Tamil books

Tuesday 22 October 2013

பண்டையக் கால இந்தியா

கி.ரவீந்திரன்

முனைவர் திவிஜேந்திர நாராயண் ஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்திய வரலாற்றுப் பேரவையின் பண்டைய இந்திய வரலாற்றுத் துறையின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றியவர். இந்து தேசியவாதம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறவர். அந்த வகையில் ‘Ancient India in Historical outline’  என்ற நூல் மிகவும் குறிப்பிடத்தக்கது. அசோகன் முத்துசாமி இந்நூலை ‘பண்டையக் கால இந்தியா’ என்கிற பெயரில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி குப்தர்கள் காலம் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை ஜா இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அறியப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே என்கிற புரிதலுடன் கூடிய நூலாசிரியரின் தேடுதலும் ஆய்வும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகின்றன.

எகிப்து, மெசபடொமியாவைக்   காட்டிலும் மிகச் சிறப்பான நகர நாகரிகமாக விளங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தை நூலாசிரியர் நுணுக்கமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பிரம்மாண்ட நகர அமைப்பும், மாட மாளிகைகளும் இருந்த அதே நேரத்தில், நகருக்கு வெளியே வறியவருக்கான இருஅறைக் குடில்கள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன என்பதை ஆசிரியர் விவரிக்கும்போது, ஹரப்பா காலத்திலும் வர்க்க வேற்றுமை நிலவி வந்ததை நம்மால் உணர முடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் வலமிருந்து இடமாக எழுதும் முறையைக் கொண்டிருந்தனர் என்பதையும், இறந்தவர்களைப் புதைத்துக் கல்லறை கட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் ஆசிரியர் விளக்கும்போது நமக்குப் பல புதிய பரிமாணங்கள் புலப்படுகின்றன.
மாட்டிறைச்சி மற்றும் பசு மாமிசம் உண்ணும் வழக்கம் இஸ்லாமியர் வருகையை ஒட்டியே இந்தியாவிற்குள் நுழைந்தது, பசு புனிதமானது, அதைக் கொல்வது இந்து மத விரோதம் என்றெல்லாம் கதைக்கும் இந்துத்துவ அமைப்புகளின் கூற்றுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக ஜா நிரூபிக்கின்றார். ‘கோக்னா’ எனப்படும் விருந்தாளிகளுக்கு பசு மாட்டு இறைச்சியை வழங்கி வேதகால ஆரியர்கள் கௌரவித்தனர்; ரிக்வேதம் பல்வேறு பலிச் சடங்குகளை விவரிக்கும் 428 பாடல்களைக் கொண்டது; ராஜரூய யாகம், அசுவமேத யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களின் போது பசு மாடுகள் பலியிடப்பட்டு அவற்றின் இறைச்சி விருந்தாக வழங்கப்பட்டது என்பன போன்ற ஆதாரங்களை முன்வைக்கிறார். ஆனால், இன்றோ பசுவைப் புனிதமாக்கி, கொன்றால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சட்டம் இயற்றுகின்றனர் சங்பரிவாரிகள். எதிரிகளின் நிலத்தைக் கைப்பற்றி புனிதப்படுத்தும் ஆரியர்கள் ஹரப்பாவையும் அவ்வாறே வீழ்த்தியிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஹரப்பா என்கிற இடத்தில் ஆரியர்கள் மேற்கொண்ட போரைப் பற்றி ரிக்வேதப் பாடல்கள் சில பாடுவதைச் சுட்டிக் காட்டுகின்றார். நகர்ப்புற சிந்து வெளி நாகரிகம் அழிந்து, புராதன கிராமப்புற வேதகால நாகரீகம் தொடங்குகிறது. ரிக்வேத கால ஆரம்பத்தில் சமூகம் தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே இருப்பதையும், சமூக ஒழுங்குமுறை எதுவும் உருவாகாத சூழல் நிலவியதையும் ஆசிரியர் விளக்குகின்றார். தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை போன்ற பாலுறவுகள் நிலவி வந்ததை ஆசிரியர் ரிக்வேதப் பாடல்கள் மற்றும் யாமா-யாமி உரையாடல்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் சுட்டிக் காட்டுகிறார். ஜனா என்றழைக்கப்பட்ட இனக்குழுத் தலைவனை வழிநடத்த சபா, சமிதி என்ற அமைப்புகள் இருந்தன. அரசருக்குச் செலுத்த உபரியாக மக்களிடம் எதுவும் இருக்கவில்லை. இது போன்ற தகவல்கள் மூலம் அன்று நிலவிய தாய்வழிச் சமுதாயத்தின், புராதனப் பொதுவுடமைச் சமுதாயத்தின் தன்மையை நம்மால் உயர முடிகின்றது.

ரிக்வேத கால முடிவில் இதர மூன்று வேதங்கள் உருப்பெற்றன. (கிமு 1000 - 600). சபா, சமிதி அமைப்புகள் வலுவிழந்து வாரிசுமுறையில் மன்னராட்சி அமைப்பு வலுப் பெற்றதையும், ரிக்வேதப் பலிச் சடங்கு முறைக்கு எதிர்ப்பு மற்றும் மாற்றாக தனிமனித ஒழுங்கு, உயர்வு, ஆன்மா, துறவு போன்றவற்றை உயர்த்திப் பிடிக்கும் உபநிஷத்துகளின் தோற்றத்தையும் தெளிவுபடுத்தும் ஆசிரியர்  இவற்றை த் தனதாக்கிக் கொள்ளும் வகையில் வேதமதம் ஆசிரமம், பிரம்மச்சரியம், கிரகஸ்தம் மற்றும் வனப்பிரஸ்தம் ஆகிய நான்கு தனிமனித நிலைகளை முன்னிறுத்தியதையும் தெளிவுபடுத்துகிறார். இதே காலத்தில்  இதே பிரச்சனைகளை முன்வைத்து பௌத்த   சமண மதங்கள் உருவாகி வலுப் பெற்றதையும் பதிவு செய்கின்றார்.

வணிக வளர்ச்சி, கடல் கடந்த வணிகம், அங்காடிகள், உணவு விடுதிகள் போன்றவற்றை வேத மதம் மறுத்தது; அதே நேரத்தில் பௌத்த, சமண மதங்கள் இவற்றை ஆதரித்தன. வட்டிக்குப் பணம் கொடுப்பதை வைதீக மதம் கண்டித்தது. பௌத்த சமண மதங்களோ வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்காமல் இருப்பதையும், வட்டி கட்டாமல் இருப்பதையும் கண்டித்தன. அவை அடிமைகளையும், கடன்காரர்களையும் ஏற்றுக் கொள்ள மறுத்தன. வரலாறு தோறும், மதங்கள் தோறும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே தீர்மானகரமான சக்திகளாக இருந்திருக்கின்றன என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

வேத மதத்தின் வர்ண மற்றும் சாதிப் பிரிவினைகளுக்கு எதிராக பௌத்த சமண மதங்கள் வலுவான போராட்டங்களை நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டை ஜா அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
கிமு 6ம் நூற்றாண்டு முதல் 3ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பெரிய அளவிலான அரசுகள் தோன்றியதைச் சுட்டிக்காட்டும் ஜா, சத்திரிய குலத்தைச் சாராத முதல் சூத்திர அரச வம்சமாக நந்த வம்சம் விளங்கியதையும், அதன் முதல் மன்னன் மகாபத்ம நந்தனின் தாய் ஒரு சூத்திர சாதியைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

நந்தர்களைத் தூக்கி எறிந்து அரியணை ஏறிய மௌரியர்களே முதல் பேரரசை உருவாக்கினர். சந்திரகுப்தரும் சாணக்கியரும் தங்களது அரசியல் சாதுர்யத்தின் காரணமாக பேரரசிற்கு வழி கோலினர். கலிங்கப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதே கொடுங்கோலன் அசோகரின் மனமாற்றத்திற்கும், பௌத்த மதமாற்றத்திற்கும் காரணம். மௌரியப் பேரரசிற்கு பெருமளவில் வரிப்பணம் வந்தபோதிலும் (விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு விவசாய வரி) மிகப்பெரிய பேரரசையும், படையையும் நிர்வகிக்கப் போதுமானதாக இல்லை. இறுதியில் அசோகரின் புத்த மதத்தழுவலும், அகிம்சையும், தர்மப் பணிகளும் கஜானாவைக் காலி செய்தன. அசோகரின் இறுதி நாட்களில் அவரிடம் ஒரு அரை மாம்பழம் மட்டுமே இருந்ததாக ஒரு பௌத்த ஜாதகக் கதை தெரிவிப்பதாக ஜா கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.


கிமு 180ல் கடைசி மௌரிய மன்னன் பிருஹத்ரதரை அவருடைய பிராமணப் படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிறார். அதுவே சத்திரியரல்லாத முதல் பிராமண வம்ச ஆட்சி என்று அறியப்படுகிறது. நூறு வருடங்கள் நீடித்த பிராமண மன்னர்களின் ஆட்சியை வேதமதம் தன்னுடைய மீட்சிக்குப் பயன்படுத்திக் கொண்டது. 84000 பௌத்த ஸ்தூபிகள் புஷ்யமித்திரனால் அழிக்கப்பட்டன. மௌரியப் பேரரசிற்கும் அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட குப்தப் பேரரசிற்கும் இடைப்பட்ட காலத்தில் (கிமு 200 முதல் கிபி 300வரை) பல்வேறு இன மன்னர்களின் ஆட்சிகள் நடைபெற்றன. கிமு முதலாம் நூற்றாண்டில் ஆண்ட பார்த்திய மன்னன் தோன்டோ பர்னசின் அரசவைக்கு புனித தாமஸ் முக்கிய விருந்தினராக வந்தார் என்று ஜா குறிப்பிடுகிறார்.

கிமு முதலாம் நூற்றாண்டிலிருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரையிலான மன்னர்கள், குறிப்பாக சாதவாகனர்கள் தங்களைக் கடவுளின் அவதாரம் என அறிவித்துக் கொண்டனர். இவர்களின் காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முழு வீச்சில் துவக்கப்பட்டன. தொழில் கழகங்கள் (கில்டுகள்)  துவக்கப்பட்டன. நால் வருண முறையை சட்டப்படுத்தக் கூடிய மனுதர்மக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது இந்தகாலத்தில்தான். உயர் வர்ணத்தவருக்குச் சேவை செய்வதற்காகவே சூத்திரர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்கிற கோட்பாடு, பெண்களின் சொத்துரிமையையும் திருமண உரிமையையும் பறிக்கும் சட்டங்கள் அதில் இடம் பெற்றன. பல்வேறு புராணங்களும், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்களும் இந்தக் காலத்தில்தான் படைக்கப்பட்டன. சிவன், விஷ்ணு, கிருஷ்ணன் போன்ற கடவுளர்களும் இக்காலத்தில்தான் சிருஷ்டிக்கப்பட்டனர். பக்தி என்கிற கருத்தாக்கமும், பகவத் கீதையும் இக்காலத்திலேயே உருப்பெற்றன. பரத முனியின் நாட்டிய சாஸ்திரமும் இக்காலத்தைச் சேர்ந்ததே.

கிபி நான்காம் நூற்றாண்டில் நிலை பெற்றது குப்தப் பேரரசு. பள்ளிகளில் போதிக்கப்படுவது போல் குப்தர்களின் காலம் பொற்காலமல்ல  என்பதைத் தெளிவுபடுத்துகிறார், ஜா. குப்தர்களின் காலத்தில் கலை, இலக்கிய, கணித, அறிவியல் வளர்ச்சி ஒரு புதிய பரிமாணத்தை எட்டிய போதிலும், பொது சமுதாயம் சீர் கெட்டது; மனு தர்மமும், வருண வேறுபாடுகளும் தங்களது புதிய உச்சங்களை எட்டின; பாடலிபுத்திரம், அயோத்தி, மதுரா போன்ற நகரங்கள் தங்கள் பொலிவை இழந்தன. அந்நிய வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. பட்டு நெசவாளர்கள் சௌராஷ்டிரத்தை விட்டு வேறு பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தனர். தொழில் கில்டுகள் தொழில் அடிப்படையிலான சாதிகளாக உருப்பெற்றன. நிலத்துடன் அதில் பணியாற்றியவர்களும் மன்னரால் சிலருக்கு தானமாக அளிக்கப்பட்டதும், தானமாக அளிக்கப்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்படடதும் நில உடமைச் சமுதாயம் உருப்பெற்று, வலுப்பெற உதவின. இத்தகைய நிகழ்வுகள் குப்தர்களின் காலம் பொற்காலம்தானா என்கிற கேள்வியை எழுப்புகின்றன.
அம்பா பாலி என்கிற பாலியல் தொழிலாளியின் வீட்டிற்கு புத்தர் விருந்தாளியாகச் சென்றார், சீனாவைச் சேர்ந்த பௌத்தப் பயணி யுவான் சுவாங்க் ஒரு துர்க்கை முன்பு தீ வைத்து பலியடப்பட இருந்தார், திடீரென வீசிய புயல் அவரைக் காப்பாற்றியது போன்ற பல சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த நூல் இது . வரலாற்றியல் பொருள்முதல்வாத நோக்கில் ஒரு தேடல் கோர்வையாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள இந்நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.


பண்டைக்கால இந்தியா
டி.என்.ஜா
தமிழில் அசோகன் முத்துசாமி
பாரதி புத்தகாலயம்
044 24332924

Tuesday 8 October 2013

Monday 7 October 2013

உலகக் கல்வியாளர்கள்

காலம் காலமாக நிலவிவந்த நமது மரபார்ந்த கல்விச் சிந்தனைகளை உலுக்கி அடிமுதல் நுனிவரை புரட்டிப்போட்ட எட்டு உலகறிந்த கல்விச் சிந்தனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றம்சங்களையும அவர்கள் முன்வைத்த புதிய கல்விச் சிந்தனைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார் இரா. நடராசன்.
மூன்றுமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ஒரு கல்விப்போராளி மரியா மாண்டசோரி. மனவளர்ச்சி குன்றியவர்கள் உட்பட எல்லாக் குழந்தைகளும் சமமாக அமர்ந்து கற்றலில் ஈடுபடும் ஒரு வகுப்பறையை உலகிலேயே முதலில் அறிமுகம் செய்தவர். குழந்தைகளை இராμவத்தில் இணைக்க முற்பட்ட முசோலினியை எதிர்த்து சிறைவாசத்தையும், நாடுகடத்தலையும் பரிசுகளாகப் பெற்ற மரியா மாண்டசோரி, தாய்மொழி வழிக் கல்வியையே வலியுறுத்தியவர். இன்றுமாண்டசோரி முறைப்படி நடப்பதாக ஆரவாரம் செய்து பணம் குவிக்கும் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகளுக்கும் அந்த அம்மையாரின் கொள்கைகளுக்கும் சம்பந்தமே கிடையாது என நிறுவுகிறது இவரை அறிமுகம் செய்யும் கட்டுரை.
குழந்தைகள் தோற்பதே பள்ளியில்தான் என்று முழங்கி உலகம் முழுவதிலும் மாற்றுக்கல்விச் சிந்தனைகளை உலகளாவிய விதத்தில் முன்வைத்த ஜான் கால்ட்வெல் ஹோல்ட். ‘குழந்தைகள் ஏன் கல்வியில் தோற்கின்றனர்?’ ‘குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர்?’ போன்ற 10 நூல்களின் ஆசிரியர்.
ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை அடையச் செய்ய வேண்டுமெனில் கல்விதான் அதற்கு ஒரே வழி என்ற பாவ்லோ ஃப்ரெய்ரேவின் புரட்சிகரமான சிந்தனைகள்;
ரெனெய் ஸாஸோ உளவியல் ரீதியில்கல்வி என்பது ஒரு குழந்தைக்குள்செயல்படாது அடங்கியிருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்தல் என்பதாக உளவியல் ரீதியில் குழந்தைகளை μகியவர். டிக்லெக்ஸியா என்ற, மாணவர்களின் திறன் குறைபாட்டை ஆராய்ந்தவர்.
சமூகக் குழுக்கல்வி, குழந்தைகளே பள்ளிக் கட்டுமானப் பணி மூலம்உறைவிடங்களாகவே பள்ளிகளைக் கட்டமைப்பது, ஒவ்வொரு பாடசாலையிலும் அருங்காட்சியகம் - என புதிய சிந்தனைகளை முன்வைத்து அவற்றை நடைமுறைப் படுத்தியும் காட்டிய சோவியத் நிபுணரான அலெக்ஸாந்தர் யுட்னோவிச் ஸெலென்கோ:
ஏனையோர் காதால் கற்பதை செவிப்புலன் அற்றோர் விழிகளால் கற்க வேண்டும்` என ஒரு வகையில் கைவிரல்களால் உரையாடும்மௌனமொழியைக் கண்டறிந்த அபி சார்லஸ் மைக்கேல் எபி;
உளவியலுக்கும் - கல்விக்குமுள்ள தொடர்பை மெய்ப்பித்த இவான் பெட்ரோவிச் பாவ்லோவ்;

ஆரம்ப - பள்ளி - உயர்கல்வி குறித்துஎப்படிச் சிந்திக்கிறோம்?’ ‘கல்வியில் ஜனநாயகம்` உள்பட 12 நூல்களின் ஆசிரியரான ஜான் டூவியின் புதிய செயல்முறைப் பரிசோதனைகள் - என எட்டு பேர் பற்றிய சுருக்கமான உயிரோட்டமிக்க அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

உலகக் கல்வியாளர்கள்

 இரா.நடராசன் | ரூ: 20 பக்: 48
புக்ஸ் பார் சில்ரன்
044 24332924

Saturday 5 October 2013

கல்வி குறித்து தமிழில் வெளிவரும் முதல் கள ஆய்வு நூல்

இரா.நடராசன்

தமிழில் கல்வி மற்றும் அதைச்சார்ந்த தத்துவார்த்த நூல்களே வருவதில்லை எனும் அவல நிலையை பாரதி புத்தகாலயம் இரண்டாண்டுகளுக்கு முன் தனது கல்வி வரிசை மூலம் ஓரளவு மாற்றியதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கிடைத்த தோழர்கள் அளித்த ஆதரவு, குறிப்பாக இந்திய மாணவர் சங்கம், ஆசிரியர் அமைப்புகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற தோழமை நெஞ்சங்கள் அள்ளித்தந்த பாராட்டு, ஆதரவு ஆகியவை மேலும் உற்சாகத்தோடு இந்த வேலையைத் தொடருவதற்கு எமக்கு ஊக்கமளித்துள்ளன என்பதைப் பதிவுசெய்தல் நமது கடமை.


இன்று பள்ளிக்கல்வியில் ஆழமான சில மாற்றங்கள் முன்மொழியப் படுகின்றன. குறிப்பாக 2005_ன் யஷ்பால் குழு பரிந்துரைகளை அடுத்து வெளியிடப்பட்ட தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு நமது கல்வியின் அடிப்படை குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பி அவற்றிற்கான தீர்வாக பலவகை மாற்றங்களை முன்மொழிந்தது. அந்த அகில இந்திய அளவிலான ஆவணத்தில் அதிகமான பகுப்பாய்வுகளும் ஏராளமான அறிவுரைகளும் உள்ளன. வெறும் மனப்பாடக் கல்வியை கைவிட்டு பன்முக அணுகுமுறை சார்ந்த படைப்பாற்றலை உருவாக்கும் சமூக நோக்கம் எனும் பரந்துபட்ட புரிதலுடன் இந்த ஆவணம் கல்வியை அணுகியது. ஆனால் அதை அமல்படுத்துவதில் நமது நாட்டிற்கே உரிய பல பலவீனங்கள் அந்த அறிக்கையின் வேகத்தை நீர்த்துப்போக வைத்து விட்டன.


‘‘கல்வி, ஆசிரியர்களை மையப்படுத்தி இயங்குவதால் இது வங்கிமுறைக் கல்வி’’ என்று பாவ்லோ பிரையரே அறிவித்தார். குழந்தைகளை ஏதும் சிந்திக்க இயலாத வெற்றுத்தலை கொண்டவர்களாக பாவித்து அவர்களின் தலையில் தனக்குத் தெரிந்ததை எல்லாம் ஏற்றி வைக்கும் வேலையே ஆசிரியர்களுடையதாக இருக்கிறது. யஷ்பால் கமிட்டி, கல்வியை குழந்தைகளை மையப்படுத்தி இயங்குவதாக மாற்றிட முயற்சி செய்தது. பாவ்லோ பிரையரே, அலெக்ஸாந்தர் யுட்னோ, விச் ஸெலென்கோ, ரெனெய் ஸாஸோ, போன்ற மாற்றுக் கல்வி சிந்தனையாளர்கள் கல்விச் சமூகத்தை சமூகமாற்றத்தை மையமாகக் கொண்டு இயங்க வேண்டுமென்று மொழிந்தார்கள். இந்தியமண்ணில் நாம் கல்வியில் என்ன செய்தாலும் அது ‘அதிகார வர்க்கம்’ எனப்படும் வெள்ளைக் காலர் அதிகாரிகளை மையப்படுத்தி இயங்கு வதாகவே மாறிவிடுவதை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


கல்வி என்பது ஆசிரியர் மூலமோ, தபால் மூலமோ அளிக்கப்படும் ஒரு பொருள் எனும் புரிதலோடு அதை முழுமையான வியாபாரமாக்கி 1970களில் புற்றீசல்போல நர்சரி பள்ளிகளும் தனியார் மெட்ரிக் பள்ளிகளும் பட்டிதொட்டிகளில் கூட முளைத்ததை எவ்விதத்திலும் தடுக்காமல் இன்று பொதுக்கல்விக்கு கீழே யாவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வதாக காட்டிக் கொள்ளும் அவலம் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்க முடியாத நகைச்சுவையாகும். நாம் செய்யத் தவறிய பலவற்றின் மீது பழிசுமத்துவது எளிது. பன்முகத்தன்மை, சமூகநீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளின் உண்மையான பொருளைக்கூட சிதைத்து 10% ஆடித் தள்ளுபடியை புரட்சி என்று அறிவிக்கும் அளவிற்கு மத்தியதர வர்க்கத்தின் பணம் சேர்க்கும் வெறியை இன்று கல்வி வியாபாரிகள் தங்களது கடைவிரிப்பிற்கும் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறோம். அரசுப்பள்ளிகளோ இந்த நாட்டில் நான்கில் மூன்று பகுதியாக உள்ள ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜனங்களின் பாவப்பட்ட குழந்தைகள் படிக்கும் இடமாகப் போய்விட்டது.


இப்படிப்பட்ட முரட்டுச்சூழலிலும், குழந்தைகளின் சமூகப் பொருளாதாரப் பின்னணியை அறிந்து அவர்களைப் பரிவோடும், ஆர்வத்தோடும் அணுகும் ‘அதிசயப்பிறவிகள்’ இருக்கவே செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காண மாணவர்கள் ஒரு போதும் தவறுவதும் இல்லை. ஆசிரியர்கள் குறித்த மிகமோசமான செய்திகளை நாம் தொடர்ந்து ‘நடுநிலை’ நாளேடுகளில் வாசித்தபடி இருக்கிறோம். சேலத்தில் கண்கள் பிடுங்கப்படுவதும், திருப்பூரில் இரண்டுநாள் முழுவதும் முட்டிபோடுவதும், நாகர் கோவிலில் சட்டை கழற்றப்படுவதும் பள்ளபட்டி அருகே ஒரு கிராமத்தில் தலித்தாகப் பிறந்ததால் பள்ளிக் கழிவறையை கழுவ வைக்கப்படுவதுமான கொடிய எதார்த்தங்கள் ஆசிரியர் குறித்த அடிப்படையையே உலுக்கியுள்ள இன்றைய பின்னணியில்.... உண்மையான நல்லாசிரியர்களை நாடிச் செல்லும் தோழர் மணி நமக்கு அடையாளம் காட்டி இருப்பது புதிய உத்வேகத்தை அளிக்கும் சிறப்பான புதிய பாதையாகும்.


பாரதிபுத்தகாலயம் இந்த நூலை ஆசிரியர்தின சிறப்பு வெளியீடாகக் கொண்டு வருவதற்கு தேர்வுசெய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இதை வாசிக்கும் ஒரு இளையதலைமுறை ஆசிரியரும், நாளைய கல்வியாளராக இருக்கும் ஆசிரிய பயிற்சி மாணவரும் தங்களுக்கான வேலை என்ன என்பதை மிக எளிதில் புரிந்துகொள்ள முடியும். பல நூறுபக்கங்களில் வெளிவரும் எத்தனையோ கல்வி சார்ந்த நூல்கள் சொல்ல வந்தும் சொல்ல முடியாத அறிய தகவல்களை, இந்த சிறிய புத்தகம் அடக்கத்தோடு முன்வைப்பதைக் காணலாம். தமிழில் வெளிவரும் கல்வி பற்றிய முதல் நேரடி களஆய்வு நூல் இதுதான்.


இந்த ‘அக்கினிகுஞ்சிற்கு’ அற்புதமானதொரு அணிந்துரையைக் கல்வியாளர் ஜே.கே. அளித்துள்ளார். இந்த நூலைக் கொண்டு வருங்கால், வருங்கால கல்வி தழைக்க மாற்றங்கள் விதைக்கப்பட கடமையுணர்வோடும், சமூக அக்கறையோடும் செயலாற்றி ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்கள் தங்களது சுயசரிதைகளை எழுத முன்வந்தால் அவற்றைப் பரிசீலித்து வெளியிடுவதும் நமக்கு முன் இருக்கும் முக்கியப்பணி என்று சொல்லத் தோன்றுகிறது.


இந்த நூலை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் தான் ஒரு ஆசிரியராக ஆகவேண்டும் என்று விரும்புவார்கள். இதை வாசிக்கும் ஆசிரியர்களோ தான் தன் மாணவர்களால் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றப்படும் ஒரு நல்ல ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இன்றைய கல்விச் சூழலின் மிகஅவசியமான அந்த மாற்றத்தை கொண்டுவர விரும்பும் அனைத்துவகை கல்வியாளர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நூல் உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவரும் நன்றிக்குறியவர்கள்.


பள்ளிக்கூட தேர்தல் நூல் குறித்து 

பேரா. ந. மணிக்கு ச. மாடசாமி எழுதி கடிதம்

கவனத்தை ஈர்க்கக்கூடிய தலைப்பு. சிரிக்கிற குழந்தைகளை அட்டையில் காண்பது மனநிறைவான விசயம். நூலின் கருப்பொருள் வித்தியாசமானது; மொழியை பேசுவது போலிருந்தது. அதிகாரத்தின் பாராட்டைப் பெறுவதற்குத்தான் கைகள் விரைகின்றன; கால்கள் அதை நோக்கியே நடக்கின்றன. மனம் ஏங்கிக் கிடப்பதும் அதைப் பற்றியேதான்! ஆனால் - அது எவ்வளவு சம்பிரதாயமான - உள்கனமற்ற பாராட்டு! இதைத் தீவிர வார்த்தைகளில் விவாதிக்காமல், நூலின் தொடக்கத்தில் ஓர் உதாரணத்தின் மூலம் நாசுக்காகக் காட்டியிருக்கிறீர்கள்.


நூல் முழுக்க இயல்பானதும், ஆத்மார்த்தமானதுமான பேச்சுதான் கேட்கிறது. வலிந்து சேர்க்கப்பட்ட வார்த்தை ஒன்று கூட இல்லை. அதிகாரப் பாராட்டுக்கு உண்மையான மாற்று எது என்பதை வெற்று உரைகளால் சொல்லி எத்தனை பேருக்கு விளங்கப் போகிறது? ஓரு நிகழ்வு மூலம் நிரூபித்து விட்டீர்கள். வெறும் கொண்டாட்ட நிகழ்வு அல்ல; சுவாராஸ்யத்துக்கான நிகழ்வு அல்ல. சிந்தனைப் போக்கையே மாற்றி, இதயத்தில் நம்பிக்கைகள் நிரப்பும் நிகழ்வு அது. மாணவர்களால் பாராட்டப்பட்ட ஆசிரியராகவும் கண்கலங்கி விம்மிய செய்திகளை, உணர்ச்சி வசப்படாமல் தாண்டிச் செல்ல முடியவில்லை.


நுட்பமாகவும் சில விசயங்களைக் கவனித்திருக்கிறீர்கள். பாராட்டுப்பெற்ற ஆசிரியர்கள் எவரும் கல்வி முயற்சிகள் குறித்த நூல்களை வாசிக்கவில்லை என்பது நீங்கள் கவனித்த உண்மைகளில் ஒன்று வாசிப்புக்கு முன்னால் நிற்கிறது அக்கறை; வாசிப்பை விட அனுபவம் சில சமயங்களில் மெருகூட்டுவதில் வல்லமையும் பெற்றிருக்கிறது. வாசிப்பில் கற்பதைப் போல, வாசிப்புக்கு வெளியே இதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பொன்னுச்சாமி ஆசிரியர், சிவகிரிப்பள்ளி ஆசிரியர் போன்றோரை நூலின் வழிச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு சாதாரணமானது அல்ல.


இந்நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் சர்வதேச உள்கரு நூலுக்குள் கிடக்கிறது.

 

 

Thursday 3 October 2013

கல்விச் சிந்தனைகள்: காந்தி

தாய்மொழி மூலமே கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்; கல்வி என்பது நம்நாட்டிலுள்ள வாழ்க்கை நிலைமைகளுடன் தொடர்பு உள்ளதாக இருக்க வேண்டும்; மிகவும் ஏழையான இந்தியன் கூட மிகச் சிறந்த கல்வி பெறுவதற்கான நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்என்பவை காந்தியின் கல்விச் சிந்தனைகள். நம் கல்வி முற்றிலும் அந்நியக் கல்வியாக இருக்கிறதென்று 1919-ஆம் ஆண்டிலேயே சொன்னவர்; கல்வி தாய்மொழியில், இலவசமாக, பெருபான்மையான மக்களின் தேவைகளை சமாளிக்கக்கூடிய விதத்தில் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
கல்வித் திட்டத்தை வகுப்பதும், அதை நிறைவேற்றுவதும் இரண்டுமே மக்களின் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். கல்வி பணத்தைப் பொறுத்ததாக இருக்கக்கூடாது. சூரியனின் ஒளியையும், மழையையும் போல எல்லாருக்கும் பொதுவாக கல்வி கிடைக்கச் செய்யவேண்டுமென்பது காந்தி கண்ட கனவு. ‘‘பெண்களிடையே எழுத்தறிவின்மைக்குக் காரணம், ஆண்களிடமிருப்பது போன்ற மந்தமும், சோம்பேறித்தனமும் அல்ல; பெண்கள் கீழானவர்கள் என்ற நியாயமில்லாத ஒரு சம்பிரதாயம் இருந்து வருவதுதான் இதற்கு முக்கியக் காரணம்’’- என்கிறார் அவர்.
உங்களிடமே உள்ள சிறந்த அம்சங்களை வெளிக்கொணருவதுதான் உண்மையான கல்வி. மனிதகுலம் என்ற புத்தகத்தைவிட சிறந்த புத்தகம் பேறு என்ன இருக்க முடியும்? கல்வி என்றால் குழந்தை அல்லது மனிதனின் மனம், உடல் ஆன்மா ஆகிய மூன்றிலும் உள்ள் சிறந்த அம்சங்களை வெளிக்கொணர்வதேÓ என்றெல்லாம் சொன்னவர் காந்தி. அவரது கல்விச் சிந்தனைகளிற் பல, இன்றைய சூழலுக்கும் பொருந்துகிற நவீனத்தன்மையுடன் இருப்பதை இந்த நூல் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தொகுத்திருப்பவர், சென்னை, தக்கர் பாபா - காந்தி கல்வி நிலைய நிர்வாகி . அண்ணாமலை.

பேராசிரியர் . மாடசாமி, இந்நூலின் முன்னுரையாககாந்தியின் வகுப்பறை என்றோர் அழகிய கட்டுரையை வழங்கியிருக்கிறார். ‘‘மாணவன் தான் வசிக்கும் சூழலை விட்டுவிலகித் தனித்து போகாத, உடல் உழைப்புடன் இணைந்த புத்தகச்சுமையற்ற, குழுவாய் இணைந்து கற்கிற, செயல்பாடுகளையும் கைத்தொழில்களையும் பயிற்றுவிக்கிற, மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பளிக்கிற கல்விதான் காந்தி முன் வைக்கிற கல்வி’’ என்று டால்ஸ்டாயின் பரிசோதனைகளையும் காந்தி தானே நேரடியாகச் செய்துகாட்டியதையும் ஒப்பிட்டு விளக்குகிறார் மாடசாமி

கல்விச் சிந்தனைகள்காந்தி

தொகுப்புஅண்ணாமலை | ரூ: 70 பக்: 144

Tuesday 1 October 2013

காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
ஆங்கிலப் பதிப்புக்கான முன்னுரை
வி. ராமமூர்த்தி
மதிப்புமிக்க மனித விழுமியங்களைப் புரியச் செய்யும் காந்திஜியின் கடைசி 200 நாள்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல் தி ஹிந்து நாளிதழில் வி. ராமமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
வி. ராமமூர்த்தி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்து காந்தியின் மீது ஈர்ப்புகொண்ட இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலை இலக்கிய ஆய்வாளராகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை நான் எழுத நேரிட்ட பின்னணி குறித்துச் சில சொற்களைக் கூறுவது பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகிறேன். எனது குழந்தைப் பருவத்திலேயே காந்திஜியின் வாழ்க்கைப் பயணத்தின் மீது எனக்கு ஓர் ஆழ்ந்த ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.
நான் கல்கத்தாவில் பிறந்தேன். 1948ஆம் ஆண்டு ஜனவரியில் எனக்குப் பன்னிரெண்டு வயது நிரம்பியிருந்தது. 1936ஆம் ஆண்டில் எனது தந்தை ஆர். விசுவநாதனும் எனது தாயார் பாகீரதியும் கல்கத்தாவிலிருந்து கராச்சிக்கு இடம் பெயர்ந்திருந்தனர். கராச்சியில் இருந்தபோது ஓரளவுக்கு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். எனது சகோதரி ராஜி, 1938ஆம் ஆண்டில் அங்கு பிறந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்த நாள்களிலிருந்து அந்த நகரந்தான் எங்களின் உறைவிடமாக இருந்துவந்தது. எனது பெற்றோருக்கு ஒரு நல்ல நண்பர் குழாம் இருந்தது. எங்களுடைய வாழ்க்கை அமைதியான முறையில் ஓடிக்கொண்டிருந்தது. நாடு பிரிவினை செய்யப்பட்ட போதிலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களைப் போலவே பாகிஸ்தானில் உள்ள இந்துக்களும் அமைதியான முறையில் வாழ முடியும் என்று எனது தந்தை நம்பினார். நான் சற்றுப் பின்னோக்கிச் செல்லட்டுமா?
எனது பெற்றோர்கள் எனக்கு ஒரு கேமிராவையும் (அது ஒரு ஷ்யூர்-ஷாட் ஜூனியர் கேமிரா) மேசையின் மீது நிறுத்தி வைக்கக்கூடிய மகாத்மா காந்தியின் படம் ஒன்றையும் அளித்திருந்தனர். 1947ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், எங்களது வாழ்க்கைச் சக்கரம் எத்தகைய பாதிப்பும் இன்றி வழக்கமான முறையில் இயங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் நண்பர்கள் வீட்டுக்குச் செல்வதும் அவர்கள் எங்கள் இல்லத்துக்கு வருவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பள்ளிக்கூடம், கடைவீதி, திரை அரங்குகள், மகாத்மா காந்தி பூங்கா என்று வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தோம். அந்தப் பூங்காவில் புதிதாகப் பறிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட கொடி முந்திரிப் பழங்கள் கிடைக்கும். ரோஜா மணம் கொண்ட அந்தக் குலாபி திராட்சைப் பழங்களை விலைக்கு வாங்கி ருசிப்போம்.
சுதந்திர தினமும் வந்தது. அந்த நாளை நாங்கள் கொண்டாடினோம். அது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்காக அகில இந்திய வானொலி ஒவ்வொரு நாள் மாலை 5.00 மணிக்கும் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பி வந்தது. குறுகிய அலைவரிசையில் டெல்லியில் இருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த அந்த நிகழ்ச்சி தவறாமல் ஒரு இனிய நாதஸ்வர இசையுடன் துவங்கும். ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த 'வாதாபி கணபதிம் பஜே' பாடலிசை அது என்றும், திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை வாசித்துப் பதிவுசெய்யப்பட்டது என்றும் பின்னர் நான் தெரிந்துகொண்டேன்.
மாதங்கள் செல்லச் செல்லப் பதற்றமான சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. எனது புதிய நார்மன் சைக்கிளில் மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டு ஒரு நாள் நான் வெளியே சென்றிருந்தபோது சிலர் என்னைக் கீழே பிடித்துத் தள்ளிவிட்டனர். மூவண்ணக் கொடியை அவர்கள் முரட்டுத்தனமாகப் பறித்துக் கிழித்து எறிந்தனர். எங்கள் அமைதியான வாழ்க்கை மேலும் அதிகமாகப் பின்னர் பாதிக்கப்பட்டது. நாட்டுப் பிரிவினை ஏற்கனவே நிகழ்ந்திருந்தது என்றாலும் நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. புதிய நாடான பாகிஸ்தானில் வசிக்கிறோம் என்ற உண்மை எங்களுக்குத் திடீரென்று புரிய வைக்கப்பட்டது.
கராச்சிக்கு அகதிகள் வரத் துவங்கினர். கிழக்குப் பஞ்சாபிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அகதிகள் ஏராளமான எண்ணிக்கையில் வந்துகொண்டிருந்தனர். இந்துக்கள் வாழும் எந்தவொரு வீட்டிலும் அவர்கள் நுழைந்து அதனைக் கைப்பற்றிக்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அவர்கள் அவ்வாறு செய்யும்போது காவல் துறையினர் தலையிடுவதில்லை.
நகருக்கு வெளியே ராணுவக் குடியிருப்புகளுக்கு அருகே நாங்கள் வசித்துவந்தோம். ஆனால் இப்போது தெருக்களில் நடமாடுவது திடீரென்று பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்கள், வெண்ணெய் போன்றவற்றை நானும் எனது சகோதரியும் சைக்கிளில் சென்று வாங்கிவருவது வழக்கம். இந்தச் சிறிய பயணங்கள் ஆபத்து நிறைந்தவைகளாக மாறிவிட்டன. இனிமேல் நாங்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டோம். நான் செயின்ட் பாட்ரிக் பள்ளியிலும் எனது சகோதரி சதாருக்கு அப்பால் அமைந்திருந்த செயின்ட் ஜோசப் கான்வென்டிலும் படித்துவந்தோம். பள்ளிக்குச் செல்வதும் நின்று போய்விட்டது. எனது தந்தையின் முஸ்லிம் காரோட்டியான யாசின் மற்றும் பணியாளர்களான மஹ்மூது, பஷாரத் ஆகியோர் தொடர்ந்து வழக்கம்போல வந்துகொண்டிருந்தனர். நெடிய உருவத்துடன் பலசாலியாகக் காணப்படும் பஷாரத் ஒரு பத்தாணியர். அவர்கள் முஸ்லிம்கள்; நாங்கள் இந்துக்கள் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது. அவர்கள் எங்கள் வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்தனர். எங்கள் வீட்டில் கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்ட ஒற்றைக்கண் கிளி (இதற்கு மிட்டு என்று பெயரிட்டிருந்தோம்.) டாப்பி என்ற பூனை மற்றும் கருப்பு ஆண் பூனைக்குட்டியாகிய ஊப்பி ஆகியவற்றுக்கு நாங்கள் உணவு கொடுக்கும்போது அவர்களும் எங்களுடன் சேர்ந்துகொண்டு அவற்றுடன் விளையாடுவார்கள்.
டிரிக் ரோடு விமான நிலையம் அருகே உள்ள மாலிர் என்னுமிடத்துக்கு எனது தந்தை தினமும் செல்வது வழக்கம். ஒரு ராணுவ ஒப்பந்தத் தொழிலுக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார். அந்த ஒப்பந்தப் பணி நல்ல முறையில் நடைபெற்று வந்தது. சிறப்பான முறையில் பணியை நிறைவேற்றி வந்தமைக்காக இந்தியப் படையின் தலைமைத் தளபதியாகிய பீல்டு மார்ஷல் சர் கிளாடு அச்சின்லெக் அவர்கள், அந்த நிலையத்துக்கு வந்திருந்தபோது எனது தந்தையைப் பாராட்டியிருந்தார். மவுரிபூர் விமான நிலையத்துக்கும் எனது தந்தை சென்று வருவது வழக்கம். எங்களுடைய காரோட்டியான யாசின்தான் எனது தந்தையின் பணியிடத்துக்கு அழைத்துச்சென்று திரும்புவார். எனது தந்தை பல நேரங்களில் இரவில் நேரங்கழித்தே திரும்புவார்.
அவர் திரும்பி வரும்வரை எனது தாயாருக்கு இருப்புக்கொள்ளாது. ஒரே பதற்றத்துடன் இருப்பார். எனது வீட்டின் வெளிக் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். நாங்கள் பூஜை அறையில் பிரார்த்தனை செய்துகொண்டிருப்போம். இது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. சில நேரங்களில் இரவு 7.00 மணிக்கே ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்திருக்கும். அதற்குள் எனது தந்தை வீட்டுக்கு வந்திருக்கவில்லை என்றால் அடுத்த நாள் காலைவரை அவர் வரமாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் தனியாக இருப்போம். ஒருநாள் இரவு 8.00 மணிக்குப் பிறகு அவர் திரும்பிவந்தார். மாலிர் சென்றிருந்த அவர் நகரத்திலிருந்து அவ்வளவு தொலைவில் தங்கியிருப்பது பாதுகாப்பற்றது என்று கருதி யாசின் ஒரே மூச்சாக வண்டியை ஓட்டிவந்துவிட்டதாக எனது தந்தை தெரிவித்தார். உள்ளுணர்வின் அடிப்படையில் யாசின் எடுத்த ஒரு புத்திசாலித்தனமான முடிவு அது. அன்று இரவு அந்தச் சாலையில் வன்முறை நடைபெற்றது என்றும், ரத்தம் சிந்தப்பட்டது என்றும் உயிர்கள் பறிக்கப்பட்டன என்றும் நாங்கள் அடுத்த நாள் தெரிந்துகொண்டோம்.
கராச்சியில் தொடர்ந்து தங்க முடியும் என்ற எனது தந்தையின் நம்பிக்கை நடைமுறை சாத்தியமற்றது என்பது சிறிதுசிறிதாக எங்களுக்குப் புலப்பட ஆரம்பித்தது. எனது தந்தையின் நண்பரான வழக்கறிஞர் டி'சா கராச்சியை விட்டுக் கிளம்பத் தயாராகுமாறும், இந்தியாவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தேடிக்கொள்ளுமாறும் எங்களுக்கு அறிவுரை கூறினார். மாலை 5.00 மணி அகில இந்திய வானொலி ஒலி பரப்பைக் கேட்பது மட்டுமே மாற்றமின்றித் தொடர்ந்தது. இத்தகைய நிலையிலும் நிலைமை சீரடைந்துவிடும் என்று விசித்திரமான நம்பிக்கையுடன் நானும் ராஜியும் இருந்து வந்தோம். மகாத்மாவின் ஆற்றலைப் பற்றியும், எத்தகைய பிரச்சினைகள் உருவாகி வளர்ந்தாலும் அதனைச் சரிசெய்யக்கூடிய அவரது அற்புதத் திறமையைப் பற்றியும் எங்கள் பெற்றோர்கள் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இதுவே ஒருவேளை எங்களது அப்பாவித்தனமான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். முன்புபோலவே அழகிய சிறந்த நகரமாகக் கராச்சி நீடிக்க வேண்டும் என்று கடவுளிடம் மட்டுமின்றி மகாத்மாவிடமும் மனதார வேண்டிக்கொண்டோம். கராச்சியை விட்டு வெளியேறுவதை எங்களால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.
1948 ஜனவரி 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு பேரிடி விழுந்தது. அன்றைய தினம் வழக்கம்போல எங்களுடைய சிறிய மின்சார வானொலிப் பெட்டியை இயக்கினோம். அகில இந்திய வானொலியின் வெளி நாட்டுக்கான ஒலிபரப்பை 19 மீட்டர் அலைவரிசையில் கேட்க முடிந்தது. மாலை 5.15 மணிக்கு நடைபெற்றுவந்த நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டது. ஒரு முக்கியமான அறிவிப்புக்காகக் காத்திருக்குமாறு டெல்லி வானொலி நிலையத்திலிருந்து ஒரு வேண்டுகோள் ஒலிபரப்பப்பட்டது. பிர்லா மாளிகையில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி சுடப்பட்ட செய்தி பின்னர் வெளியிடப்பட்டது. சோக கீதம் காற்றை நிரப்ப ஆரம்பித்தது. சில நிமிடங்கள் கழித்து காந்தி மரணமடைந்த செய்தியைக் கனத்த குரலில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்ந்தது. உலகமே இடிந்து விழுந்துவிட்டது போன்ற ஓசை எங்கள் காதுகளில் கேட்டது.
அன்று இரவு முழுவதும் நாங்கள் அனைவரும் அழுதுகொண்டிருந்தோம். மறுநாள் காலை வெளிவந்த தி டெய்லி கெஜட் மற்றும் தி சிந்து அப்சர்வர் நாளிதழ்களில் வெளியிடப்பட்ட தலைப்புச் செய்திகளையும் படங்களையும் நாங்கள் கண்டோம். காந்திஜியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சி பற்றிய விவரங்களை வானொலியில் கேட்டோம். ஒவ்வொரு இல்லமும் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டதுபோல வருத்தமடைந்தது. சில நாள்கள் கழித்து மகாத்மாவின் அஸ்தியைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி இந்திய ஹைகமிஷனர் ஸ்ரீபிரகாசாவின் தலைமையில் நடைபெற்றது. கிளிஃப்டன் நகருக்கு அருகே அரபிக் கடலோரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொண்டோம்.
1948ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று பயங்கரமான கலவரம் வெடித்தது. அது ம்தெருக்களில் ரத்தக் கறையை ஏற்படுத்தியது. ஏராளமான சீக்கியர்களும் இந்துக்கள் சிலரும் படுகொலை செய்யப்பட்டனர். 1948ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதியன்று பெரும் மனக்கலக்கத்தில் இருந்த நாங்கள் எங்களது அனைத்து உடைமைகளையும் இழந்த நிலையில் கராச்சி நகருக்கு விடை கொடுத்தோம். (1979ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் அகில இந்திய வானொலியின் வருணணையாளராகப் பணிபுரிய கராச்சிக்குச் சென்றிருந்தேன். எனக்குத் தெரிந்த பழைய இடங்களுக்கும் சில நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களுக்கும் சென்றிருந்தேன். செயின்ட் பாட்ரிக் பள்ளிக்குச் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரான எல்.கே. அத்வானியுடன் செல்லும் நல்வாய்ப்பு கிடைத்தது. அவரும் அப்பள்ளியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது).
கோயில் நகரமான மதுரையில் எங்கள் வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பித்தோம். 1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மகாத்மாவின் சுயசரிதை நூலான 'சத்திய சோதனை'யை நான் சக்தி காரியாலயத்திலிருந்து விலைக்கு வாங்கினேன். வயது ஆக ஆக என்னால் அந்த நூலை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையே மகாத்மாவைப் பற்றி வேறு பல நூல்கள், அவரது மேற்கோள்கள் மற்றும் படங்களை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வாங்கிச் சேகரித்திருந்தேன். கலவரத்தால் பாதிக்கப்பட்ட நவகாளியில் அவர் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு அவர் நடந்து செல்வது, மரணமடைந்த நேரத்திலும் நிர்மலமாகக் காட்சியளித்த அவரது முகம் ஆகியவை எனது மனதை ஆழமாக அலைக்கழித்து வந்தன.
மகாத்மாவின் மகத்தான வாழ்வின் இறுதிக்கட்டங்களில் கிரேக்கத் துன்பியல் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அரங்கேறியதை என்னால் உணர முடிந்தது.
1997ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் இந்து நாளிதழ் ஆசிரியர் திரு.என். ரவி அவர்களை அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன். 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியுடன் முடிவடையும் காந்திஜியின் இறுதி 200 நாட்களின் அன்றாட நிகழ்வுகளை ஒரு தொடராக வெளியிடுவதற்கு அவருக்கு விருப்பமுள்ளதா என்று நான் அவரிடம் கேட்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது. அதேபோல 1998ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியும் தற்செயலாக ஒரு வெள்ளிக்கிழமையாக அமைந்திருந்தது. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் நிகழ்வுகளைத் தொடராக வெளியிடும் எனது ஆலோசனையை வரவேற்றார் திரு. ரவி. இந்து நாளிதழின் கார்ட்டூனிஸ்டாகிய கேசவ் வரைந்த ஒரு கார்ட்டூன் ஓவியத்துடன் இந்தக் கட்டுரைத் தொடர் தொடங்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதல் கட்டுரை வெளியிடப்பட்டது. 'மகாத்மா காந்தியின் இறுதி 200 நாட்கள்' என்ற தலைப்புடன் தொடர் வெளிவர ஆரம்பித்தது. இந்து நாளிதழின் விரிவான ஆவணக் காப்பகத்திலிருந்தும், காந்திஜியின் நூல் தொகுப்புகளிலிருந்தும் (இந்திய அரசாங்கத்தின் பதிப்புத் துறை வெளியிட்டவை) கட்டுரைகளுக்கான தகவல்கள் திரட்டப்பட்டன. அந்தத் தொடருக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இக்கட்டுரைகள் நூல் வடிவத்தில் எப்போது வெளியிடப்படும் என்றும் பல வாசகர்கள் கேட்டிருந்தனர்.
நான் எழுதியிருந்த நீண்ட கட்டுரைகள் ஆசிரியரால் தேவையான அளவுக்குச் சுருக்கப்பட்டு இந்து நாளிதழில் வெளிவந்தன. நான் எழுதியவற்றை முழுமையாக (தேவையான கூடுதல் தகவல்களுடன்) நூல் வடிவில் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்து நாளிதழ் அன்றாடம் வெளியிட்ட அதே வடிவில் அந்தக் கட்டுரைகளை வெளியிடலாம் என்று பலரும் விரும்பினர். அதே முறையில்தான் இந்நூலில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புகைப்படங்கள் சிலவும் 'வைஷ்ணவ ஜனதோ' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடல்களின் முழுமையான வடிவங்களும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நூலில் (ஆங்கிலப் பதிப்பு) இடம்பெற்றுள்ளன.
காந்திஜியின் வாழ்க்கையே அவர் பிறருக்கு உணர்த்தவிருந்த செய்தி என்று குறிப்பிடலாம். 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதிக்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அவரை ஆழமான முறையில் துன்புறுத்தியிருந்தன. ஆனால், அவை அவரது நம்பிக்கையைத் தகர்க்கவில்லை. அவரது விசுவாசத்தை பலவீனப்படுத்த முடியவில்லை. இன்றியமையாத, நீடித்து நிலைக்கக்கூடிய மனித வாழ்க்கையின் மாண்புகளாக உணர்ந்தவற்றைப் பற்றியே அவர் இறுதிவரை சிந்தித்தார், பேசினார், எழுதினார் - அவற்றுக்காகவே உழைத்தார். அவரது போதனைகளிலிருந்து இந்தியாவும் உலகமும் இன்றும்கூடப் பயன்பெற முடியும்.
காந்திஜியின் மகத்தான வாழ்க்கையின் இறுதி 200 நாட்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அவற்றின் பின்னணி இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இது அவரது போதனைகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டி மேலும் தகவல்களைத் திரட்டவும், ஆய்வு மேற்கொள்ளவும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன். அவை நாம் வாழும் இக்காலத்துக்கு மட்டுமின்றி எதிர்வரும் காலம் முழுமைக்கும் பொருத்தமான புதிய படைப்புகள் உருவாக்கப்பட உதவிடும் என்று நம்புகிறேன்.
இந்தக் கட்டுரைகளைத் தொடராக வெளியிட்டமைக்கும் நூல் வடிவில் கொண்டுவந்ததற்கும் இந்து நாளிதழுக்கும் அதன் ஆசிரியர் திரு. ரவி அவர்களுக்கும், எனது ஆழ்ந்த நன்றியுணர்வை உரித்தாக்குகிறேன். மறைந்த எனது பெற்றோர் மற்றும் எனது மகன் ரஞ்சித்குமார் ஆகியோரின் ஆன்மாக்களுக்கு இந்நூலைப் பணிவுடன் சமர்ப்பணம் செய்கிறேன்.
1997-98ஆம் ஆண்டுகளில் இக்கட்டுரைகளை எழுதுவதற்கும் இப்போது நூல் வடிவில் அவற்றைக் கொண்டுவருவதற்கும் எனது ஏராளமான நண்பர்களும், குறிப்பாக எனது மனைவி கமலாவும் மிகவும் உதவியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான முறையில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நூல்: காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
ஆசிரியர்: வி. ராமமூர்த்தி
தமிழாக்கம்: சி. இலக்குவன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, 
தேனாம்பேட்டை, சென்னை - 600018
விலை: ரூ 350/-