Tamil books

Saturday 5 October 2013

கல்வி குறித்து தமிழில் வெளிவரும் முதல் கள ஆய்வு நூல்

இரா.நடராசன்

தமிழில் கல்வி மற்றும் அதைச்சார்ந்த தத்துவார்த்த நூல்களே வருவதில்லை எனும் அவல நிலையை பாரதி புத்தகாலயம் இரண்டாண்டுகளுக்கு முன் தனது கல்வி வரிசை மூலம் ஓரளவு மாற்றியதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கிடைத்த தோழர்கள் அளித்த ஆதரவு, குறிப்பாக இந்திய மாணவர் சங்கம், ஆசிரியர் அமைப்புகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற தோழமை நெஞ்சங்கள் அள்ளித்தந்த பாராட்டு, ஆதரவு ஆகியவை மேலும் உற்சாகத்தோடு இந்த வேலையைத் தொடருவதற்கு எமக்கு ஊக்கமளித்துள்ளன என்பதைப் பதிவுசெய்தல் நமது கடமை.


இன்று பள்ளிக்கல்வியில் ஆழமான சில மாற்றங்கள் முன்மொழியப் படுகின்றன. குறிப்பாக 2005_ன் யஷ்பால் குழு பரிந்துரைகளை அடுத்து வெளியிடப்பட்ட தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு நமது கல்வியின் அடிப்படை குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பி அவற்றிற்கான தீர்வாக பலவகை மாற்றங்களை முன்மொழிந்தது. அந்த அகில இந்திய அளவிலான ஆவணத்தில் அதிகமான பகுப்பாய்வுகளும் ஏராளமான அறிவுரைகளும் உள்ளன. வெறும் மனப்பாடக் கல்வியை கைவிட்டு பன்முக அணுகுமுறை சார்ந்த படைப்பாற்றலை உருவாக்கும் சமூக நோக்கம் எனும் பரந்துபட்ட புரிதலுடன் இந்த ஆவணம் கல்வியை அணுகியது. ஆனால் அதை அமல்படுத்துவதில் நமது நாட்டிற்கே உரிய பல பலவீனங்கள் அந்த அறிக்கையின் வேகத்தை நீர்த்துப்போக வைத்து விட்டன.


‘‘கல்வி, ஆசிரியர்களை மையப்படுத்தி இயங்குவதால் இது வங்கிமுறைக் கல்வி’’ என்று பாவ்லோ பிரையரே அறிவித்தார். குழந்தைகளை ஏதும் சிந்திக்க இயலாத வெற்றுத்தலை கொண்டவர்களாக பாவித்து அவர்களின் தலையில் தனக்குத் தெரிந்ததை எல்லாம் ஏற்றி வைக்கும் வேலையே ஆசிரியர்களுடையதாக இருக்கிறது. யஷ்பால் கமிட்டி, கல்வியை குழந்தைகளை மையப்படுத்தி இயங்குவதாக மாற்றிட முயற்சி செய்தது. பாவ்லோ பிரையரே, அலெக்ஸாந்தர் யுட்னோ, விச் ஸெலென்கோ, ரெனெய் ஸாஸோ, போன்ற மாற்றுக் கல்வி சிந்தனையாளர்கள் கல்விச் சமூகத்தை சமூகமாற்றத்தை மையமாகக் கொண்டு இயங்க வேண்டுமென்று மொழிந்தார்கள். இந்தியமண்ணில் நாம் கல்வியில் என்ன செய்தாலும் அது ‘அதிகார வர்க்கம்’ எனப்படும் வெள்ளைக் காலர் அதிகாரிகளை மையப்படுத்தி இயங்கு வதாகவே மாறிவிடுவதை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


கல்வி என்பது ஆசிரியர் மூலமோ, தபால் மூலமோ அளிக்கப்படும் ஒரு பொருள் எனும் புரிதலோடு அதை முழுமையான வியாபாரமாக்கி 1970களில் புற்றீசல்போல நர்சரி பள்ளிகளும் தனியார் மெட்ரிக் பள்ளிகளும் பட்டிதொட்டிகளில் கூட முளைத்ததை எவ்விதத்திலும் தடுக்காமல் இன்று பொதுக்கல்விக்கு கீழே யாவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்வதாக காட்டிக் கொள்ளும் அவலம் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்க முடியாத நகைச்சுவையாகும். நாம் செய்யத் தவறிய பலவற்றின் மீது பழிசுமத்துவது எளிது. பன்முகத்தன்மை, சமூகநீதி, சமத்துவம் போன்ற வார்த்தைகளின் உண்மையான பொருளைக்கூட சிதைத்து 10% ஆடித் தள்ளுபடியை புரட்சி என்று அறிவிக்கும் அளவிற்கு மத்தியதர வர்க்கத்தின் பணம் சேர்க்கும் வெறியை இன்று கல்வி வியாபாரிகள் தங்களது கடைவிரிப்பிற்கும் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கிறோம். அரசுப்பள்ளிகளோ இந்த நாட்டில் நான்கில் மூன்று பகுதியாக உள்ள ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜனங்களின் பாவப்பட்ட குழந்தைகள் படிக்கும் இடமாகப் போய்விட்டது.


இப்படிப்பட்ட முரட்டுச்சூழலிலும், குழந்தைகளின் சமூகப் பொருளாதாரப் பின்னணியை அறிந்து அவர்களைப் பரிவோடும், ஆர்வத்தோடும் அணுகும் ‘அதிசயப்பிறவிகள்’ இருக்கவே செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காண மாணவர்கள் ஒரு போதும் தவறுவதும் இல்லை. ஆசிரியர்கள் குறித்த மிகமோசமான செய்திகளை நாம் தொடர்ந்து ‘நடுநிலை’ நாளேடுகளில் வாசித்தபடி இருக்கிறோம். சேலத்தில் கண்கள் பிடுங்கப்படுவதும், திருப்பூரில் இரண்டுநாள் முழுவதும் முட்டிபோடுவதும், நாகர் கோவிலில் சட்டை கழற்றப்படுவதும் பள்ளபட்டி அருகே ஒரு கிராமத்தில் தலித்தாகப் பிறந்ததால் பள்ளிக் கழிவறையை கழுவ வைக்கப்படுவதுமான கொடிய எதார்த்தங்கள் ஆசிரியர் குறித்த அடிப்படையையே உலுக்கியுள்ள இன்றைய பின்னணியில்.... உண்மையான நல்லாசிரியர்களை நாடிச் செல்லும் தோழர் மணி நமக்கு அடையாளம் காட்டி இருப்பது புதிய உத்வேகத்தை அளிக்கும் சிறப்பான புதிய பாதையாகும்.


பாரதிபுத்தகாலயம் இந்த நூலை ஆசிரியர்தின சிறப்பு வெளியீடாகக் கொண்டு வருவதற்கு தேர்வுசெய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இதை வாசிக்கும் ஒரு இளையதலைமுறை ஆசிரியரும், நாளைய கல்வியாளராக இருக்கும் ஆசிரிய பயிற்சி மாணவரும் தங்களுக்கான வேலை என்ன என்பதை மிக எளிதில் புரிந்துகொள்ள முடியும். பல நூறுபக்கங்களில் வெளிவரும் எத்தனையோ கல்வி சார்ந்த நூல்கள் சொல்ல வந்தும் சொல்ல முடியாத அறிய தகவல்களை, இந்த சிறிய புத்தகம் அடக்கத்தோடு முன்வைப்பதைக் காணலாம். தமிழில் வெளிவரும் கல்வி பற்றிய முதல் நேரடி களஆய்வு நூல் இதுதான்.


இந்த ‘அக்கினிகுஞ்சிற்கு’ அற்புதமானதொரு அணிந்துரையைக் கல்வியாளர் ஜே.கே. அளித்துள்ளார். இந்த நூலைக் கொண்டு வருங்கால், வருங்கால கல்வி தழைக்க மாற்றங்கள் விதைக்கப்பட கடமையுணர்வோடும், சமூக அக்கறையோடும் செயலாற்றி ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்கள் தங்களது சுயசரிதைகளை எழுத முன்வந்தால் அவற்றைப் பரிசீலித்து வெளியிடுவதும் நமக்கு முன் இருக்கும் முக்கியப்பணி என்று சொல்லத் தோன்றுகிறது.


இந்த நூலை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் தான் ஒரு ஆசிரியராக ஆகவேண்டும் என்று விரும்புவார்கள். இதை வாசிக்கும் ஆசிரியர்களோ தான் தன் மாணவர்களால் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றப்படும் ஒரு நல்ல ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இன்றைய கல்விச் சூழலின் மிகஅவசியமான அந்த மாற்றத்தை கொண்டுவர விரும்பும் அனைத்துவகை கல்வியாளர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நூல் உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவரும் நன்றிக்குறியவர்கள்.


பள்ளிக்கூட தேர்தல் நூல் குறித்து 

பேரா. ந. மணிக்கு ச. மாடசாமி எழுதி கடிதம்

கவனத்தை ஈர்க்கக்கூடிய தலைப்பு. சிரிக்கிற குழந்தைகளை அட்டையில் காண்பது மனநிறைவான விசயம். நூலின் கருப்பொருள் வித்தியாசமானது; மொழியை பேசுவது போலிருந்தது. அதிகாரத்தின் பாராட்டைப் பெறுவதற்குத்தான் கைகள் விரைகின்றன; கால்கள் அதை நோக்கியே நடக்கின்றன. மனம் ஏங்கிக் கிடப்பதும் அதைப் பற்றியேதான்! ஆனால் - அது எவ்வளவு சம்பிரதாயமான - உள்கனமற்ற பாராட்டு! இதைத் தீவிர வார்த்தைகளில் விவாதிக்காமல், நூலின் தொடக்கத்தில் ஓர் உதாரணத்தின் மூலம் நாசுக்காகக் காட்டியிருக்கிறீர்கள்.


நூல் முழுக்க இயல்பானதும், ஆத்மார்த்தமானதுமான பேச்சுதான் கேட்கிறது. வலிந்து சேர்க்கப்பட்ட வார்த்தை ஒன்று கூட இல்லை. அதிகாரப் பாராட்டுக்கு உண்மையான மாற்று எது என்பதை வெற்று உரைகளால் சொல்லி எத்தனை பேருக்கு விளங்கப் போகிறது? ஓரு நிகழ்வு மூலம் நிரூபித்து விட்டீர்கள். வெறும் கொண்டாட்ட நிகழ்வு அல்ல; சுவாராஸ்யத்துக்கான நிகழ்வு அல்ல. சிந்தனைப் போக்கையே மாற்றி, இதயத்தில் நம்பிக்கைகள் நிரப்பும் நிகழ்வு அது. மாணவர்களால் பாராட்டப்பட்ட ஆசிரியராகவும் கண்கலங்கி விம்மிய செய்திகளை, உணர்ச்சி வசப்படாமல் தாண்டிச் செல்ல முடியவில்லை.


நுட்பமாகவும் சில விசயங்களைக் கவனித்திருக்கிறீர்கள். பாராட்டுப்பெற்ற ஆசிரியர்கள் எவரும் கல்வி முயற்சிகள் குறித்த நூல்களை வாசிக்கவில்லை என்பது நீங்கள் கவனித்த உண்மைகளில் ஒன்று வாசிப்புக்கு முன்னால் நிற்கிறது அக்கறை; வாசிப்பை விட அனுபவம் சில சமயங்களில் மெருகூட்டுவதில் வல்லமையும் பெற்றிருக்கிறது. வாசிப்பில் கற்பதைப் போல, வாசிப்புக்கு வெளியே இதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பொன்னுச்சாமி ஆசிரியர், சிவகிரிப்பள்ளி ஆசிரியர் போன்றோரை நூலின் வழிச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு சாதாரணமானது அல்ல.


இந்நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் சர்வதேச உள்கரு நூலுக்குள் கிடக்கிறது.

 

 

No comments:

Post a Comment