Tamil books

Monday 30 September 2013

காந்திஜியின் இறுதி 200 நாட்கள்



கமலாலயன்
இந்திய வரலாற்றில் ஈடு இணையற்ற சில மாமனிதர்களின் பங்களிப்பு குறித்து உலகம் வியந்து பாராட்டுகிற நிலை ஏற்பட்டதுண்டு. அவர்களிலும், 'மகாத்மா' என்று போற்றப்பட்டவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வரலாறு தனிரகமானது. எந்தக் கோணத்திலிருந்து நாம் ஆராய்ந்தாலும் அவரை முழுமையாக மதிப்பீடு செய்து முடித்துவிட்டோம் என்று கூறவே முடியாமற் போகிறது. அவரின் ஆளுமையும், பன்முகப்பட்ட செயல்பாடுகளும் அத்தகையன. காந்தியின் 'சத்திய சோதனை'-சுயசரிதை நூல், தவிர பிற நாட்டு அறிஞர்களும், இந்தியாவின் பெரும் படைப்பாளிகளும் அவரது வாழ்க்கையைப் பற்றிய அரிய நூல்களை நமக்குத் தந்திருக்கிறார்கள். மகாத்மாவின் உரைகளையும், எழுத்துகளையும் தொகுத்தளித்தவர்கள் பலர். ரோமெய்ன் ரோலண்ட் லூயிஃபிஷர் போன்ற அயலக எழுத்தாளர்களின் நூல்களும் இந்தியாவில் டி.ஜி.தெண்டுல்கர் தொகுத்தளித்த நூல்களும் குறிப்பிடத்தக்கவை. லூயிஃபிஷரின் நூலைத் தமிழில் தி..ரங்கநாதன் அவர்களும், ரோமெய்ன் ரோலண்டின் நூலை ஜெயகாந்தன் அவர்களும் ஆக்கித் தந்திருப்பது சிறப்பான அம்சம்.
மாமனிதரான காந்திஜியின் வாழ்க்கையில் கடைசி 200 நாட்களின் நிகழ்வுகளையும், அக்காலகட்டத்தில் அவர் பேசிய எழுதியவற்றையும் மட்டும் தொகுத்து அவை குறித்த தனது சிந்தனைகளையும் கலந்து குழைத்து ஒரு காவியத்தன்மை வாய்ந்த பெருநூலை நமக்கு அளித்திருக்கிறார்கள் திரு.வி.ராமமூர்த்தி அவர்களும் பாரதி புத்தகாலயத்தாரும். இந்த நூலைத் தொடராக ஆங்கிலத்தில் 'இந்து' நாளிதழில் ராமமூர்த்தி எழுதிவந்தபோதே அக்கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அவற்றை திரு.கி.இலக்குவன் தெளிந்த அழகிய தமிழ் நடையில் படிப்பவர்கள் நெகிழும் வண்ணம் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

காந்திஜியின் வாழ்க்கைதான் நமக்கு அவர் விடுக்கிற செய்தி. இந்த எளிய வாக்கியத்தை அவரே திரும்பத் திரும்பப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லுகிறார். விடுதலைக்கான வேட்டை பெருந்தீயாய்க் கனன்றெழுந்த நாட்களில் அந்தப் போராட்டத்தின் தலைமைப் பாத்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு முழுமையாகத் தலைமையேற்று நடத்தியவர் காந்திஜி. ஆனால், விடுதலைக்கு விலையாக இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு ஒப்புதல் தருவதற்கு இறுதிவரை மறுத்தவர் அவர். அந்தப் பிரிவினையின் விளைவுகள் என்னவாக இருக்குமென்று அவர் எச்சரித்தாரோ அவை அப்படியே நிகழவும் செய்தன. காந்திஜியின் வாழ்நாள் முயற்சிகள் அனைத்தும் மத நல்லிணக்கம் மிக்க ஓர் இந்தியாவை உருவாக்குவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டவை. ஆனால்,   அவரது பிரதான சீடர்களே அவரது கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போவதற்கு வழியமைத்துக் கொடுத்தார்கள்.

'மகத்தான செயல்களைச் செய்ய முயலும் எவருக்கும் எல்லையற்ற பொறுமை தேவைப்படுகிறது' என்று சக ஊழியருக்கு எழுதியவர்தான் காந்தி. அவரே பொறுமையிழந்து, மனம் தளர்ந்து, 'நான் ஏற்கெனவே புதைக்கப்பட்டுவிட்டேன் என்று நம்பலாமா?' என்றும், 'நம்முடைய மதங்கள் வெவ்வேறாக இருந்தபோதிலும்  நாம் சகோதரர்களைப் போல ஒற்றுமையுடன் வாழ முடியும். ஆனால் இன்றைய தினம் நாம் எதிரிகளாக மாறிவிட்டது போலத் தெரிகிறது. இத்தகைய சூழலில் எனக்கு இந்தியாவில் எப்படிப்பட்ட இடம் உள்ளது? நான் உயிருடன் இருப்பதனால் என்ன பயன்?' (.383-4)-என்றும் விரக்தியுடன் எழுதவும்-பேசவும் நேர்ந்தது.
1947-ம் ஆண்டு ஜுலை 15-ம் நாள் செவ்வாய்க்கிழமையன்று இந்நூலின் காட்சிகள் கண்முன் விரிகின்றன. துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பில், அந்த நாள் முழுக்க வருகை தந்தவர்கள்-காந்திஜி அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள், தெரிவித்த கருத்துகள் போன்ற விவரங்கள் தரப்படுகின்றன. படித்ததும் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் என்று நகரும் பயணத்தின் இறுதி நாளான 1948-ம் ஆண்டு ஜனவரி30-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று மகாத்மா மறைவு நிகழ்வு வரையில் நாமும் அன்றாடம் பயணிக்கிறோம். தேர்ந்த ஒரு நவீன கேமராவுடன் ஒரு வினாடியைக் கூடத் தவற விடாமல் 200 நாட்களின் நிகழ்வுகளையும் படமாக்கிய பின் ஒரு தேர்ந்த தொகுப்பாளர் நேர்த்தியாக 'எடிட்டிங்' செய்து உருவாக்கிய மிகச்சிறந்த ஓர் ஆவணப்படம் போல் நூலின் பக்கங்களில் காட்சிகள் வார்த்தைகளில் கண்முன் விரிந்து செல்லுகின்றன.
பல விதங்களிலும் இந்நூல் தனித் தன்மை வாய்ந்ததாய் இருப்பது படிக்கும் போது தெளிவாகிறது. நாடு விடுதலையடையப் போகிற தருணத்தில் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியான காங்கிரஸ்-முஸ்லீம் லீக் தலைவர்களையும், அவர்கள் செய்துகொண்ட சமரசங்களையும் இக்கட்டுரைகள் தெளிவாக்குகின்றன. 'மதநல்லிணக்கம்' என்பது வெறும் பேச்சினாலும், எழுத்தினாலும் மட்டும் வரக்கூடியதல்ல. அதற்காக உயிர்களைக் கூடப் பணயம் வைக்க வேண்டிய அளவு தீவிரமான செயல்பாடுகளும் தேவை என்று இந்நூல் நிறுவுகிறது.

காந்திஜியின் தார்மீக வலிமை அதற்கு ஒருபோதும் தயங்காமல் ஒவ்வொரு நாளும் செயலில் இறங்கியதை-அதன் மூலம் லட்சோப லட்சம் மக்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்களைப் போல் கட்டுப்பட்டு அமைதியடைந்ததை இந்நாட்களில் நாம் காண்கிறோம். இரயிலில், டாக்டர்.ஜாகீர்உசேன் ஜலந்தர் வரும்போது அவர் முஸ்லீம் என்பதையறிந்த ஒரு சீக்கிய வன்முறைக் கும்பல் கத்திகளுடன் அவரைக் கொல்லப் பாய்ந்த சமயம்-ஒரு சீக்கியப் படைத்தலைவரும், ஓர் இந்து ரயில்வே ஊழியரும் இடையே வந்து நின்று- 'உங்களுக்குத் தைரியமிருந்தால் முதலில் எங்களைக் கொன்று விட்டுப் பின்னர் அவர் மீது கை வையுங்கள்' என்று தமது உயிர்களைப் பணயம் வைத்துக் காப்பாற்றுகிறார்கள். சாதாரண மக்களைக்கூட அசாதாரணமான முறையில்  செயல்படத் தூண்டுகிற சக்தியாக மகாத்மாவின் செயலூக்கமிக்க உதாரணம் அமைந்திருந்ததற்கு இது ஒரு சான்று.
காந்திஜியின் முயற்சிகள்-நவகாளி, பீஹார், காஷ்மீர் என்று எங்கெல்லாம் மதவாத-பிரிவினைவாத வன்முறைகள் நிகழ்ந்தனவோ, அங்கெல்லாம் உடனுக்குடன் நேரடியாகக் களத்திற்குச் சென்று மத நல்லிணக்கத்திற்காக வீதிகளில் இறங்கிப் போராடுவதாகவே அமைந்திருந்தன என்பதை இந்நூலின் ஒவ்வொரு நாள் விவரிப்பும் காட்டுகின்றன. மகாத்மா என்ற ஒரு மகத்தான ஆளுமை, அவரின் சொந்த இயக்கத்தவராலேயே காங்கிரஸ் கட்சியினராலேயே எப்படிப்பட்ட துயரமிக்க மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு அரிக்கப்பட்டது என்பதையும் நூல் பல சம்பவங்களின் மூலம் துணிவுடன் அம்பலப்படுத்துகிறது.

'சிறுபான்மை மக்கள் உறுதியான பாது காப்புடனும், நிரந்தர அமைதியுடனும் வாழும் தேசங்களாக இந்தியாவும்-பாகிஸ்தானும் திகழ வேண்டும் என்று மிகவும் வலுவான முறையில் தமது கருத்தினை காந்திஜி வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவரது வார்த்தைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. கைவிடப்பட்டன. காற்றில் வீசி எறியப்பட்டன. வறண்ட-விரிவான பாலைவனத்தில் ஒலிக்கப்பட்ட குரல் போல் பயனற்றுப் போயின. . . . . . கத்தியின் பிடியுள் பட அவருக்குள் ஆழமாகச் செருகப்பட்டது என்பது மட்டுமல்ல-அது ஒவ்வொரு மணிநேரமும் மேலும் மேலும் திருகப்பட்டது. ஜவஹார்லால்நேரு, வல்லபாய்படேல் போன்ற அவரது சீடர்களால் தலைமை தாங்கப்பட்ட அரசாங்கமே அவர் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், சாதாரண மக்களைப் பற்றி என்ன சொல்வது?' (.302)
இந்த இடத்தில், காந்திஜி தனது கருத்திற்கு உடன்படாதவர்களைத் தனது வழிக்குக் கொண்டுவருவற்கு இதற்கு முன்பு பயன்படுத்திய உண்ணாவிரதம்-தீர்மானகரமான முரட்டுப் பிடிவாதம் போன்ற ஆயு தங்களையும் பயன்படுத்தவே செய்கிறார். ஆனால் முந்தைய சந்தர்ப்பங்களில் வலுவான எதிர்ப்புக்குரல் எழுப்பியவர்கள் ஒரு கட்டத்தில் பணிந்து போனதைப் போல் இப்போது நடக்கவில்லை. காந்தியைப் பற்றிய விமர்சனங்களில் முக்கியமானவை சிலவற்றையாவது இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்வது அவசியமாகிறது.
கார்வாலி படைப்பிரிவு, தமது நாட்டின் சொந்த மக்களைச் சுடுவதற்கு மறுத்தபோது அது கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று காந்தி கண்டித்தது; பகத்சிங்-சுகதேவ்-ராஜ்குரு மூவரையும் காப்பாற்றுவதற்கு காந்தி முயற்சி செய்வார் என்று நாடு முழுவதும் எதிர்பார்ப்புடன் வேண்டுகோள் விடுத்தும் அவர் அதற்கு முயற்சி மேற்கொள்ளாதது; சௌரிசௌரா சம்பவத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே விரக்தியில்-திகைப்பில் ஆழ்த்தும் வகையில் ஒத்துழையாமை இயக்கத்தைத் திடுதிப்பென்று திரும்பப்பெற்றது; இந்தியக் கப்பற்படை எழுச்சியில் (R.I.N.Strike) தொழிலாளர்களும்-பொதுமக்களும் இணைந்து அது பேரெழுச்சியாய் ஆனபோதும் அதை அங்கீகரிக்கவோ - அதன் வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டவோ தயாராயில்லாமல் நிராகரித்தது; உண்ணாவிரத நிர்ப்பந்தத்தின் மூலம் பூனா ஒப்பந்தத்திற்கு அண்ணல் அம்பேத்கரைப் பணியச் செய்தது; காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வெற்றியை ஏற்க மறுத்ததுடன் நிற்காமல் - 'பட்டாபி சீதாராமையாவின் தோல்வி எனது தோல்வி' என்று அறிவித்தது - இப்படியாகப் பல நிகழ்வுகள் காந்திஜியின் அணுகுமுறை குறித்த மிகப்பெரிய கேள்விகளை எழுப்பக்கூடியவை. புரிந்துகொள்வதற்கே மிகவும் கடினமான ஒன்றாக இவ்விடயங்களில் காந்தியின் தனிநபர் சர்வாதிகாரத் தன்மை இருப்பதைப் பற்றிய கருத்துகள் இந்நூலில் அனேகமாக இல்லை எனலாம். ஒரு வேளை காந்திஜியின் இறுதி 200 நாட்களுக்கு முன்பாகவே மேற்கண்டவற்றுள் பலவும் நடைபெற்று முடிந்துவிட்டன என்பதாலோ-என்னவோ, அங்கொன்றும் இங் கொன்றுமாய்ச் சில இலேசான விமர்சனங்களை காந்திஜியே தன்னுடைய  உரைகள்- எழுத்துகளில் குறிப்பிட்டு அவற்றுக்கு அவரது பாணியிலேயே பதிலளித்திருப்பதை மட்டும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
கவர்னர் ஜெனரலுக்குக் கடிதம் எழுதும் போதும், சாதாரண குடிமக்களின் கடிதங்களுக்குப் பதில் எழுதும்போதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கடித உறைகளையே பிரித்து அவற்றின் பின்பகுதிகளில் எழுதுகிற தன்மையில் காந்தியின் சிக்கனம் வெளிப்படுகிறது. காந்தியைத் தினசரி வந்து சந்திப்பவர்கள், நாட்டின் பிரதமர், துணைப் பிரதமர் தொடங்கி-வகுப்புவாத வன்முறைகளால் வீடிழந்து பொருள் இழந்து-அனைத்தையும் இழந்த அகதிகள் வரை அனைத்து சமூகப் படி நிலைகளிலும் இருந்தவர்கள் என்பது தெளிவாகிறது. பிரபலமானவர்களுக்கும், அயல்நாட்டுத் தலைவர்களுக்கும் காந்திஜி தந்த அதே முக்கியத்துவத்தைச் சாதாரண சகஊழியர்களுக்கும் அளித்து வந்திருக்கிறார். நவகாளியில்-காந்தியின் தூதுவராகத் தன்னலமற்று, துணிச்சலுடன் மதக்கலவரங்களால் மிக மோசகமாகப் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் பணியாற்றி வந்தவர் அம்துஸ்ஸலாம் என்ற ஒரு முஸ்லீம் பெண். இவரது பணிகளின் வீச்சை, காந்தியே இவருக்கு எழுதுகிற கடிதங்களின் வாயிலாகவே அறிகிறோம். இவரைப் போன்று உலகம் அறிந் திராத, பாடப்படாத வீர நாயகர்கள் (Unsung Heros) பலரையும் இந்த 200 நாட்களின் பலதினங்களில் நாம் சந்திக்க முடிகிறது. இந்நூலின் சிறப்பான தனித்தன்மைகளில்        இதுவும் ஒன்று. இந்தப் பெண்ணைப் போன்று வேறு பலரின் பெயர்கள் இந்நூலில் நமக்கு முதன்முறையாக அறிமுகமாகின்றன. (எனது குறுகிய வாசிப்பு அனுபவத்திற்கு எட்டிய வரையில்.)
மகாத்மாவின் தன்னலமற்ற-தார்மீக வலிமைமிக்க பணிகளின் வீச்சு குறித்தும், அவரது இதயத்திலிருந்து அந்தரங்க சுத்தியுடன் வெளிப்பட்ட சொற்கள் அன்றைய இந்தியாவின் ஒவ்வொரு மனிதரையும் எப்படிப் பாதித்து செயல்படத் தூண்டின என்பது குறித்தும் பலநூறு சம்பவங்களை நாம் இந்நூலில் காண்கிறோம்.

மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி ஏற்படுத்தும் வகையில் முஸ்லீம் லீக் தலைவரான சுவராவர்தியுடன் சென்று ஒரு பாழடைந்த வீட்டில், கல்கத்தாவில் பல நாட்கள் வசதியற்ற, மோசமான சுற்றுப்புறச் சூழலில் தங்கியிருந்து காந்திஜி பணியாற்றிய அபூர்வமான நிகழ்வு வாசிக்கையில் ஏற்படுத்தும் தாக்கம் அழுத்தமானது. அகதிகளுக்கு உடனடி நிவாரணங்களாவது கிடைக்கச் செய்வதில் காந்தி காட்டிய மன உறுதியின் விளைவாகப் போர்வைகளும், மெத்தைகளும், குளிர்கால உடைகளும் மலைபோல் குவிந்த நிகழ்வும், அந்த அகதிகளுக்குக் கிடைக்காத மருத்துவ வசதிகளைத் தாமும் தம்முடனிருந்த பிறரும் அனுபவிக்கக் கூடாது என்பதில் அவர் காட்டிய கண்டிப்பும் மிகச் சிறந்த உதாரணங்களாக இருக்கின்றன.

மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த முஸ்லீம் கைவினைஞர்களின் குழு ஒன்று தன்னைச் சந்தித்து  போர்வைகளும்-பணமும் கொடுத்து அவற்றை மேற்குப் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்துக்களுக்கும்-சீக்கியர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் தெரிவிக்கிற காந்தி 'அவர்களது செயல் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு போற்றப்பட வேண்டியது' என்கிறார்.
தான் கூறுவதற்கு தேசமே கட்டுப்பட்டு நின்றதையும், தான் விரலசைத்தால் தேசமே ஆர்ப்பரித்து எழுந்ததையும் கண்டவரான காந்திஜி தன் வாழ்நாளின் இறுதி நாட்களில், தனது சீடர்களே தன்னுடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தத் தயாராக இல்லாததையும் தனது நேரடி அனுபவங்களில் உணர்ந்தார். இந்தச் சோகமயமான உண்மையை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் நிறுவுகிறது.

'மதத்திற்காக உயிரை விடவும் தயாராக இருந்தபோதிலும், அது தனிமனிதச் செயல்பாடுதான்; அரசுக்கோ, அரசியலுக்கோ அதில் பங்கும், தொடர்பும் எதுவும் கிடையாது.' என்ற காந்திஜியின் செய்தி இன்றைய சூழலில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது!
நூலாசிரியர் அறிஞர் ராமமூர்த்தி செய்துள்ள பணி போற்றுதலுக்குரியது. இன்றுள்ள சூழல் மகத்தானது. கிரிக்கெட், கர்நாடக இசை, நிர்வாகக் கலை, தமிழிலக்கிய ஆய்வு எனப் பலதுறைகளிலும் அவர் ஆற்றியிருக்கக்கூடிய பணிகள் அனைத்தையும் ஒரு தராசில் இட்டு-இந்த நூலின் மூலம் சமுதாயத்திற்கு அவர் ஆற்றியுள்ள பணியை மட்டும் மற்றொரு தராசில் இட்டால், இரண்டாவது தட்டுதான் அதிக நிறையுடையதாயிருக்கும். மூலநூலின் கட்டுரைகளை அதே உணர்வுடன், சிறிதும் சுவை குன்றாமல் ஆற்றொழுக்கான நடையில் மொழிபெயர்த்துத் தந்த கி.இலக்குவன் அவர்களையும் இதே அளவு போற்ற  வேண்டும். இன்றைய இந்திய சமூகம் வேண்டி நிற்கிற ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்றுவதற்குத் தமிழ் வாசகர்கள்-படைப்பாளிகளுள் செயல்படத் தயாராயிருப்பவர்களுக்கு ஓர்ஆயுதமாக இந்நூல் பயன்படும்.
மிகச் சிறந்த முறையில் பொலிவுடன் இந்நூலை மிக மலிவு விலையில் வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது.
*
காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
ஆசிரியர்: வி.ராமமூர்த்தி
தமிழில்:கி.இலக்குவன்
பக்கங்கள்: 896
விலை: ரூ.350
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை-600 018
044 24332924

நன்றி உயிர்மை