Tamil books

Thursday 21 April 2011

ஓவியர்களின் படைப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு தேவை

ரமாப்பிரியா கோபாலகிருஷ்ணன்*

 சமீப காலமாக ஓவியக் கண்காட்சி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் இதர நிறுவனங்கள் புகழ் பெற்ற கலைஞர்களின் நன்மதிப்பையும், பெயரையும், புகழையும் பயன்படுத்தி ஆதாயமடைவதற்காக அவர்களால் உருவாக்கப்பட்டது என்று பொய்யாகக் கூறி அவர்களின் ஓவியங்களையும், படங்களையும் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.
பாரதியார், மகாத்மா காந்தி ஆகியோர்களின் கருத்துப்படங்களை வரைந்த  பிரசித்தி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ஓவியர் ஒருவரால் படைக்கப்பட்டது என்று சொல்லி ஒரு ஓவியத்தை ஒரு ஓவியக் கண்காட்சி நிறுவனம் தன்னுடைய இணையதளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் விற்பனைக்கு வைத்தது. புகழ் பெற்ற ஓவியரும், தன்னுடைய தந்தையின் ஓவியங்கள் பற்றி நன்கு அறிந்தவருமான அவரது மகன், தன் தந்தையின் நன்மதிப்பையும், பெயரையும், புகழையும் பயன்படுத்தி லாபமடைவதற்காக அந்த ஓவியம் தன் தந்தை வரைந்தது என்று பொய்யாகக் கூறப்படுகின்றது என்று கருதினார். அந்தக் குறிப்பிட்ட ஓவியத்தை காட்சிக்கு வைப்பதோ அல்லது விற்பனை செய்வதோ மறைந்த ஓவியரின் மரியாதைக்கும், புகழுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவரது குடும்பத்தினர் கருதினர். மறைந்த ஓவியரின் அசலான படைப்பு என்று நம்பி அந்த ஓவியத்தை வாங்கும்படி பொதுமக்களைத் தூண்டவும் செய்யும் என்றும் கருதினர்.
அந்தச் சந்தர்ப்பத்தில்,  மறைந்த ஓவியரின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தனர். அந்த ஓவிய நிறுவன உரிமையாளர் குறிப்பிட்ட அந்த ஓவியத்தை காட்சிக்கு வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் அல்லது நிர்வகிப்பதற்கும் நீதிமன்றம் உடனடியாக நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரினர்.
அந்த ஓவியத்தைக் காட்சிக்கு வைப்பதையும், விற்பனை செய்வதையும் தடை செய்து நீதிமன்றம் ஆரம்பத்தில் ஒரு இடைக்கால உத்தரவு போட்டது. வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் உள்ள ஓவியர்கள் தங்களது மரியாதையையும், புகழையும் காத்துக் கொள்ள வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு குறித்து ஆராய்வது இப்போது பயனுள்ளதாக இருக்கும்.  
இந்தியக்காப்புரிமைச் சட்டம் -_ 1957_ன் பிரிவு57_ன் கீழ் கலைஞர்களுக்கு வழங்கப் பட்டுள்ள உரிமைகள் பொதுவாக தார்மீக உரிமைகள் என்றே குறிப்பிடப்படுகின்றன. அமர்நாத் சீகலுக்கும், இந்திய ஒன்றியத்திற்கும் இடையிலான வழக்கின் முன்னுதாரணமான தீர்ப்பிலும், 2005ல் வெளியிடப்பட்ட (30) றிஜிசி253 (ஞிமீறீ)  மற்றொரு முக்கியமான தீர்ப்பிலும், ஒரு படைப்பாளியின் தார்மீக உரிமைகள் அவரது படைப்புகளின் ஆன்மா என்று டெல்லி உயர்நீதி மன்றம் கூறியது. ஒரு கலைஞர் தன்னுடைய படைப்பில் தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்ளும் உரிமை, தன்னுடைய படைப்புகளை விற்பதற்கோ அல்லது பரப்புவதற்கோ உள்ள உரிமை, படைப்பை சீரிய நிலையில் பாதுகாக்கும் உரிமை ஆகியவை அடங்கியதாகும் தார்மீக உரிமைகள். சீரிய நிலையில் பாதுகாப்பது என்பதன் பொருள் என்னவெனில், தன்னுடைய புகழுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தன்னுடைய படைப்பு கையாளப்படுவதையோ அல்லது தன்னுடைய படைப்பை எவ்விதமாகவேனும் தரம் தாழ்த்தப் படுவதையோ படைப்பாளி ஆட்சேபிப்பதற்கான உரிமையாகும்.
ஒரு படைப்பாளிக்கும் அவரது படைப்புக்கும் இடையில் தனிச்சிறப்பான உறவை உண்டாக்கும் வகையில் படைப்பாற்றலும், பிறரால் அதிகம் அறியப்படாத அசலான மேதமையும் தரித்துள்ளவர் ஒரு படைப்பாளி என்கின்ற உண்மையிலிருந்து இந்த உரிமைகள் தோன்றுகின்றன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனினும், ஒரு படைப்புக்கு உரியவர் என்று வேறு படைப்பாளியை பொய்யாகக் குறிப்பிடும் பிரச்சனைகளுக்கு காப்புரிமைச் சட்டம் திட்டவட்டமான எந்த நிவாரணமும் அளிக்கவில்லை.
அத்தகைய வழக்குகளில், ஒரு படைப்பாளியின் பெயரை அவருக்குச் சம்பந்தமில்லாத படைப்பை அவர் உருவாக்கியதாக அநியாயமாக அல்லது மோசடித்தனமாக அவரது பெயர் பயன்படுத்தப்பட்டால் அதன் அடிப்படையில் சட்டப்பூர்வமான நிவாரணம் கேட்பதற்கு சட்டத்தில் வழி இருக்கின்றது. ஒருவரின் படைப்பை மற்றவருக்குச் சொந்தமாக ஆக்கும் அநியாத்திற்கும் சட்டப்பூர்வமான நிவாரணம் கேட்க முடியும்.
தாங்கள் உருவாக்காத எந்தவொரு படைப் பிற்கும் தங்களது பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் உரிமையை அமெரிக்காவின் 1990ம் ஆண்டு ஓவியக்  கலைஞர்களின் உரிமைச் சட்டம் (க்ஷிவீsuணீறீ ணீக்ஷீtவீsts க்ஷீவீரீலீts ணீநீt) ஓவியக் கலைஞர் களுக்கு என்று பிரத்தியேகமாக வழங்குகின்றது. அந்தச் சட்டம், தாங்கள் உருவாக்காத ஒரு ஓவியத்திற்கோ அல்லது வரைபடத்திற்கோ சொந்தக்காரர்கள் என்று தங்களது பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து கலைஞர்களுக்கு பாதுகாப்பு பரிகாரமும் அளிக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திலும் கலைஞர்களுக்கு அது போன்ற சட்ட உரிமைகள் இருக்கின்றன. இங்கிலாந்தின் 1988ஆம் ஆண்டு 'பதிப்புரிமை, வடிவமைப்பு மற்றும் காப்புரிமைச் சட்டத்தில்' ஒரு படைப்பு ஒருவருக்குச் சொந்தமென பொய்யாக கூறுவதைத் தடுக்கும் பிரிவுகள் உள்ளன. அந்தச் சட்டத்தின்படி, ஒரு கலைப் படைப்பை உருவாக்கிய கலைஞர் என்று பொய்யாக தன்னுடைய பெயர் குறிப்பிடப் படாமல் இருப்பதற்கான உரிமை ஒவ்வொரு கலைஞருக்கும் உண்டு. ஒரு கலைப்படைப்பை அல்லது ஒரு கலைப்படைப்பின் பிரதியை ஏதோ ஒரு கலைஞருடையது என்று பொய்யாகக் குறிப்பிட்டு காட்சிக்கு வைப்பவர் அந்த உரிமையை மீறியவராவார். படைத்தவர் என்று பொய்யாக ஒரு கலைஞரின் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கின்றது என்பது தெரிந்தோ அல்லது அப்படிக் கருதுவதற்குக் காரணங்கள் இருக்கும்போதோ, ஒருவர் அந்தப் படைப்பை விற்பனை செய்யதாலோ அல்லது தன்னிடம் வைத்திருந்தாலோ அப்படி வைத்திருக்கும் நபர் அந்த உரிமையை மீறியவராவார். பொய்யாக தங்களது பெயர்கள் குறிப்பிடப்படுவதிலிருந்து அந்தச் சட்டம் கலைஞர்களுக்கு நிவாரணங்கள் அளிக்கின்றது.
இந்தியாவிலும் ஓவியக் கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அத்தகைய சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. பிரத்தியேகமான சட்ட விதிகள் இருப்பதே ஒரு கலைஞர் உருவாக்காத ஒரு படைப்புக்கு அவரது பெயர் பயன்படுத்தப் படுவதற்குத் தடையாக இருக்கும். பொய்யாக ஒரு கலைஞரின் பெயரை குறிப்பிடுவது தொடர்பான பிரத்தியேகச் சட்ட விதிகள் இந்த உரிமை மீறப்படும்போது கலைஞர்களுக்கு சுலபமான சட்ட நிவாரணங்களையும் அளிக்கும்.
எனவே, ஓவியக் கலைஞர்களின் நலனுக்காகவும், பொது மக்களின் நலனுக்காகவும் அத்தகைய சட்டங்கள் இந்தியாவில் கூடிய விரைவில் இயற்றப்பட வேண்டும்.
ஸீ

* சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் இவர், பெங்களூரில் உள்ள இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப்பள்ளியிலும் பின்னர் லி.லி.வி என்னும் சட்ட மேற்படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்.

No comments:

Post a Comment