Tamil books

Monday, 30 September 2013

கல்விச் சிந்தனைகள்: பெட்ரண்ட் ரஸல்

19, 20-ம் நூற்றாண்டுகளிடையே கல்விக் கோட்பாடுகளில் பல மாற்றங்கள் உருவானதில் பெட்ரண்ட் ரஸலின் சிந்தனைகள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. ‘‘முன்னுரிமை பெற்ற சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இயல்புடன் கல்வி இருக்கக் கூடாது` அனைவருக்குமான கல்வியாக இல்லாத பட்சத்தில் அந்தக் கல்வி முறையைத் திருப்தியளிக்கக்கூடியதாக நாம் கருத முடியாது’’ என திட்டவட்டமாக நம்பியவர். தனது சொந்தப் பரிசோதனைகளில் இருந்து பல முடிவுகளைக் கண்டறிந்து அவற்றை சமூகத்திற்கு முன் மொழிந்தவர். 19 தலைப்புகளில் அவரின் கருத்துகளைத் தமிழாக்கித் தந்திருப்பவர்கள் சுப்பாராவ், சாமி, ரமேஷ் ஆகியோர்.

புதிய ஞானமே இப்புவியை நடத்தும். அறிவின் தேக்கம் அதனை அசைவற்றுப் போகச் செய்துவிடும்... இயற்கைச் சக்திகளின் ஆதிக்கத்திலிருந்தும், அழிவிற்கு அடிகோலும் உணர்ச்சிகளில் இருந்தும் விடுபட அறிவே சிறந்த கருவி. அறிவின் துணையின்றி நமது நம்பிக்கைகளைத் தாங்கிய கனவுலகைப் படைத்திட முடியாது... - என நம்பியவர் ரஸல். மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் ஆதிப் பழங்கால முதல் தொடரும் ஆயிரமாயிரம் அச்சங்கள் வழிமறித்து நிற்கின்றன. ஆயினும் அந்த அச்சத்தை வெல்லும் ஆற்றல் கொண்ட அன்பை நமது அரும்புகளின் மீது பாய்ச்சுவோமாயின், அவர்களுக்கு நாம் தரவல்ல பெரும் பரிசை எந்தச் சக்தியாலும் தட்டிப் பறித்துவிட முடியாது என்று வலியுறுத்தியவர் அவர். ‘‘புறத்தே நாம் காண்பது தாறுமாறான, ஒழுங்கற்ற சூழல்தான்; நம் மனக்குகைக்குள் நிரம்பி நிற்பதென்னவோ இருள் தான். ஆனால், பகுத்தறிவு எனும் சின்னஞ்சிறு அகல்விளக்கை ஏற்றிப் படிப்படியாய் அதையே ஒளிப்பிழம்பாய் வளர்த் தெடுத்து அவற்றை அகற்ற வேண்டும்...’’ என்பது போல் செறிவான சிந்தனைகள்...

No comments:

Post a Comment