Tamil books

Thursday 21 April 2011

படைப்பாளி - பதிப்பாளி - வாசகன்

ச.செந்தில்நாதன்*
காப்புரிமைச் சட்டம் படைப்பாளி, பதிப்பாளி மற்றும் வாசகன் ஆகிய மூன்று பேருடன் தொடர்புடையது. இந்தத் தொடர்பில் வாசகன் பின் இருக்கையில் இருப்பான். முன்னிருக்கையில் அமர்ந்து வாகனத்தை யார் இயக்குவது என்பதில் படைப்பாளிக்கும் பதிப்பாளிக்கும் இடையே போட்டி இருப்பதுண்டு.
தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள காப்புரிமைச் சட்டம் 1957ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட சட்டமாகும். இச்சட்டத்திற்கும் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு சமயத்தில் இந்தியாவுக்கு என்று தனி காப்புரிமைச் சட்டம் கிடையாது. இங்கிலாந்து சட்டமே நடைமுறைப் படுத்தப்பட்டது. உண்மையில் இங்கிலாந்தில் காப்புரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டதே ஆங்கிலேய எழுத்தாளர்களைப் பாதுகாக்கத் தான். ஆங்கில மொழியின் வளர்ச்சி, வர்த்தக உறவுகளின் பெருக்கம், பல நாடுகள் இங்கிலாந்தின் காலனி நாடுகளாகிய நிலைமை, ஆங்கில மொழியின் வேகமான பரவுதல் ஆகிய காரணங்களால் ஆங்கில இலக்கியவாதிகளின் இலக்கியங்கள் கரையைக் கடந்தபோது, அவைகளைக் காக்க காப்புரிமைச் சட்டம் காலத்தின் கட்டாயமாயிற்று, ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை இதர நாட்டு எழுத்தாளர்கள் திருடி விடக் கூடாது அல்லவா? ஆங்கிலப் படைப்பாளிகளின் காப்புரிமையை அவர்களிடமிருந்து எடுத்துவிட்டால், அது இங்கிலாந்திடமிருந்து அந்த நாட்டின் படைப்பாளிகளையே எடுத்து விட்டதாக அமையும் என்று இங்கிலாந்தின் காப்புரிமைச் சட்டம் பற்றி எழுதும் போது அந்தோணி டிரோலோப் குறிப்பிடுவார்.
'TAKE AWAY FROM ENGLISH AUTHORS THEIR COPY RIGHT AND YOU WOULD VERY SOON TAKE AWAY FROM ENGLAND HER AUTHORS'

இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த இந்தியாவில், அதன் நிழல் படாமல் இருக்க முடியுமா? எனினும் இந்தியா விடுதலை அடைந்தது. இங்கிலாந்தை முன் மாதிரியாகக் கொண்டு தனிக் காப்புரிமைச் சட்டம் கண்டது. நமது நாட்டின் காப்புரிமைச் சட்டம் படைப்பாளி பதிப்பாளி வாசகன் மூவரையும் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்று பார்ப்போம்.
சாதாரணமாக சட்டங்களில், அச்சட்டங்களில் அவை எந்தப் பொருளில் சொல்லப்படுகின்றன என்பதை விளக்குவதற்காக 'சொல்விளக்கம்' (DEFINITION)
 என்ற ஒரு பிரிவு இருக்கும். ஆனால் நம்நாட்டின் காப்புரிமைச் சட்டத்தில் அப்படி ஒரு சொல் விளக்கப் பகுதி இல்லை. மாறாக அதற்குப் பதில் INTERPRETATION
 என்ற சொல்லே பயன்படுத்தப்ட்டிருக்கிறது.  DEFINITION என்ற சொல் குறிப்பிட்ட சட்டத்தின் சொற்களின் விளக்கமாக அமைகிறது. ஆனால்INTERPRETATION
 என்ற சொல் நீதிமன்றம் விளக்க வாய்ப்பளிக்கும் சொல்லாக அமைந்துவிடுகிறது. அதாவது சொல்லின் பொருளை விளக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் பெற்றுவிடுகிறது. நீதிபதியின் பார்வையைப் பொறுத்து விளக்கங்கள் அமையவாய்ப்புண்டு.
காப்புரிமைச் சட்டத்தில் படைப்பாளி  கிஹிஜிபிளிஸி என்று அழைக்கப்படுகிறான். தமிழில் நாம் நூலாசிரியர் அல்லது ஆசிரியர் என்று சொல்கிறோம். பொதுவாகப் பேசும் போது படைப்பாளி என்கிறோம். ஆனால் காப்புரிமைச் சட்டத்தில் பதிப்பாளரையோ அல்லது வாசகரையோ குறிக்கும் தனிச் சொல் அல்லது விளக்கம் எதுவும் கிடையாது.
படைப்பாளியின் படைப்பு என்பது வெறும் இலக்கிய உலகம் சார்ந்தது அல்ல. இன்று அது வர்த்த உலகில் ஒரு அசையும் சொத்தாகிவிட்டது. அதனால்தான் காப்புரிமைச் சட்டம் வணிகக்குறிகள் சட்டம் (THE TRADE MARKS ACT புத்தாக்கச் சட்டம் (THE PATENTS ACT) வடிவமைப்புகள் சட்டம் (THE DESIGNS ACT) போன்ற வர்த்தகச் சட்டங்களோடு சேர்ந்து அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களில் ஒன்றாக அடங்கிவிட்டது. அதாவது வர்த்தக உலகில் சங்கமமாகிவிட்டது. படைப்பாளியின் திறமை, அறிவாற்றல், உழைப்பு, முயற்சி ஆகியவற்றால் உருவாக்கப்படும் படைப்பு அறிவு சார்ந்த சொத்தாகி விட்டது. படைப்பு ஒரு மொழியிலிருந்து, பிற மொழிகளுக்குச் செல்கிறது. பிற நாடுகளுக்குச் செல்கிறது. ஒரு படைப்புக்குச் சர்வதேச அடையாளம் கிடைத்து விடுகிறது. அதாவது சர்வ தேசச் சந்தைக்கு வந்து விடுகிறது. சர்வதேச சந்தையில் யார் பலசாலியோ அவர்கள் சொல்வதே சட்டமாகி விடுகிறது. உலக வர்த்தக அமைப்பின் (கீஜிளி) உடன்பாட்டில் இந்தியா கையெழுத்துப் போட்டிருப்பதால் அதை ஒட்டி அடுத்தடுத்து வரும் முடிவுகளுக்கும் சட்டங்களுக்கும் ஏற்ப தன்முகத்தை அலங்கரித்துக் கொள்ள வேண்டியதாகிறது. முகம் இந்திய முகம் தான் ஒப்பனைகள் வெளிநாட்டுச் சரக்கு.
காப்புரிமைச் சட்டத்தின்படி படைப்பாளி தன் படைப்பை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. பதிவு செய்வதும் பதிவு செய்யாததும் அவரவர் விருப்பம். படைப்பாளியின் படைப்பு, வெளிவந்த வினாடியிலிருந்தே காப்புரிமையைத் தனக்குத்தானே வழங்கிவிடுகிறது. ஆனால் அந்தப் படைப்பு மூலப் படைப்பாக (ளிஸிமிநிமிழிகிலி) இருக்கவேண்டும். அசலுக்குத்தான் காப்புரிமை உண்டு. இலக்கியத் திருட்டுக்குக் கிடையாது.
எல்லா இலக்கியப் படைப்புகளும் மனித குலத்திற்குச் சொந்தமானது! மனித குலத்தின் சொத்தாக அது மாற 60 ஆண்டுகாலம் மிக அதிகமான காலம். வாசகன் நோக்கில் அப்படித்தான் பார்க்க முடியும். இந்தக் கால அளவு படைப்பாளியின் வாரிசுகளைவிட பதிப்பாளருக்கே பெரும்கொடையாக அமைகிறது. ராயல்டி அடிப்படை இருந்ததால் தான் படைப்பாளியின் வாரிசுகளுக்கு அவர்கள் ராயல்டி கொடுக்க வேண்டிவரும். படைப்பாளி வாழும்போதே அவன் வறுமையைப் பயன்படுத்தி முழுப் பதிப்புரிமையையும் மொத்தமாக விலைக்கு வாங்கியிருந்தால் அவர்களுக்கு யோகம் தான். அறுபது ஆண்டு காலம் எண்பது ஆண்டுகாலமாக நீடிக்கப் பட்டால் பதிப்பாளர்கள் உற்சாகத்தோடு விழாக் கூட எடுப்பார்கள். வாழும் காலத்தில் படைப்பாளிக்கு வருமானம் வேண்டும். அவன் மறைந்த பின்னர் அவனால் நேசிக்கப்பட்ட, அவனை வயது முதிர்ந்த காலத்தில் பராமரித்த அவனுடைய வாரிசுகள் படைப்பாளியின் பணப்பலனை அடையவேண்டும். இது புரிகிறது! ஆனால் கொள்ளுப் பேரனின் பேரன் காலம் வரைஇது நீடிக்க வேண்டுமா? படைப்பாளி ராயல்டி பெற்று வாழ்ந்தாலும், அவன் மறைவுக்குப் பின்னர் தங்கள் காலத்தில் மொத்தமாகப் பணம் பார்க்கும் வாரிசுகள் தான் நாட்டில் அதிகம், அறுபது ஆண்டு காலத்தைக் குறைத்தால், படைப்பு நாட்டுடைமை யானது போல் ஆகும். குறைந்த விலையில் நூல் சந்தைக்கு வர வழி ஏற்படும். வாசகனுக்கு அது நல்லது தானே?
காப்புரிமையில் மாறாத விதி ஒன்று உண்டு! ஒரு படைப்பாளியின் படைப்பின் கருத்துக்களுக்கு (மிஞிணிகிஷி) எந்தக் காப்புரிமையும் கிடையாது. படைப்பாளியின் கருத்து வெளிப்படும் வடிவத்திற்கு, உருவத்திற்கு காப்புரிமை உண்டு, தன்னுடைய அறிவால், ஆற்றலால் திறமையால், உழைப்பால் ஒரு படைப்பைப் படைக்கும் போது அந்தப் படைப்பின் முதல் காப்புரிமையைப் படைப்பாளி பெறுகிறான். ஆனால் இந்தக் காப்புரிமையும் கைவிட்டுப் போவதற்குப் பல சூழ்நிலைகள் உண்டு. ஒரு படைப்பாளி ஒரு பத்திரிகையில் வேலை பார்த்து பணியின் வாயிலாக அப்பத்திகையில் எழுதினால் காப்புரிமை படைப்பாளிக்குப் போகாது. பத்திரிகை அதிபருக்கே செல்லும். தான் பெற்ற பிள்ளையைத் தானே பறிகொடுக்கும் நிலை ஏற்படும். பத்திரிகையில் பணியாற்றும் படைப்பாளி பணி வழி அல்லாமல் ஒரு நாவல் எழுதி அதைப் பணி செய்யும் பத்திரிகையிலேயே தொடர்ந்து வெளியிட விரும்வினால், அதற்குத் தனி ஒப்பந்தம் இருக்க வேண்டும். அப்போதுதான் அப்படைப்பின் காப்புரிமையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அப்படிக் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் எத்தனைபேர் இருக்கிறார்கள்? பிரபலமாக இருந்த பல எழுத்தாளர்களே பொறியில் மாட்டியவர்கள் தானே? பணிபுரியும் எழுத்தாளர்களின் படைப்புரிமையை நிலை நிறுத்த இலக்கியவாதிகள் முயலவேண்டும். அதற்கு முதலில் ஒரு உரத்த சிந்தனை வேண்டும்.
பத்திரிகையில் வேலை பார்க்கும் படைப்பாளி பணி நிமித்தம் எழுதும் போது, பத்திரிக்கையில் வேலை பார்க்கும் எட்டு மணி நேரத்தில் யாவற்றையும் எழுதுவதில்லை. வீட்டிலும் தன் உழைப்பைச் செலுத்தி எழுத்தைத் தருகிறான்; அதற்கு அவன் பெறுவது என்ன? தொழில் சாலையில் ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கும் 'ஓவர்டைம்' இரட்டைச் சம்பளம் படைப்பாளிக்குக் கிடையாதா? உழைப்பில் கரத்தால் உழைப்பதும் அடங்கும், கருத்தால் உழைப்பதும் அடங்கும்.
ஒருவன் மேடையில் சொற்பொழிவாற்றினால் அச்சொற்_பொழிவின் காப்புரிமையை சொற் பொழிவாளனுக்குத் தான் உரிமையே தவிர மேடை அமைத்தவனுக்கு அல்ல.
ஒரு உண்மையான நிகழ்ச்சியை பத்திரிகை நிருபர் எழுதினால் அந்த உண்மையான நிகழ்ச்சிக்குக் காப்புரிமை கிடையாது. எழுதிய நிருபர் மட்டும் அல்ல, வெளியிட்ட பத்திரிகை உரிமையாளர்களுக்கும் காப்புரிமை கிடையாது. அதே நிகழ்ச்சியை வைத்து ஒருவர் நாவல் எழுதலாம், இன்னொருவர் நாடகம் எழுதலாம், மற்றொருவர் திரைப்படம் எடுக்கலாம். உண்மைச் சம்பவத்திற்கு காப்புரிமை இல்லாததால் இது சாத்தியம். ஒருவர் உண்மை நிகழ்ச்சியை நாவலாக எழுத, இன்னொருவர் அதைத் திரைப்படமாக்கினால், அது காப்புரிமை மீறலாகும்.
காப்புரிமைச் சட்டத்தில் பதிப்பாளன் நிலை என்ன? உரிமை என்ன? அதையும் சிறிது பார்ப்போம்.
படைப்பாளி எவ்வளவு தான் போற்றத்தக்கப் படைப்பைப் படைத்தாலும், அது வெளிவர வேண்டும்! அதற்குப் பதிப்பகத்தார் வேண்டும். படைப்பாளியும் பதிப்பாளியும் ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கிறார்கள். வாசகன் இல்லாமல் இவர்கள் இருவருமே இல்லை. என்றாலும் வாசகனைப் பற்றிப் பதிப்பாளர் கவலைப் படாத காலகட்டம் இன்றைய காலகட்டம். நூலகங்கள் ஆயிரம் பிரதிகள் வாங்கும் போது பதிப்பகங்கள் வாசகனை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டியதில்லை. ஆனால் படைப்பாளி அப்படி நினைக்க முடியுமா? படைப்பாளியின் நோக்கம் தன் படைப்பு படிக்கப்பட வேண்டும் என்பது தான். இத்தகைய சூழ்நிலையில் படைப்பாளி பதிப்பாளி உறவு காப்புரிமைச் சட்டத்தில் எப்படிப் பார்க்கப்படுகிறது?
ஒரு படைப்பாளி தன் படைப்பைப் பதிப்பாளியிடம் நாவலாக வெளியிடும் வகையில் கொடுக்கலாம். முதலாவது வகை வாய்மூல ஒப்பந்தமாகும். இது நட்பின் அடிப்படையிலும் எழலாம், சூழ்நிலையின் நிர்பந்தத்தின் அடிப்படையிலும் எழுலாம். பிரச்சினை என்று வந்தால் வழக்கைத் தொடுப்பவர் தான் நிருபிக்க வேண்டும். வாய் மொழி ஒப்பந்தத்தில் படைப்பாளிக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு, பதிப்பாளியால் ஐந்தாண்டுகளுக்கு மேல் பதிப்புரிமையைக் கொண்டாட முடியாது என்பது தான், இன்னொரு வகை பதிப்புரிமை மாற்றாக்கம் என்பதாகும். (கிஷிஷிமிநிழிவிணிழிஜி ளிதி
சிளிறிசீஸிமிநிபிஜி) படைப்பாளியின் படைப்பு அவனுக்குச் சொத்தாகும். அச்சொத்து நிலம் போல் அசையாச் சொத்து அல்ல. அது பொருள்கள் போல் அசையும் சொத்து, இதைவிற்க பதிவு தேவையில்லை. மாற்றாக்கம் என்பதன் பொருள் படைப்பாளி தன்னுடைய சொத்தான படைப்பை பதிப்பாளர் பயன்படுத்த உரிமையைச் செலுத்த நிபந்தனைகள் வரையறுத்து அதிகாரம் வழங்குவதாகும். மாற்றாக்க ஆவணத்தில் குறிப்பிட்ட பதிப்பாளர் மட்டுமே படைப்பைப் புதிப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை இல்லாவிட்டால், பதிப்பாளர் தானே பதிப்பிக்க முடியாத போது இன்னொருவர் மூலம் பதிப்பித்துக் கொள்ள முடியும். அதைப் படைப்பாளி கேள்வி கேட்க முடியாது. வீடு வாங்கும் போது கணவன், ஒப்பந்தம் போட்டுக் கொண்டு. விற்பனை ஆவணம் எழுதும் போது தன் மனைவி பெயரில் எழுதி வாங்கிக் கொள்வதில்லையா? அது போல்தான் இதுவும்.
மாற்றாக்க ஆவணத்தில் குறிப்பிடப்படும், வாசகங்களும், நிபந்தனைகளும் மிக முக்கியமானதாகும். அதைப் பொறுத்தே ஆவணத்தின் தன்மை தீர்மானிக்கப்படும், ஏனென்றால் இன்னொரு முறையும் இருக்கிறது. அதை உரிமம் (லிமிசிணிழிசிணி)  என்பார்கள். உரிமம் வழங்கும் போது, காப்புரிமை, படைப்பாளியிடமே இருக்கும். பதிப்பாளர் உரிமத்தில் கண்டுள்ள நிபந்தனைகளின் படி நூலை வெளியிடுவார். மாற்றாக்கத்திற்கும், உரிமத்திற்கும் வேறுபாடு உண்டு. மாற்றாக்கத்தில் படைப்பாளியின் உரிமை பதிப்பகத்திற்கு மாற்றாக்கம் செய்யப்படுகிறது. உரிமத்தில் உரிமை படைப்பாளியிடமே தங்கிவிடுகிறது. படைப்பாளியின் நூல் நாட்டுடைமையாக்கப் படும் போது காப்புரிமை படைப்பாளியுடன் தக்க வைக்கப்பட்டு, வெளியிடும் உரிமையை மட்டுமே பதிப்பாளர் பெற்றிருக்கும் போது, பதிப்பாளரிடமிருந்து விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படாது. பாரதியின் பாடல்கள் நாட்டுடைமையாக்கப் பட்ட போது, அவற்றின் உரிமை ஏ.வி.எம். நிறுவனத்திடமிருந்தது என்பதை மறந்து விடக்கூடாது. ஆனால் அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள்.
படைப்பாளி தன் படைப்பின் முழு உரிமையையும் பதிப்பாளியிடம் கொடுத்த பிறகு தன் படைப்பிற்கு அவர் மூலக்காப்புரிமை உடையவராக, முதல் காப்புரிமை உடையவராக இருந்த போதிலும், படைப்பை யாராவது திருடி விட்டால் அல்லது காப்புரிமையை மீறி விட்டால் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு போடும் உரிமை பதிப்பாளருக்கு உண்டு.
காப்புரிமைச் சட்டத்தில் வாசகன் நிலை என்ன? அவனுக்கும் சில உரிமைகள் இருக்கின்றன. இருந்து தானே ஆக வேண்டும்? படைப்பு மனித சமுதாயத்திற்கு உரியதல்லவா?
காப்புரிமைச் சட்டம் காப்புரிமை வாரியம் உருவாக வகை செய்திருக்கிறது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தோன்றும் பல பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க இந்த வாரியத்திற்கு அதிகாரம் உண்டு. இந்த வாரியம் படைப்பாளி மற்றும் பதிப்பாளர் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. பொதுமக்கள் என்ற அளவில் வாசகனுடனும் சம்பந்தப்பட்டது. தான். ஒரு அரிய படைப்பு வெளியிடப்படாமல் இருந்தால், அல்லது வெளியிடப்பட்டு முடக்கி வைக்கப்பட்டிருந்த தால் அதை வெளியிட உரிமை கோரி வாரியத்தை வாசகன் அணுக முடியும். வாரியம் விசாரணை மேற்கொண்டு, நிபந்தனைகளை விதித்து நூலை வெளியிட கட்டாய உரிமம் வழங்கும். அசல் படைப்புகளை மட்டும் அல்ல, அப்படைப்புகளின் மொழி பெயர்ப்பைத் தயாரிக்கவும், வெளியிடவும் கூட உரிமம் கேட்க முடியும்.
வாசகனுக்கு நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் இந்த உரிமை இன்னும் பலருக்கு தெரியாது.
காப்புரிமைச் சங்கங்கள் அமைக்கவும்
(ஷிளிசிமிணிஜிசீ) சட்டத்தில் இடம் உண்டு. படைப்பாளிகள், பதிப்பாளிகள், வாசகர்கள் நலனை முன்னிட்டு மத்திய அரசு சங்கங்களைப் பதிவு செய்யலாம். இப்படிச் சங்கம் அமைப்பதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட சட்டத்திருத்தங்களால் ஏற்பட்ட வசதியாகும். இச்சங்கங்கள் முதலாளித்துவ நாடுகளுக்குக்கே பெரிதும் உதவும். மத்திய அரசிடம் பதிவு செய்யப்பட்ட இச்சங்கங்கள் முதலாளித்துவ நாடுகளில் உள்ள சங்கங்களோடு ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்ள முடியும். ஒப்பந்தங்களில் முதலாளித்துவ நாடுகளின் கையே ஓங்கி இருக்கும் என்பது தெளிவு. உள்நாட்டுப் பதிப்பாளர்கள் வலுவிழந்து விடுவார்கள்.
இலக்கிய வளர்ச்சியில் படைப்பாளி, பதிப்பாளி மற்றும் வாசகனோடு, அரசும், ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் பெரும்பாலான நூலகங்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்றன. பெரும்பாலான படைப்பாளிகள் தங்கள் உழைப்பு பதிப்பகங்களால் சுரண்டப்படுகிறது என்று குமுறுகிறார்கள். படைப்பூதியம் சரியாகக் கிடைப்பதில்லை என்று நொந்து போகிறார்கள். பதிப்பகத்தாரோ நூல்களை விற்பதற்கு நாங்கள் நிறைய கழிவு தர வேண்டியிருக்கிறது, நாங்கள் நூலுக்கு என்ன விலை வைத்தாலும், அரசு நிர்ணயிக்கும் விலைக்குத்தானே நூலகங்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள். வேறு சொற்களில் சொன்னால் அரசுக்கு நூல்களை விற்க கூடுதல் கழிவு தர வேண்டியிருக்கிறது என்கிறார்கள். மொத்தத்தில் எல்லாக் கழிவுகளும் படைப்பாளியின் படைப்பூதியத்தைக் கழிப்பதாவே அமைந்து விடுகிறது. எல்லாமே இவன் தலையிலேயே வந்து விழுகின்றன?
என்ன செய்வது?
பதிப்பாளர்கள் ஒரு பலமான சங்கத்தைக் கட்டியிருக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு சங்கங்கள் பல இருக்கின்றன. வாசகர் வட்டம் ஆங்காங்கே இருக்கின்றன. இந்த அமைப்புகள் அனைத்தையும் ஒரே கோட்டில் நிறுத்த வேண்டும். அதாவது ஒரு ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும். மூவர் நலன்களையும் காக்க அப்போது தான் வழி கிடைக்கும். அரசுடன் பேசி சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைப்பின் பலம் அவசியமில்லையா? உலக வர்த்தக அமைப்பின் நெருக்கடிகள் படைப்புலக வாசலில் வந்து கூவும் போது, கேளாக்காதினராய் இருக்க முடியுமா?

* சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடக்ககாலத் தலைவர்களில் ஒருவர். முன்னதாக மக்கள் எழுத்தாளர் சங்கத்தினை நிறுவி அதன் செயலாளராக பல ஆண்டுகள் செயலாற்றினார். பின்னர், அச்சங்கம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டபோது இதனுடன் இணைக்கப்பட்டது. பிரபல எழுத்தாளர் புதுமைப் பித்தனின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்னின்று போராடியவர். சிகரம் என்ற இலக்கிய இதழை தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றியவர். சிதம்பரம் கோயில்: சில உண்மைகள், தமிழ்மொழி-நீதிமன்றத் தீர்ப்புகள், அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை, காதுகளை கடன் கொடுங்கள்  போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். சிறந்த இலக்கியப் பேச்சாளர்.

No comments:

Post a Comment