Tamil books

Wednesday 20 April 2011

சங்க இலக்கிய வாசிப்பு

 அ.சதீஷ்

தமிழின் தொடக்ககால இலக்கிய ஆக்கங்களாக
நமக்குக் கிடைப்பன பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்
ஆன பதினெட்டு நூல்களுமேயாகும். இவ்விலக்கிய
ஆக்கங்கள்தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுப்
பின்னர் வெவ்வேறு முறையியலில் தொகுக்கப்பட்டன.
தமிழின் அசலான இலக்கிய ஆக்கங்களாகக் கருதப்படும்
இப்பாடல்கள்நாட்டார் நிகழ்கலை மரபிலிருந்தும், பாணர்
மரபிலிருந்தும் கல்வி கேள்விகளில் சிறந்த புலவர்
மரபிலிருந்தும் உருவாகி வளர்ந்தவை. இப்பாடல்கள்
அனைத்தும் கி.மு.250_இல் இருந்து கி.பி.250_ வரையிலான
காலகட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
பாடப்பட்டவையாகும். இக்கால கட்டத்தில் தமிழகத்தில்
இனக்குழுச் சமூகத்திலிருந்து வேளாண்மைச் சமூகத்திற்கும்
அதிலிருந்து வணிக மேலாண்மைச் சமூகத்திற்குமாக பல
படிநிலைகளில் தமிழ்ச்சமூகம் வளர்ந்து வந்தாலும் இது
ஒரே தன்மையிலான படிநிலை வளர்ச்சியில்லை. மாறாக
இனக்குழுச் சமூகங்கள்இருந்திருக்கின்றன.
இந்தப் பல்வேறு சமூகங்களின் வளர்ச்சி நிலைகள்
அதன் மாறுபட்ட தன்மைகள்ஆகியன இவ்விலக்கியத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சிற்சில
பகுதிகளை அரசாண்ட குறுநில மன்னர்கள்,
பெருநிலப்பரப்பை ஆட்சி செய்த பேரரசர்கள்வரையான
ஆள்வோரின் ஆட்சிமுறைகள், போர்முறை, கொடை,
வெற்றி, தோல்வி ஆகியனவும் அது சார்ந்த அறிவியல்
பார்வைகளும் இவ்விலக்கிய ஆக்கங்கள்பதிவு
செய்துள்ளன.
உளம் சார்ந்த காதல் வாழ்வை நிலம் சார்ந்த
பின்னணியில் வைத்து ஆழங்காண முடியாத மனித
மனங்களின் தன்மையை நுட்பமாக விளக்கிச் செல்லும்
இதன் எடுத்துரைப்பியல் தன்மை தமிழின் தலை சிறந்த
இலக்கியங்களாக ஆக்கி விடுகிறது.
கிரேக்கச் செவ்வியல் இலக்கியங்களுக்கும், சமஸ்கிருதச்
செவ்வியல் இலக்கியங்களுக்கும் இணையான பாரம்பரிய
மரபு கொண்டிருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டதும்
தனித்துவமானதான தன்மைகள்சங்க இலக்கியத்தில்
காணப்படுகின்றன. குறிப்பாக இந்தியா முழுவதும்
பரவியிருந்த அறிவுச் சொல்லாடலான அறம் பொருள்
இன்பம் வீடு என்பனவற்றின் அடிப்படையிலேயே
நூலியற்ற தமிழ் மரபு அதற்கு மாற்றாக அகம், புறம்
என்ற தன்மையில் வைத்து இயற்றியது. அகம், புறம் என்பது
கறாராகப் பிரிக்கப்பட்ட வரைகோடுகள்அல்ல. எதைப்
புறமாகக் கருதுகிறோமோ அதற்கு அகத்திலுள்ளது அகம்
. ஆனால் புறமே இன்னொன்றின் அகமாகும் வாய்ப்பு
அதிலுண்டு. எனவேதான் சங்கப்பாடல்கள்சில அக
இலக்கண அடிப்படைகளைப் பயன்படுத்தி புறம்பாடவும்
புற இலக்கான அடிப்படைகளைப் பயன்படுத்தி அகம்
பாடவும் முனைந்துள்ளன.
தமிழின் ஆதி இலக்கியங்களான சங்க
இலக்கியங்களைச் ‘சான்றோர் செய்யுள்கள்’ என்று
இடைக்காலப் புலமையாளர்கள்மதிப்பிட்டுப் போற்றிக்
கொண்டனர். உதிரி உதிரியாகக் கிடந்த இப்பாடல்கள்
கி.பி.8ஆம் நூற்றாண்டுக்கு முன்பே தொகுக்கப்பட்டன.
சங்க இலக்கியத்தின் நிறுவனப்படுத்தப்பட்ட வாசிப்பு
என்பது இத்தொகுப்பினூடாகவே தொடங்குகின்றது.
சங்கப் பாடல்கள்தொகுப்பு என்பது முழுமையானது
என்று கூறி விடமுடியாது. தொகுக்கும் பொழுது
ஏராளமான பாடல்கள்விடுபட்டிருக்க வாய்ப்புண்டு.
தொகுப்பாளன் பாடல்களைத் தேர்ந்தெடுக்கும்போதே
வாசிப்பு தொடங்கி விடுகிறது. தான் சார்ந்த கருத்தியலுக்குத்
தக தொகுப்பாளன் பாடல்களைத் தேர்ந்தெடுக்க நேர்கிறது.
இப்பாடல்கள்தொகுப்பட்ட பொழுதும் கூட ஒரே
முறையில் பின்பற்றப்படவில்லை. ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு முறையியலில் தொகுக்கப்பட்டுள்ளது.
கலித்தொகை தவிர்த்த பிற அகநூல்களில் கைக்கிளை
மற்றும் பெருந்திணைப் பாடல்கள்தொகுக்கப்படவில்லை.
அவைகள்புறநானூற்றில் சேர்த்துள்ளனர். இதற்கு
அடிப்படை காரணம் வளர்ந்து வந்த புதிய இலக்கண
மரபுகள்குறித்த கருத்தியல் தெளிவு தொகுப்பாளனுக்கு
இருந்தமையே. சமகாலத்தில் அறிவு
நிலைச்சொல்லாடல்களுக்குத் தகவே தொகுப்பாளனின்
வாசிப்பு அமைகிறது. தொகுக்கப்பட்ட பாடலின் அடியில்
கருதலளவையின் பாற்பட்டு சூழல் விளக்கத்தினை
உருவாக்கித் தருகின்றனர். இச்சூழல்விளக்கம் பாடலின்
மேலான பொருள்தேடல் சாத்தியங்களுக்கும் பாடலின்
உள்நுழைவதற்கும் ஒரு பெரிய சிறப்பினை உருவாக்கித்
தருகிறது. இன்று வரையிலான சங்க இலக்கிய வாசிப்பு
என்பது தொகுப்பாசிரியனின் கருத்தியல் சட்டகத்தின்
வழியாகத்தான் சாத்தியமாகிறது. சில பாடல்களின்
அடியிலிருக்கும் சூழல் விளக்கத்தினை நீக்கி விட்டால்
வாசகனுக்குப் பிரதிபலிக்கும் எந்தவிதமான ஊடாட்டமும்
நிகழாமல் போகும் வாய்ப்பு உண்டு.
ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்விளக்கம்
பாடல்களுக்குச் சாத்தியம் என்பதை தொகுப்பாசிரியர்கள்
உணர்ந்திருந்தனர் என்பது அவர்கள்சில பாடல்களுக்கு
இரண்டு சூழல் விளக்கம் தருவதன் மூலம் அறிய முடிகிறது.
ஆக தொகுப்பாசிரியரின் வாசிப்பு என்பது பிரதியைக்
கட்டுப்படுத்தும் வாசிப்பு அல்ல, மாறாக கவிதைத்
தொடர்பியலில் வாசகனுக்கு உதவக்கூடிய நுட்பமான
செயல்பாடாக அமைகிறது.
தொகுப்பாசிரியருக்கு அடுத்த நிலையில் சங்க இலக்கிய
வாசிப்பு என்பது உரையாசிரியர்களால் விரிவான தளத்தில்
முன்னெடுக்கப்பட்டது. கி.பி. 12ஆம் நூற்றாண்டுத்
தொடங்கி கி.பி 16ஆம் நூற்றாண்டு வரையான கால
கட்டத்தில் குறுந்தொகை மற்றும் நற்றிணை தவிர
அனைத்து சங்க இலக்கியங்களுக்கும் உரைகள்
கிடைக்கின்றன. இவ்வுரைகளை எழுதிய உரையாசிரியர்கள்
தாம் சார்ந்த சமய நிறுவனங்களுக்குத் தகவும் கல்வி
நிறுவனங்களுக்குத் தகவும் தம் காலத்திய அறிவு
நிலையிலிருந்து மீள எழுதுகின்றனர். இம்மீள எழுதுதல்
மூலம் சங்க இலக்கியப் பிரதியாக மாற்றுச்செயலில்
உரையாசிரியர்கள்முயன்றனர். எல்லா
உரையாசிரியர்களுமே அவ்வாறு செய்யவில்லை என்றாலும்
கூட பரிமேலழகர் மற்றும் நச்சினார்க்கினியர் முதலியோர்
பரிபாடலுக்கு உரையெழுதிய பரிமேலழகர் தம் காலத்தில்
உச்சத்திலிருந்த வைதிகக் கருத்தாடலுக்கு
வரலாற்றுத்தரவாகப் பரிபாடலைப் பயன்படுத்துகின்றார்.
சங்க இலக்கியப் பிரதியை மையமிட்டு உரையாசிரியர்கள்
நிகழ்த்திய கருத்தியல் சொல்லாடல் நம் காலத்திய சங்க
இலக்கிய வாசிப்புக்குப் பெரிதும் பயன்படத்தக்கன.
குறிப்பாகக் காலங்கடந்து நிற்கும் இலக்கியப் பிரதிகளில்
காலத்தை வெகுவாகக் குறைப்பார்கள்உரையாசிரியர்கள்.
உரையாசிரியர்களுக்கு அடுத்த காலகட்டத்தில் தமிழ்ச்
சமூகத்தின் கூட்டுநினைவில் சங்க இலக்கியம் என்பது
மறக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் ஒரு சிலர்தான்
சங்க இலக்கியத்தை வாசித்திருந்தனர். ‘சங்க இலக்கியக்
குழுவிற்கு ஒரு செவிலி’ என சிவப்பிரகாசர் இக்காலத்தில்
பாராட்டப்பட்டார். இதற்குக் காரணம் அருகியிருந்த சங்க
இலக்கிய வாசிப்பேயாகும். இச்சுயமறதியிலிருந்து சங்க
இலக்கியப் பிரதியை மீட்டு வாசித்தவர்கள்
பதிப்பாசிரியர்கள். 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலம்
தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக்காலக்கட்டம்
வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு கிடந்த
இவ்விலக்கிய ஆக்கங்கள்முறையாகப் பதிப்பிக்கப்பட்டன.
இப்பதிவின் மூலம் சங்க இலக்கிய வாசிப்பு என்பது
புதிய பரிமாணம் அடைந்தது. குறிப்பாகப் பதிப்பாசிரியர்கள்
பாடவியல் நோக்கில் வாசித்தனர். அகராதியியலாளர்
அகராதியியல் நோக்கில் வாசித்தனர்.
கல்வி நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்இலக்கிய நயம்
காμம் தன்மையிலேயும், பொருண்மையின் நோக்கிலும்
வாசித்தனர். இவ்விலக்கிய ஆக்கங்கள்
மீட்டெடுக்கப்பட்டதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தின்
வரலாறு புதிய நோக்கில் அμகப்பட்டது. குறிப்பாக
திராவிட இயக்கத்தின் வளர்ச்சி நிலையைத் தீர்மானித்ததில்
இவ்விலக்கியத்தின் செல்வாக்கு அதிகம். சங்க காலத்
தமிழனின் வீரம், கொடை, தன்மானம் ஆகியவற்றை
சமகால வரலாற்றுத் தேவைக்குப் பயன்படுத்தின திராவிடக்
கட்சிகள். வீரம், கொடை, பெருமை, காதல், கற்பு
ஆகியவற்றைத் திராவிடக் கட்சிகள்முதன்மைப்படுத்த
அதற்கு எதிரான வறுமை, நோய், பசி ஆகியவையும்
அதிலுள்ளன என மார்க்சிய ஆய்வுகள்வெளிச்சம்
போட்டுக் காட்டின. இவ்விரு வாசிப்பையும் இணைத்து
நோக்கி ஒரு புதிய வாசிப்பினைத் தொடங்க முடியும்.
தமிழில் உருவான சிற்றிதழ்கள்சங்க இலக்கியம் குறித்து
ஒரு தீவிரமான வாசிப்பை நிகழ்த்தவில்லை என்றே
தோன்றுகிறது. அவ்விதழ்களில் வெளியான ஒன்றிரண்டு
கட்டுரைகளும், கல்விநிறுவனங்களில் சிரத்தையாக
இயங்குபவர்களாலேயே எழுதப்பட்டுள்ளது. சங்க
இலக்கியம் குறித்து ஆக்கப்பூர்வமான ஆய்வை
நிகழ்த்தியவர்கள்(இதுவரை) இடதுசாரிப் பின்புலத்தில்
வளர்ந்த கல்விப்புல பேராசிரியர்களே என்பதை யாரும்
மறுக்கவியலாது.
சங்க இலக்கிய வாசிப்பு என்பது இன்று விரிவான
தளத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள்
அதிகம். குறிப்பாகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்
சான்றுகளின் மூலமும் சமகாலத்திய அறிவு
நிலையிலிருந்தும் பன்முக வாசிப்பை நிகழ்த்த வேண்டிய
தேவை இன்று அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment