Tamil books

Thursday 21 April 2011

வைணவப் பதிப்புகள்

சு. வேங்கடராமன்

வைணவ சமய இலக்கியங்கள், உரைகள், சமய, தத்துவ நூல்கள், அகராதிகள், வாழ்க்கை வரலாறு கூறும் குருபரம்பரை நூற்கள், கோயில் நடைமுறைகளைக் கூறும் ஒழுகு நூற்கள் என்ற பல்வேறு வகையான நூற்கள் 1856 முதல் தொடர்ந்து பதிப்பாகி வருகின்றன. பொதுவாகத் தமிழ் மரபில் பதிப்பு நூல் வரலாறு முறையாகப் பேணப்படவும் எழுதப்படவும் இல்லை. எனவே, ஓரளவிற்கு வரையறுத்த நிலையில் இன்று கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் வைணவப் பதிப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் அறிவோம்.
12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் தான் 1856 முதல் இன்று வரை பல பதிப்புகளைக் கொண்டுள்ளது. தனி மனிதர்கள், நிறுவனங்கள் ஆகிய இரண்டு நிலைகளிலும் நூற்களைப் பதிப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுள்ளது. நிறுவனங்களை விடவும் தனி மனிதர்கள் இத்துறையில் மிகுந்த பங்களிப்புச் செய்துள்ளனர். 1856இல் கூர்மாசாரியார் நாலாயிரத்தைப் பதிப்பித்து வெளியிட்டார். இதுதான் நாலாயிரத்திற்கான அச்சில் வந்த முதல் பதிப்பு. 1865இல் முடிச்சூர் அப்பாவு முதலியார் நாலாயிரத்தை வெளியிட்-டார். இந்த இரண்டு பதிப்புகளிலும் ‘நாலாயிரப் பிரபந்தம்’ என்றே பெயர் உள்ளது. பின்னர் வெளிவந்த பதிப்புகளில் தான் ‘நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வைணவத்தில் ஆழ்வார் பாசுரங்களை, ‘அருளிச் செயல்’ என்றும், ‘நாலாயிரம்’ என்றும் வழங்கும் இரு வேறு வழக்குகள் பழங்காலந்தொட்டே உள்ளன. எனவே பதிப்புகளிலும் நாலாயிரப் பிரபந்தம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், ‘சந்தமிகு தமிழ் மறை’ (கோமடம், எஸ்.எஸ். ஐயங்கார் பதிப்பு) என்ற பெயர்களில் நூலின் தலைப்பு உள்ளது. திருநாராயணபுரம் கோவிந்தராஜ ஐயங்கார் (1903), பி. கிருஷ்ணமாசாரியார் (1922) சே.கிருஷ்ணமாசாரியார் (1923), ஸ்ரீனிவாசராக-வாசாரியார் (1928), டி.சி. பார்த்தசாரதி ஐயங்கார் (1939) மர்ரே எஸ். ராஜம் (1955, 56), கரப்பங்காடு கோபாலாசாரியார் (1959), பி.ப. அண்ணங்கரா-சாரியார் (1960), மயிலை மாதவதாசர் (1962), பூதூர் கி. வேங்கடசாமி ரெட்டியார் (1973), எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் (1988), ஜகத்ரட்சகன், பி. ரத்தின நாயகர் சன்ஸ், லிஃப்கோ ஆகியோர் நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பதிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இவைகளுள் பல ஒன்றிற்கு மேற்பட்ட பதிப்புகளைக் கண்டுள்ளன. மர்ரே பதிப்பும் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் பதிப்பும், கோமடம் எஸ்.எஸ். ஐயங்கார் பதிப்பும் நாலாயிரமும் முழு நூலாகவும், ஒவ்வொரு ஆயிரமும் தனித்தனி நான்கு சிறு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இவற்றில் மயிலை மாதவதாசன் பதிப்பு, மர்ரே பதிப்பு, பூதூர் வேங்கடசாமி ரெட்டியார் பதிப்பு ஆகிய மூன்றிலும் உள்ள பதிப்பு முன்னுரைகள் பல அரிய நுட்பமான செய்தி-களைக் கொண்-டுள்ளன. பூதூரார் பதிப்பில் பாட வேறுபாடுகள் குறித்த ஆழமான ஆய்வு உள்ளது. அத்துடன் பாட்டு முதற்குறிப்பு அகராதி, அரும்பதவுரை, பாசுர விளக்கம், 108 திருப்பதிகள் விளக்கம் என்ற பல்வேறு நுட்பமான தகவல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அதேபோல, பி.ப. அண்ணங்கரா-சாரியார் பதிப்பில், பாசுரங்களில் இடம் பெற்றுள்ள தொன்மங்-களுக்கான கதைக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இவை யாவும், எந்தவிதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதியும், நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் தனி மனிதர்களால், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் நேர்மை-யாகச் செய்யப்பட்ட பதிப்புப் பணியாகும்.
வைணவத்தில் ஆழ்வார் பாடல்களைத் திருக்கோயில் கருவறைகளிலும், உற்சவரின் முன்னும், விழாக்களிலும், வீட்டுச் சடங்குகளிலும் ஓதும் மரபு இன்றளவும் உள்ளது. இப்பாடல்கள் திராவிட வேதம், தமிழ் வேதம், தமிழ் மறை என்று கொண்டாடப்படுகின்றன. வாய்மொழி-யாக ஓதும் மரபு காரணமாக, இரண்டு முறை கூறுவது, வரிசை முறை மாறாமல் கூறும் மரபு என்பவைகளுக்காகச் சில நினைவுக் குறியீடு-களைப் பயன்படுத்துகின்றனர். வாய்மொழியாக ஓதும் மரபிலுள்ள இந்தக் குறியீடுகள் பதிப்பிலும் இடம் பெற்றுள்ளன. இரண்டு முறை ஓதும் பாடல் என்பதைத் தனியாக அடையாளமிட்டுப் பதிப்பித்துள்ளனர். அதேபோல 11 பாடல் (சிலசமயம் 12 பாடல்) உள்ள பதிகம் முடிந்ததும் ‘அடிவரவு’ என்ற முறை உள்ளது. ஒவ்வொரு பாடலின் முதற் சொல்லை வரிசையாக அமைத்து, இறுதியாக அடுத்த பதிகத்தின் முதற்பாடல் முதற்சொல்லைச் சேர்த்து இந்த அடிவரவு அமையும். வாய்மொழி மரபில், மனப்பாடம் செய்து ஓதுகின்ற முறையில், நினைவிற் கொள்ளுவதற்காக, ஒவ்வொரு பாடலின் முதற்சொல்லைச் சேர்த்து இந்த அடிவரவு முறையை உருவாக்கினர். வாய்மொழி மரபிலிருந்து எழுத்து வடிவிற்கு, பனை ஓலையில் எழுதும் முறைக்கு மாறியபோது இது இடம் பெற்றது. நூலாக அச்சிடும்போதும் அப்படியே இடம் பெற்றது. வைணவத்தில், திவ்யப் பிரபந்தப் பதிப்புகளில் மட்டும் இந்த முறையைத் தமிழில் காண்கிறோம். இதற்கு நூலாக ஆனபின்னும் இன்றள-வும் வாய்மொழி மரபு _ ஓதும் மரபு _ தொடர்ந்து நிலை பெற்று இருப்பது தான் காரணம்.
ஆழ்வார் பாடல்களுக்கான உரைகள் தனித்தனியாகவும், ஒரே நூலுக்கான பல்வேறு உரைகள் ஒரே தொகுதியாகவும், தமிழாக்கமாகவும், பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன. வைணவ உரைகள் யாவும் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. இந்த உரைகள், இரு மொழிப் புலமை உடையவர்களுக்கு மட்டுமே புரியும். எனவே இந்த உரை-களைத் தமிழாக்கம் செய்து, வெளியிடும் பணி தொடர்ந்து நடைபெற்றுள்ளது.சே.கிருஷ்ண -மாசாரியார், பி.ப. அண்ணங்க-ராசாரியார்,
எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமா-சாரியார் ஆகியோரின் பதிப்புகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இவர்கள், நாலாயிரம் முழுவதற்குமான உரைகளைப் பல்வேறு நிலைகளில் வெளியிட்டு வருபவர்கள். திருவாய்-மொழிக்கு (நம்மாழ்வார் பாடியது) மட்டும் 5 உரைகள், 2 விளக்கக் குறிப்புரைகள் (அரும்பத உரை) எழுதப்பட்டுள்ளன. இவை மணிப்பிர-வாள நடையில் அமைந்தவை. முழுவதும் வடமொழியிலான இரண்டு உரைகள் உள்ளன. இவை அனைத்தையும் (5+2+2) ஒரே பதிப்பில் 10 தொகுதிகளாக வெளியிட்டுப் பெரும் பணியை இப்பெருமக்கள் செய்துள்ளனர். ஒவ்வொரு உரைக்கும் வே-றுபாடு தெரியுமாறு எழுத்துரு, அடிக்குறிப்பு, விளக்கம், முன்னுரை, பின்னிணைப்பு ஆகியவைகளுடன் இப்பதிப்புகள் வந்துள்ளன. சே. கிருஷ்ணமாசாரியார் இந்த வகையின் முன்னோடி. இவர்கள் அனைவரும் எந்தவித நிறுவனப் பின்புலமுமின்றி தனிமனிதர்-களாகப் பலருடைய பொருள் உதவியோடு இப்பதிப்புகளை வெளியிட்டுள்ளனர். இன்றள-வும் இவற்றை மீள்பதிப்பு _ மறுபதிப்பு செய்வ-தற்கு யாரும் முன் வராதது, தமிழ்ச்சூழலில் உள்ள நிலையாகும். பிழையில்லாத செம்பதிப்-பாக இவை உள்ளன.
திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து, ‘திருப்பாவை வியாக்யானங்கள்’ என்ற பெயரில் மயிலை மாதவதாசன் 1954இல் வெளியிட்டார். இன்றும் வியந்து போற்றக்கூடிய பதிப்பாக அது உள்ளது. திருவாய் மொழிக்கு எழுதப்பட்ட 5 உரைகளில் ஒன்று ‘ஈடு’ ஆகும். நம்பிள்ளை சொல்ல அவர் மாணவர் வடக்குத் திருவீதிப்-பிள்ளை எழுதிய 36,000 படி இது (படி=ஒற்-றெழுத்து நீக்கி உயிரும் உயிர்மெய்யுமாக 36 எழுத்துகளைக் குறிப்பிடும் சொல்) இந்த ஈட்டுரையைத் தமிழாக்கம் செய்து 10 தொகுதி-களாக (ஒவ்வொன்றும் சுமார் 400 பக்கங்கள் அளவில் ராயல் அளவில் இருக்கும்) சென்னைப் பல்கலைக்கழகம் அறுபதுகளில் வெளியிட்டது. பு. ரா. புருஷோத்தம நாயுடு இந்தப் பெரும் பணியைச் செய்தார். வடமொழி, தமிழ் இரு-மொழிப் புலமையுடன் எண்ணற்ற வரலாற்று (கல்வெட்டு) ஆதாரங்களுடன் அவர் இதைச் செய்தார். நீண்ட முன்னுரை, விரிவான அடிக்-குறிப்பு விளக்கம், ஏராளமான தகவல்களைக் கொண்ட பின்னிணைப்புகள் கொண்டதாக இவை உள்ளன.
வைணவ மரபு, வடமொழி அறிவு இல்லாமல் இத்தமிழாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது. இன்றைய தமிழ் வாசகனுக்கு மட்டுமல்ல. தமிழ் மட்டுமே அறிந்த தமிழ் ஆசிரியர்களுக்கும் இது புரியாது.
ஈட்டுரையில் அகப்பொருள் பாடல்களுக்கு மட்டும் (24 பதிகங்கள்) தமிழாக்கத்தை 1953இல் திருமலை_திருப்பதி தேவஸ்தானம் இரு தொகுதிகளாக வெளியிட்டது. கோ. பாலசுந்தர நாயகர் இப்பணியைச் செய்தார். மிக அருமை-யான தமிழாக்கம் இது. வடசொல் கலப்பு எதுவுமின்றி, எளிமையான தமிழில் இருப்பது இதன் சிறப்பு. சாதாரணத் தமிழ் வாசகனுக்கும் இது புரியும். மிக நுட்பமான கருத்துகளையும் எளிமையாக விளக்குவது இதன் சிறப்பு. இன்று-வரை மறுபதிப்பு வராதது பெருங்குறை. ‘ஆசாரிய ஹிருதயம்’ (நம்மாழ்வார் திருவுள்ளம்), ‘ஸ்ரீ வசன பூஷணம்’ (வசனங்களால் ஆன அணிகலன்) ஆகிய இரு நூல்களையும் அவற்றின் உரைக-ளோடு புருஷோத்தம நாயுடு தமிழாக்கம் செய்துள்ளார். ‘ஆசாரிய ஹிருதயம்’ இரு தொகுதிகளாக, சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது. ‘ஸ்ரீவசன பூஷணம்’, ஒரே நூலாக கடலூர் தி.கி. நாராயணசாமி நாயுடுவால் வெளியிடப்பட்டது. வைணவப் பதிப்புப் பணியில் நாராயணசாமி நாயுடு குறிப்பிடத்தக்கவர்.
திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி முதல் 200 பாடல்களுக்கான உரையைத் தமிழாக்-கம் செய்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எண்பதுகளில் வெளியிட்டது. முனைவர்      தெ. ஞானசுந்தரம் இதைச் செய்தார். திருமங்கை-யாழ்-வாரின் நூல்களுக்கான உரையை நல்ல தமிழில் திருத்தமான உரையாகத் தமிழாக்கம் செய்து 2006 அளவில் இரு தொகுதிகளாகத் தஞ்சாவூர் டி.என். ராமச்சந்திரன் வெளியிட்டார். பெரும்-புலவர் தி.வே. கோபாலையர் இத்-தமிழாக்கத்தைச் செய்தார். பாராட்டத்தக்க, கடும் உழைப்பை உடையவை இவ்விரு பதிப்புகளும். ‘ஆசார்ய ஹிருதயம்’ மூலம், உரை முழுவதையும் தமிழாக்கம் செய்து, இரா. இராஜசேகரன் தொண்ணூறுகளில் வெளியிட்டார். இது சாதாரண வாசகனுக்கு _ தமிழ் மொழி மட்டும் அறிந்தவனுக்கு _ இந்த நூலை விளக்கும் முயற்சியில் வெளியான பதிப்பு. அறுபதுகளில், திருமலை திருப்பதி_தேவஸ்தானம், பண்டிதை கிருஷ்ணவேணி அம்மாள் எளிய தமிழில் தமிழாக்கம் செய்த ‘செம்பொருள்’ நூலை வெளியிட்டது. இது, வைணவர்களின் தத்துவ நூலான ‘முமூட்சுப்படி’யின் தமிழாக்கம் விடுதலை பெற்று இறைவன் அருளுக்கு ஆட்பட்டு இறைவனோடு இருக்கும் உயிர் முமூட்சு ஆகும். வைணவ மரபில் உரை, தத்துவம் என்ற அனைத்துமே மணிப்பிரவாள நடையில் உள்ளன. இவைகளைத் தமிழாக்கம் செய்து அனைவருக்குமான திறந்த புத்தகமாகக் கொண்டுவரும் பணி அவ்வப்போது நிகழ்கிறது. ஆனால், மரபான வைணவர்கள் இதை ஏற்பதில்லை.
ஆழ்வார் பாடல்களுக்கான உரைகள், தொடர்ந்து பல்வேறு பெருமக்களால் வெளி-யிடப்படுகின்றன. மூலத்தை அப்படியே வெளி-யிடு-வது, மரபு மீறாத தமிழ் நடையில் வெளி-யிடுவது, முழுவதும்  தமிழாக்கஞ் செய்து வெளி-யிடுவது, ஒரே நூலுக்கான பல உரைகளையும் ஒரே பதிப்பில் வெளியிடுவது என்ற பல்வேறு நிலைகளில் இந்த உரைகள் வெளியிடப்படு-கின்றன. சே.கிருஷ்ணமாசாரியார்,பி.ப. அண்ணங்க ரா-சாரியார், எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ஆகியோரின் பணி இவ்வகையில் குறிப்பிடத்-தக்கது. எண்பது, தொண்ணூறுகளில் சென்னை ஆழ்வார்கள் அமுத நிலையம் இப்பணியைச் செய்தது. திருச்சி, வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ண-மாசாரியாரும் இதே பணியைச் செய்து வருகிறார்.
ஆழ்வார் பாசுரங்கள், உரைகள், தத்துவ நூல்கள் ஆகியன தவிர்த்த ஏனைய வைணவ இலக்கியங்கள் தொடர்ந்து பதிப்பிக்கப் பெற்று வெளிவருகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்கம், உ.வே.சா. நூலகம், திருவல்லிக்கேணி தமிழ்ச் சங்கம், ஆழ்வார் திருநகரி திருஞான முத்திரைப் பிரசுராலயம் போன்ற பதிப்பகங்களும் மேலே குறிப்பிட்டோரும் இப்பணியைச் செய்துள்ளனர். வில்லிபாரதம், அஷ்டபிரபந்தம், கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி ஆகியன மூலம் மட்டும் மர்ரே பதிப்பில் வந்துள்ளன. வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியார் உரையோடு வை.மு.கோ. பதிப்பாக இவை வந்துள்ளன. கம்பராமாயணம், வில்லி பாரதம் இரண்டிற்கும் வெளியான வை.மு.கோ. உரை பதிப்பிற்கு ஈடு இன்றுவரை இல்லை. கம்பராமாயண உரை மட்டும் அண்மை-யில் சென்னை, உமா பதிப்பகம் வெளியீடாக மறுபதிப்பு வந்துள்ளது. கம்பராமாயணம் ஆழ்வார் திருநகரி ஏட்டுப் பிரதிகளின்படி, எஸ். வையாபுரிப் பிள்ளை தலைமையிலான பதிப்பாசிரியர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவையும் உரையோடு கூடிய கம்பராமாயணப் பதிப்பை வெளியிட்டுள்ளன.
வை.மு.கோ. உரையைத் தழுவி, கோவை கம்பன் கழகம் சுருக்க உரையுடன் கம்பராமா-யணத்தை வெளியிட்டுள்ளது. சென்னை கம்பன் கழகம், கம்பராமாயணம் மூலம் மட்டும் மிக மென்மையான தாளில் வெளியிட்டது. இது பாராட்டத்தக்க பதிப்பு. அஷ்ட பிரபந்தம் மூலம் மட்டும் குறிப்புரையுடன் முழுமையாகவும் தனித்தனியாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சடகோபர் அந்தாதி தனியாகவும் திவ்யப் பிரபந்தப் பதிப்பில் சேர்த்தும் (திருவேங்கடத்தான் திருமன்றம், பூதூரார் பதிப்பு) வெளியிடப்பட்-டுள்ளது. இவை தவிர எண்ணற்ற வைணவச் சிற்றிலக்கியங்கள் பல்வேறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடக்க காலத்தில் பெரும் பணியாற்றியது. திருப்பணிமாலை இதன் குறிப்பிடத்தக்க வெளியீடாகும். ஆழ்வார் திருநகரி பெரியன் சீனிவாச ஐயங்கார், திருஞான முத்திரைப் பிரசுராலயம் வெளியீடாக இத்தகைய பல நூல்களை வெளியிட்டுள்ளார். குருகூர் பள்ளு, பராங்குச நாடகம், நம்மாழ்வார் தாலாட்டு, நம்மாழ்வார் காதல், குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம், குருமகான்மியம் போன்றவை குறிப்பிடத்தக்கன. திருச்சி எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் சோலைமலைக் குறவஞ்சியை உரையோடு வெளியிட்டார். பிறருடைய பதிப்புகளில் ஆண்டாள் சந்திரகலா மாலை, கோதை நாச்சியார் தாலாட்டு, அண்டகோள விருத்தியுரை, ஆண்டாள் திருப்புல்லாணி நொண்டி நாடகம், நூற்றெட்டுத் திருப்பதி தாலாட்டு குறிப்பிடத்தக்க பதிப்புகள். வைணவத்-தில் ஆசிரியனிடமிருந்து சீடன் உபதேசமாகக் கேட்டுக் கற்கும் முறை இன்றளவும் உள்ளது. சமய நூல்கள், தத்துவம் உரை என்ற அனைத்-தையும் இவ்வாறு பாடம் கேட்பது அதன் சிறப்பு அம்சம்.
‘ஓராண்வழிக் கல்வி’ என்று இம்மரபை வைணவம் குறிப்பிடும். இதற்கு அடிப்படையான வாய்மொழி மரபும், மனப்பாட முறையும் இன்றளவும் நடைமுறையில் உள்ளன. வைணவ உரைகளில் இடையிடையே மேற்கோள் போல, ஆசிரியர்கள் அவ்வப்போது கூறிய கதைகள், விளக்கம் என்பன இடம்பெறும். இவை யாவும் முழுவதுமாக அழகியலை அடிப்படையாகக் கொண்டவை. தனக்கு முன் வாழ்ந்த ஆசாரியர்கள், இதிகாச மாந்தர்கள் போல, தான் இறைவனுக்கோ, இறையடியாருக்கோ கைங்கர்யம் (பணி) செய்து வாழவில்லையே என்ற ஒரு பெண் அடியாரின் ஏக்கத்தை வசனங்களாகக் கூறும் நூல் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’. இந்த நூல் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. அண்மையில் ஜகத்ரட்சகன் பதிப்பாக வந்துள்ளது.
வைணவ ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வாழ்க்கை வரலாறுகளை மணிப்பிரவாள நடை-யில் கூறும் நூல் -குருபரம்பரை. இது பல்வேறு காலங்களில், பல்வேறு சான்றோர்களால் உரைநடை, கவிதை மூலம் எழுதப்பட்டுள்ளது. குருபரம்பரை பிரபாவம், உபதேச ரத்தினமாலை, குருபரம்பரை திருமுடி அடைவு என்று இவை உள்ளன.
இவை பல்வேறு பதிப்புகளாக வந்துள்ளன. வாழ்க்கை வரலாற்றைத் தொன்மைக் கதைக-ளாகக் கட்டமைத்து இந்நூல்கள் வெளிப்படுத்தி-யுள்ளன.சே.கிருஷ்ணமாசாரியார்,பி.ப. அண்ணங்க ராசாரியார், எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், பெரியன் சீனிவாச ஐயங்கார் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு பதிப்புகளாக வெளியிட்-டுள்ளனர். இவை யாவும், வைணவ மரபும் இருமொழி அறிவும் உடையவர்களுக்கே புரியும். சாதாரணத் தமிழ் வாசகனுக்குப் புரியும் படியான செம்பதிப்பு இன்னும் வெளிவரவில்லை. விரிவான ஆராய்ச்சிக் குறிப்புகளோடு குருபரம்-பரை நூற்கள் வெளிவருதல் அவசியமாகும்.
மனிதர்களுடைய வரலாறுகளைக் கூறும் குருபரம்பரை போன்று கோயில் வரலாறு கூறும் ‘ஒழுகு’ நூற்கள், வைணவம் தமிழுக்குத் தந்த மற்றொரு கொடையாகும். கோயில் விழாக்கள், கோயில் திருப்பணிகள், அரசியல், சமூக பண்பாட்டு மாற்றங்களால் கோயில் நிறுவனம் பெற்ற பாதிப்புகள், கோயில் சார்ந்த பிற விவரங்கள் என்பனவற்றைக் கூறுவது ஒழுகு நூலாகும். வைணவத்தில் கோயில் என்றாலே திருவரங்கத்தைக் குறிக்கும். திருவரங்கக் -கோயில் வரலாறு கூறும் கோயில் ஒழுகு, திருமலை கோயில் வரலாறு கூறும் ‘திருமலை ஒழுகு’ என்பன வெளிவந்துள்ளன. ‘திருமலை ஒழுகு’, திருமலை_திருப்பதி தேவஸ்தானத்தால் வெளி-யிடப்பட்டது. கோயில் ஒழுகு பல பதிப்புகளைக் கொண்டுள்ளது. எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் பதிப்பு விளக்கங்களோடு கூடிய செம்பதிப்பாகும்.
திருவரங்கம் கோயிலைப் பற்றி முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்த வரலாற்று அறிஞர் வி.என். ஹரிராவ் இதனை விரிவான விளக்-கங்கள், அடிக்குறிப்புகளோடு ஆங்கில மொழி-பெயர்ப்-பாக அறுபதுகளில் வெளியிட்டார். சென்னை-யிலுள்ள ராக்கி ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது. கடினமான உழைப்பைக் கொண்ட இந்த அரிய நூல் இப்போது கிடைக்கவில்லை. கோயில் ஒழுகு நூல் மிக விரிவான விளக்கங்கள், குறிப்புகளோடு அண்மையில் கிருஷ்ணமாசாரியாரின் முயற்சி-யால் வைஷ்ண ஸ்ரீ வெளியீடாக வந்துள்ளது.
‘திருவாய்மொழி நூற்றந்தாதி’ என்னும் நூல் மணவாளமாமுனிகளால் பாடப்பட்டது. திருவாய்மொழிக்கு விளக்கம் போல, அதன் கருத்தை, அதே சொற்களைக் கொண்டு பாடப்-பட்ட சுருக்க வடிவம். இதனைத் திருவாய்மொழி உரைகளோடு சேர்த்தும் தனியாகவும் பதிப்பித்துள்ளனர். திருவரங்கத்தமுதனார் பாடிய ‘இராமானுச நூற்றந்தாதி’ வைணவர்களுக்கு மிகவுயர்ந்த நூல். -------------------இந்த நூல் கோயில்களில் ஓதப்படுகிறது. திவ்யப் பிரபந்தப் பதிப்பில் சேர்த்தும், தனியாகவும் இது பதிப்பிக்கப்பட்-டுள்ளது. ஆழ்வார் பாசுரங்களில் இடம் பெறும் இராமாயணம் தொடர்பான அடிகளைப் பொருள் பொருத்தமுற, கதை ஓட்டம் கெடா-மல், பால காண்டம் தொடங்கி முடிசூட்டு விழா முடிய, இயல்பாகப் பாடப்பட்ட நூல் பாசுரப்படி இராமாயணம். இந்த நூல் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. தொடக்க காலத்தில் நல்ல ஓவியங்களோடு கூடிய ஒரு பதிப்பைச் சுதேசமித்திரன் வெளியிட்டது. அண்மையில், மதுரை அ.கணேசன் இதே ஓவியங்களோடு விளக்கமாக வெளியிட்டுள்ளார். திருவாய்-மொழிக்கு விளக்கமாக எழுதப்பட்ட ‘திருவாய்-மொழி வாசக மாலை’ கவிதையில் அமைந்த விளக்க நூலாகும். இதனை எழுபதுகளில் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல் நிலையம் வெளியிட்டது. மிகவும் அரிய நூலான இது மறுபதிப்பு வரவில்லை.
இன்று நமக்குள்ள கணினி, இணையதளம் போன்ற நவீன அறிவியல் கருவிகள் ஏது-மில்லாத காலத்தில் தனிமனிதர் ஒருவர் நாலாயிர திவ்யப் பிரபந்த அகராதியை அறுபதுகளில் வெளியிட்-டுள்ளார். ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி ஐயங்கார் என்ற அந்த மாமனிதர் டெம்மி அளவில் 7-00 பக்க அளவில் இந்த அகராதியை வெளியிட்டார். ஆழ்வார் பாசுரங்கள், உரைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அகராதி உருவானது. திருவரங்கக் கோயிலில் பணியாளர்-களிடையே வழங்கும் மரபுச் சொற்கள் (பரிபாஷை சொற்கள்) பொருள் அகராதியையும் இதில் இணைத்துள்ளார். கள ஆய்வின் மூலம் இச்சொற்களைத் திரட்டியுள்ள பணி பாராட்டத்-தக்கது. நாலாயிரம் முழுமைக்குமான இந்த அகராதி இன்றுவரை மறுபதிப்பு வரவில்லை. இதுதான் தமிழ் நாட்டின் நிலை. சென்னைப் பல்கலைக்கழகத்தி-லுள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூல் நிலையம் எழுபதுகளில் தி.இராமகிருஷ்ண ஐயங்கார் உருவாக்கிய ‘நாலாயிர திவ்யப் பிரபந்த அகராதி’ என்னும் சுருக்கமான அகராதியை வெளியிட்டது. தொண்ணூறுகளில் திருப்பதி மா. வரதராஜன் ‘திவ்யப் பிரபந்த அகராதி’யை வெளியிட்டார். பாசுரச் சொற்களுக்குப் பொருள் மட்டும் தருவதாக இது உள்ளது. வைணவ உரைகளில் இடம்பெறும் மேற்கோள் போன்ற மரபு வழியான ஐதீகங்கள் அனைத்தையும் தொகுத்து சென்னை வேங்கடகிருஷ்ணன் அகராதி-யன்றை வெளியிட்டார். இது இரண்டா-யிரத்தில் வெளிவந்தது. கலைக்களஞ்சியம் போன்ற விரிவான பணி இது.
வைணவத் திருக்கோயில்கள் சிலவற்றில் மட்டும் நடைபெறும் அத்யயன விழா (வேதம் ஓதும் மரபு அத்யயனம்) ஆழ்வார் பாசுரங்களை நிகழ்த்துக்கலையான அரையர் சேவை பற்றிய சிறிய விளக்கமான அறிமுக நூலைக் கடலூர் தி.கி. நாராயணசாமி நாயுடு அறுபதுகளில் வெளியிட்டார். 1987இல் இக்கலை பற்றிய விரிவான ஆய்வாக சு. வேங்கடராமனின் ‘அரையர் சேவை’ வெளிவந்தது. இதில் முதன்முத-லாக அந்த விழாவில் எடுத்துரைக்கப்படும் தம்பிரான் படி உரை ஏட்டிலிருந்து பதிப்பிக்கப்-பட்டது. அண்மையில் ஸ்ரீரங்கம் வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்ணமாசாரியார், திருவரங்கம் அத்யயனத் திருவிழா குறித்த விளக்க நூலை வெளியிட்-டுள்ளார்.
முழுமையான ஆவணப்பதிவு இல்லாத சூழலில், வைணவப் பதிப்புகள் குறித்த ஒரு சில செய்திகளை மட்டுமே இதன்வழி அறிந்தோம். முழுமையான பதிப்பு வரலாறு எழுதப்படும் போதுதான் கூடுதலான தகவல்களும் வரலாறும் முழுமையாகக் கிடைக்கும்.



No comments:

Post a Comment