Tamil books

Monday, 26 March 2012

மாடுமேய்த்த சிறுவன் மாமனிதன் ஆன வரலாறு


மாடுமேய்த்த சிறுவன் மாமனிதன் ஆன வரலாறு
வரலாறு என்பதே முன்னேற் றத்திற்கான போராட்டம்தான்” என்று சொல்வார்கள். இதை வெளிப்படுத்தும் விதமாக வந் துள்ள நூல்தான், “செங்கொடி யின் பாதையில் நீண்ட பயணம்” என்ற தோழர் கோ.வீரய்யன் அவர்களின் சுயசரிதை. சித்தாடி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து குடும்பத்தின் வறுமை யும், கிராமத்தின் சூழலும் சேர்ந்து பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பு வீரய்யனுக்கு கிடைக்க வில்லை, மாடுமேய்க்கும் வேலைக்கு இடையூறில்லாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரவு நேரத்தில் சில மாதங்கள் படித்ததுதான் எழுத்தையும் - எண் கணிதத்தையும் அறிய கிடைத்த அரிய வாய்ப்பு. தன் சுய முயற்சியில் புத்தகங்களை படிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுபிறகு பல புத்தகங்களுக்கு அவர் ஆசிரியர் என்பது எத் துணை பெருமைமிகு முன்னேற் றம் என்பதை நூலைப்படிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.

கம்யூனிஸ்ட்கள் பிறப்ப தில்லை உருவாக்கப்படுகிறார் கள் என்பதற்கு தோழர் ஜி.வி. மிகச் சிறந்த உதாரணம். அவரே குறிப் பிட்டிருப்பதைப் போல, உரத் தொட்டியில் இருந்து அனுப்பப் படும் உரம் வயலில் கொண்டு போய் கொட்டிய பிறகு, வயலில் தண்ணீர் பாய்ந்தால் அதில் மக்காமல் கிடக்கும் ஓலை தண் ணீர் அலையில் அசைந்து அசைந்து கரையோரம் வந்து ஒதுங்குவ தைப் போல், நிலப்பிரபுத்துவ குப்பைக்குழியாக இருந்த எங்கோ ஒரு மூலையில் இருக் கும் கிராமத்தில் மாடு, கன்று மேய்க்கும் சிறுவனாக இருந்த நான் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் வந்து ஒதுங்கினேன். மாநில தலைவர்களில் ஒருவராக என்னை தரம் உயர்த்தி அடையாளம் காட்டிய பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கும், தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டுமே சேரும். நான் அறிந்தவரை கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தவிர, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியிலும் குடும்ப பின் பலமோ, பணபலமோ, படிப்பு பலமோ இல்லாத ஒருவன் இந்த அளவு வளர்ச்சி பெற முடி யாது என்று என்னால் தலை நிமிர்ந்து உறுதிபடக் கூற முடி யும். இந்த அட்சரம் ஒவ்வொன் றும் லட்சம் பெறும்.

கடுமையான கஷ்டங்கள், பொருளாதார நெருக்கடி இருந்த போதும், இயக்கப்பணிக ளில் அது பிரதிபலிக்காமல் பார்த்துக் கொண்ட பாங்கு இங்கு குறிப்பிடத்தக்கது. எந்த அளவுக்கு வறுமை என்றால் அவருடைய திருமணத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் புரட்ட முடியாமல் திருமணத்துக்கு தேதி தீர்மானித்து இரண்டு முறை அது மாற்றி வைக்கப்பட்டது.

அவருடைய துணைவியார் சரோஜாவைப் பற்றி புத்தகத்தில் மூன்று, நான்கு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக் கிறது என்றாலும், கட்சியில் தோழர்களுக்குள் வேலைப் பிரிவினை செய்து கொள்வதைப் போல குடும்பத்திலும் வேலைப் பிரிவினை. தோழர் சரோஜா குடும்பத்தையும், குழந்தைக ளையும், விவசாயத்தையும் பார்த்துக் கொள்வது, தோழர் ஜீ.வி குழந்தைகளின் படிப்பு, இயக்க வேலை என பகிர்ந்து கொண்டு கடைசி வரை அது தொடர்ந்தது. ஜீ.வியின் மீது அடக்குமுறை - சிறை - தலை மறைவு - பொய்வழக்கு, சதி வழக்கு இதையொட்டி, போலீஸ் தேடுதல், குடும்ப உறுப்பி னர்கள் மீது தாக்குதல், சித்ரவதை இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அவருடைய துணைவி யார் வாழ்ந்து கொண்டிருப்பது வீரத்திற்கும் - போற்றுதலுக்கும் உரிய எடுத்துக்காட்டு. எல்லா வற்றிற்கும் மேலாக, ‘மிகச் சிறந்த தன்னம்பிக்கையூட்டும் நூல் இது” என்றால் மிகையல்ல, உண்மை என்பதை படிப்பவர் அனைவரும் உணர முடியும்.

முறையான கல்விக்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருடைய எழுத்துக்களை யாராலும், மெத்தபடித்த மேதாவி யாலும் அவ்வளவு சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது. ஏதோ சில கோடுகள் கிறுக்கப்பட்டிருக் கும். ஆனால் தோழர். ஜீ.வி அதை மிகச் சரியாக படிப்பார். விவசா யிகள் சங்க மாநில மையத் திற்கு வந்தவுடன் எனக்கு தரப் பட்ட பணிகளில் ஒன்று தோழர் ஜீ.வியினுடைய தமிழ் கட்டு ரையை உழவன்உரிமைக்கு தமிழாக்கம் செய்ய வேண்டுமென் பது. சில மாதங்கள் மிகுந்த சிரமப் பட்டும், தோழர். வி.ஏ.கருப்புசாமி அவர்களிடம் கேட்டும் சமாளித் தேன். தோழர் வி.ஏ.கே, இப்படித் தான் இருக்குமென்றும், அல் லது பொருத்தமான ஒரு வார்த் தையை நீங்களே போட்டு விடுங்க, கேட்டா சொல்லிக் கொள்ள லாம் என்றும் தைரியமூட்டினார். பொருத்தமில்லாத வார்த்தை களைப் போட்டு வாங்கி கட்டிக் கொண்டதுமுண்டு. இருப்பினும், தோழர் ஜீ.வி.யின் தொடர்ந்து எழுதும் ஆற்றலைப் போற்றாமல் இருக்க முடியாது.

மற்றொன்று, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டவர் தோழர் ஜீ.வி. சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அப் படியே தான் அதற்குப் பிறகும் இருந்தார். அவருடைய அணுகு முறையிலோ, தோற்றத்திலோ, பயணத்திலோ (பஸ்ஸில் மட் டுமே பயணம்) எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என் பதை தமிழகம் அறியும். மக்க ளால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டியவர். இதனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னால் பேருந்து நடத்துநர் கூட நம்புவதில்லை. ஒவ்வொரு முறையும் அடையாள அட்டையை காண்பித்த பிறகே அவரை எம்.எல்.ஏ என்று ஏற்று பயணிக்க அனுமதித்திருக்கிறார்கள். தோற்றத்தை பார்த்து மதிப்பிடும் உலகத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நூலுக்கு, ‘நீண்ட பயணம்’ என்று மிகப்பொருத்தமாகவே பெயரிடப்பட்டிருக்கிறது. செஞ் சீனத்தின் மாபெரும் தலைவர் மா சே துங்கின் நீண்ட பயணம், நிலப்பிரபுக்களிடமிருந்து கிராமப்புற ஏழைகளை விடுவித்து சீனத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட வழிவகுத்தது. தோழர் ஜீ.வியின் இந்த நீண்ட பயணம் நிலப்பிரபுத்துவ கோட்டை யாக விளங்கிய தஞ்சை மாவட் டத்தில் நிலப்பிரபுக்களை தளர்ச் சியடையவும் - கிராமப்புற ஏழை களை எழுச்சி கொள்ளவும் செய் தது. அந்த வேதியியல் மாற் றத்தை அறிய அனைவரும் வாங்கிப் படியுங்கள் - மற்றவர்க ளையும் படிக்கச் செய்யுங்கள்.

செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்-கோ.வீரய்யன், பாரதி புத்தகாலயம் ரூ.150

இஸ்லாமியப் பெண்ணியம்


கவனமுடன் படிக்க வேண்டிய நூல்... 
இஸ்லாமியத்தை ஆன்மிக அடிப்படையில் அறிந்து கொள்ள திருக்குரான், நபி வழி தொகுப்பான அதீஸ் ஆகியவை உதவுகின்றன. இவை ஆண்சார்ந்த நலன்களின் அடிப் படையிலேயே அர்த்தப்படுத்தப் பட்டுள்ளன. புனித நூல்களில் பெண் ணிய கோட்பாட்டை விளக்க மறைக் கப்பட்ட பகுதிகளை மறுவாசிப்பு செய்ய ஹெச்.ஜி.ரசூல் எழுதிய “இஸ் லாமியப் பெண்ணியம்” என்கிற இந்த நூல் பயன்படும். இஸ்லாமியத்தில் பெண்ணிய வாசிப்பின் மூலம் பெண் கள் மீதான ஒடுக்குமுறை சார்ந்த கருத்துக் களை ஓரளவு தகர்க்க முடியும். தலாக், நான்கு திருமணம், சுன்னத் ( ஆண்குறி நுனி சீரமைப்பு ) குறித்தவை பொது விவாதமாக இருந்து வருகிறது. மனித உயிர் தோற்றத்திலேயே ஆணாதிக்க கருத்தை ஆழப்பதித்தே இஸ்லாம் துவங்குகிறது. அல்லா தனது சாயலில் ஆதாம் என்ற ஆணைப்படைத்து அவனிலிருந்து பெண் என்பவள் படைக்கப்பட்டாள் என்ற கருத்தை விதைத்துவிட்டது. ஆணில் பெண் அடக்கம் என்ற புரிதலிலிருந்து குரா னும், ஹதீசும் போதிக்கப் பட்டுவிட்டது. இருப்பினும் அதில் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களும் சொல்லப்படு வது மறுப்பதற்கில்லை. ஆண், பெண் என்ற உயிரியல் அடையாளத்தை ஆணுக்கு சாதகமாக மாற்றியுள்ளது. இஸ்லாமிய பெண்ணியம் என்ற இச்சிறு நூலின் மூலம் பெண் ஒடுக்குமுறை சார்ந்த கருத்துக்களை நொறுக்கும் பணியை ஹெச்.ஜி.ரசூல் துவக்கியுள்ளார்.

குரான், ஹதீஸ் நூல்களை அவர் நியாயப்படுத்தவில்லை என்றாலும் அதில் உள்ள நியாயத்தை தேடி அறிந்து விளக்கியுள்ளார். பெரும் பகுதி இஸ்லாமியர்களே அறியாத பண் பாட்டு சொற்களுக்கு அர்த்தத்தை விளக்கியுள்ளார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் என்பது 7ம் நூற்றாண்டில் வானவர் மூலம் அரபி மொழியில் இறக்கப்பட்டதெனவும்; அதீஸ் என்பது நபிகள் நாயகம் (வரஹ்) மறைந்து 200 ஆண்டுகளுக்கு பிறகு சுன்னி முஸ்லிம்களால் துவக்கப்பட்ட தெனவும் இந்நூலில் தகவல் உள்ளது. இஸ்லாம் பலதாரமணத்தை அங்கீ கரிக்கிறது. ஆண்கள் நினைத்த நேரத் தில் முத்தலாக் சொல்லி மனைவியின் உறவை துண்டித்துக் கொள்ளலாம். அறிவியல் வளர்ச்சியில் தொலைபேசி, தந்தி, இணைய தளத்தில் கூட தாம்பத்ய பந்தத்தை முறித்துக்கொள்ள முடியும் என்று ஆண்கள் தங்கள் மேலாதிக்க கருத்தை வலுப்படுத்திக் கொண்டுள் ளனர். மனைவிக்கு தகாத உறவு இருப் பதாக கணவர் குற்றச்சாட்டு வைத்தால் தலாக் பஞ்சு மிட்டாய் வாங்குவது போல் எளிதாகிவிடும். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்யவே சிலர் இஸ்லாத்திற்கு மாறும் அபாயம் உண்டு.

பலதார மணத்திற்கு அடிப்படை வாதிகள் சொல்லும் நியாயம் யாதெ னில் போர்க் காலத்தில் மாண்டவர்களின் மனைவியருக்கு வாழ்க்கை கொடுப்பது அடிமை, அனாதை ஆகியோரையும் ஒரு சேர மணக்கலாம் என்பதாகும். இந்த மனைவிமார்களை சமமாகவும், திருப்தி கரமாக வைத்திருக்க வேண்டுமென்பது இறை கட்டளையாக உள்ளது. - ( அன் னிஸா அத்தியாயம் 4. வசனம் 3 )

நான்கு திருமணம் என்பது முஸ் லிம்களின் வாழ்வில் யுத்தச் சூழலில் எடுக்கப்பட்ட கருத்தாகும். ஆனால் போரற்ற அமைதியான இந்த சூழல்க ளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் களின் மீது இதை திணிப்பது சரியன்று என ஆசிரியர் சாடுகிறார்.

தலாக் முறைக்கு முன்னர் முத்ஆ, ஈலா, ழிஹார், லீஆன் ஆகிய நடை முறைகள் பின்பற்றப்பட்டிருந்தது. முத்ஆ என்ற முறை வாணிபத்திற்காகவும், போருக்காகவும் வெளியூர் செல்லும் ஆண்கள் தற்காலிகமாக குடும்பம் நடத்தும் முறையாக இருந்தது. இதற்கு தலாக் சொல்ல வேண்டியதில்லை. ஈலா: மனைவியை நான்கு மாதங்கள் வரை தள்ளி வைக்கும் கணவனின் சத்திய வாக்காகும்.

ழிஹார்: மனைவியை தாயைப் போல் பாவித்து உடல் உறவு கொள்ளா மல் இருப்பது இதை நீக்க இரண்டு மாதம் நோன்பிருக்க வேண்டும்.

லீஆன்: தான் நடத்தை கெட்ட வள் அல்ல என அல்லா மீது சத்தியம் செய்வது ( 4 நபர் சாட்சிகள் இல்லா பட் சத் தில் ) இந்த முறைகளுக்கு பின்னரே தலாக் வந்தது. நபிக்கு பிடிக்காத வார்த்தை தலாக் என்றும் கூறப்படு கிறது. தலாக் செய்யப் படுவதை தவிர்க்க சில வழிமுறைகள் உண்டு. மனைவிக்கு அறிவுரை சொல்வது, படுக்கையிலி ருந்து தள்ளி வைப்பது, அடித்து திருத் துவது. இறுதியாக இரு குடும்பத்தார் முன்னிலையில் சமாதானம் என்ற ஜன நாயக ( ? ) முறைகள் பின்பற்றப்படும். ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்ல இஸ்லாம் போதிக்க வில்லை. மூன்று தவணைகளில் மூன்று மாத விடாய் பருவங்கள் பொறுத்திருக்க வழிகாட்டியது. ஆயினும் நடைமுறை யில் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்வதே உள்ளது. தலாக் செய்து பிரிந்த பின்னர் சேர்ந்து வாழ நினைத்தால் மனைவியை வேறொருவருக்கு திருமணம் செய்து, அவர்களுக்குள் உடலுறவு கொண்ட பின் தலாக் செய்ய வைத்து மறுபடியும் திரு மணம் செய்து கொள்ளலாம்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட திருமணமாகாத பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுக்கப்படும். கணவ னுக்கு துரோகம் செய்யும் மனைவிக்கு கல்லடி என்ற கடினமான தண்டனை உண்டு. இதில் பெரும்பாலும் மரணம் நிகழும். மனைவிக்கு துரோகம் செய்யும் கண வனுக்கு தண்டனை குறித்து தகவல் இல்லை.

குலாஅ: திருமணத்தின் போது வழங்கப்பட்ட மகர் தொகையை ஒப் படைத்துவிட்டு பெண்ணே விடுதலை கோரலாம். ஆனால், ஆண் சம்மதித் தால்தான் விவாகரத்து கிடைக்கும். 1973ல் ஷாபானு வழக்கில் ஜீவனாம்சம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை இஸ்லாம் தலைவர்கள் ஏற்கவில்லை. ஆனால், தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு நல்ல முறையில் வாழ்வாதாரம் வழங் கப்பட வேண்டுமென குரான் வசனம் அல்பகறா அத்தியாயம் 2 : வசனம் 241ல் கூறப்படுகிறது.

அகீகா (தானம்) : அகீகா என்பது குழந்தை பிறந்தால் பிராணிகளை தானம் கொடுக்கும் வழக்கமாகும். அரபு பழங்குடியின மக்களின் வழக்கமாக கொண்ட இந்த முறையில் ஆண் குழந்தைக்கு 2 ஆடுகளும் பெண் குழந்தைக்கு 1 ஆடும் தானம் கொடுக்க வேண்டும். பெண்சிசுக் கொலையை தடுக்கவே ஒரு ஆடு கொடுத்தால் போதும். குழந்தைகளில் ஆண் பெண் வேறுபாடு காண்பதை களைந்தால் சொர்க்கம் கிடைக்கும் என ஹதீசு கூறுகிறது.

ஹைளு (தீட்டு) பெண்களின் மாதவிடாய் காலத்தை ஹைளு என்பார்கள். இந்த நாட்களில் குரானை தொடுவதும் நோன்பு வைப்பதும் பாவம் என்ற கூற்றை புகாரி ஹதீஸ் மறுக்கிறது. தாயின் காலடியில் சொர்க் கம் உள்ளது எனும் நபியின் கூற்றுக்கு தீட்டு கோட்பாடு முரணாக உள்ளது.

“பெண்ணுக்கு எதிராக வலுவான ஒடுக்கு முறைகள் இருந்தாலும் பல பெண் அறிஞர்கள் தடம்பதித்துள்ளனர்.

சமய ஆய்வாளர்கள் சுலேமி, ராபியா, பஸ்ரிய்யா, நஃபீஸ்த்துல் மிஸ்ரிய்யா, ஆயிஷா, அல்மன் ரபியா, பீஅம்மா, செய்யதலி, பாத்திமா, கீழக்கரை நாச்சியா, செய்யது ஆசியா உம்மாள், தென்காசி ரசூல் பீவி, கச்சி பிள்ளையம்மாள் உட்பட பல பெண் அறிஞர்கள் வாழ்ந்துள் ளனர்.

அரபி மொழி என்பது தேவ பாஷை அல்ல. அரபி மக்கள் அறியும் வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளது “அரபிகளே நீங்கள் நன்கு அறிந்து கொள்ளும் பொருட்டு குர்ஆனை அரபி மொழியில் இறக்கி வைத்தோம்” (யூசுப் அத்தியாயம் 12: வசனம் 2 ) என்று ஹதீசு கூறுகிறது.

அல்லா ஆணுமில்லை, பெண்ணு மில்லை என்று கூறும் இஸ்லாம் இறை வன் அருள்வான், தருவான், பார்க் கிறான் என்று அன் விதி இட்டு கூறுவது முரணாக உள்ளது.

இஸ்லாம் மதத்தில் நிலவும் பெண் களுக்கு எதிரான கருத்துகளையும் வன்கொடுமைகளையும் முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும். அதற்கு முன்னதாக இஸ்லாமியர்கள் தங்களுக்குள்ளே பெண் அடிமைத்தன கருத்தை சாடி விடுதலைக்கான வழியை காண வேண்டும் என்கிறார் நூலாசிரியர். இந்நூலை மிகக் கவனமாக வாசிப்பது அவசியம்.

இஸ்லாமியப் பெண்ணியம்

ஹெச்.சி. ரசூல்,

பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ தெரு, சென்னை-18. பக். 48, விலை ரூ.10/-

மாவோ ஓர் அறிமுகம்


மாவோ ஓர் அறிமுகம்
மாவோயிசம் என்றாலே வன்முறைதான் என்ற பொருள் தற்போது உலாவரு கிறது. அதில் உண்மை உள்ளதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத் தவும், மாவோ என்பவர் யார்? அவர் கூறிய தத்துவ வழிகாட்டல்கள் எவை என்பதை தெளிவுபடுத்தவும் 96 பக்கத் தில் ஒரு நூல் வெளிவந்துள்ளது.

ஊடகங்களும், பத்திரிகைகளும், தங்களை பெரிய அறிவு ஜீவிகள் என்று கூறிக் கொள்பவர்களும் மாவோயிசம் குறித்து செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலடி யாக மிக எளிய நடையில் “மா சே துங்” வாழ்க்கை வரலாற்றை நூலாக கொண்டு வந்துள்ளார் ஆசிரியர் என். ராமகிருஷ்ணன்.

1942-44ல் அன்றைய சோவியத் யூனியனுக்கு எதிராக சீனாவில் ராணுவ தளம் ஒன்றை அமைப் பதற்கு ஜப்பானோடு இணைந்து கொண்டு அமெரிக்கா பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண் டது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு விவசாயிகளின் உழைப்பை சுரண்டின. இவைகளை கண்டு வெகுண்டெழுந்த மாவோ தனது படைகளுடன் மக்களையும் இணைத்துக்கொண்டு ஆயுதம் ஏந்தி நெடும் பயணம் மேற்கொண்டார். அந்த பய ணத்தின்போது மார்க்சிய-லெனினிய சித்தாந்தமே ஆக்கிரமிப்பாளர்களை ஓட ஓட விரட்டியடித்து சீனாவை ஒரு குடியரசு நாடாக பிரகடனம் செய் தது. மாவோவின் அந்த பாதைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவமே உதவியது. அதன் மூலமே “மக்கள் சீனம்”அமைக்க உதவியது என்பதை இந்நூல் மூலம் ஆசிரியர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

அரச பரம்பரை மற்றும் ஏகாதிபத்திய வல்லு நர்களின் வேட்டைக்கு இரையாகவும், நிலப்பிர புத்துவத்திற்கு அடிமையாகவும் இருந்த மக்களை சுதந்திரக்காற்றை சுவாசிக்கச் செய்ததையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்நூல்.

உலகில் அக்டோபர் புரட்சிக்கு அடுத்து பாசி சத்தின் மீதான மிகப் பெரிய வெற்றி சீனப் புரட்சி யாகும். இந்த வெற்றிக்காக அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும், வறுமையிலும் மூழ்கிக் கிடந்த சீன மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப டுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டம் மூலம் மீட்டெடுத்து “நவசீனம்” உருவாக்கியவர் தான் மாவோ.

அன்றைய தினம் இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, மக்கள் சீனத்திற்கு சென்று மாவோ-வை சந் தித்த பிறகு தனக்கு ஏற்பட்ட பரவ சத்தை தெரிவிக்கையில், மா சே துங் ஒரு சரித்திர புருஷர்; மகத்தான போர் வீரர்; மாபெரும் புரட்சியாளர் என்று வர்ணித்தார்.

ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து பணக்கார விவசாயக் குடும்பம் என்ற நிலையை எட்டியபோதும் அந்நியர்களின் பிடியிலிருந்து தாய் நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற சுதந்திர தாகம் அவருக்குள் வேரூன்றியது. இதனால், மாணவப் பருவத்திலேயே அரசியலில் பிரவேசித்து மார்க்சிய-லெனினிய தத்துவத்தை கற்றுக்கொண்டு, அந்தத் தத்துவத்தை தனது நாட்டின் நிலைமைக்கு ஏற்ப செயல்படுத்தி உழைக்கும் மக்களுக்கான பூரண விடுதலையை செஞ்சீனப் புரட்சியின் மூலம் பெற்றுக் கொடுத்து ஆளும் தத்துவமாக உயர்த்தி மார்க்சிய மேதையானார் மாவோ.

ஏகாதிபத்தியம்- உள்நாட்டு சதிகார கும்பல் களின் அடக்குமுறைகளை எதிர்த்து 50 ஆண்டு கள் நடந்த போரில் தனது மனைவி, மகன்கள், சகோதரி களை இழந்ததையும் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி 83 வயதில் மரணம் அடையும் வரையிலும் நாட்டு மக்களும், நாடும் வளம்பெற்றிட போராட்டமே வாழ்க்கையாக அமைத்துக்கொண்ட மாவோவின் யுக்திகளை யும் அவர் செய்த தியாகங்களையும் ஆசிரியர் நினைவுபடுத்தியிருப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.“மா சே துங்”

பாரதி புத்தகாலயம்,

421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,

சென்னை - 600 018.

பக். 96, விலை ரூ. 50

காலத்துக்கேற்ற கையேடு


காலத்துக்கேற்ற கையேடு
வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் அமெரிக்க நகரங்களில் பேரணிகளும் ஊர்வலங்களும் புற்றீசல்கள் போல் புறப்பட்டு பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

உலகத்தையே நெருக்கடிக்குள்ளாக்கும் அமெரிக்கா வுக்கே நெருக்கடியா? ஆம் நெருக்கடிதான். சாதாரண நெருக்கடி அல்ல, அசாதாரணமானது. அதன் வெளிப்பாடு தான் மக்களின் எழுச்சிப் பேரணிகள்.

பொதுவாக உலக நாடுகளில் ஏற்படும் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்கா லாபம் சம்பாதிக்கும். பொருளாதார மந்தம் ஏற்பட்ட காலங்களில் அமெரிக்க முதலாளிகள், ஆயுத விற்பனை, பொருள் விற்பனை எனப் பல வகையிலும் கொழுத்தார்கள். முதல் உலகப் போருக்குப் பின்னும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும் அப்படித்தான் தனது கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து வலையை விரித்து பொருளாதார சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தது அமெரிக்கா.

அதன் விளைவாகத்தான்- இரண்டாம் உலகப்போருக்குப்பின் பிரட்டன் உட்டோ மாநாடு. பரிந்துரைகள் என்று உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (ழுஹகூகூ)- அதன் இன்றைய வடிவம் தான் உட்டோ (றுகூடீ) -அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுகின்றன.

வளரும் நாடுகள் கடன் பெற வேண்டுமெனில் அந்த முப்பெரும் அமைப்பு கள் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும். மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தல், கட்டுப்பாடற்ற தாராளச் சந்தையை திறந்துவிடுதல், அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், குறிப்பாக நிதி நிறுவனங்கள்-வங்கி, இன்சூரன்ஸ் போன்றவற்றின் பங்குகளை விற்றல். அதாவது அந்நிய மூல தனம் நுழைய வழி செய்தல் ஆகியவற்றை ஏற்றாக வேண்டிய நிர்ப்பந்தம். ஒருமுறை அந்தச் சுழலுக்குள் நுழைந்தால் மீண்டும் வெளியேற முடியாத மரணவளையத்துக்குள் சிக்கிச் சின்னாபின்னமாவது தான் கதி.

ஆனால், தற்போது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்பட் டுள்ள நிதி நெருக்கடி வேறு வகை. அதன் மூல காரணம் என்ன? எப்படி உலக மயமாதல் என்ற அதன் கொள்கைப்படி உலக நாடுகளைப் பாதிக்கிறது? சீனா போன்ற நாடுகள் அதில் பாதிக்காமல் தப்பித்தது எப்படி? அமெரிக்காவின் ஆணைப்படி நடந்துகொள்ளும் இந்தியா கூட பெரிதளவு பாதிக்காமல் இருக்க என்ன காரணம்? தொழிலக மூலதனம் அதிகரிக்காமல் நிதி மூல தனம் அதிகரிப்பால் ஏற்படும் தாக்கங்கள் என்ன? என்பன பற்றி எல்லாம் நிதி விவகாரங்கள் - பொருளாதார விஷயங்கள் பற்றி பெரிதாகத் தெரியாத சாதாரண வாசகர்களும் கூட தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில், எளி மையாகவும் அருமையாகவும் வெளி வந்திருக்கிறது “நிதி நெருக்கடி - ஒரு புரிதல்” எனும் நூல்.

முதலாளித்துவம் - அதன் குணாம்சம்; அதன் கட்டுத் தளையிலிருந்து தொழிலாளிகளை விடுவித்தல், யாரால், எப்படி? தொழிலாளி வர்க்க ஆட்சி யில் விளைந்த நன்மைகள் என்ன? சோவியத் தலைமையிலான புதிய எழுச் சியை சிதைத்திட அமெரிக்க ஏகாதிபத்தியம் கையாண்ட சதிச் செயல்கள், முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் சேம நலத்திட்டங்கள் அறிமுகம் அமல் செய்யப்பட்டது. சோவியத் சிதைவுக்குப் பின் அமெரிக்காவின் தான டித்த மூப்பான நடைமுறைகள், நடவடிக்கைகள் போன்றவை பற்றி இந் நூலில் காப்பீட்டு ஊழியர் சங்கத் தலைவர் அமானுல்லா கான் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

ஆடம்ஸ்மித், மார்க்ஸ்-ஏங்கெல்ஸ், கீன்ஸ், ஃபிரீட்மேன், மார்ஷல் திட் டம், தாட்சரிசம், ரீகனாமிசம் என பல வகையான பொருளாதாரத் தத்துவங் கள் தொடர்பாகச் சுருக்கமாக இந்நூல் கூறுகிறது. அரசியல் உணர்வுள்ள, தொழிற்சங்கச் சார்புள்ளவர்கள் மட்டுமின்றி, சாதாரண பொதுமக்களும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளமாக இந்த நூலில் உள்ளன. ஆங் கிலத்திலிருந்து தமிழில் தந்துள்ள இரா.யேசுதாஸ் பாராட்டப்பட வேண்டி யவர். தக்க சமயத்தில் நூலை வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம்.
நிதி நெருக்கடி ஒரு புரிதல்
அமானுல்லாகான்
ரூ.50

பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை 600018

Friday, 23 March 2012

2012 உலக புத்தக தினம்

 உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும்
நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த
நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை
சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம்
ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும், புத்தக தினம்
இந்த நாளில் கொண்டாடப்படுவதற்கான விசேஷ காரணமாக அமைகிறது.
 காதலர் தினம் முதல் கல்லூரி தினம் வரை கொண்டாடப்பட்டு வரும்
சூழ்நிலையில் உலக புத்தக தினம் அறிவுலகவாதிகளின், படைப்பாளிகளின், புத்தக
நேசர்களின் நாளாக அதற்குரிய சகல விதமான ஏற்பாடுகளுடன் நிகழ்வதற்கான
தீவிரமான சூழலை நாம் எதிர்காலத்தில் உருவாக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
 பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த
ஆண்டு உலகப் புத்தக தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்துள்ளன.
வருகிற ஏப்ரல் 21 முதல் மே 1 வரை மாநிலம் முழுக்க பல  நிகழ்வுகளை
இவ்வமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
 ஏப்ரல் 21 சனிக்கிழமை மாலை, சென்னைக் கடற்கரை காந்தி சிலை அருகே
கவிஞர்கள் பலரும் பங்கேற்கும் உலகப் புத்தகதின சிறப்புக் கவியரங்கமும்,
ஏப்ரல் 22 ஞாயிறு காலை 7 மணிக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக
எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் Run for
Read  ஓட்டமும் நடைபெறவுள்ளது. இதன் பிறகு நிகழ்வில் கலந்து கொள்ளும்
ஒவ்வொருவரும் தாங்கள் வாசித்து முடித்த புத்தகத்தை சக நண்பர்களிடம் தந்து
அவர்கள் வாசித்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் ‘புத்தகப் பரிமாற்றம்’
நடைபெறும்.
 ‘உலகைக் குலுக்கிய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் தெருமுனை நாடகம்,
‘புத்தகத் தேர்’  இழுப்பு, மாவட்ட வாரியாக புத்தகக் கண்காட்சிகள் என
இந்நிகழ்வுகள் நீட்சி கொள்கின்றன. புத்தகக் காட்சி நடைபெறும் இடங்களில்
வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கலந்து கொள்ளும்
ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களிலிருந்து பிடித்தமான
பகுதியை வாசித்தல், புத்தக விமர்சனம், எனத் திட்டமிடப்பட்டுள்ள
இந்நிகழ்வுகளில் அறிவுலகத்தைச் சார்ந்தவர்களும், வாசகர்களும்,
பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்புச் செய்வர்