Tamil books

Sunday, 8 September 2013

மனத்திரை விலக்கும் சிறுகதைகள்


சு.பொ. அகத்தியலிங்கம்


“நம்பள எல்லோரும் அலி , ஒம்போது , இரண்டும்கெட்டான் , அரவாணின்னு ஏதேதோ, அவனவன் வாயிக்கு வந்தாப்ல பெயரைவச்சி கூப்பிடுறான் . ஆனா..அந்த எல்லா பெயர்களும் நம்மள கேவலப்படுத்துறதாகவும் நம்ம விருப்பம் இல்லாததாகவும் இருக்குது . நம்மளோட உள் ளுணர்வை வெளிப்படுத்துற மாதிரியும் நாமே நமது பெயரைச் சூட்டிக் கொண்டோம் . அதுவே திருநங்கையாகும் .” - இது திருநங்கை சந்தியாவின் வாக்கு மூலம் .
இது மிக முக்கியம் . பெயரில் என்ன இருக் கிறது என தூக்கி எறிந்துவிட முடியாது . எந்தவொரு சொல்லும் சுட்டுகிறவரை காயப்படுத் தாததாக இருக்க வேண்டும் அல்லவா ?திருநங்கைகளைக் குறித்த எட்டு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன . தொகுப் பாளர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் அர்த்தச் செறிவுமிக்க என்னுரை நூலுக்கு புது வெளிச்சம் பாய்ச்சுகிறது. எனது நண்பரும் எழுத்துப் போராளியுமான மறைந்த சு.சமுத்திரம் எழுதிய வாடா மல்லி நாவலும் அப்போது அவருடன் உரையாடிய போது அவர் பரிமாறிய செய்திகளும் மூன் றாம் பாலினம் என்கிற அளவில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது .தொண்ணூ றுகளின் பிற்பகுதியில் தொடங்கிய திருநங்கை குறித்த விழிப்புணர்வு நமது புரிதலை அடுத்த கட்டத் துக்கு நகர்த்தின எனில் மிகை அல்ல . அந்த விழிப்புணர்வின் விளைச்சல்தாம் இந்த சிறுகதைகள் எனில் தவறல்ல.
ஆயினும் கி .ராஜநாராயணன் 1964 ல் எழுதிய கோமதி சிறுகதையில் இதே நேர்த்தி பிரதிபலிப்பது ஆச்சரியம். ஆனால் உண்மை. கோமதி நாயகத்துக்குள் வாழும் கோமதியின் மென்மையான உணர்வுகளை கி.ரா. காட்சிப்படுத்தி இருப்பது சிலிர்க்க வைக்கிறது . இதனை வெளியிட்ட தீபம் இதழ் மீதான நம் மதிப்பு மேலும் கூடுதலாகிறது.1996 ல் இந்தியா டுடேவில் வெளியான இரா.நடராசனின் மதி என்னும் மனிதன் மரணம் குறித்து வடிவத் தேர்விலும் உள்ளுணர்வின் பிழிவிலும் முத்திரை பதிக்கிறது .“எத்தனை முறை வாசித்தாலும் கண்ணீர் சிந்தாமல் முடிக்க முடியாத அழுத்தமான பதிவு” என வித்யா கூறுவது மெய்யென்பதை இக்கதையை வாசிக்கும் ஒவ்வொருவரின் கண்ணீர் துளியும் சாட்சி சொல்லும் .
சினிமா தொடங்கி வாழ்வு நெடுக திருநங்கைகளை வக்கிரமாகப் பார்க்கும் பொறுப்பற்ற வாலிபத்தனத்தை படம்பிடிக்கும் பாவண்ணனின் வக்கிரம் 1997ல் வெளிவந்தது. இக்கதையில் வக்கிரமான வாலிபர்களிடமிருந்து திருநங்கைகளை காப்பாற்றும் மோர் கிழவியின் ஆவேசம் மானுடம் சாகாமல் அடித்தட்டு மக்களிடம் உயிர்ப்புடன் இருப்பதன் சாட்சி . சுயஅடையாளத்தைக் கூட வெளிப்படுத்த இயலாத அந்தஸ்தின் குறுக்கீடும் வலியும் இப்படியும் கதையில் நம்மை மிரள வைக்கிறது .கதிரின் தற்கொலை நம்மை உலுக்குகிறது. இந்தக் கதையை எழுதிய சுதா ஒரு திருநங்கை என்பது கூடுதல் செய்தி . நடராசன் எழுதிய கதையில் மதி கொலை செய்யப்படுகிறான் ஆனால் அரசு ஆவணத் தில் தற்கொலை என்றே பதிவாகிறது .
சுதா எழுதிய கதையிலோ கதிர் தற்கொலை செய்து கொள்கிறான் . திருநங்கைகளை ஏற்க மறுக்கும் சமூகம் அவனை கொலை செய்துவிட்டது எனிலும் பிழையல்ல. ஆணைப்போல, பெண்ணைப் போல, திருநங்கைகளை நம் சமூகம் ஏற்கவேண்டுமென இவ்விரு மரணங்களும் நம் கன்னத்தில் அறைந்து சொல்கிறது .இலட்சுமணப்பெருமாளின் ஊமங்காடை திருநங்கையின் தாய்மைத் தவிப்பை நச்சென இறுதியில் நம்மிடம் சொல்லிச்செல்கிறது; நீ பொறந்ததுலேர்ந்து இப்படித்தானா என்று திரு நங்கை த்ரிஷாவும் உடல் ஊனமுற்ற பால்ராஜும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்வதுடன் - விளிம்பு நிலையிலிருக்கும் இருவருக்கும் இடையே இயல்பாய் முகிழ்க்கும் உறவு பாரதி தம்பியின் தீராக்கனவில் தீர்க்கமாய் வெளிப்படுகிறது . தலித்துகளின் வாழ்க்கை அவலத் தையும் திருநங்கையின் சீற்றத்தையும் இருவரும் விழிப்படைவ தையும் திண்டுக்கல் தமிழ் பித்தனின் ஆச்சி முத்து வலுவாய் சொல்லுகிறது . கவின்மலரின் நீளும் கனவு திருநங்கை அனுவிற்கும் அவளின் பெண் நண்பி சின்னுவிற்குமான நட்பினைப் பேசுகிறது . இத்தகு நட்புக்கான கனவாய் நீள்கிறது .

இப்படி எட்டு கதையும் எட்டு கோணத்தில் நம்மிடம் பேசுகிறது . திருநங்கை குறித்த மனத்திரை விலகுகிறது . மனத்தடை தகர்கிறது . இக்கதைகளை படிக்கும் முன் ஒருவரிடம் அப்பிக்கிடக்கும் முன்முடிவுகள் இந்த எண்பது பக்கங்களை படித்து முடிக்கும் போது நிச்சயம் மாறி இருக்கும் . நீங்களும் படியுங்கள்.

நன்றி தீக்கதிர்


மெல்ல விலகும் பனித்திரை,திருநங்கைகள் குறித்த சிறுகதைகள்,
தொகுப்பு : லிவிங் ஸ்மைல் வித்யா ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,421 , அண்ணா சாலை , தேனாம்பேட்டை,சென்னை - 600 018
.பக் : 80 , விலை : ரூ.80.