Tamil books

Thursday, 21 April 2011

தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள்

வ. கீதா


முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் படிக்கும் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு தமிழில் வாசிப்பு நூல்கள் அதிகம் இருக்க-வில்லை.  அம்புலிமாமா, கோகுலம்  போன்ற இதழ்கள் தொடர்ந்து வெளிவந்த போதிலும், வார இதழ்கள் சிறார்களுக்கான தனிச்சிறப்பான இணைப்புகளை வெளியிட்ட போதிலும்,  சிறார்-களுக்கென குறிப்பிட்டுச் சொல்லும்படியான நூல்கள் ஏதும் இக்காலகட்டத்தில் இயற்றப்-பட்டதாகத் தெரியவில்லை. 
என்றாலும், குழந்தைகள் படித்த, அவர்-களுக்கு அறநெறி புகட்டுவதற்கென எழுதப்-பட்ட நூல்கள் தொடர்ந்து வெளிவந்தன. ஆனால், அவை குழந்தைப் பருவத்துக்குரிய அனுபவங்களையோ குழந்தைகளின் கற்பனை, மனநிலை ஆகியவற்றை மையமிட்டிருக்க-வில்லை. குழந்தை மொழியையும் கொண்டிருக்க-வில்லை.  பரமார்த்த குருவும் சீடர்களும், பீர்பால் கதைகள், தெனாலி இராமன் கதைகள்  ஆகியவையும்  அம்புலிமாமா, கோகுலம் போன்ற இதழ்களில் வெளிவந்த விக்கிரமாதித்தன் கதைகளும், பௌத்த ஜாதகக் கதைகளும், பஞ்ச-தந்திரக் கதைகளும்  இந்த வரிசையில் அடங்கும். 1970களில்  முத்துகாமிக்ஸ், கல்கண்டு  இதழில் வெளிவந்த சங்கர்லால் கதைகள், 1980களில் வெளிவந்த மாயமந்திரக் கதை வரிசை ஆகிய-வற்றை 10, -12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படித்த போதிலும், அவையுமே குழந்தைகளுக்-கான பிரத்யேக நூல்களாக இருக்கவில்லை. 
இத்தனைக்கும் தமிழகத்தில் சிறார் இலக்கியம் என்பது தனிச்சிறப்பான இலக்கிய வகையினமாக அடையாளப்படுத்தப்பட்-டிருந்தது. -அழ. வள்ளியப்பா, பெரியசாமித் தூரன்,     கல்வி. கோபாலகிருஷ்ணன், வாண்டு மாமா ஆகியோர் குழந்தை எழுத்தாளர்களாக அறியப்பட்டனர். இன்னும் சொல்லப் போனால், முதன்முதலில் அவர் எழுதத் தொடங்கியபோது, பெ.நா. அப்புசாமியின் அறிவியல் விளக்க நூல்களும் கூட குழந்தைகளுக்காக எழுதப்-பட்டவைதான்.  என்றாலும் குழந்தைகளின் விரிந்த கற்பனைக்கு வளம் சேர்க்கும் முயற்சிகள் அரிதாகவே அமைந்தன. - இன்னும் சொல்லப் போனால் சிறார் இலக்கியம் என்றாலே போதனா இலக்கியம்தான் என்ற புரிதல் தமிழ்ச் சூழலில் ஆழ வேரூன்றியிருந்ததுதான் இதற்குக் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. வங்க மொழி-யிலோ, குஜராத்தி மொழியிலோ மலையாளத்-திலோ வெளிவந்துள்ள சிறார்-களுக்கான நூல்களுடன் தமிழ் நூல்களை ஒப்பிடும்போது நமக்கு இது நன்றாகவே விளங்குகிறது. அழ. வள்ளியப்பாவின் பாடல்கள் குழந்தைகள் ரசிக்கக்கூடிய நகைச்சுவையையும், சொற்கட்டை-யும் கொண்டிருந்தபோதிலும் அவற்றிலுமே குழந்தைகளை அறநெறிப்படுத்தும் கருத்துகள்-தான் மேலோங்கியிருந்தனவேயன்றி, அவர்களது கற்பனையை ஆட்கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்ல. குழந்தை இலக்கியம் என்ற பெயரில் இதுவரை வெளிவந்-துள்ள நூல்களில் குழந்தைமை, குழந்தைப் பருவம், குழந்தை உளவியல் ஆகியன எவ்வாறு வெளிப்பட்டுள்ளன என்பன குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்-படவில்லை. அவ்வாறு ஆய்வுகள் நடத்தப்-பட்டால், குழந்தை இலக்கியம் என்பதற்கு நவீன தமிழ்ச் சமுதாயம் வழங்கியுள்ள பொருளை நம்மால் துல்லிய-மாக இனங்காண முடியும்.  
குழந்தைகளுக்குப் படிக்க நூல்களே இருக்கவில்லை என்பதல்ல நாம் கூற வருவது. குழந்தைகள், குறிப்பாக, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தினத்தந்தியில் வெளிவந்த  கன்னித் தீவு, குமுதத்தில் வெளிவந்த  பேராசிரியர் மித்ரா  போன்ற படக்கதைளையும், கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் வரலாற்று நாவல்களையும், பாக்கியம் இராமசாமியின் அப்புசாமியும் சீதா பாட்டியும்  தேவனின் துப்பறியும் சாம்பு போன்ற நூல்களையும் படித்து வளர்ந்ததாக இணைய-தளத்தில் தமது இளமைக்கால நினைவுகளைப் பதிவுசெய்துள்ள பலர் குறிப்பிட்டுள்ளனர். இவை போக, பெரியவர்களுக்குத் தெரியாமல் புஷ்பா தங்கதுரையின் எழுத்துகளையும்,    ரா.கி. ரங்கராஜனின் படைப்புகளையும் தாம் படித்ததையும் பலர் நினைவுகூர்ந்துள்ளனர். இத்தகையதொரு வாசிப்பு அனுபவத்தை  சிலுவைராஜ் சரித்திரத்தில் ராஜ் கௌதமனும் பதிவு செய்துள்ளார்.  
இவை போக, கடந்த இரண்டு, மூன்று தலைமுறைக் குழந்தைகளாவது முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து வெளிவந்த, மலிவு விலையிலான பலரகப் புத்தகங்களைப் படித்து வளர்ந்தனர்.  அப்புத்தகங்கள் பாவித்த மொழி குழந்தைகளுக்குரியதாக இல்லாமல் போனாலும் அவை அறிமுகப்படுத்திய வண்ணவண்ண உலகங்களும், கதாமாந்தர்களும், அப்புத்தகங்-களின் அடியூடாக அமைந்த அசாத்தியமான கற்பனை வளமும் குழந்தைகளின் மனநிலைக்கு உகந்தவையாக, அவர்களின் கற்பனைக்கு மிக நெருக்கமானவையாக விளங்கின. மேலும், பெரியவர்கள் படிக்கக்கூடிய இலக்கிய நூல்களையும் மொழிபெயர்ப்பு நூல்களையும் படித்து வளர்ந்த குழந்தைகளும் இருக்கவே செய்தனர் (பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்தோயின் சேங்_-எக்ஸ்யூபெரியின்  குட்டி இளவரசன்  தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்த போது 12, 13 வயது குழந்தை-களும் அந்நூலை ஆர்வத்-துடன் வாசித்தனர்.)  குழந்தை-களின் வாசிப்பு என்ற ரீதியில் நாம் யோசிக்கத் தொடங்கி-னால் குழந்தை இலக்கியம் என்ற ஒன்றைக் கடந்தும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கும். குழந்தைகள் எதைப் படிக்க வேண்டும், எதைக் கண்டிப்-பாகப் படிக்கக்-கூடாது என்பதை முடிவு செய்யும் பெற்றோர்-களின் நோக்குநிலையையும் நாம் ஆராய வேண்டியிருக்கும். 
வேறொரு முக்கியமான பிரச்சனையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் குழந்தைப் பருவம் என்ற ஒன்றை நாம் அண்மைக்காலம் வரை தனியரு வாழ்நிலையாக அடையாளங் காணவில்லை. குழந்தைப் பருவத்தைக் கொண்டாடும் பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் தமிழில் உள்ளபோதிலும் அவை அப்பருவத்துக்குரிய சமூக உள்ளீட்டை-யும் வெளிப்பாடுகளையும் பற்றி அதிகம் பேசுவதில்லை. அடுத்து, நவீன காலம்வரைக்கும் குழந்தைகளும் பெரியவர்களும் முற்றிலும் வெவ்வேறான உலகங்களில் புழங்கவில்லை. நவீனத்தின் நற்பயன்களைத் துய்க்காத பலருக்கு இன்றும்கூட பிரத்யேகமான குழந்தைப்பருவம் என்ற ஒன்று இல்லை என்றுகூடச் சொல்லலாம். செய்யும் வேலையாக இருக்கட்டும், சுமக்கும் பொறுப்புகளாக இருக்கட்டும், நிறைய குழந்தைகள் இன்றும் பெரியவர்கள் புழங்கும் உலகில்தான் தொடர்ந்து வாழ்கின்றனர், செயல்படுகின்றனர்.  எனவே, குழந்தைப் பருவம் என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்-துக்குரிய சேட்டைகளும் சந்தோஷங்களும் சின்னச் சின்ன அவலங்களும் எல்லாக் குழந்தை-களுக்கும் பொதுவானவைதான் என்றாலும், சாதியரீதியான, வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வு-களும், பால் இன வேறுபாடுகளும் குழந்தை-களின் வாழ்வைப் பாதிக்கவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, வித்தியாசமின்றிக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கையில் வெற்றி யாருக்கு என்று வரும்போது ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைக்காக, ஏழை, எளிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. பெருமாள் முருகனின் கூளமாதாரியில் ஒரு சம்பவம்_ ஊர்க்கவுண்டர் வீட்டுக் குழந்தையும் செருப்புத் தைக்கும் தொழிலாளிகளான சக்கிலிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆட்டத்தில் சக்கிலிய வீட்டுக் குழந்தை வெற்றி கொள்வது போல இருக்கும் தருவாயில், கவுண்டர் வீட்டுச் சிறுவன் அவனைத் தனது தந்தையிடம் போட்டுக் கொடுக்கப் போவதாக அச்சுறுத்த, அந்த சக்கிலியச் சிறுவன் பயந்து, விட்டுக் கொடுத்து விடுவான். ஆனால் வேறு நேரங்-களிலோ குழந்தைகள் ஒன்றாக இருப்பார்கள், சாப்பிடுவார்கள், தூங்குவார்கள்...  
பத்தொன்பதாம் நூற்றாண்டுதொட்டு குழந்தைகளைப் பற்றிய, பெரியவர்களாகிய நமது கண்ணோட்டம் மாறி வந்துள்ளது. குழந்தைப் பருவம் என்பதன் தனிச்சிறப்பான பண்புக்கூறுகளை அடையாளப்படுத்துவதும், குழந்தைமைக்கு மட்டுமே உரியதாகச் சில மனநிலைகளையும் நடத்தைகளையும் அறியவும் நாம் பழகியுள்ளோம். குழந்தைகள் பெரியவர்-களைப் போல அல்ல. அனுபவரீதியாகவும் அறிவுரீதியாகவும் பார்க்கையில் அவர்களது உலகம் மிக வித்தியாசமானது. உளவியல்ரீதி-யாகவும் கூட குழந்தைகள் பெரியவர்களாகிய நம்மிடமிருந்து வேறுபடவே செய்கிறார்கள், குழந்தைமை என்ற ஒன்றின் சிறப்புக் கூறுகளை நாம் புரிந்துணர வேண்டும். இக்கருத்துகள் நம்மிடையே நிலைபெறுவதற்குப் பல நாட்கள் ஆனாலும் இன்று இவற்றை மறுப்போர் இல்லை என்றே சொல்லலாம். 
குழந்தைப் பருவத்தைப் பற்றி நாம் இவ்வாறு சிந்திக்க 19ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சூழல்தான் காரணமாக இருந்தது. சாதி, மத, பேதமின்றி அனைவரும் படிக்க வேண்டும், ஆண்-பெண் வித்தியாசமின்றி எல்லோரும் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்துகளை ஆங்கில ஆட்சியின்போது நிறைய பேர் முன்வைத்தனர். எனவே குழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு குடும்ப, சாதி தொழிலைப் பார்ப்பதைக் காட்டிலும் பள்ளிக்குச் சென்று நாலு எழுத்து படித்து வெளியேற வேண்டும் என்பதைப் பலரும் ஏற்றுக் கொண்டனர்.  குழந்தை-களைப் பள்ளிக்கு அனுப்புவது என்றான பிறகு, அவர்களுக்கு எதைச் சொல்லிக் கொடுப்-பது, எதைப் படிக்கக் கொடுப்பது என்பன போன்ற கேள்விகளுக்கும் விடைகளைத் தேட வேண்டியிருந்தது. இந்தச் சூழலில்தான் குழந்தைக்குரியவற்றைப் பற்றிப் பலரும் பேசத் தொடங்கினர். குழந்தைமை என்ற சொல்லாட-லும் புழக்கத்துக்கு வந்தது. இந்தவொரு பின்னணியில்தான் சிறுவர்களுக்கான எழுத்து, இலக்கியம் எப்படியிருக்க வேண்டும் என்பதைக் குறித்த சிந்தனையும் வளரத் தொடங்கியது.  
இது போன்ற விஷயங்களைப் பற்றி ஆழமாக சிந்தித்தவர்களில் இங்கு தேவ ஊழியம் புரிய வந்த கிறிஸ்துவ சமயப் போதகர்களே முதன்மை-யானவர்களாக இருந்தனர். குழந்தைகளுக்கான இதழ்களை இவர்கள் தொடங்கியதோடு குழந்தைகளுக்கு உரித்தான எழுத்து எப்படி-யிருக்க வேண்டும், என்னென்ன கருத்துகள் அவர்களுக்குப் புகட்டப்பட வேண்டும், அவர்களை நன்னெறிப்படுத்தக்கூடிய எழுத்துகள் யாவை ஆகியவற்றை அவர்கள் தீர்மானிக்க வந்தனர். அவர்களைப் பின்பற்றி சிறார்களின்பால் அக்கறை செலுத்திய இந்து சமய, சமுதாய சீர்த்திருத்தவாதிகள் இதே அளவுகோள்களைப் பயன்படுத்தி குழந்தை-களுக்கான தேசிய இலக்கியம் எவ்வாறிருக்க வேண்டும் என்று யோசிக்கலாயினர். தமிழ்ச்-சூழலில் தமிழறிவு, திராவிட நாகரிகத்தின் மேன்மை ஆகியற்றை உணர்த்தும் சிறார்களுக்-கான நூல்களின் தேவை என்ற கருத்து 1930களில் விவாதிக்கப்பட்டது. 
உள்ளடக்கம் சார்ந்த மாற்றங்களை மட்டுமே இவர்கள் அனைவரும் மேற்கொண்டனரேயன்றி, சிறார் உலகம், கற்பனை, மொழி ஆகியன குறித்து விவாதங்களை வளர்க்கவில்லை (வங்கத்-தில் தாகூர் இதைச் செய்தார்). சிறார்களுக்கு நன்னெறி புகட்டும் எழுத்துகளே போது-மானவை என்ற கருத்தும் விவாதிக்கப்பட-வில்லை, விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட-வில்லை. 
குழந்தை மொழி குறித்த விவாதங்களும் இங்கு முன்னெடுக்கப்படவில்லை. இதற்கு வேறொரு காரணமும் உண்டு. - பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என்ற பாகுபாடுகள் உள்ளதா-லும், எழுத்துத் தமிழே உயர்வானதாகக் கருதப்படுவதாலும், புழங்கு மொழியைக் குழந்தை இலக்கியம் படைத்தவர்கள் கையாளவில்லை. இன்றைக்கு இந்நிலைமை நிறைய மாறியுள்ள போதிலும் - வட்டார வழக்கில் இலக்கியம் படைப்பது இன்று விதியாகவே ஆகிவிட்டது என்று கூடச் சொல்லலாம். - குழந்தைகளுக்கான படைப்புகளைப் பொறுத்த வரை, இன்றும்கூட நாம் எழுத்துத் தமிழை மட்டுமே பொருத்த-மானதாகப் பாவிக்கிறோம். குழந்தைகள் அவர்களுக்குரிய, அவர்கள் வாழும் சூழலுக்குரிய மொழியைப் பயன்படுத்தினால் அதைத் தவறு என்றே அடையாளப்படுத்துகிறோம். குழந்தை-களின் அனுபவத்தையோ அவ்வனுபவத்தை வெளிப்படுத்த குழந்தைகள் கையாளும் மொழிக்-கும் நம்மில் பலர் உரிய மதிப்பை வழங்குவ-தில்லை. கல்வியாளரும் குழந்தைகளின் உரிமை-களில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் அருணா ரத்தினம் கீழ்க்கண்ட சம்பவத்தைத் தனது கட்டுரையன்றில் பகிர்ந்து கொண்-டார். ஒரு பள்ளிக்கூடத்தில் சம்பங்கி என்றால் பூ என்று ஆசிரியர் சொல்ல, ஒரு குழந்தை இல்லை, சம்பங்கி என்பது ஒரு மீனின் பெயர் என்று வாதிட, ஆசிரியர் அக்குழந்தை அவ்வாறு சொன்னதன் காரணத்தை அறிவதற்குப் பதில் அதனைச் சாடினாராம். முடிவில் குழந்தை சொன்னதில் தவறில்லை என்பதை ஆசிரியர் பின்னால் அறிந்து கொண்டார். - அக்குழந்தை மீனவச் சமுதாயக் குழந்தை, சம்பங்கி என்பது மீனின் பெயர் என்பது அக்குழந்தைக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
கடந்த இருபது வருடங்களில் சிறார் இலக்கியவுலகில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்-ளன. சிறுவர்களுக்கான இதழ்களின் எண்-ணிக்கை கூடியுள்ளதுடன், சிறுவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்க தனியார் தன்னார்வக் குழுக்களும் அரசு சாரா அமைப்-புகளும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக அரசும் இத்தகைய முயற்சியில் இறங்கி-யுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களுக்கான முகாம்களிலும் சிறப்புப் பள்ளிகளிலும் தொடங்-கிய இம்முயற்சிகள், இன்று பலவிதமான நூல்கள் வெளிவர காரணமாக இருந்துள்ளன. இம்முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆங்கிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறார் இலக்கிய நூல்களை வெளியிட்டுவரும் பதிப்பகங்கள், தமிழிலும் சிறார் இலக்கியப் படைப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பின்பற்றி சில தமிழ்ப்பதிப்பகங்களும் சிறார்களுக்கான நூல்களை வெளியிட்டு வருகின்றன. கதைகள், பாடல்கள், தகவல் களஞ்சியங்கள் என்று குழந்தைகளுக்கான செய்திகளைப் பழைய பாணியிலேயே இவை வழங்கி வந்தாலும், சிறுவர்களுக்கு வெறும் அறிவுரை மட்டுமே வழங்கும் பாணி மாறியமைந்-துள்ளது (பாரதி பதிப்பகத்தின் முயற்சிகள் இதற்கு நல்லதொரு உதாரணம்). தாரா, துலிக்கா போன்ற பதிப்பகங்கள் குழந்தை மொழி என்ற ஒன்றை நோக்கி சில முயற்சிகளைச் செய்து வருவதுடன், ஓவியங்களையும் படங்களையும் பாடத்துடன் சேர்த்து வழங்குவதில் அரிய சோதனைகளை மேற்கொண்டுள்ளன. என்றா-லும், இவை வெளியிட்டுள்ள நூல்கள் பாவிக்-கும் மொழியும், நடையும் மேலும் செழுமை-யடைய வேண்டும் _ மொழிபெயர்க்கப்பட்ட தமிழாக அல்லாமல், தமிழுக்குரிய பண்பாட்டுத் தளங்களின் பல்வேறு கூறுகளை உள்வாங்கி அமைய வேண்டும்.
முடிவாக, சிறார் இலக்கியம் என்பது போதனா இலக்கியமாக இருக்க வேண்டிய-தில்லை என்பதன் பொருள், சிறுவர்களுக்கான நூல்களில் சமுதாய விஷயங்கள் இடம் பெறத் தேவையில்லை என்பதல்ல. உலக நிகழ்வுகளையும் அன்றாடம் சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சனை-களையும் பற்றி அவர்களுக்கான எழுத்து பேசுவது அவசியம். ஆனால், நீதி உரைக்கும் தோரணையிலோ, அல்லது போதனை செய்யும் எண்ணத்துடனோ இதைச் செய்யாமல் நயமாக, அவர்களது நியாயவுணர்வை, அறவுணர்வைத் தட்டி எழுப்பும் வகையில் இதைச் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.  எடுத்துக்காட்டாக, அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், வெள்ளையர்கள் பெரும்பான்-மையினராக வாழும் சமுதாயத்தில் வெள்ளைய-ரல்லாதவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் வாழக்கூடாது. குறிப்பாக, குழந்தைகள் அவ்-வெண்ணத்துடன் வளரக்கூடாது என்பதற்காக, கருப்பு நிறத்தையும் பழுப்பு நிறத்தையும் கொண்டாடும் சின்னச் சின்ன நூல்கள் குழந்தை-களுக்கென வெளியிடப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை மையமிட்டுப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. சொல்ல வருவதை இலக்கிய நயத்துடனும் ஓவியங்களின் மூலமாகவும் சொல்லும்போது குழந்தைகள் கருத்துகளை வெறும் கோஷங்களாக உள்வாங்காது, ஆழமாக, மனத்தில் பதிய வைத்துக் கொள்வர். 
சிறார் இலக்கியம் பற்றி நாம் நிறைய யோசிக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்பதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்-பட்டுள்ள முயற்சிகளை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியில் வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றின் நுணுக்கங்களை மேலும் ஆராய வேண்டும். இந்தக் கட்டுரை ஒரு மிகச் சிறிய துவக்கமே, நிறைய விஷயங்கள் இனியும் விவாதிக்கப்பட வேண்டும்.

1 comment:

  1. சங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் - ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature

    ReplyDelete