Tamil books

Saturday, 14 September 2013

பெனியின் மனவுலகம்


மேலாண்மை பொன்னுச்சாமி
  தோழர் மதுக்கூர் ராமலிங்கம் வாசித்து முடித்திருந்த புத்தகத்தை நான் கேட்டேன். கேட்பது எல்லோருக்கும் சுலபமானது. புத்தகத்தைத் தருவதற்கு ஒரு பரந்த ஆகாய மனசு வேண்டும். சில புத்தகங்களைப் பெற்ற பிள்ளைக்குச் சீதனமாகத் தருவதற்குக்கூட மனசு வராது. மனசு வந்தது, மதுக்கூருக்கு. மதுரையில் வாங்கிவந்த புத்தகம் என் மேஜையில் ரொம்ப நாளாக சும்மா கிடந்தது.
 ஏற்கெனவே படித்துக் கொண்டிருந்த புத்தகங்கள், அன்றாட வாசிப்புகள், நடுநடுவே எழுத்துப் பணி என்று நாட்கள்  நகர்ந்து கொண்டிருந்தன.
 என்னவோ தெரியவில்லை. அன்றைக்கு இந்த புத்தகத்தை எடுத்தேன். அட்டையை வெறித்துப் பார்த்தேன். 'அல்பேனியா நாவல்' என்ற தகவல் முதல் ஈர்ப்பாக இருந்தது. தமிழில் யூமா. வாசுகி என்ற செய்தியும் பெருத்த ஆர்வத்தைத் தந்தது.
 ஒரு நீண்ட முன்னுரையை எதிர்பார்த்தேன். பல்வேறு விளக்கங்களைக் கோருகிற கேள்விகள் இருந்தன. அவற்றுக்கான பதில்கள் தருகிற முன்னுரை இருக்கும் என நினைத்தேன். மொழி பெயர்க்கும் போது நேரிட்ட அனுபவங்களைப் பகிர்கிற மொழி பெயர்ப்பாளர் முன்னுரையும் இருக்கும்.
 அல்பேனியா ஒரு சோசலிச நாடு. இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாடுகளை விழுங்கித் தீர்க்கிற உலகப் பசியோடும், ''உலகை ஆளப் பிறந்த ஜெர்மானிய இனம்'' என்கிற இனவெறியோடும் வெற்றிக் கொக்கரிப்புகளுடன் முன்னேறி வந்த இட்லர் ராணுவத் தாக்குதலுக்குள் காலடியில் சிக்கிய புழுவென நசுக்குண்ட நாடு, அல்பேனியா. ஸ்டாலினின் சோவியத் ராணுவப் படையாலும், அல்பேனிய தேசபக்த மக்கள் படையாலும் மீட்கப்பட்டு, சோசலிச சமுதாயமாக அமைந்த நாடு. சோசலிசப் பின்னடைவு நிகழ்வு தருணத்தில் சிதைந்த நாடு.
  இந்த நாவல் சோசலிச காலத்தில் எழுதப்பட்டதா, சோசலிசம் தகர்ந்த பின் எழுதப்பட்டதா? நாவலாசிரியர் கிகோ புளூஷி பெண்ணா, ஆணா? எழுதப்பட்டிருப்பது சிறுவர் இலக்கியமா, பெரியவர் இலக்கியமா? தமிழாக்கம் செய்திருப்பவர் நாடறிந்த நவீனப்படைப்பாளி. கவிஞர், ஓவியர் சிறுகதைப் படைப்பாளி. முடிச்சுகளும் புதிர்களும் அணிவகுக்கிற இறுகலான அடர்த்தியான மொழி நடைக்குச் சொந்தக்காரர். அவரது மொழி பெயர்ப்பில் சிறுவர் இலக்கியமா?
 இத்தனை கேள்விகளுக்கும் தேவைப்படுகிற முன்னுரை இல்லாமல், எடுத்த எடுப்பிலேயே அட்டையைத் திறந்தவுடன் நாவல் திறந்து கொள்கிறது.
  ''என் பெயர் பெனி. என் அப்பா அம்மாவுக்கு ஒரே மகன். சின்னமகன். என் அம்மாவின் பெயர் லெட்டா. என் அப்பா ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார்'' என்று நாவல் பெனி எனும் சிறுவனின் மன உச்சரிப்புகளுடன் துவங்கி விடுகிறது. அவனது மன உணர்ச்சிகளின் வழியாக சம்பவங்கள் நிகழ்கின்றன.
   முடிச்சுகளும், புதிர்மர்மச் சிக்கல்களும் நிறைந்த அறிவார்ந்த வாசிப்பைக் கோருகிற அடர்த்தியான செறிவான மொழிநடைக்குரிய எழுத்தாளர் யூமா. வாசுகியின் தமிழாக்கமா இது? இத்தனை எளிமையாகவா? சிறுவர்களின் மன உலகுக்குரிய இலக்கிய எளிமை. பேராச்சரியம் நமக்குள் முட்டுகிறது.
  ''போரும் அமைதியும்'' என்ற அமரத்துவ நாவல் உள்பட பல்வேறு படைப்புகளை படைத்து வழங்கிய ருஷ்ய நாட்டில் வாழ்ந்த உலக மேதையான லியோ டால்ஸ்டாய், சிறுவர் இலக்கியம் எழுதுகிறபோது, குழந்தையாக பரிணமித்துவிட்ட அதே அபூர்வம், யூமாவாசுகியிடமும் நிகழ்ந்திருக்கிறது.
  அம்மா என்பவள் அன்பானவள். மிருதுவான உணர்வுக்குரியவள். பிள்ளை வளர்ப்பில் பெரும் பொறுமையும் பெருந்தியாகமும் காட்டுகிறவள். மகனின் மனமறிந்து நடப்பவள். இதுதான் பொதுப் புத்திகளில் அழுத்தப்பதிவாக உறைந்து கிடக்கிறது.
  தகப்பனில்லாத தாயின் வளர்ப்பு, மகனை பாழ்படுத்திவிடும் என்பது கிராமத்து மக்களின் உறுதியான அபிப்பிராயம். 'அறுதலி வளர்த்தபிள்ளை தறுதலை' என்று அதைச் சொலவடையாக சொல்லி வைத்தனர்.
  ஆனால், இந்த நாவலில் பெனியின் சுதந்திர உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அம்மாதான் மகனை உள்ளங்கைக்குள் மூடி வளர்க்கிறாள். மருந்தாளுநராக பணியாற்றுகிற லெட்டா, தன் சின்னமகனை பத்திரமாக வளர்ப்பதான நினைப்பில் கண்டிப்புகள் நிறைந்த சிறிய வட்டத்திற்குள் சிறுவனை நிறுத்துகிறாள். 'அங்கு போகாதே... இங்கே போகாதே... தடுமன் பிடிக்கும். தண்ணீரில் விளையாடாதே... புழுதியும் கிருமிகளும் அப்பும். தெருவில் விளையாடப்போகாதே... மற்ற சிறுவர்களுடன் பழகாதே... கெட்ட பழக்கங்கள் ஒட்டிக் கொள்ளும்' ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் பதற்றப்பதைப்புகள். அச்சுறுத்தல்கள். மகனை நிழலிருட்டில் வளர்கிற தாவரம்போலாக்குகிறாள். அப்பா அப்படியல்ல. கட்டுப்பாடுகளை தாண்டுவதில் குஷி. விளையாடுவதில் மகிழ்ச்சி. மனைவிக்குப் பயந்து கொண்டே மகனுக்கு சுதந்திரம் தர முயல்கிற முனைப்பு.
 வீட்டை விட்டு வராமல் சிறைப்பட்ட பொன்வண்டாக பெனியின் மனப்புழுக்கத்தை நாவல் உணர்த்துகிறது. தெருப்பிள்ளைகள் இவனை அந்நியப்படுத்துகின்றனர்.
''நீ ஒரு ஆணாக இருந்திருந்தால் எங்களுடன் நதியில் விளையாட வந்திருப்பாய். ஆனால், உனக்குத் தைரியமில்லை. உல்லாசப் பயணத்திற்கு அழைத்தால், அதற்கும் வரமாட்டாய். நீ ஒரு ஆண்பிள்ளை இல்லை. நீ ஒரு அம்மாபிள்ளை'' என்று தெருவிளையாட்டுப் பிள்ளைகள் இவனைப் பரிகாசம் பண்ணுகின்றனர். கேலிக்குள்ளாகிறான்.
 அவனைப் பற்றி நாவல் வெளியே நின்று விவரிப்பதில்லை. அவனுக்குள்ளிருந்து வெளிப்படும் எண்ண ஓட்டங்களின் வழியாகவே வெளிஉலகம் நமக்குள் விவரிக்கப்படுகிறது.
  கிராமத்திலிருந்து குதிரையில் வருகிற மாமா வந்த பிறகு, இவனுக்கு சுதந்திரச் சிறகு முளைக்கிறது. அனுபவங்களின் உணர்வோட்டங்களின் வழியாக மொத்த நாவலே நமக்குள் உலவுகிறது.
 நாவல் மிகப் பெரிய வெற்றி பெறுகிறது.
 இருபது பக்கம் முப்பது பக்கம் வாசித்து முடிப்பதற்குள் நம்மை நாமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கொள்கிறோம். 'நாம் நமது பிள்ளைகளின் உணர்வறிந்து நடத்தினோமா....? அல்லது நமது பாசத்தால் நமது பிள்ளைகளை மூச்சு திணற வைத்தோமா? கட்டுப்பாடுகளால் வதைத்தோமாஎன்றெல்லாம் நம்மை நாமே விசாரித்துக் கொள்கிறோம்.
  நமது மனசைச் சலவை செய்கிறது. வாசக மனசை விசாரணைக் குட்படுத்துகிற மிகப் பெரிய வெற்றியை நாவல் அடைகிறது. சுதந்திரம் என்ற பேருணர்வையும், அதன் அத்யாவசியத்தையும் உணர்த்துகிறது நாவல். கூட்டுறவுப் பண்ணை முறையிலான கிராம சமுதாய அமைப்பில் உடைமைகள் யாவும் பொதுமையாக இருக்கிறதையும், சகலரும் சமத்துவமாக உழைத்து வெல்வதையும், இயற்கையுடனான முரணுறவில் கிராமத்து மக்களின் சமயோசித அணுகுமுறையையும் நாவல் அற்புதமாக உணர்த்துகிறது.
 தாய் மாமாவை மறக்க முடியவில்லை. பாசிஸ ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கிழவர்களையும், சாகாமல் தப்பித்து செவிலியராக பணியாற்றுகிற பெண்ணையும் மறக்க முடியவில்லை. பெனியின் மன உணர்வின் சாளரத்தின் வழியாகவே சமூக நடப்பியலை உணர்த்துகிறது நாவல். ரொம்ப வருடம் கழித்து ஒரு கம்யூனிஸ்ட் நாவலின் அழகியல் நுட்பத்தை தரிசிக்க முடிகிறது. இந்த வாசிப்பனுவம் தருகிற மனக்கிளர்ச்சி உன்னதமானது.
  பாரம்பர்யமான தேவாலயம், கூட்டுறவுப் பண்ணை தலைமை அலுவலகமாகியிருப்பதை நாவல் விவரிக்கிறபோது... இப்போதைய கால வாசிப்பின்போது... கிராமத்தின் சகலரும் கிறிஸ்துவையும், தேவாலயத்தையும் வெறுத்திருப்பார்களா என்று ஒரு சிறிய நினைவுக்கீற்று விமர்சனமாக ஓடுகிறது. மிகச் சிறந்த நாவலை வாசித்த அனுபவம் மட்டுமல்ல... வரலாற்றின் ஒரு கால கட்டத்தையே உணர முடிகிறது.

பெனி எனும் சிறுவன் 
கிகோ புளூஷி 
 தமிழில் : யூமா.வாசுகி 
பாரதி புத்தகாலயம்
044 24332924

  ரூ. 120/ பக் : 240