Tamil books

Tuesday 3 September 2013

சத்தான ஓர் எதார்த்தவாத நாவல்


கி.பார்த்திபராஜா


தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதையாளராக அறியப்பட்ட ம.காமுத்துரையின் இரண்டாவது நாவல் ‘மில்’.  ஆறு சிறுகதைத் தொகுதிகளையும் ‘முற்றாத இரவொன்றில்’ என்ற நாவலையும் ஏற்கனவே படைத்த அனுபவங்களின் திரட்சியோடு புதிதாய்ப் பிறந்திருக்கிறது இந்நாவல். தமிழகத்தின் பின்தங்கிய தெற்கத்திப் பகுதியொன்றில் உழைப்பாளர்களின் இரத்தம் உறிஞ்சும் நூல் மில்லின் ஊடாகத் தொழிலாளர்களின் நிலையினைப் பேசுகிறது இந்நாவல்.
விவசாயம் பொய்த்துப்போன சூழலில் நூல் மில்லுக்கு வேலைக்குப் போகத்துடிக்கும் இளைஞர்கள், இத்துடிப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் உழைப்பை ஓசியிலேயே குறிப்பிட்ட காலம் வரை வாங்கிவிடும் மில் நிர்வாகத்தின் நயவஞ்சகம் ஆகிய உண்மைகள் இந்நாவலில் தோலுரிக்கப்படுகின்றன. மில் நிர்வாகத்திற்கு எதிரான முணுமுணுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய்த் திரண்டு சங்கமாவது, சங்கம் உருவாக்கப்பட்டவுடன் முதலாளி-தொழிலாளிகள் சந்திப்பு, கருத்துக் கேட்புக் கூட்டங்களின் முகமாற்றங்கள், சங்கத்தை உடைக்க கருங்காலிகளின் துணையோடு நிர்வாகம் முயற்சிப்பது என தொழிற்சங்க உருவாக்கத்தை நுண்ணிய தளத்தில் பதிவு செய்கிறது ‘மில்.
அதிகாரம், மிரட்டல், சுரண்டல் என ஒரு புதிய உலகத்தைக் கண்முன்னால் விரிக்கிறது இந்நாவல். முறைவைத்து இயங்கும் இராட்சத எந்திரங்களின் இரைச்சலினூடே காட்டிக் கொடுக்கும் மேஸ்திரிகள், அதிகாரம் செலுத்தும் சூபர்வைசர்கள், மாஸ்டர்கள், முதலாளிகள் என முற்றிலும் புதிய மனிதர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இதற்கு முந்தைய தொழிலாளர் நாவல்களில் வெளிப்பட்ட மாந்தர்களினும் இவர்கள் முற்றிலும் வேறு வகையினராக இருக்கிறார்கள். இவர்கள் உலகமயத்தின் பின் அறிமுகமாகும் புதிய எண்ணப்போக்கினை உடையவர்கள். வேலைக்கான நெருக்கடிகள் அதிகரித்துவிட்ட காலப்பகுதியில் வாழ்பவர்கள். எனவே குறிப்பானதொரு வகையில் சமகாலத்தைச் சுமப்பவர்களாக இவர்கள் இரத்தமும் சதையுமாக நாவல் முழுக்கவும் வலம் வருகிறார்கள்.
பணியிடத்தில் ஒண்ணுக்குப் போகக்கூட முடியாத அவஸ்தை, நெருக்கடி என நுட்பமான வலிகளையும் வாசகனுக்குக் கடத்திவிடுகிற பணியினை மிகுந்த கவனத்துடன் செய்கிறது இந்நாவல். வாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லாவற்றையுமே சகித்துக் கொள்ளும் கசப்பு அற்புதமாக நாவலில் வடிக்கப்பட்டிருக்கிறது.
நாம் வாசித்த தொழிற்சங்கம், தொழிலாளர் போராட்டம் முதலான பொருண்மைகள் அடங்கிய நாவல்கள் இதுவரை முடிந்திராத புதிய இடத்தில் இந்நாவல் முடிந்திருக்கிறது. சற்றும் எதிர்பாராமல் ஒரு திருப்பத்தில் அழைத்துச் சென்று தப்பிக்க வழியற்ற இடத்தில் வாசகனை நிறுத்தி முடிந்துபோய்விடுகிறது நாவல். எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி, எதார்த்தமாய் முடிந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்தபடியும் விரும்பியபடியும் அமைவதில்லைதானே வாழ்க்கை?
மில் தொழிலாளியாய் அடியெடுத்து வைத்துத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டி எழுப்பிப் போராட்டத்திற்குத் தலைமையளிக்கும் ராசு, தான் பணிபுரிந்த, கனவுகளோடு சங்கம் கட்டிய மில்லின் சமகால மாற்றங்களை அவதானித்தபடி, மீண்டும் அதே நிர்வாகத்திடம் தனக்காக வேலை கேட்டுப் போகும் மாமனாரைச் சலித்தபடி அமர்ந்திருக்கும்போது, வாசிப்பாளனுக்குத் தவிர்க்க இயலாதபடி குற்றவுணர்வை ஏற்படுத்திவிடுகிறார் நாவலாசிரியர். நாவலின் பாத்திரமாகிய ராசுவை விட, வாசிப்பாளன் குமைந்து போகிற வண்ணம் நாவலின் முடிவு அமைந்திருக்கிறது. நாவலின் வெற்றி என்று இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தொழிற்சாலைகள் வந்தால் அதனையொட்டிய கிராமங்கள் வளம்பெறும் என்பது ஒரு நம்பிக்கை. உள்ளூர்க்காரர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பது ஒரு நப்பாசை. அதுதான் நிலம் கேட்டு வரும் முதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து மக்கள் வரவேற்கக் காரணமாகிறது. அவ்வாறு தங்களின் நிலத்தை நூல் மில்லுக்குத் தாரைவார்த்த கிராமத்து மக்கள் சார்பில் பண்ணையாரும் பட்டாளக்காரரும் தங்கள் கிராமத்து இளைஞர்களை நிர்வாகம் பழிவாங்கும் போக்கைத் தட்டிக்கேட்கப் போகிறார்கள். சட்டம், நியாயம், தருமம், விதிகள் என்று எல்லாவற்றையும் காரணம் காட்டி, நியாயஸ்தர்களின் வாய் அடைக்கப்படுகிறது. முதலாளியம் இரக்கமற்ற ஏகாதிபத்தியமாய் மாற்றமடைந்திருப்பதனை எளிய காட்சியின் மூலமாக அம்பலப்படுத்திவிடுகிறார் நாவலாசிரியர்.
மில், முதலாளி, ஏ.ஓ, மாஸ்டர், சூபர்வைசர், மேஸ்திரி, தொழிலாளர்கள் ஆகிய பாத்திரங்கள் உயிர்ப்புடனும் அழுத்தத்துடனும் படைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த உயிர்ப்பை, அழுத்தத்தை நாவலில் வரும் அம்மா, அண்ணி, செல்வி, நாகு ஆகிய பாத்திரங்கள் பெறவில்லை. கிராமத்துப் பாத்திரங்களில் பட்டாளக்காரனைத் தவிர, வேறு யாரும் மனதில் ஒட்டவில்லை. அவர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்று உரையாடல்களை நிகழ்த்துபவர்களாக மட்டுமே உள்ளனர். நிகழ்வுகளில் ஒட்டாத தன்மையினை அவர்களின் பாத்திர வெளிப்பாட்டில் காணமுடிகிறது. நாவலின் மையப் பொருண்மைக்குச் சற்று விலகி இருக்கும் பாத்திரங்களில் எழுத்தாளர் கவனம் குவிக்காமை அப்பட்டமாய் நாவலில் வெளிப்பட்டு நிற்கிறது.
நாவலின் உள்ளடக்கம், உருவம் சார்ந்த பிரச்சினைப் பாடுகளையும் தாண்டி மற்றொரு விடயம் குறிப்பாக விவாதிக்கபடுவது முக்கியமாகிறது. அதாவது, சோசலிச எதார்த்தவாதம் உயிர்ப்போடு தமிழ்ச்சூழலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய நாவல்களுக்கும் இந்நாவலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் ஆகும்.
எதார்த்தவாத எழுத்து முறைமை சலிப்பூட்டக்கூடியதொன்றாகப் பார்க்கப்பட்டு, எழுத்தாளர்கள் வேறு எழுதியல் முறைமைகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் எதார்த்தவாதத்தை உயர்த்திப் பிடித்தபடி இந்நாவல் பிறந்திருக்கிறது. எதார்த்தவாதம் காலாவதியாகி விட்டது என்ற குரல்கள் படைப்பிலக்கியத் துறையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் இந்நாவல் அக்குரல்களுக்கு மவுனமான பதிலை அழுத்தமாய் அளித்திருக்கிறது எனல் பொருத்தம். அதாவது, எதார்த்தவாத எழுத்து முறைமைக்கு இன்னும் தெம்பும் திராணியும் சத்தும் இருக்கிறது என்பதை இந்நாவல் அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது.
இங்குக் குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டிய மற்றொரு விடயம், மாறி வரும் நவீன வாழ்க்கை அமைப்பில், தொழிலாளர்களின் உளவியல், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள், தொழிற்சாலை நிர்வாகத்தினரின் செயல்பாடுகள் ஆகியனவாகும். தொழிலாளர்களின் உளவியல் மாற்றங்களைச் சமூகத்தின் போக்கிலிருந்து புரிந்துகொண்டு அதற்குத் தக வினையாற்றும் சக்தியை இன்றைய தொழிற்சங்கங்கள் பெற்றாக வேண்டும். அது இன்னும் புரிவுபடாமல் திகைத்துத் திகைத்துச் செயல்படும் நிலையிலேயே தொழிற்சங்கங்கள் தொழிற்படுகின்றன என்பது அப்பட்டமான உண்மையாகும். நவீன காலகட்டத்தின் தொழிலாளர் மனநிலையிலிருந்து இந்நாவல் பல நுட்பமான அனுபங்களைப் பதிவு செய்கிறது. அவற்றைச் சிதறாமல் தொகுத்துக் கொள்ளுதல் அவசியமான செயல்பாடாகும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பேரவலங்கள் சூழ்ந்த கடந்த தசாப்தத்தில் ம.காமுத்துரையின் ‘மில்’ உயிரோட்டமானதாக வந்திருக்கிறது. அதற்காக நாவலாசிரியரைப் பாராட்ட வேண்டும்.

‘மில்’ (நாவல்)
ஆசிரியர்: ம.காமுத்துரை
வெளியீடு: உதயகண்ணன், எண்:10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11
விலை: ரூ.150. பக்கங்கள்: 272

No comments:

Post a Comment