பா.ரா. சுப்பிரமணியன் வெளிப்படுத்திய நிலையில், “அவர் சுட்டிக் காட்டிய பல குறைகள் நூலில் காணப்பட்டாலும் இந்நூல் வெளிவந்து 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலை யில், இதனினும் சிறந்த தொகுப்பு வெளிவராதது குறிப்பிடத் தக்கது” என்று ஆறு. இராமநாதன் மதிப்பிடு கிறார் (ஆறு. இராமநாதன், 2001 : நாட்டுப்புறப் பாடற்களஞ்சியம், ப. 42 ).
தமிழர் நாட்டுப்பாடல்கள் நூலில், பாடல் களை வகைமைப்படுத்துவதில் காணப்பட்ட சிக்கல், பின்னர் வேறு பலர் தொகுத்து வெளி யிட்ட  பாடல் தொகுப்புகளிலும் தொடர்ந்தது.  பாடல்களை, அவற்றின் சூழலை மையப்படுத்தி வகைமைப்படுத்தும் அணுகுமுறையைப் பற்றி ஆறு. இராமநாதன் வலியுறுத்தினார் (= 1997 : 61-82).  “ நாட்டுப்புறப்பாடல்களை அவை வழங்கும் ‘சமுதாயச் சூழல்’ என்ற ஒரே அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துவதே சிறப்பானதாகவும் பொருத்தமானதாகவும் தெரிகிறது. சூழலை அடிப்படையாகக் கொண்டு தமிழக நாட்டுப்புறப் பாடல்களைத் தாலாட்டு, குழந்தை வளர்ச்சி நிலைப் பாடல்கள், விளை யாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழப்புப் பாடல்கள் என்று எட்டுப்  பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்ள லாம்” என்பது அவருடைய கருத்து.  இந்த வகைப்பாட்டு முறையைப் பின்பற்றியனவாக ‘நாட்டுப்புறப்பாடல் களஞ்சியம்’ என்ற தலைப் பில் பத்து தொகுதிகள் வெளிவந்தன.  பொதுவான வாசகர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகிய இரு பிரிவினரும் பயன்படும் வகையில் ஒரு செறிவான நெறிமுறையை வகுத்துக்கொண்டு அதன் அடிப் படையில் உருவாக்கப்பட்ட இத்தொகுப்புகள், 2000 ஆம் ஆண்டு வரையில் வெளிவந்த பாட்டுத் தொகுப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.  முதன்மைப் பதிப்பாசிரியர் என்ற முறையில் இதற்கு முன் இல்லாத வகையில், நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய ஒரு புதிய பதிப்பு முறையைத் திட்டமிட்டு வடிவமைத்து அதனை ஏனைய தொகுப் பாசிரியர்களையும் கையாளச் செய்து நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் (2001) தொகுதி களை மெய்யப்பன் தமிழாய் வகம் மூலம் கொண்டு வந்ததில் ஆறு. இராமநாதனின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத் தக்கது. வாய்மொழிப் பாடல்களின் பதிப்பு வரலாற்றில்  ‘நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்’ ஒரு செறிவான வளர்ச்சிக் கட்டத்தினைப் பிரதிபலித்துக் கொண்டிருக் கிறது.
கதைப்பாடல் பதிப்புகள்
கதைப்பாடல்கள் என்பன எழுத்தறிவும் வாய்மொழிப் பண்பும் கலந்த ஒரு கலவை வடிவமாகவே திகழ்ந்து வந்திருக்கின்றன.  ஓரளவு கதைப்பாடல்களைத் தொகுத்துச் செம்மைப் படுத்தி வெளியிட்டுவரும் முயற்சி நீண்ட நாட்க ளாக நடைபெற்று வருகிறது.  தனியார்களால் நடத்தப்பட்டு வந்த இரத்தின நாயகர் சன்° முதலிய பதிப்பகங்களும், தஞ்சை சர°வதி மஹால் நூலகம், சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை ஆசியவியல் நிறுவனம், உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்களும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் முதலிய பல்கலைக் கழகப் பதிப்புத் துறைகளும் கதைப்பாடல்களைப் பதிப்பித்துள்ளன.  சுவடிகளைத் தேடி வெளிக் கொணர்வதில் தனித்த ஆர்வம் கொண்டிருந்த ஆய்வாளர்களும் கணிசமான அளவிற்குப் பங்காற்றியுள்ளனர்.  பெரும்பான்மையான கதைப் பாடல்களைப் பொறுத்தவரையில், பனை ஓலைச் சுவடிகளிலும் காகிதச் சுவடிகளிலும் பதிவு செய்யப்பட்டவையாக இருந்தன.  பெரும்பான் மையான புராண, இதிகாசம் தொடர்பான கதைப்பாடல்களும் வரலாறு தொடர்புடைய கதைப்பாடல்களும் வாய்மொழி நிகழ்த்துதல் மரபிலிருந்து வழக்கொழிந்தவையாக இருந்தன.  பனை ஓலைச் சுவடிகளாகவும், எழுத்துப்பிரதி கள் வடிவிலும் இருந்த அத்தகைய பல கதைப் பாடல்களை வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து திரட்டிப் பதிப்பித்த நிலையைக் கதைப்பாடல் பதிப்பு வரலாறு வெளிப்படுத்துகிறது.   புராணத் திலும், இதிகாசத்திலும் சேராத “கோவலன் கண்ணகி கதை’ போன்ற கதைப்பாடல்கள், உடுக்கடித்துப் பாடுதல் மற்றும் வில்லிசை ஆகிய நிகழ்த்துதல் மரபில் முன்னர் வழக்கில் இருந்தன.  தற்போது நிகழ்த்துதல் மரபில் இல்லை.  அத்தகைய கதைப்பாடல்களும் பதிப்பிக்கப்பட் டுள்ளன.  அதே சமயத்தில், நாட்டார் சமயத் துடன் ஒருங்கிணைந்த பல தெய்வங்களின் கதைகள் ‘வாழும் மரபுகளாக’ இன்றும் வாய் மொழி நிகழ்த்துக்கலைஞர்களால் பாடப்பட்டு வருகின்றன.  தென்மாவட்டங்களில் சா°தா, சுடலை மாடன் மற்றும் முத்தாரம்மன், இசக்கி உள்ளிட்ட பல அம்மன்கள் ஆகிய நாட்டார் தெய்வங்களின் கதைகள் வில்லிசைக் கலைஞர் களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.  கொங்கு மண்டலம் எனப்படும் மேற்குத் தமிழகத்தில், அண்ணன்மார் சாமிக்கதை உடுக்கடிப்பாடகர் களால் நிகழ்த்தப்படுகிறது.  வட மாவட்டங்களில் கடலூர், திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் காத்தவராயன் கதை உடுக் கடித்துப் பாடப்படுகிறது.  இவ்வாறு,  சமயப் பின்புலத்தில் இன்றும் உயிர்வாழும் கதைப் பாடல்கள் பல,  ஏற்கனவே நூல்களாகப் பதிக்கப்பட்டுள்ளன.
வரலாறு, சமயம், சார்ந்த கதைப்பாடல்கள் பலவற்றில் சிலவற்றை மதுரைக் காமராசர் பல்கலைக் கழகப் பதிப்புத் துறை, பேராசிரியர் நா. வானமாமலையைப்  பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்டுள்ளது.  வரலாற்று  ஆவணங்களாகத் திகழும் வீரபாண்டிய கட்டபொம்மன்  கதை, கான்சாகிபு சண்டை, கன்னடியன் போர் முதலிய கதைப்பாடல்களையும், மதுரைவீரன் கதை, காத்தவராயன் கதை முதலிய சமூக-சமயக் கதைப்பாடல்களையும் நா.வானமாமலை பதிப்பித்துள்ளார்.  இப்பதிப்புகள், அவற்றின் பதிப்புநெறி காரணமாக ஆய்வாளர்களால் தனியே சுட்டிக்காட்டப்படுகின்றன.  அவர் பதிப்பித்த கதைப்பாடல்கள் பற்றிய ஆய்வுரையில் பல அரிய செய்திகளை முன்வைத்துள்ளார்.  கதைப்பாடல்கள் நிகழ்த்துதல் மரபாகத் திகழ்வன ஆதலால் அவற்றில் மாறுதல், திரிதல் என்பன இயல்பாக ஏற்படக்கூடியவைதாம் என்றாலும் சாதி மீறிய காதலைப் பிரதிபலிக்கும் சில கதைப் பாடல்களில் (உ-ம். மதுரைவீரன் கதை, காத்த வராயன் கதை) இடம்பெற்றிருந்த கதைக்கூறுகள் பல, சாதிய ஏற்றத்தாழ்வு அமைப்புமுறை காரணமாகவும் உயர்சாதிப் புரவலரின் மனம் கோணாதிருக்க வேண்டும் என்பதற்காகவும் பிரக்ஞைப் பூர்வமாகவே புலவர், பாடகர்களால் மாற்றப்பட்டுள்ளன என்கிறார்.
சில கதைப்பாடல்கள் அவை வெளிப்படுத் தும் உள்ளடக்கம் காரணமாக சமூக-பண்பாட்டுத் தளத்தில் தனித்தன்மை உடையனவாக விளங்கு கின்றன.  அவற்றுள் பத்திரகாளியம்மன் கதை (பதி. தி. நடராசன், இரா. சோதிமணி, 1980) குறிப்பிடத் தக்கது.  இது காளியைப் பற்றிய புராணமாக விளங்கினாலும் அதில் நாடார் சமூகத் தோற்றப் புராணமும் ஒருங்கிணைந்துள்ளது.  அவர்கள் பனைத் தொழிலை மேற்கொண்டதன் பின்புலத் தையும் இக்கதைப் பாடல் விவரிக்கிறது.  நெல்லை முதலிய வட்டாரங்களில் வில்லிசையாக நிகழ்த் தப்படுவது. இவ்வாறே, சக்திக்கனல் பதிப்பித்த ‘அண்ணன்மார் சுவாமிக் கதை’ திருச்சி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் முதலிய மாவட் டங்களில் அண்ணன் மார் சுவாமி அல்லது பொன்னர்-சங்கர் கோயிலில் நடைபெறும் வழிபாட்டோடு இணைந்தது.  உடுக்கடித்துப் பாடும் முறையில் நிகழ்த்தப்படும் அண்ணன்மார் சாமி கதை, சடங்கியல் நாடகத்திற்கும் அடிப் படையாகும்.  இந்தக் கதைப்பாடலில் இடம் பெறும் பொன்னர்-சங்கர் ஆகிய முக்கிய கதைமாந்தர்கள் கொங்கு மண்டலத்தில் பரவலாக வாழும் வேளாளக் கவுண்டர் சமூக முன்னோடி களாவர்.  வேட்டுவர்களுக்கும் கவுண்டர்களுக்கும் இடையே நிலவிய பகைமுரணுக்குச் சாட்சியமாக இக்கதைப்பாடல் திகழ்கிறது.  இதனைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட ப்ரெண்டா பெக்  நாட்டார் காப்பியம்; (குடிடம நுயீiஉ) என்று மதிப்பிடுகிறார்.  அவ்வகையில் தமிழில் முதல் நாட்டார் காப்பிய மாக அடையாளப்படுத்தப்பட்டதாக அண்ணன் மார் சாமிக்கதை விளங்குகிறது.
அச்சு ஊடகம் தமிழகத்தில் அறிமுகமாகிப் பரவியபோது, வாய்மொழி நிகழ்த்துதல் மரபில் வழங்கிய பனுவல்கள் பல அச்சாக்கம் பெற்றன.  அவ்வாறே புராண, இதிகாசக் கதைகள் பல கிராமியப் புலவர்களால் எழுதப்பட்டு, அச்சாக் கம் செய்யப்பெற்றுப்  பரவலடைந்திருக்கின்றன.  எழுத்து மரபும் வாய்மொழி மரபும் ஒருங் கிணைந்த பனுவல்களாகக் கதைப்பாடல்கள் புனையப்பட்டுள்ளன.  படிப்பதற்காகவும் வாய்மொழி நிகழ்த்துதலுக்காகவும் பயன்படும் வகையில் பிரசுரமான இக்கதை நூல்கள், ஒவ்வொரு நிகழ்த்துதல் மரபுக்கும் இயைந்த வகையில் உருவாக்கப்பட்டவை என்பதைக் காட்டுகின்றன.  உதாரணமாக ரதி-மன்மதன் புலம்பல் என்பது, காமுட்டிக் கோயிலில் மாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் காமதகனம் என்ற சடங்கியல் நிகழ்த்துதலை அடிப்படையாகக் கொண்டது.  அக்கோயிலில் நடைபெறும் விழாவில் ‘எரிந்த கட்சி - எரியாத கட்சி’  என்று எதிரெதிர் நிலையில் இருந்து பாடும் பாடகர்கள் , அச்சிடப்பட்ட பாட்டுப் புத்தகத்தையே தங்கள் மூலப்பிரதியாகக் கொண்டனர்.  அதுபோல், காத்தவராயன் கதை வாசிப்புக்கு ஏற்றவாறான பெரிய எழுத்துக் கதைப் பாட்டாகவும், பாட்டு, வசனம், நடிப்பு ஆகிய மூன்று கூறுகளை ஒருங்கிணைத்த ‘காத்தமுத்து நாடக’மாகவும், வில்லிசைக்கு ஏற்றவாறான ‘காத்தவராயன் கதைப்பாட்டாகவும், உடுக்கடிப் பாடலாகப் பூசாரிகள் பாடுவதற்கு உரிய வகையில் ‘பூசாரிப்பாட்டாக’வும் வடிவம் பெற்றுள்ளதை வெவ்வேறு பதிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறு அச்சு ஊடக அறிமுகம் காரண மாகக் கதைப்பாடல் நூல்கள், நாட்டுப்புறக் கதை மரபினை வெகுமக்கள் பண்பாட்டுத் தளத்திற்கு எடுத்துச் செல்லும் பணியை ஆற்றியுள்ளன.
செய்திக்கதைப்பாடல்கள்
அச்சுக்கலை அறிமுகத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நாட்டுப்புறமயமான பல புதிய கலை வடிவங்கள் தோன்றின.  ஓரளவு எழுத்தறிவைச் சார்ந்து படைக்கப்பட்ட அத்தகைய கலைப் படைப்புகளில் ஒன்றாகக் கொலைச் சிந்தினைக் குறிப்பிடலாம்.  அன்றாடம் நடைபெறக்கூடிய  வழக்கமான நிகழ்ச்சிப் போக்குகளில் இருந்து மாறுபட்டு, எதிர்பாராமல் நடைபெறக்கூடிய கொலை, கொலை வழக்கு,  கொள்ளை, வெள்ளப் பெருக்கு, ஆழிப்பெருக்கு, புயல் சேதம், ரயில் பாலம்,  கட்டடம் ஆகியவை இடிந்து விபத்து நேர்தல், பெரும் சமூகக் குற்றவாளிகளின் மரணம் என்பன போன்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இசைநயம் உடைய சிந்துப்பாடல்களே,   கொலைச் சிந்துகள்’ எனப் பட்டன.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் இத்தகைய சிந்துகள் கிராமியப் புலவர்களால்  புனையப்பட்டன.  உடனடியாக ஒரு பரபரப்பான தகவலை மக்களிடம் பரப்பும் ஒரு செய்தி ஊடகத்தின் தன்மையை இக்கொலைச் சிந்துகள் பிரதிபலித்தன.  மதுரைப் பச்சையப்பன் முதலிய ‘கிராமக் கவிராயர்கள்’ இச்சிந்துகளைப் படைத்தனர்; பாடகர்கள் முக்கிய இடங்களில் நின்று டேப் (தப்பட்டை) என்னும் தோலிசைக் கருவியை அடித்துப் பாடினர்.  அதனாலேயே இவ்வகைப் பாடலுக்கு ‘டேப் பாடல்’ என்ற பெயரும் ஏற்பட்டது. இதற்குச் செய்திக் கதைப்பாடல் என்று ஒரு புதிய பெயரை ஆறு. இராமநாதன் கொடுத்தார்.  
ஆ. இரா.வேங்கடாசலபதி, ‘முச்சந்தி இலக்கியம்’ என்று பெயர் சூட்டினார்.   ‘குஜிலி இலக்கியம்’ என்ற பெயரையும் அவர் எடுத்துக் காட்டினார்.  சிறு சிறு வெளியீடுகளாக ஓர் அணா, அரை அணா என்று விலைக்கு விற்கப்பட்ட இத்தகைய சிந்துப் பாடல்களின் தொகுப்புகளைக் கடந்த இருபது ஆண்டுகளில் பல ஆய்வாளர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.  அத்தொகுப்பு களில் சில ஆழ்ந்த ஆய்வுக் கண்ணோட்டத்தில் அமைந்த கட்டுரைகளையும் மூலப் பனுவல்களை யும் ஒருங்கிணைத்துள்ளன.  இப்பனுவல்கள் ஏற்கனவே அச்சானவை என்பதால்,  அவற்றைக் களப்பணி மூலம் தகவலாளிகளிடமிருந்து   நிகழ்த்துநர்களிடமிருந்து சேகரிக்க வேண்டிய அவசியமில்லை.  பழைய புத்கக் கடைகள், ஆவணக்காப்பகங்கள், நூலகங்கள் ஆகியவற்றி லிருந்தே இப்பனுவல்கள் சேகரிக்கப்பட்டன.  இப்பிரதிகள் ஒருவகையில் ஒருவகை நாட்டார் வழக்காற்றியலைப் (குடிடமடடிசளைஅ) பிரதிபலிப்பவை என்றால் அது பொருத்தமானதே.  கொலைச் சிந்தினை - ‘டேப்’ பாடலைப் பாடும் நிகழ்த்துதல் மரபு இன்றில்லை.  ஆனால், அப்பாடல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்வதில் சில அறிஞர்கள் ஆர்வம் காட்டியதால் செய்திக்கதைப் பாடல் களாக, முச்சந்தி இலக்கியமாக நமக்கு இன்று கிட்டுகின்றன.  கே.ஏ. குணசேகரன் (நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், 1988)  அரு. மருததுரை ( தமிழில் கொலைச் சிந்துகள்) ஓ. முத்தையா (சந்தனத் தேவன் கதை, 2004 ), ஆ. இரா. வேங்கடாசலபதி (முச்சந்தி இலக்கியம், 2004) போன்றோர் செய்திக் கதைப் பாடல்களைப் பதிப்பித்துள்ளனர்.
‘பெரிய எழுத்துப் புத்தகம்’ ‘குஜிலி’ ‘காலணா-அரையணா பாட்டுப் புத்தகம்’ என்று பலவாறு வழங்கிய முச்சந்தி இலக்கியம்’ என்னும் தலைப்பில் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய இந்நூல் முற்பகுதியில் ஆய்வுரையையும் பிற்பகுதியில் ‘அணுக்கம்பட்டு செடல் முத்தாலு அம்மன் சிறப்பு’ முதல் , ‘ஹோம்ரூல் கண்டன திராவிடர் முன்னேற்ற இராஜ விஸ்வாசக் கும்மி’ வரையில் இருபத்தெட்டுக் குஜிலிப் பாடல்களையும் கொண்டது.  ஆய்வு மற்றும் தொகுப்பு என்ற வகையில் இந்நூல் ஒரு முக்கிய வரவாகும்.

No comments:

Post a Comment