Tamil books

Tuesday, 1 October 2013

காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
ஆங்கிலப் பதிப்புக்கான முன்னுரை
வி. ராமமூர்த்தி
மதிப்புமிக்க மனித விழுமியங்களைப் புரியச் செய்யும் காந்திஜியின் கடைசி 200 நாள்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல் தி ஹிந்து நாளிதழில் வி. ராமமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.
வி. ராமமூர்த்தி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்து காந்தியின் மீது ஈர்ப்புகொண்ட இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலை இலக்கிய ஆய்வாளராகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை நான் எழுத நேரிட்ட பின்னணி குறித்துச் சில சொற்களைக் கூறுவது பொருத்தமானதாக இருக்கும் என எண்ணுகிறேன். எனது குழந்தைப் பருவத்திலேயே காந்திஜியின் வாழ்க்கைப் பயணத்தின் மீது எனக்கு ஓர் ஆழ்ந்த ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.
நான் கல்கத்தாவில் பிறந்தேன். 1948ஆம் ஆண்டு ஜனவரியில் எனக்குப் பன்னிரெண்டு வயது நிரம்பியிருந்தது. 1936ஆம் ஆண்டில் எனது தந்தை ஆர். விசுவநாதனும் எனது தாயார் பாகீரதியும் கல்கத்தாவிலிருந்து கராச்சிக்கு இடம் பெயர்ந்திருந்தனர். கராச்சியில் இருந்தபோது ஓரளவுக்கு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். எனது சகோதரி ராஜி, 1938ஆம் ஆண்டில் அங்கு பிறந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்த நாள்களிலிருந்து அந்த நகரந்தான் எங்களின் உறைவிடமாக இருந்துவந்தது. எனது பெற்றோருக்கு ஒரு நல்ல நண்பர் குழாம் இருந்தது. எங்களுடைய வாழ்க்கை அமைதியான முறையில் ஓடிக்கொண்டிருந்தது. நாடு பிரிவினை செய்யப்பட்ட போதிலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களைப் போலவே பாகிஸ்தானில் உள்ள இந்துக்களும் அமைதியான முறையில் வாழ முடியும் என்று எனது தந்தை நம்பினார். நான் சற்றுப் பின்னோக்கிச் செல்லட்டுமா?
எனது பெற்றோர்கள் எனக்கு ஒரு கேமிராவையும் (அது ஒரு ஷ்யூர்-ஷாட் ஜூனியர் கேமிரா) மேசையின் மீது நிறுத்தி வைக்கக்கூடிய மகாத்மா காந்தியின் படம் ஒன்றையும் அளித்திருந்தனர். 1947ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், எங்களது வாழ்க்கைச் சக்கரம் எத்தகைய பாதிப்பும் இன்றி வழக்கமான முறையில் இயங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் நண்பர்கள் வீட்டுக்குச் செல்வதும் அவர்கள் எங்கள் இல்லத்துக்கு வருவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பள்ளிக்கூடம், கடைவீதி, திரை அரங்குகள், மகாத்மா காந்தி பூங்கா என்று வழக்கம்போல் சென்றுகொண்டிருந்தோம். அந்தப் பூங்காவில் புதிதாகப் பறிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட கொடி முந்திரிப் பழங்கள் கிடைக்கும். ரோஜா மணம் கொண்ட அந்தக் குலாபி திராட்சைப் பழங்களை விலைக்கு வாங்கி ருசிப்போம்.
சுதந்திர தினமும் வந்தது. அந்த நாளை நாங்கள் கொண்டாடினோம். அது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்காக அகில இந்திய வானொலி ஒவ்வொரு நாள் மாலை 5.00 மணிக்கும் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை ஒலிபரப்பி வந்தது. குறுகிய அலைவரிசையில் டெல்லியில் இருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த அந்த நிகழ்ச்சி தவறாமல் ஒரு இனிய நாதஸ்வர இசையுடன் துவங்கும். ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த 'வாதாபி கணபதிம் பஜே' பாடலிசை அது என்றும், திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை வாசித்துப் பதிவுசெய்யப்பட்டது என்றும் பின்னர் நான் தெரிந்துகொண்டேன்.
மாதங்கள் செல்லச் செல்லப் பதற்றமான சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. எனது புதிய நார்மன் சைக்கிளில் மூவண்ணக் கொடியைப் பறக்கவிட்டு ஒரு நாள் நான் வெளியே சென்றிருந்தபோது சிலர் என்னைக் கீழே பிடித்துத் தள்ளிவிட்டனர். மூவண்ணக் கொடியை அவர்கள் முரட்டுத்தனமாகப் பறித்துக் கிழித்து எறிந்தனர். எங்கள் அமைதியான வாழ்க்கை மேலும் அதிகமாகப் பின்னர் பாதிக்கப்பட்டது. நாட்டுப் பிரிவினை ஏற்கனவே நிகழ்ந்திருந்தது என்றாலும் நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை. புதிய நாடான பாகிஸ்தானில் வசிக்கிறோம் என்ற உண்மை எங்களுக்குத் திடீரென்று புரிய வைக்கப்பட்டது.
கராச்சிக்கு அகதிகள் வரத் துவங்கினர். கிழக்குப் பஞ்சாபிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அகதிகள் ஏராளமான எண்ணிக்கையில் வந்துகொண்டிருந்தனர். இந்துக்கள் வாழும் எந்தவொரு வீட்டிலும் அவர்கள் நுழைந்து அதனைக் கைப்பற்றிக்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அவர்கள் அவ்வாறு செய்யும்போது காவல் துறையினர் தலையிடுவதில்லை.
நகருக்கு வெளியே ராணுவக் குடியிருப்புகளுக்கு அருகே நாங்கள் வசித்துவந்தோம். ஆனால் இப்போது தெருக்களில் நடமாடுவது திடீரென்று பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்கள், வெண்ணெய் போன்றவற்றை நானும் எனது சகோதரியும் சைக்கிளில் சென்று வாங்கிவருவது வழக்கம். இந்தச் சிறிய பயணங்கள் ஆபத்து நிறைந்தவைகளாக மாறிவிட்டன. இனிமேல் நாங்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டோம். நான் செயின்ட் பாட்ரிக் பள்ளியிலும் எனது சகோதரி சதாருக்கு அப்பால் அமைந்திருந்த செயின்ட் ஜோசப் கான்வென்டிலும் படித்துவந்தோம். பள்ளிக்குச் செல்வதும் நின்று போய்விட்டது. எனது தந்தையின் முஸ்லிம் காரோட்டியான யாசின் மற்றும் பணியாளர்களான மஹ்மூது, பஷாரத் ஆகியோர் தொடர்ந்து வழக்கம்போல வந்துகொண்டிருந்தனர். நெடிய உருவத்துடன் பலசாலியாகக் காணப்படும் பஷாரத் ஒரு பத்தாணியர். அவர்கள் முஸ்லிம்கள்; நாங்கள் இந்துக்கள் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது. அவர்கள் எங்கள் வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருந்தனர். எங்கள் வீட்டில் கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்ட ஒற்றைக்கண் கிளி (இதற்கு மிட்டு என்று பெயரிட்டிருந்தோம்.) டாப்பி என்ற பூனை மற்றும் கருப்பு ஆண் பூனைக்குட்டியாகிய ஊப்பி ஆகியவற்றுக்கு நாங்கள் உணவு கொடுக்கும்போது அவர்களும் எங்களுடன் சேர்ந்துகொண்டு அவற்றுடன் விளையாடுவார்கள்.
டிரிக் ரோடு விமான நிலையம் அருகே உள்ள மாலிர் என்னுமிடத்துக்கு எனது தந்தை தினமும் செல்வது வழக்கம். ஒரு ராணுவ ஒப்பந்தத் தொழிலுக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார். அந்த ஒப்பந்தப் பணி நல்ல முறையில் நடைபெற்று வந்தது. சிறப்பான முறையில் பணியை நிறைவேற்றி வந்தமைக்காக இந்தியப் படையின் தலைமைத் தளபதியாகிய பீல்டு மார்ஷல் சர் கிளாடு அச்சின்லெக் அவர்கள், அந்த நிலையத்துக்கு வந்திருந்தபோது எனது தந்தையைப் பாராட்டியிருந்தார். மவுரிபூர் விமான நிலையத்துக்கும் எனது தந்தை சென்று வருவது வழக்கம். எங்களுடைய காரோட்டியான யாசின்தான் எனது தந்தையின் பணியிடத்துக்கு அழைத்துச்சென்று திரும்புவார். எனது தந்தை பல நேரங்களில் இரவில் நேரங்கழித்தே திரும்புவார்.
அவர் திரும்பி வரும்வரை எனது தாயாருக்கு இருப்புக்கொள்ளாது. ஒரே பதற்றத்துடன் இருப்பார். எனது வீட்டின் வெளிக் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். நாங்கள் பூஜை அறையில் பிரார்த்தனை செய்துகொண்டிருப்போம். இது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. சில நேரங்களில் இரவு 7.00 மணிக்கே ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்திருக்கும். அதற்குள் எனது தந்தை வீட்டுக்கு வந்திருக்கவில்லை என்றால் அடுத்த நாள் காலைவரை அவர் வரமாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் தனியாக இருப்போம். ஒருநாள் இரவு 8.00 மணிக்குப் பிறகு அவர் திரும்பிவந்தார். மாலிர் சென்றிருந்த அவர் நகரத்திலிருந்து அவ்வளவு தொலைவில் தங்கியிருப்பது பாதுகாப்பற்றது என்று கருதி யாசின் ஒரே மூச்சாக வண்டியை ஓட்டிவந்துவிட்டதாக எனது தந்தை தெரிவித்தார். உள்ளுணர்வின் அடிப்படையில் யாசின் எடுத்த ஒரு புத்திசாலித்தனமான முடிவு அது. அன்று இரவு அந்தச் சாலையில் வன்முறை நடைபெற்றது என்றும், ரத்தம் சிந்தப்பட்டது என்றும் உயிர்கள் பறிக்கப்பட்டன என்றும் நாங்கள் அடுத்த நாள் தெரிந்துகொண்டோம்.
கராச்சியில் தொடர்ந்து தங்க முடியும் என்ற எனது தந்தையின் நம்பிக்கை நடைமுறை சாத்தியமற்றது என்பது சிறிதுசிறிதாக எங்களுக்குப் புலப்பட ஆரம்பித்தது. எனது தந்தையின் நண்பரான வழக்கறிஞர் டி'சா கராச்சியை விட்டுக் கிளம்பத் தயாராகுமாறும், இந்தியாவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தேடிக்கொள்ளுமாறும் எங்களுக்கு அறிவுரை கூறினார். மாலை 5.00 மணி அகில இந்திய வானொலி ஒலி பரப்பைக் கேட்பது மட்டுமே மாற்றமின்றித் தொடர்ந்தது. இத்தகைய நிலையிலும் நிலைமை சீரடைந்துவிடும் என்று விசித்திரமான நம்பிக்கையுடன் நானும் ராஜியும் இருந்து வந்தோம். மகாத்மாவின் ஆற்றலைப் பற்றியும், எத்தகைய பிரச்சினைகள் உருவாகி வளர்ந்தாலும் அதனைச் சரிசெய்யக்கூடிய அவரது அற்புதத் திறமையைப் பற்றியும் எங்கள் பெற்றோர்கள் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இதுவே ஒருவேளை எங்களது அப்பாவித்தனமான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். முன்புபோலவே அழகிய சிறந்த நகரமாகக் கராச்சி நீடிக்க வேண்டும் என்று கடவுளிடம் மட்டுமின்றி மகாத்மாவிடமும் மனதார வேண்டிக்கொண்டோம். கராச்சியை விட்டு வெளியேறுவதை எங்களால் எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.
1948 ஜனவரி 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு பேரிடி விழுந்தது. அன்றைய தினம் வழக்கம்போல எங்களுடைய சிறிய மின்சார வானொலிப் பெட்டியை இயக்கினோம். அகில இந்திய வானொலியின் வெளி நாட்டுக்கான ஒலிபரப்பை 19 மீட்டர் அலைவரிசையில் கேட்க முடிந்தது. மாலை 5.15 மணிக்கு நடைபெற்றுவந்த நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டது. ஒரு முக்கியமான அறிவிப்புக்காகக் காத்திருக்குமாறு டெல்லி வானொலி நிலையத்திலிருந்து ஒரு வேண்டுகோள் ஒலிபரப்பப்பட்டது. பிர்லா மாளிகையில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி சுடப்பட்ட செய்தி பின்னர் வெளியிடப்பட்டது. சோக கீதம் காற்றை நிரப்ப ஆரம்பித்தது. சில நிமிடங்கள் கழித்து காந்தி மரணமடைந்த செய்தியைக் கனத்த குரலில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்ந்தது. உலகமே இடிந்து விழுந்துவிட்டது போன்ற ஓசை எங்கள் காதுகளில் கேட்டது.
அன்று இரவு முழுவதும் நாங்கள் அனைவரும் அழுதுகொண்டிருந்தோம். மறுநாள் காலை வெளிவந்த தி டெய்லி கெஜட் மற்றும் தி சிந்து அப்சர்வர் நாளிதழ்களில் வெளியிடப்பட்ட தலைப்புச் செய்திகளையும் படங்களையும் நாங்கள் கண்டோம். காந்திஜியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சி பற்றிய விவரங்களை வானொலியில் கேட்டோம். ஒவ்வொரு இல்லமும் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டதுபோல வருத்தமடைந்தது. சில நாள்கள் கழித்து மகாத்மாவின் அஸ்தியைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி இந்திய ஹைகமிஷனர் ஸ்ரீபிரகாசாவின் தலைமையில் நடைபெற்றது. கிளிஃப்டன் நகருக்கு அருகே அரபிக் கடலோரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொண்டோம்.
1948ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று பயங்கரமான கலவரம் வெடித்தது. அது ம்தெருக்களில் ரத்தக் கறையை ஏற்படுத்தியது. ஏராளமான சீக்கியர்களும் இந்துக்கள் சிலரும் படுகொலை செய்யப்பட்டனர். 1948ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதியன்று பெரும் மனக்கலக்கத்தில் இருந்த நாங்கள் எங்களது அனைத்து உடைமைகளையும் இழந்த நிலையில் கராச்சி நகருக்கு விடை கொடுத்தோம். (1979ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் அகில இந்திய வானொலியின் வருணணையாளராகப் பணிபுரிய கராச்சிக்குச் சென்றிருந்தேன். எனக்குத் தெரிந்த பழைய இடங்களுக்கும் சில நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களுக்கும் சென்றிருந்தேன். செயின்ட் பாட்ரிக் பள்ளிக்குச் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரான எல்.கே. அத்வானியுடன் செல்லும் நல்வாய்ப்பு கிடைத்தது. அவரும் அப்பள்ளியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது).
கோயில் நகரமான மதுரையில் எங்கள் வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பித்தோம். 1948ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மகாத்மாவின் சுயசரிதை நூலான 'சத்திய சோதனை'யை நான் சக்தி காரியாலயத்திலிருந்து விலைக்கு வாங்கினேன். வயது ஆக ஆக என்னால் அந்த நூலை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையே மகாத்மாவைப் பற்றி வேறு பல நூல்கள், அவரது மேற்கோள்கள் மற்றும் படங்களை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வாங்கிச் சேகரித்திருந்தேன். கலவரத்தால் பாதிக்கப்பட்ட நவகாளியில் அவர் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு அவர் நடந்து செல்வது, மரணமடைந்த நேரத்திலும் நிர்மலமாகக் காட்சியளித்த அவரது முகம் ஆகியவை எனது மனதை ஆழமாக அலைக்கழித்து வந்தன.
மகாத்மாவின் மகத்தான வாழ்வின் இறுதிக்கட்டங்களில் கிரேக்கத் துன்பியல் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அரங்கேறியதை என்னால் உணர முடிந்தது.
1997ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் இந்து நாளிதழ் ஆசிரியர் திரு.என். ரவி அவர்களை அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன். 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியுடன் முடிவடையும் காந்திஜியின் இறுதி 200 நாட்களின் அன்றாட நிகழ்வுகளை ஒரு தொடராக வெளியிடுவதற்கு அவருக்கு விருப்பமுள்ளதா என்று நான் அவரிடம் கேட்டேன். 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி ஒரு வெள்ளிக்கிழமையாக இருந்தது. அதேபோல 1998ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதியும் தற்செயலாக ஒரு வெள்ளிக்கிழமையாக அமைந்திருந்தது. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் நிகழ்வுகளைத் தொடராக வெளியிடும் எனது ஆலோசனையை வரவேற்றார் திரு. ரவி. இந்து நாளிதழின் கார்ட்டூனிஸ்டாகிய கேசவ் வரைந்த ஒரு கார்ட்டூன் ஓவியத்துடன் இந்தக் கட்டுரைத் தொடர் தொடங்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி முதல் கட்டுரை வெளியிடப்பட்டது. 'மகாத்மா காந்தியின் இறுதி 200 நாட்கள்' என்ற தலைப்புடன் தொடர் வெளிவர ஆரம்பித்தது. இந்து நாளிதழின் விரிவான ஆவணக் காப்பகத்திலிருந்தும், காந்திஜியின் நூல் தொகுப்புகளிலிருந்தும் (இந்திய அரசாங்கத்தின் பதிப்புத் துறை வெளியிட்டவை) கட்டுரைகளுக்கான தகவல்கள் திரட்டப்பட்டன. அந்தத் தொடருக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இக்கட்டுரைகள் நூல் வடிவத்தில் எப்போது வெளியிடப்படும் என்றும் பல வாசகர்கள் கேட்டிருந்தனர்.
நான் எழுதியிருந்த நீண்ட கட்டுரைகள் ஆசிரியரால் தேவையான அளவுக்குச் சுருக்கப்பட்டு இந்து நாளிதழில் வெளிவந்தன. நான் எழுதியவற்றை முழுமையாக (தேவையான கூடுதல் தகவல்களுடன்) நூல் வடிவில் வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்து நாளிதழ் அன்றாடம் வெளியிட்ட அதே வடிவில் அந்தக் கட்டுரைகளை வெளியிடலாம் என்று பலரும் விரும்பினர். அதே முறையில்தான் இந்நூலில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புகைப்படங்கள் சிலவும் 'வைஷ்ணவ ஜனதோ' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடல்களின் முழுமையான வடிவங்களும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நூலில் (ஆங்கிலப் பதிப்பு) இடம்பெற்றுள்ளன.
காந்திஜியின் வாழ்க்கையே அவர் பிறருக்கு உணர்த்தவிருந்த செய்தி என்று குறிப்பிடலாம். 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதிக்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அவரை ஆழமான முறையில் துன்புறுத்தியிருந்தன. ஆனால், அவை அவரது நம்பிக்கையைத் தகர்க்கவில்லை. அவரது விசுவாசத்தை பலவீனப்படுத்த முடியவில்லை. இன்றியமையாத, நீடித்து நிலைக்கக்கூடிய மனித வாழ்க்கையின் மாண்புகளாக உணர்ந்தவற்றைப் பற்றியே அவர் இறுதிவரை சிந்தித்தார், பேசினார், எழுதினார் - அவற்றுக்காகவே உழைத்தார். அவரது போதனைகளிலிருந்து இந்தியாவும் உலகமும் இன்றும்கூடப் பயன்பெற முடியும்.
காந்திஜியின் மகத்தான வாழ்க்கையின் இறுதி 200 நாட்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அவற்றின் பின்னணி இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இது அவரது போதனைகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டி மேலும் தகவல்களைத் திரட்டவும், ஆய்வு மேற்கொள்ளவும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன். அவை நாம் வாழும் இக்காலத்துக்கு மட்டுமின்றி எதிர்வரும் காலம் முழுமைக்கும் பொருத்தமான புதிய படைப்புகள் உருவாக்கப்பட உதவிடும் என்று நம்புகிறேன்.
இந்தக் கட்டுரைகளைத் தொடராக வெளியிட்டமைக்கும் நூல் வடிவில் கொண்டுவந்ததற்கும் இந்து நாளிதழுக்கும் அதன் ஆசிரியர் திரு. ரவி அவர்களுக்கும், எனது ஆழ்ந்த நன்றியுணர்வை உரித்தாக்குகிறேன். மறைந்த எனது பெற்றோர் மற்றும் எனது மகன் ரஞ்சித்குமார் ஆகியோரின் ஆன்மாக்களுக்கு இந்நூலைப் பணிவுடன் சமர்ப்பணம் செய்கிறேன்.
1997-98ஆம் ஆண்டுகளில் இக்கட்டுரைகளை எழுதுவதற்கும் இப்போது நூல் வடிவில் அவற்றைக் கொண்டுவருவதற்கும் எனது ஏராளமான நண்பர்களும், குறிப்பாக எனது மனைவி கமலாவும் மிகவும் உதவியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மனப்பூர்வமான முறையில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நூல்: காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
ஆசிரியர்: வி. ராமமூர்த்தி
தமிழாக்கம்: சி. இலக்குவன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, 
தேனாம்பேட்டை, சென்னை - 600018
விலை: ரூ 350/-