Tamil books

Tuesday, 22 October 2013

பண்டையக் கால இந்தியா

கி.ரவீந்திரன்

முனைவர் திவிஜேந்திர நாராயண் ஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்திய வரலாற்றுப் பேரவையின் பண்டைய இந்திய வரலாற்றுத் துறையின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றியவர். இந்து தேசியவாதம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறவர். அந்த வகையில் ‘Ancient India in Historical outline’  என்ற நூல் மிகவும் குறிப்பிடத்தக்கது. அசோகன் முத்துசாமி இந்நூலை ‘பண்டையக் கால இந்தியா’ என்கிற பெயரில் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி குப்தர்கள் காலம் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை ஜா இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அறியப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே என்கிற புரிதலுடன் கூடிய நூலாசிரியரின் தேடுதலும் ஆய்வும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகின்றன.

எகிப்து, மெசபடொமியாவைக்   காட்டிலும் மிகச் சிறப்பான நகர நாகரிகமாக விளங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தை நூலாசிரியர் நுணுக்கமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பிரம்மாண்ட நகர அமைப்பும், மாட மாளிகைகளும் இருந்த அதே நேரத்தில், நகருக்கு வெளியே வறியவருக்கான இருஅறைக் குடில்கள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன என்பதை ஆசிரியர் விவரிக்கும்போது, ஹரப்பா காலத்திலும் வர்க்க வேற்றுமை நிலவி வந்ததை நம்மால் உணர முடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் வலமிருந்து இடமாக எழுதும் முறையைக் கொண்டிருந்தனர் என்பதையும், இறந்தவர்களைப் புதைத்துக் கல்லறை கட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் ஆசிரியர் விளக்கும்போது நமக்குப் பல புதிய பரிமாணங்கள் புலப்படுகின்றன.
மாட்டிறைச்சி மற்றும் பசு மாமிசம் உண்ணும் வழக்கம் இஸ்லாமியர் வருகையை ஒட்டியே இந்தியாவிற்குள் நுழைந்தது, பசு புனிதமானது, அதைக் கொல்வது இந்து மத விரோதம் என்றெல்லாம் கதைக்கும் இந்துத்துவ அமைப்புகளின் கூற்றுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக ஜா நிரூபிக்கின்றார். ‘கோக்னா’ எனப்படும் விருந்தாளிகளுக்கு பசு மாட்டு இறைச்சியை வழங்கி வேதகால ஆரியர்கள் கௌரவித்தனர்; ரிக்வேதம் பல்வேறு பலிச் சடங்குகளை விவரிக்கும் 428 பாடல்களைக் கொண்டது; ராஜரூய யாகம், அசுவமேத யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களின் போது பசு மாடுகள் பலியிடப்பட்டு அவற்றின் இறைச்சி விருந்தாக வழங்கப்பட்டது என்பன போன்ற ஆதாரங்களை முன்வைக்கிறார். ஆனால், இன்றோ பசுவைப் புனிதமாக்கி, கொன்றால் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சட்டம் இயற்றுகின்றனர் சங்பரிவாரிகள். எதிரிகளின் நிலத்தைக் கைப்பற்றி புனிதப்படுத்தும் ஆரியர்கள் ஹரப்பாவையும் அவ்வாறே வீழ்த்தியிருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஹரப்பா என்கிற இடத்தில் ஆரியர்கள் மேற்கொண்ட போரைப் பற்றி ரிக்வேதப் பாடல்கள் சில பாடுவதைச் சுட்டிக் காட்டுகின்றார். நகர்ப்புற சிந்து வெளி நாகரிகம் அழிந்து, புராதன கிராமப்புற வேதகால நாகரீகம் தொடங்குகிறது. ரிக்வேத கால ஆரம்பத்தில் சமூகம் தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே இருப்பதையும், சமூக ஒழுங்குமுறை எதுவும் உருவாகாத சூழல் நிலவியதையும் ஆசிரியர் விளக்குகின்றார். தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை போன்ற பாலுறவுகள் நிலவி வந்ததை ஆசிரியர் ரிக்வேதப் பாடல்கள் மற்றும் யாமா-யாமி உரையாடல்கள் உள்ளிட்ட சான்றுகளுடன் சுட்டிக் காட்டுகிறார். ஜனா என்றழைக்கப்பட்ட இனக்குழுத் தலைவனை வழிநடத்த சபா, சமிதி என்ற அமைப்புகள் இருந்தன. அரசருக்குச் செலுத்த உபரியாக மக்களிடம் எதுவும் இருக்கவில்லை. இது போன்ற தகவல்கள் மூலம் அன்று நிலவிய தாய்வழிச் சமுதாயத்தின், புராதனப் பொதுவுடமைச் சமுதாயத்தின் தன்மையை நம்மால் உயர முடிகின்றது.

ரிக்வேத கால முடிவில் இதர மூன்று வேதங்கள் உருப்பெற்றன. (கிமு 1000 - 600). சபா, சமிதி அமைப்புகள் வலுவிழந்து வாரிசுமுறையில் மன்னராட்சி அமைப்பு வலுப் பெற்றதையும், ரிக்வேதப் பலிச் சடங்கு முறைக்கு எதிர்ப்பு மற்றும் மாற்றாக தனிமனித ஒழுங்கு, உயர்வு, ஆன்மா, துறவு போன்றவற்றை உயர்த்திப் பிடிக்கும் உபநிஷத்துகளின் தோற்றத்தையும் தெளிவுபடுத்தும் ஆசிரியர்  இவற்றை த் தனதாக்கிக் கொள்ளும் வகையில் வேதமதம் ஆசிரமம், பிரம்மச்சரியம், கிரகஸ்தம் மற்றும் வனப்பிரஸ்தம் ஆகிய நான்கு தனிமனித நிலைகளை முன்னிறுத்தியதையும் தெளிவுபடுத்துகிறார். இதே காலத்தில்  இதே பிரச்சனைகளை முன்வைத்து பௌத்த   சமண மதங்கள் உருவாகி வலுப் பெற்றதையும் பதிவு செய்கின்றார்.

வணிக வளர்ச்சி, கடல் கடந்த வணிகம், அங்காடிகள், உணவு விடுதிகள் போன்றவற்றை வேத மதம் மறுத்தது; அதே நேரத்தில் பௌத்த, சமண மதங்கள் இவற்றை ஆதரித்தன. வட்டிக்குப் பணம் கொடுப்பதை வைதீக மதம் கண்டித்தது. பௌத்த சமண மதங்களோ வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்காமல் இருப்பதையும், வட்டி கட்டாமல் இருப்பதையும் கண்டித்தன. அவை அடிமைகளையும், கடன்காரர்களையும் ஏற்றுக் கொள்ள மறுத்தன. வரலாறு தோறும், மதங்கள் தோறும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே தீர்மானகரமான சக்திகளாக இருந்திருக்கின்றன என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

வேத மதத்தின் வர்ண மற்றும் சாதிப் பிரிவினைகளுக்கு எதிராக பௌத்த சமண மதங்கள் வலுவான போராட்டங்களை நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டை ஜா அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
கிமு 6ம் நூற்றாண்டு முதல் 3ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பெரிய அளவிலான அரசுகள் தோன்றியதைச் சுட்டிக்காட்டும் ஜா, சத்திரிய குலத்தைச் சாராத முதல் சூத்திர அரச வம்சமாக நந்த வம்சம் விளங்கியதையும், அதன் முதல் மன்னன் மகாபத்ம நந்தனின் தாய் ஒரு சூத்திர சாதியைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

நந்தர்களைத் தூக்கி எறிந்து அரியணை ஏறிய மௌரியர்களே முதல் பேரரசை உருவாக்கினர். சந்திரகுப்தரும் சாணக்கியரும் தங்களது அரசியல் சாதுர்யத்தின் காரணமாக பேரரசிற்கு வழி கோலினர். கலிங்கப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதே கொடுங்கோலன் அசோகரின் மனமாற்றத்திற்கும், பௌத்த மதமாற்றத்திற்கும் காரணம். மௌரியப் பேரரசிற்கு பெருமளவில் வரிப்பணம் வந்தபோதிலும் (விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு விவசாய வரி) மிகப்பெரிய பேரரசையும், படையையும் நிர்வகிக்கப் போதுமானதாக இல்லை. இறுதியில் அசோகரின் புத்த மதத்தழுவலும், அகிம்சையும், தர்மப் பணிகளும் கஜானாவைக் காலி செய்தன. அசோகரின் இறுதி நாட்களில் அவரிடம் ஒரு அரை மாம்பழம் மட்டுமே இருந்ததாக ஒரு பௌத்த ஜாதகக் கதை தெரிவிப்பதாக ஜா கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.


கிமு 180ல் கடைசி மௌரிய மன்னன் பிருஹத்ரதரை அவருடைய பிராமணப் படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிறார். அதுவே சத்திரியரல்லாத முதல் பிராமண வம்ச ஆட்சி என்று அறியப்படுகிறது. நூறு வருடங்கள் நீடித்த பிராமண மன்னர்களின் ஆட்சியை வேதமதம் தன்னுடைய மீட்சிக்குப் பயன்படுத்திக் கொண்டது. 84000 பௌத்த ஸ்தூபிகள் புஷ்யமித்திரனால் அழிக்கப்பட்டன. மௌரியப் பேரரசிற்கும் அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட குப்தப் பேரரசிற்கும் இடைப்பட்ட காலத்தில் (கிமு 200 முதல் கிபி 300வரை) பல்வேறு இன மன்னர்களின் ஆட்சிகள் நடைபெற்றன. கிமு முதலாம் நூற்றாண்டில் ஆண்ட பார்த்திய மன்னன் தோன்டோ பர்னசின் அரசவைக்கு புனித தாமஸ் முக்கிய விருந்தினராக வந்தார் என்று ஜா குறிப்பிடுகிறார்.

கிமு முதலாம் நூற்றாண்டிலிருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரையிலான மன்னர்கள், குறிப்பாக சாதவாகனர்கள் தங்களைக் கடவுளின் அவதாரம் என அறிவித்துக் கொண்டனர். இவர்களின் காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் முழு வீச்சில் துவக்கப்பட்டன. தொழில் கழகங்கள் (கில்டுகள்)  துவக்கப்பட்டன. நால் வருண முறையை சட்டப்படுத்தக் கூடிய மனுதர்மக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது இந்தகாலத்தில்தான். உயர் வர்ணத்தவருக்குச் சேவை செய்வதற்காகவே சூத்திரர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்கிற கோட்பாடு, பெண்களின் சொத்துரிமையையும் திருமண உரிமையையும் பறிக்கும் சட்டங்கள் அதில் இடம் பெற்றன. பல்வேறு புராணங்களும், மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்களும் இந்தக் காலத்தில்தான் படைக்கப்பட்டன. சிவன், விஷ்ணு, கிருஷ்ணன் போன்ற கடவுளர்களும் இக்காலத்தில்தான் சிருஷ்டிக்கப்பட்டனர். பக்தி என்கிற கருத்தாக்கமும், பகவத் கீதையும் இக்காலத்திலேயே உருப்பெற்றன. பரத முனியின் நாட்டிய சாஸ்திரமும் இக்காலத்தைச் சேர்ந்ததே.

கிபி நான்காம் நூற்றாண்டில் நிலை பெற்றது குப்தப் பேரரசு. பள்ளிகளில் போதிக்கப்படுவது போல் குப்தர்களின் காலம் பொற்காலமல்ல  என்பதைத் தெளிவுபடுத்துகிறார், ஜா. குப்தர்களின் காலத்தில் கலை, இலக்கிய, கணித, அறிவியல் வளர்ச்சி ஒரு புதிய பரிமாணத்தை எட்டிய போதிலும், பொது சமுதாயம் சீர் கெட்டது; மனு தர்மமும், வருண வேறுபாடுகளும் தங்களது புதிய உச்சங்களை எட்டின; பாடலிபுத்திரம், அயோத்தி, மதுரா போன்ற நகரங்கள் தங்கள் பொலிவை இழந்தன. அந்நிய வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. பட்டு நெசவாளர்கள் சௌராஷ்டிரத்தை விட்டு வேறு பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தனர். தொழில் கில்டுகள் தொழில் அடிப்படையிலான சாதிகளாக உருப்பெற்றன. நிலத்துடன் அதில் பணியாற்றியவர்களும் மன்னரால் சிலருக்கு தானமாக அளிக்கப்பட்டதும், தானமாக அளிக்கப்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்படடதும் நில உடமைச் சமுதாயம் உருப்பெற்று, வலுப்பெற உதவின. இத்தகைய நிகழ்வுகள் குப்தர்களின் காலம் பொற்காலம்தானா என்கிற கேள்வியை எழுப்புகின்றன.
அம்பா பாலி என்கிற பாலியல் தொழிலாளியின் வீட்டிற்கு புத்தர் விருந்தாளியாகச் சென்றார், சீனாவைச் சேர்ந்த பௌத்தப் பயணி யுவான் சுவாங்க் ஒரு துர்க்கை முன்பு தீ வைத்து பலியடப்பட இருந்தார், திடீரென வீசிய புயல் அவரைக் காப்பாற்றியது போன்ற பல சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல்கள் நிறைந்த நூல் இது . வரலாற்றியல் பொருள்முதல்வாத நோக்கில் ஒரு தேடல் கோர்வையாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ள இந்நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.


பண்டைக்கால இந்தியா
டி.என்.ஜா
தமிழில் அசோகன் முத்துசாமி
பாரதி புத்தகாலயம்
044 24332924