Tamil books

Thursday, 21 April 2011

தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம்

தமிழில்: ரபெசா


அச்சிடும்முறை சீனாவில் 11வது நூற்றாண்-டில் பிறந்தது. ஆனால் இது, போர்த்துக்-கீசியர்கள் மூலமாக தென்னிந்தியாவை 16வது நூற்றாண்-டில்தான் அடைந்தது. இந்தியர்கள், பல்வேறு காரணங்களால் மிகக் காலங் கடந்து அச்சு-முறையை கவனத்தில் கொண்டார்கள். இந்த ஆய்வுக் கட்டுரையில் எனது நோக்கம் என்ன-வெனில் தமிழ்நாட்டில் தமிழ்பேசும் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினரால் 19வது நூற்றாண்-டிலும் அதன் பின்னரும் அச்சுமுறை கையாளப்-பட்டதையும் தமிழில் இஸ்லாமிய நூல்களின் வெளியீட்டையும் ஆராய்ந்து அறிவதுதான். இந்த ஆய்வின் போக்கில், நான் தமிழ் முஸ்லீம்-களுடைய புத்தகவெளியீடுகளின் இயல்பு, அளவு, அவற்றின் சிறப்புத் தன்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவேன். ஆனால், இந்த அம்சங்-களுக்குள் போவதற்கு முன்பு தமிழ்நாட்டு தமிழ் முஸ்லீம்களின் வரலாற்றுப் பின்னணி, அதன் பரிணாமம், அவர்களுடைய ஆரம்பகால இலக்கியம் ஆகியவை குறித்து சுருக்கமாகப் புரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
வரலாற்றுப் பின்னணி
இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளுடன் அரேபியர்கள் வாணிபம் செய்து கொண்டிருந்-தனர்; அவர்கள், இஸ்லாம் மயமாக்கப்படுவதற்கு முன்னரே இந்த வியாபாரம் நடைபெற்றது. அவர்கள் 7வது நூற்றாண்டில் இஸ்லாம் மயமாக்-கப்பட்ட பின்னரும் இந்த வியாபாரம் தொடர்ந்-தது. தமிழ்நாட்டில் 13வது நூற்றாண்டில் முஸ்லிம் சமூகம் இருப்பதைக் கவனித்த முதல் வெளிநாட்டுப் பயணி மார்கோபோலோ தான். பின்னர் அமிர்குஸ்ரு என்பவர் 14வது நூற்றாண்-டின் தொடக்கப் பத்தாண்டுகளில் தமிழ் முஸ்லிம்கள் மதுரை பாண்டிய மன்னர் ராணுவத்-தில் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த முஸ்லீம்கள் தான் ‘ராவுத்தர்கள்’ என்று அழைக்-கப்பட்டார்கள் என்று தெரிகிறது. ராவுத்தர்கள் என்பது அந்தக் காலத்தில் தென்னிந்திய குதிரைப்பராமரிப்பாளர்கள் என்ற பொறுப்பை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் பாண்டியர்களை தோற்கடித்த பிறகு மதுரையில் துருக்கி சுல்தான் ஆட்சி ஒன்று நிறுவப்பட்ட-போது தமிழ் முஸ்லிம் உள்பட முஸ்லிம்கள் அனைவரும் துலுக்கர்கள் என்று குறிப்பிடப்-பட்டனர். இந்தப் பெயர் துருக்கி என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். ஆனால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் துலுக்கர்கள் அல்ல. ஆனால் இப்போதும் கூட அவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களால் துலுக்கர்கள் என்று அழைக்-கப்படுகின்றனர். இதே காலத்தில் சோனகன் என்ற மற்றொரு வார்த்தை புழக்கத்தில் இருந்தது; இந்த வார்த்தை அரேபியர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்-தப்பட்டது. இது ஆச்சர்யம் அளிக்கக்கூடியதல்ல. ஏனெனில் ‘சோனகம்’ என்ற வார்த்தை முஸ்லிம்கள் அரேபியாவில் வசித்து வந்த இடத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை-யாகும்.1
16வது நூற்றாண்டின் காலப்-போக்கில் மேலும் இரண்டு பெயர்கள் இருந்தன; அவை நடைமுறையில் தமிழ்பேசும் முஸ்லிம்களைக் குறிப்பிடுவதற்-காக பயன்படுத்தப்பட்டவை-யாகும். அவற்றில் ஒன்று ‘மரைக்-காயர்’. இவர்கள், மரக்கார்கள் என்று மலபார் கடற்கரை பிரதேசத்தில் அழைக்கப்பட்டவர்கள்; இவர்கள் அங்கிருந்து வந்தவர்கள் என்று சமீபத்தில் நான் எழுதிய புத்தகம் ஒன்றில் ஏற்கத்தக்க விளக்கங்-களுடன் எழுதியுள்ளேன். மரக்காயர்கள், பொதுவாக வளமிக்க வர்த்தகர்கள் ஆவர். அவர்கள், மலபாரில் உள்ள மரக்கார்கள் போன்று ஷபி(ஷிuயீவீ)ப் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு மற்றொரு பெயரும் இருந்-தது; இந்தப் பெயர் தமிழ் நாட்டில் வசிக்கும் மற்றொரு முஸ்லிம் பிரிவினரைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாகும். அவர்கள் ‘லெப்பைகள்’ என அழைக்கப்பட்டவர்கள் ஆவர்; இவர்கள் மரக்காயர்களை விட குறைந்த வசதி படைத்தவர்கள். ராவுத்தர்களைப் போல லெப்பைகளும் ஹனாஃபி (பிணீஸீணீயீவீ) பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும் பகுதி-யினர், அந்தந்தப் பகுதியில் மதம் மாறியவர்கள் அல்லது இவர்களுடைய சந்ததியினர் ஆவர் என்பதில் சந்தேகம் இல்லை என்ற போதிலும் இவர்களுடைய ரத்தத்தில் அரபு ரத்தக் கலப்பு கொஞ்சம் இருக்கக்கூடும்.2
வட இந்திய மற்றும் தக்காணப் பிரதேச முஸ்லிம்களையும் தமிழ்நாட்டில் உருது பேசும் முஸ்லிம்களையும் போலல்லாமல் ராவுத்தர்கள், லெப்பைகள், மரக்காயர்கள் ஆகிய தமிழ் பேசும் முஸ்லிம்களின் துணைப் பிரிவுகளுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும் அவை, ஏறக்குறையை சம அந்தஸ்து உள்ளவை-கள்தாம். தமிழ் முஸ்லிம் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான அப்துல்ரஹிம் இது குறித்து எழுதுகையில், மரக்காயர்கள், ராவுத்தர்கள் என்பது போன்ற பெயர்கள், ஜாதிகளின் பெயர்களோ அல்லது குழுக்களின் பெயர்களோ அல்ல என்று கூறியுள்ளார். மேலும் அவர் இந்தத் துணைப் பிரிவுகள் ஒன்று மற்றொன்றுடன் இணைவதால் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுவது மிகவும் சிரமமான-தாகும் என்றும் உறுதிபட எழுதினார்.3
தமிழ் முஸ்லிம்கள், 13வது நூற்றாண்டு வாக்கில் ஒரு வித்தியாசமான சமூகமாக வாழத் துவங்கினர் என்பது வரலாற்று உண்மை எனினும் இந்தக் காலக்கட்டத்திலும் சரி பிற்காலத்திலும் சரி அவர்க-ளால் உருவாக்கப்பட்ட இலக்கியம் எதுவும் இல்லை. ஆனால் 16வது நூற்றாண்டுக்கு முன்பு அவர்கள் இயற்றிய இலக்கியங்கள் அனைத்தையும் போர்த்துக்கீசி-யர்கள் அழித்துவிட்டதாக சில தமிழ் முஸ்லிம் ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் அவர்களுடைய இந்தக் கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் அவர்கள் அளிப்பதில்லை.
16வது நூற்றாண்டின் இறுதியில்தான் அவர்களிடமிருந்து ஒரு உண்மையான இலக்கிய நூல் வந்தது. அதன் தலைப்பு, ஆயிரம் மசாலா-வென்று வழங்கும் அதிசயப்புராணம் என்பதாகும். இந்நூலை இயற்றியவர் செய்கு இஸாகு என்பவராவார். இவர் வண்ணக் களஞ்சிய புலவர் என்றும் அறியப்பட்டவர். ஆனால் எழுத்து நடை என்ற அர்த்தம் கொண்ட ‘மசாலா’ என்பது உண்மையில் ஒரு அரேபிய இலக்கியப் பாணியாகும். இரண்டாவது வெளிவந்த தமிழ் முஸ்லிம் நூல், 159-0இல் வெளிவந்ததாகத் தெரிகிறது. இதனை எழுதியவர் ஆலிப்புலவர். இவர் ஷேக் அபுபக்கரின் மகனாவார். இந்த நூல் தமிழ் மாலை எழுத்துப் பாணியில் எழுதப்பட்டதாகும்.
17வது நூற்றாண்டிற்குரிய முக்கியமான தமிழ் முஸ்லிம் நூல்கள் சில உள்ளன. அவை, திருநெறிகீதம், கனகாபிஷேகமாலை, திருமணக் காட்சி, சேகூன் படைப்போர் ஆகியவையாகும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது 18ஆம் நூற்றாண்டிலோ பிற நூல்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். இவை யாகோபு சித்தர் பாடல், முத்துமொழி மாலை, திருமெக்-காப்பள்ளு ஆகியவை ஆகும். இவற்றில் முதல் நூல், ஒரு பிரபலமான சித்தவைத்திய நூலாகும். இந்த நூல், இஸ்லாம் மதத்திற்கு மாறிய யாகோபு சித்தர் என்பவரால் எழுதப்பட்டதாகும்.
19வது நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து ஆண்டு காலத்தின்போது தமிழ் முஸ்லிம்கள் விரிவான இலக்கிய நடவடிக்கைகளை மேற்-கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், சீறாப்புராணம், ராஜநாயகம், குத்பு நாயகம், தீன் விளக்கம், திருகரணா புராணம், முஹைதீன் புராணம், திருமணிமாலை, இரவுக்குள் படைப்போர், புதுக்குஷம் ஆகியனவாகும். உமறுப்புலவரால் எழுதப்பட்ட சீறாப்புராணம், இன்று கூட தமிழ் முஸ்லிம் இலக்கியத்தில் ஒரு மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது. இதே காலத்தில், இதை விட குறைந்த தரமுள்ள வேதபுராணம், பொன்னரிய மாலை, யூசுப்பு நபி காவியம், முஹைதீன் பிள்ளைத்தமிழ் போன்ற பல நூல்கள் உருவாக்கப்பட்டன.
மொத்தத்தில் மேலே குறிப்பிடப்பட்ட பிரதான மற்றும் முக்கியமான நூல்களும் அதே போல குறைந்த தரமுள்ள நூல்களும் இஸ்லாமிய கோட்பாடுகள், கொள்கைகள், இஸ்லாமிய தீர்க்கதரிசிகள், துறவிகள், முஸ்லிம் அல்லாதவர்-களுக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய யுத்தங்கள், இஸ்லாமிய ஆத்மவாதம் (னீஹ்stவீநீவீsனீ) ஆகியவைபற்றி எழுதப்பட்டவையாகும். இந்த நூல்களில் பெரும்பாலானவற்றில் அரேபிய வார்த்தைகள் விரிவான அளவில் பயன்படுத்தப்-பட்-டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் காரணிகள்தான் தமிழ் முஸ்லிம் இலக்கியங்-களை ஏனைய தமிழ் இலக்கிய நூல்களிட-மிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு காரண-மாயின.
எனினும், 16வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டின் முதல் 30 ஆண்டுகள் வரையிலும் தமிழ் முஸ்லிம்களால் எழுதப்பட்ட நூல்களின் எண்ணிக்கை முஸ்லிம் அல்லாதவர்களின் இலக்கியங்களோடு அதுவும் இந்துமத இலக்கியங்-களுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு அதிக-மில்லை. ஏனெனில் இந்து இலக்கியங்கள் கடந்த 2000 ஆண்டுகளாக ஏராளமாக எழுதப்பட்டு வந்துள்ளன. இந்தக் காலத்தில் (16வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டின் முதல் 30 ஆண்டு காலத்தில்) ஒரு போதும் தமிழ் முஸ்லிம் இலக்கியம் அச்சிடப்பட்டதில்லை. ஆனால் 1835இல் அச்சகக் கட்டுப்பாடுகளை, கவர்னர் ஜெனரல் சார்லஸ் மெட்கால்ஃப் தளர்த்-தியபோது, தமிழ் முஸ்லிம் இலக்கியத்துறையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான நிலைமைகள் ஏற்பட்டன. தற்போது இதுகுறித்து காண்போம்.
தமிழ் முஸ்லிம் நூல்கள் 1835 - 1865
அச்சிடும் முறை தமிழ்நாட்டிற்குள் 16வது நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்-படுத்தப்பட்டது; இதன் தொடர்ச்சியாக 18வது நூற்றாண்டு காலத்தில் டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோ-ரால் கொண்டு வரப்பட்டது. எனினும், 1835ஆம் ஆண்டு வரையிலும் அச்சிடுதலும் அச்சகங்களும் கிறிஸ்துவமதப் பிரச்சாரகர்கள், காலனியாதிக்க-வாதிகள் அல்லது காலனியாதிக்க அரசு ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன; அந்த ஆண்டில்தான் அச்சுக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் சார்லஸ் மெட்காஃப் முடிவு செய்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1837இல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் அரசவை மொழி என்ற அந்தஸ்திலிருந்து பாரசீக மொழி நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு ஆங்கிலமும் ஏனைய பிராந்திய மொழிகளான தமிழ், உருது போன்ற மொழிகளும் கொண்டு வரப்பட்டன. இந்தக் காரணிகள், இந்தியர்கள் தங்களுடைய இலக்கியங்களை, ஓலைச்சுவடி வடிவத்திலிருந்து அச்சு முறைக்கு கொண்டு செல்வதைத் துரிதப்-படுத்துவதில் நேரடியாகப் பங்களித்தன. எந்த-வொரு தமிழ் முஸ்லிம் நூலாசிரியரும் தன்-னுடைய நூலை கிறிஸ்துவ மற்றும் காலனியாட்-சியின் அச்சகங்களின் உதவியுடன் அச்சிடுவதற்கு முயற்சித்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் 1835க்குப் பிறகுதான் பல்வேறு மதங்களையும் ஜாதிகளையும் சேர்ந்தவர்கள் அச்சுத் தொழிலை மேற்கொண்டனர்; அச்சக உரிமையாளர்களாக-வும் பதிப்பாளர்களாகவும் ஆயினர். 1850ஆம் ஆண்டு வாக்கில் சென்னையில் இந்துக்களுக்கு சொந்தமான அச்சகங்கள் குறைந்தபட்சம் பதினான்காவது நிறுவப்பட்டு இருந்தன. 1835ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் முஸ்லிம்களுக்கு அச்சகங்கள் எதுவும் சொந்த-மாக இருக்கவில்லை. சென்னையில் இந்துக்-களுக்குச்  சொந்தமான அச்சகங்கள் இருந்தன4. ஆரம்பத்தில் தமிழ் முஸ்லிம்கள் எந்தவொரு அச்சகத்தையும் சொந்தமாக நடத்துவதற்கு முன்-வரவில்லை. ஆகவே, அவர்கள் தங்களுடைய நூல்களை அச்சிடுவதற்கு இந்துக்களுக்கு சொந்-தமான அச்சகங்களுக்குச் செல்ல வேண்டிய-தாயிற்று. அவர்கள், தமிழ்நாட்டில் அவர்க-ளுடைய மதத்தைச் சேர்ந்த, ஆனால், உருது மொழி பேசக் கூடியவர்களின் அச்சகங்களுக்குச் செல்லக்கூடிய நிலைமையில் இல்லை; ஏனென்றால் அந்த அச்சகங்களில், தமிழ் அச்சுமுறைகள் பயன்-படுத்தப்படவில்லை. தமிழ் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான அச்சகங்கள், கிறிஸ்துவமதத்துடன் கொண்டிருந்த தொடர்-புகள், இஸ்லாம் குறித்து வரலாற்று ரீதியாக குற்றம் காண்கிற அவற்றின் போக்கு ஆகியவை காரணமாக தமிழ் முஸ்லிம்கள் அந்த அச்சகங்-களுக்கும் செல்ல-வில்லை. இங்கே ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும்; அது என்னவெனில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி 1857இல் முடிவடைந்த பிறகு மட்டுமே காலனியாதிக்க அரசாங்கத்தின் அச்சகம் பொதுமக்களுக்கான அச்சடிப்புப் பணிகளை எடுத்தது5.
1842ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் முஸ்லிம் நூல் சீறாப்புராணமாகும். இது தீர்க்கதரிசி முகமதுநபியின் வாழ்க்கையை மிக விளக்கமாகவும் தெள்ளத் தெளிவாகவும் வர்ணிக்கும் நூலாகும். இந்த நூலைக் குறித்து டேவிட் சுல்மான் (ஞிணீஸ்வீபீ ஷிலீuறீனீணீஸீ) கூறுகையில், இந்த நூல் பிரதான இஸ்லாமிய ஆதாரங்களைத் திரட்டி எழுதப்பட்டது என்பதில் ஐயமில்லை. முஸ்லிம் மைய நீரோட்ட படைப்பு ஒன்றுக்கு தமிழ் அல்லது இந்து மரபிலிருந்து இரவல் வாங்கப்பட்ட அம்சங்கள் வண்ணம் சேர்க்கின்-றன என்பது மெய்யே’’ என்று சுட்டிக் காட்டு-கிறார்6. சீறாப்புராணம், 1849இல் தொகுக்கப்பட்டு சீறா வென்கின்ற புராணம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. முந்தைய புத்தகத்தின் பிரதி சென்னையைச் சேர்ந்த சையத் முகமது ‘ஹாசன்’ என்பவரது கட்டுப்பாட்டில் இருந்தது. பிந்தைய நூலின் வெளியீட்டின் பிரதி ஒன்று லண்டனில் உள்ள இந்திய அலுவலக நூலகத்தில் இருந்தது. அடுத்த ஆண்டே (1850_ல்) நாகையந்தாதி என்று அழைக்கப்பட்ட அருட் தொண்டர் நாகூர் சூஃபி குறித்து செய்யுள்நடை நூல் ஒன்று காயல்பட்டி-னத்தைச் சேர்ந்த அப்துல்காதர் நயினார் லெப்பை என்பவரால் வெளியிடப்பட்டது. இதனுடைய பிரதியன்று இந்திய அலுவலக நூலகத்தில் இருந்தது. இந்த நூல் நாகூரைச் சேர்ந்த அருட்-தொண்டர் சாகுல்ஹமீதினின் தர்காவிற்கு மேற்கொண்ட புனிதப் பயணத்தைப் பற்றி சூஃபி வர்ணிக்கிறது. சாகுல் அமீது தென்னிந்திய  துறவிகளில் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்-தக்கது. இந்த இரு நூல்களும் இந்துக்களுக்குச் சொந்தமான அச்சகங்களில் அச்சிடப்பட்டவை-யாகும். 1847ஆம் ஆண்டில் மிகப் பிரபலமான தமிழ் சூஃபிக் கவிஞர் குணங்குடி அப்துல்காதர்-மஸ்தான்சாஹிப் என்பவரின் பிரபலமான நூலான திருப்பாடற்றிரட்டு என்ற நூல் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. இந்நூல் 1860இல் மறுபதிப்பு செய்யப்பட்டது; காலப்போக்கில் இந்நூலின் பல பதிப்புகள் வெளியிடப்பட்டன. 1851இல் முகமதிய சமய-விளக்கம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதை எழுதியவர் ராயவேலூரை சேர்ந்த காதர் மொய்தீன் சாஹிப் என்பவராவார். இந்நூல், சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்த கேசவ முதலியாரின் பிரபாகர அச்சகத்தால் வெளியிடப்பட்டது. 1854இல் ரஸா உசேன் கான் என்பவரின் விவேகாகரம் என்ற கதைப்புத்தகம் எட்டயபுரம் வெங்கடேச வட்டப்ப நாயக்கரின் விருப்பத்தின்பேரில் பாரசீக மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு அதே பிரபாகர அச்சகத்தால் வெளியிடப்பட்டது. இவ்வாறு குரானும் ஹதீத்தும் தமிழ் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட முதல் நூல்கள் அல்ல. மாறாக, இஸ்லாமிய உள்ளடக்கத்தைக் கொண்ட தமிழ் நூல்கள்தான் வெளியிடப்-பட்டன.
1850இல் சிவில் சட்டப் புத்தகம் என்ற தமிழ் நூல் வெளியிடப்பட்டது; சையத்ஷா அலி-சாஹிப் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நூல், சென்னையில் மீர்சாஹிப் பேட்டையில் உள்ள முத்பைகூர்ஷெத் அச்சகத்தால் அச்சிடப்-பட்டது. இந்தப் பெயர் மூலமாக தெரிவது என்னவெனில் அச்சகத்தின் உரிமையாளர் ஒரு தமிழ் முஸ்லிம் அல்ல என்பதாகும். அவர், அநேகமாக ஒரு உருதுமொழி பேசும் தக்காண முஸ்லிமாகவோ, கத்சி மேமன் ஆகவோ அல்லது ஒரு பார்சியாகவோ கூட இருக்கலாம். இந்த தனியான துணிகர முயற்சியைத் தவிர, இந்த அச்சகத்தால் வேறு எந்த தமிழ் முஸ்லிம் நூலும் வெளியிடப்பட்டதாக நான் அறிந்திருக்கவில்லை.
1835இல் இந்திய அச்சு சகாப்தம் தொடங்கிய-தன் மூலம் உண்மையில் பழங்கால மூலப்பிரதிகள் அச்சிடப்பட்டன என்பது மட்டுமின்றி தமிழ் முஸ்லிம் இலக்கிய அடிவானத்தில் முஸ்லிம் நூலாசிரியர்களின் எண்ணிக்கையில் ஒரு பெருக்கம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அச்சுத்-தொழில் தொடங்கப்படாமலிருந்தால் இது நிகழ்ந்திருக்காது. அச்சக வசதிகள் கிடைத்ததால் ஏராளமான தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் எழுதுவதற்குத் தூண்டப்பட்டனர். ஆனால் தமிழ் முஸ்லிம் இலக்கிய வளர்ச்சி 1835இலிருந்து 1866 வரை மிக மெதுவாகத்தான் நிகழ்ந்தது. இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் முஸ்லிம்களின் நூல்வெளியீடுகளை முறையாக பதிவு செய்வதோ அல்லது குறித்து வைப்பதோ நடைபெறாததால் வெளியிடப்பட்ட நூல்களின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறுவது எளிதல்ல. ஆகவே தமிழ் முஸ்லிம்கள் வெளியிட்ட நூல்களைத் தீர்மானிக்க ஜான் முர்டாக் என்பவர் 1865இல் வெளியிட்ட பட்டியலையும் சென்னையில் அப்புமேஸ்திரி தெருவைச் சேர்ந்த சையத் முகமது ‘ஹாசன்’ போன்ற தனியார்களிடம் காணப்பட்ட அந்நூல்கள் சிலவற்றின் பிரதி-களையும் சென்னையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் கொண்டிருப்பதையும் லண்டனில் உள்ள இந்திய  நூலகத்தையும் சார்ந்-திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்-களின் சுமார் 60 நூல்கள் மற்றும் பிரசுரங்களை மட்டுமே நான் கணக்கிட முடிந்தது.7
1835க்கு முன்பு தமிழ் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட நூல்கள் சில, இந்த ஆரம்பக்-காலக் கட்டத்தில் அச்சடிக்கப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் குணங்குடி அப்துல்காதர் மஸ்தான் சாஹிப் போன்ற தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் சிலர் மட்டுமே இருந்தனர். எனினும் 1835க்குப் பிறகு எழுதப்பட்டு அச்சடிக்-கப்பட்ட தமிழ் முஸ்லிம் நூல்கள் 1835க்கு முன்பு வெளியிடப்பட்ட நூல்களின் எண்ணிக்கை அளவில்தான் இருந்தன.
இந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட தமிழ் முஸ்லிம் நூல்களில் பெரும்-பாலானவை தமிழ் இலக்கிய பாணிகளைக் கையாண்ட போதிலும், இன்னும் அரபிய மொழி வார்த்தைகளும், பாரசீக மொழி வார்த்தைகளும் கூட குறைந்த அளவிலேனும் பயன்படுத்தப்-பட்டன; ஆகவே, தமிழ்நாட்டில் மிகப்பெரும்-பான்-மை-யினராக இருந்த முஸ்லிம் அல்லாத தமிழ் வாசகர்களுக்கு இவை புரிந்துகொள்ள முடியாதவையாகவோ, எளிதில் கிடைக்காத-வையாகவே இருந்தன. இக்காரணத்தால் தமிழ் முஸ்லிம் இலக்கியம் பிற இலக்கியங்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக ஆயிற்று.
தமிழ் முஸ்லிம்களின் அச்சுத் தொழிலும் நூற்பதிப்புகளும் : 1866 - 1920லும் பின்னரும்
1867ஆம் ஆண்டிலிருந்து, மெட்ராஸ் மாகாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நூல்-களைப் பதியவும் அவற்றின் பட்டியலைச் சேகரிக்கவும் மெட்ராஸ் அரசாங்கம் முடிவு செய்தது. மூன்று மாத காலத்திற்கான புத்தக வெளியீடுகளின் பட்டியல் என்ற தலைப்பில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த 3 மாத காலப் பட்டியலும் நிறைவானதாக இருக்க-வில்லை. ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்ட அனைத்து தமிழ் முஸ்லிம் நூல்களும் விற்பனைக்கான பிரசுரங்களும் இலவச பிரசுரங்களும் முறையாக பதிவு செய்யப்-படவில்லை. ஆகவே, காலாண்டு பட்டியலானது, பதிவுக்காக கொண்டு வரப்பட்ட புத்தகங்களை மட்டும் கொண்டிருந்தது. பதிவு செய்யப்படாத ஏனைய புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. இதன் காரணமாக, பதிவு செய்யப்படாத தமிழ் முஸ்லிம் நூல்களின் சரியான எண்ணிக்கையை ஒரு போதும் அறிய முடியவில்லை.
பதிவு செய்யப்படுவதற்காக முதலில் கொண்டு வரப்பட்ட தமிழ் முஸ்லிம் நூல் ரிமீsணீபீவீஜீணீணீtலீணீ விணீறீவீமீ என்பதாகும். தீர்க்கதரிசி முகமதுநபியைப் போற்றி 1868இல் வெளியிடப்பட்ட இந்த நூல் நாகூர் முகமது புலவர் என்பவரால் எழுதப்பட்ட-தாகும். அடுத்து சாச்சாராது நாமா (ஷிணீநீலீணீக்ஷீணீtலீu ழிணீனீணீ) என்ற புத்தகம் பதிவு செய்யப்பட்டது.  இந்நூல் கடவுளையும் தீர்க்க தரிசியையும் புகழ்ந்து அப்துல்காதர் சாஹிப் என்பவரால் எழுதப்பட்டு 1896இல் வெளியிடப்பட்டதாகும்.
கணிசமான எண்ணிக்கை கொண்ட தமிழ் முஸ்லிம் நூல்கள் தமிழ் பாத்திரங்களையோ அல்லது அரேபிய பாத்திரங்களையோ, சில நூல்கள் இரண்டின் பாத்திரங்களையோ, கொண்டிருந்ததை லண்டனில் இந்திய அலுவலக நூலகத்தில் உள்ள நூல்களில் காண முடிகின்-றது. இந்த நூலகத்தில்  காணப்பட்ட இந்நூல்-களில் பெரும்பாலானவை நல்லமுறையில் பராமரிக்கப்பட்டுள்ளன. அவை நல்ல நிலைமை-யில் உள்ளன; எனினும் சில புத்தகங்கள் பராமரிக்-கப்பட நிதிப்பற்றாக்குறை காரணமாக மோச-மான நிலைமையில் உள்ளன. சில புத்தகங்கள் புத்தக அடுக்குகளிலிருந்தே காணாமல் போய்-விட்டன. அல்லது வேறு எங்கோ தவறாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மொத்தத்தில் இந்திய அலுவலக நூலகம் மேற்கொண்ட தமிழ் முஸ்லிம் நூல்கள் சேகரிப்பு இன்றைக்கு, உலகிலேயே மிகப்பெரிய அளவிலான தமிழ் முஸ்லிம் நூல்கள் சேகரிப்பு என்று இல்லா-விட்டாலும் மிகப்பெரிய சேகரிப்புகளில் ஒன்றாக உள்ளது.
இந்தப் புத்தகங்களில் ஏராளமானவை,   எல்.டி. பார்னெட், ஜி.யு. போப் என்ற இருவரால் தொகுக்கப்பட்ட இரு வெவ்வேறு பட்டியல்-களில் சேர்க்கப்பட்டன. ஒன்று 1901இலும் மற்றொன்று 1931இலும் வெளியிடப்பட்டவை.  இவை இரண்டையும் தவிர, லண்டனில் இந்திய அலுவலக நூலகத்தில் கையெழுத்துப் பிரதிகள் வடிவத்தில் உள்ள தமிழ் நூல்களின் பட்டியல் ஒன்றும் உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தக் காலத்திய தமிழ் முஸ்லிம் நூல்கள் பெரும் எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. 1931ஆம் ஆண்டிற்கு பிறகு வெளியிடப்பட்ட தமிழ் நூல்களைப் பொறுத்தவரை, ஆல்பர்ட்டெயின் கவுர் என்பவரால் தயாரிக்கப்பட்ட புத்தகப்-பட்டியல் ஒன்று உள்ளது. இது அலுவலக நூலகத்தில் காணப்பட்ட நூல்களைமட்டும் கொண்டதாகும்; இதில் 1947வரையிலும் அதற்குப் பிறகும் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத தமிழ் முஸ்லிம் நூல்கள் அனைத்தும் இடம் பெறவில்லை.8
19வது நூற்றாண்டின் கடைசியிலும் 20ஆம் நூற்றாண்டிலும் வெளியான சில தமிழ் முஸ்லிம் நூல்கள் சென்னையில் உள்ள ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும் லண்டனில் பிரிட்டிஷ் நூலகத்தில் கிழக்கத்திய நாடுகளுக்கான பிரிவி-லும் தமிழ்நாட்டில் கோட்டக்குப்பம் மசூதியின் அன்ஜுமான் நுஸ்ரத்துல் இசுலாம் நூலகத்திலும் பாரிசிலும் பாண்டிச்சேரியிலும் உள்ள ணிநீஷீறீமீ திக்ஷீணீஸீநீணீவீsமீ பீ’ணிஜ்tக்ஷீமீனீமீ ஷீக்ஷீவீமீஸீt நூலகங்களிலும் பாரிசில் ஜிலீமீ மிஸீstவீtutமீ ழிணீtவீஷீஸீணீறீ பீமீ லிணீஸீரீuமீs மீt நீவீஸ்வீறீவீsணீtவீஷீஸீs ளிக்ஷீவீமீஸீtணீறீமீs மற்றும் ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ழிணீtவீஷீஸீணீறீ பீமீ திக்ஷீணீஸீநீமீ நூலகங்களிலும் காணப்-படுகின்றன.
நான், 1866 முதல் 1920 வரை வெளியிடப்-பட்ட தமிழ் முஸ்லிம் நூல்களின் பட்டியலைத் தயாரித்தேன்; இந்தப் பட்டியலானது, ‘விusறீவீனீ, மிபீமீஸீtவீtஹ், றிக்ஷீவீஸீt சிuறீtuக்ஷீமீ ணீஸீபீ tலீமீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ திணீநீtஷீக்ஷீ வீஸீ ஜிணீனீவீறீ ழிணீபீu’ என்ற தலைப்பிலான எனது புத்தகத்தில் (இந்தப் புத்தகத்தை 2004இல் ஓரியண்ட் லாங்மேன் வெளியிட்டது) பிற்சேர்க்கை மி ஆக சேர்த்துள்ளேன். இந்தப் பட்டியல் நான், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இந்தியாவில் உள்ள நூலகங்களில் பார்த்த தமிழ் முஸ்லிம் நூல்களை மட்டுமின்றி, விணீபீக்ஷீணீs ஷிtணீtமீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் யில் பட்டியலிடப்பட்டுள்ள சில புத்தகங்களையும் சேர்த்துள்ளேன். அதே சமயத்தில் தமிழ்நாட்டில் சில தனிப்பட்ட நபர்களிடம் இருந்த சில புத்தகங்களையும் எனது பட்டியலில் சேர்க்க நான் தவறவில்லை.
தமிழில் வெளியிடப்பட்ட தமிழ் முஸ்லிம் வெளியீடுகளின் பட்டியல்களையும் அட்ட-வணைகளையும் நான் பயன்படுத்தவில்லை; இதற்குக் காரணம், முக்கியமாக அவை முழுமை-யற்றதாகவும் தெளிவற்றதாகவும் இருந்ததுதான். அவைகளில் சில, 1978இல் வெளியிடப்பட்ட இஸ்லாமிய தமிழ் நூல் அட்டவணையும் 1990இல் வெளியிடப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கி-யங்கள் என்பதுவும், 1990இல் வெளியிடப்பட்ட மெய்ஞான சிந்துவும் ஆகும்.
எனினும் இங்கே ஒரு விஷயம் சொல்லப்பட வேண்டும்; அது என்னவெனில் தமிழ் முஸ்லிம் நூல் வெளியீடுகள் பற்றிய எனது பட்டியலில் நான், 1300க்கும் அதிகமான நூல்களைப் பட்டியலிட்டுள்ளேன் என்பதுதான். குறிப்பாக 19வது நூற்றாண்டின் கடைசி 25 ஆண்டு காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ் முஸ்லிம் நூல்களில் பெரும்பாலானவற்றை இந்தப் பட்டிய-லில் காண முடியும்; இந்த எண்ணிக்கையானது, இதே காலத்தில் வெளியான இந்துக்களின் இலக்கியப் படைப்புகளின் எண்ணிக்கையை மிஞ்சியதாகும்.  இதைக் காணும்போது, முந்தைய ஆண்டுகளிலும், முந்தைய நூற்றாண்டுகளிலும் தமிழ் முஸ்லிம்களின் இலக்கியப் படைப்புகளின் உருவாக்கம் மிகவும் மந்த நிலையில் இருந்ததை ஈடுகட்ட அவர்கள் முயன்றிருப்பார்களோ என்று கருதத் தோன்றுகிறது. இதுதவிர, இதே காலத்தில் இலக்கிய உலகில் தோன்றிய புதிய தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.9 இது அச்சிடும் முறை வருகை, வெளியீட்டு சாத்தியப்பாடு ஆகியவை இல்லாமல் சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை.
தமிழ் முஸ்லிம் நூல் வெளியீடுகளில் இத்தகைய-தொரு அசாதாரணமான திடீர்ப் பெருக்கம் ஏற்பட்ட போதிலும் இது, பிரதான-மான தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கவில்லை. உண்மையைக் கூறுவதெனில், இரண்டு முஸ்லிம் எழுத்தாளர்களும், அவர்களின் நூல்களும் மட்டுமே தமிழ் முஸ்லிம் அல்லாத வாசகர்கள் மற்றும் அறிஞர்களின் கவனத்தைக் கணிசமான அளவுக்கு ஈர்க்க முடிந்தது. சீறாப் புராணத்தின் ஆசிரியரான உமறுப்புலவர், சில மறைஞானப் படைப்புகளை எழுதிய மஸ்தான் சாஹிபு ஆகியோரே அவ்விருவர். அவர்களில், மஸ்தான் சாஹிப், இஸ்லாமியராக மாறிய தமிழர்; இவர், கிறிஸ்துவ மதப்பரப்பாளர்கள் மீதும் அவர்க-ளுடைய நிலைப்பாடுகள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். இது, மகத்தான தமிழ் முஸ்லிம் அறிஞர் எம்.எம். உவெய்ஸின் கருத்துமாகும். உண்மையில் ஏராளமான இந்துக்கள் மஸ்தான் சாஹிப் எழுதிய மறைஞான நூல்கள்பால் கவரப்பட்டனர்; ஏனெனில் மஸ்தான் சாஹிப், அடிப்படையில் இஸ்லாம் குறித்த தனது நூல்களில் இந்து மத அம்சங்களை கலந்தார்.10
ஆகவே, இந்தக் காலக்கட்டத்தில் (19வது நூற்றாண்டின் கடைசி 25 ஆண்டுகளிலும் 20ஆம் நூற்றாண்டிலும்) எழுதப்பட்ட தமிழ் முஸ்லிம் நூல்களில் பெரும்பாலானவை, தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 4 சதவீதமாக இருந்த தமிழ் முஸ்லிம்களிடையே சுற்றுக்கு விடப்பட்டன என்று உறுதியாகக் கூறமுடியும். ஏற்கெனவே 1871இல் மெட்ராஸ் நகரில் இருந்த முஸ்லிம்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 18.1 சதவீதம்.  இது மொத்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையான 12 சதவீதத்தினரைக் காட்டிலும் அதிகமாகும்.11 1931ஆம் ஆண்டில், ஏழு அல்லது அதற்கு மேல் வயதுடைய முஸ்லிம் ஆண்களில் பாதிக்கும் அதிகமானோர் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர். முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்க-ளிடையே கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை தென் தமிழ் மாவட்டங்களில் ரொம்ப அதிகமாகவே இருந்தது; இந்த எண்-ணிக்கையானது அனைத்து மாவட்டங்களிலும் தீண்டத்தகாவர்களிடையே இருந்த கல்வி அறிவு பெற்றவர்களைக் காட்டிலும், சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பிராமண-ரல்லாத இந்து உயர்ஜாதியினரிடையே இருந்த கல்வி அறிவு பெற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது என்பது தெள்ளத்தெளி-வானதாகும்.12 முஸ்லிம்களிடையே முக்கியமாக சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் முஸ்லிம்களிடையே கல்வி அறிவு பெற்றவர்-களின் சதவீதம் அதிகமாக இருந்தது என்றால் அதன் அர்த்தம் முஸ்லிம்களிடையே தமிழ் முஸ்லிம் நூல்கள் பெருமளவிற்கு தேவைப்-பட்டன என்பதும், அவர்களிடையே அந்-நூல்கள் பரவலாயின என்பதும் ஆகும். இது, 19வது நூற்றாண்டின் கடைசி கால்பகுதி காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் முஸ்லிம் இலக்கியத் தயாரிப்பில் ஏற்பட்ட திடீர் உயர்வை பெருமளவிற்கு விளக்குகிறது. மெட்ராஸ் நகரானது, இயல்பாகவே தமிழ் முஸ்லிம்களின் அச்சிடலுக்கும் வெளியீடுகளுக்கும் பிரதான மையமாக மாறியது.
19ஆம் நூற்றாண்டின் கடைசி 25 ஆண்டு காலத்தில், ஒரு சில தமிழ் முஸ்லிம் அச்சகங்கள் தோன்றின; அவை, திருநெல்வேலியில்     கே.எம். அப்துல்காதரின் நூருல் இஸ்லாம் அச்சகம், மெட்ராஸில் இஸ்லாமிய விளக்கப் பிரஸ், மதுரையில் காசிம் அச்சகம், காரைக்கா-லில் முகமது சமதம் அச்சகம் ஆகியனவாகும். மேலும் சென்னையில் அஹமதி அச்சகம், நிஜாமுல் மியா அச்சகம், நிஜாமுல் முத்தப்பா அச்சகம், சுல்தானி அச்சகம், காதரியார் அச்சகம், சுல்தான் அச்சகம், ஷம்சுல் அக்பர் அச்சகம், தீன்விளக்கம் அச்சகம், முஸ்லிம் அபிமானி அச்சகம், போன்ற ஏனைய தமிழ் முஸ்லிம் பதிப்பகங்களும் இருந்தன. யுனானி வைத்திய கலாநிதி அச்சகம் ஹகிம். பி. முகமது அப்துல்லா சாஹிப் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் அல்லது இரண்டாவது பத்தாண்டு காலத்தில் சென்னை-யில் தமிழ் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய அச்சகங்கள் தோன்றின; அவை, பீர்தோஸி அச்சகம், நஜாமாதுல் முர்ஜான் அச்சகம், முத்பாய்_ரஸாக்கியா அச்சகம், அஹாஸநுல் மாதாபி அச்சகம், அய்யாதுல் அச்சகம், ரஹ்மானி அச்சகம் சவுகாதுல் இஸ்லாம் அச்சகம், நஃபி_உல்_இஸ்லாம் அச்சகம், ரிவாத்தியாதுல் அச்சகம், முவாயத்துல் இஸ்லாம் அச்சகம், முகமதிய அச்சகம், மதரியா அச்சகம், கரிமி அச்சகம் ஆகியவையாகும். சென்னைக்கு வெளியே புறநகர் பகுதிகளில் லத்தீப் அச்சகம் (வாணியம்பாடி), ஹமீதியா அச்சகம் (நாகப்பட்டினம்) கன்ஞ்சாவே அச்சகம், (நாகப்பட்டினம்) முகமதுல் மதுபியா அச்சகம், (ஆம்பூர்), முகமதியன் அச்சகம் (மதுரை), சம்சியா அச்சகம் (மதுரை), முகமதிய நேஷன் அச்சகம் (பள்ளப்பட்டி), முகமதிய அச்சகம் (வாணி-யம்பாடி), உஸ்மானிய அச்சகம் (வாணியம்பாடி) போன்ற அச்சகங்களும் இருந்தன.
அச்சக விஷயத்தில் வியப்பானது என்ன-வெனில், 19வது நூற்றாண்டில் தமிழ் முஸ்லிம்-களுக்கு சொந்தமான அச்சகங்களால் சில நூல்கள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன என்பதுதான். உண்மையில் 19வது நூற்றாண்டில் சென்னையில் தமிழ் முஸ்லிம் நூல்களில் பெரும்பாலானவை இந்துக்களுக்குச் சொந்தமான அச்சகங்களில்தான் அச்சடிக்கப்பட்டன. அந்த அச்சகங்கள், சபாபதி முதலியாரின் கல்வி விளக்க அச்சகம், கேசவ முதலியாரின் பிரபாகர அச்சகம், பரசுராம முதலியாரின் பரப்பிரம்மா அச்சகம், ஏ. முதலியாரின் சுகவரஜினி முத்ராக்ஷா அச்சகம், மாணிக்க முதலியாரின் பிரின்ஸ் ஆஃப்வேல்ஸ் அச்சகம், மனோன்மணி விலாச அச்சகம், ஸ்ரீபத்மநாபா விலாச அச்சகம், புஷ்பாராகா செட்டியின் கலாரத்னாகரம் அச்சகம், பார்த்த-சாரதி நாயுடுவின் மதுரை  மீனாட்சி விலாஸ் அச்சகம் போன்றவையாகும். 20வது நூற்றாண்டின் முதல் பாதியில் கூட, முந்தைய நூற்றாண்டின் அளவிற்கு இல்லையென்றாலும் தமிழ் முஸ்லிம்கள், தங்களுடைய நூல்கள் பெரும்பாலானவற்றை இந்துக்களுக்குச் சொந்த-மான அச்சகங்களில்தான் தொடர்ந்து அச்சிட்டு வந்தனர். மேலும், தொடக்கக் காலத்தில் கிறித்தவ மதப் பரப்பாளர்கள் மீது தாங்கள் கொண்டிருந்த பகையுணர்வைத் தமிழ் முஸ்லிம்கள் கைவிட்டதுடன், தங்கள் படைப்பு-களை அச்சிடுவதற்கும், வெளியிடுவதற்கும் அவர்கள் கிறித்தவர்களுக்குச் சொந்தமான, சென்னையைச் சேர்ந்த செயின்ட் ஜோசப் அச்சகம், எஸ்.பி.சி.கே. அச்சகம் போன்ற அச்சகங்களை நாடினர். எனினும் ஒரு விஷயம் குறிப்பிடப்பட வேண்டும்; அது என்னவெனில், தமிழ் முஸ்லிம் நூல்களை அச்சடிப்பது பெரும்பாலும் இந்துக்களுக்குச் சொந்தமான அச்சகங்களில்தான் என்றாலும் அந்நூல்களின் வெளியீட்டாளர்கள் பெரும்பாலும் முஸ்லிம்-களே என்பதுதான்.
19வது நூற்றாண்டு காலத்தில் எந்தவொரு தமிழ் முஸ்லிம் நூலும் வழக்கமாக ஒரு சில நூறு படிகள் (சிஷீஜீவீமீs) தான் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. சரியாகச் சொல்வதானால், அப்படிகளின் எண்ணிக்கை 200க்கும் 1,000க்கும் இடையேதான் இருந்தன. ஆனால், பின்னர் சில நூல்களின் விஷயத்தில் கூடுதல்படிகள் வெளிக்-கொணரப்பட்ட போதிலும், ஒரு சில ஆயிரம் படிகளுக்கு மேல் ஒருபோதும் மிஞ்சியதில்லை.
முகமதிய அச்சகம்தான் முதன்முதலில் 1906ஆம் ஆண்டில் தமிழ் முஸ்லிம்களின் பிரபலமான ‘லிவவுல் இஸ்லாம்’ என்ற பருவ இதழை வெளியிட்டது. இது, 1910_14ஆம் ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டது. இந்த இதழ் இஸ்லாம் மீதான கிறிஸ்தவ விமர்சனத்-திற்கு ஒரு மறுப்பாகும். இதனை எழுதியவர் ஷேக்மிரான் முஹையி_உல்_தின் இப்னு மொன்னா முகமது காதிரி சுத்தாரி என்பராவர். இந்த பருவ இதழின் 1910_1914 ஆண்டு காலத்திய பதிப்புகளின் ஒரு பிரதி, இந்திய அலுவலக நூலகத்தில் உள்ளது. ஆனால், 20ஆம் நூற்றாண்-டின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மிகப் பிரதான அச்சகம் சென்னை திருவல்லிக்கேணியில் ஆரம்பிக்கப்பட்ட ஷாகுல் ஹமீதியா அச்சக-மாகும். இந்த அச்சகத்தை தொடங்கியவர் எம்.ஏ. ஷாகுல் ஹமீது லெப்பை என்பவர்; இவர் ஒரு எழுத்தாளர். இஸ்லாமிய வேதத்திலும் அரபு மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறப்பான புலமை பெற்றவர். இந்த அச்சகம் திருவல்லிக்-கேணியில் 1980 ஆண்டுகளின் பின் பகுதியில் நான் பார்வையிட்ட போதும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அநேகமாக இன்றும் கூட அந்த அச்சகம் செயல்பட்டுக் கொண்டிருக்கக்-கூடும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த  தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் தங்க-ளுடைய நூல்களை அச்சிட்டு வெளியிடுவதற்கு 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலிருந்து இந்த அச்சகத்தை அணுகி வந்தனர்.          எம்.ஏ. ஷாகுல் ஹமீதும் அவருடைய மகன்களும் வம்சாவளியினரும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் முஸ்லிம் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பதிலும், ஏராள-மான தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களையும் நூல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதிலும் ஐயமில்லை. இந்த எழுத்தாளர்களில் உலெமாக்களும் (ஹிறீமீனீணீs) அலிம்களும் (ணீறீவீனீs) உள்ளடங்குவர்.
எனினும் ஷாகுல் ஹமீதியா அச்சகமானது பெரும்பாலும் இஸ்லாமிய கோட்பாடுகளைக் கொண்ட அல்லது இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களை, அவற்றில் அரபு மொழிவார்த்தை-களைப் பொருத்தமான முறையில் கலந்து, வெளியிட்டது. ஆனால் இந்த பாணி, பி. தாவூத் ஷா போன்ற சில ஆங்கிலக் கல்விபெற்ற முஸ்லிம்களின் கோபத்தையும் கிளப்பிவிட்டது. தாவூத் ஷா, முழுமையான தமிழறிஞர்; தனது தமிழ்ப் புலமைக்காக மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தங்கப் பதக்கத்தைப் பெற்றவர். மேலும் அவர், ஏராளமான நூல்களை எழுதியவர். ஷாகுல் ஹமீதியா பிரஸ் போன்ற அச்சகங்களால் வெளியிடப்பட்ட நூல்கள் மீது அவர் தாக்குதல் தொடுத்தார்; தமிழ்ப் புத்தகங்களில் அதிக அளவில் அரேபிய வார்த்தைகளை பயன்படுத்-தியதன் காரணமாக அந்தப் புத்தகங்களை சாதாரண-மனிதன் புரிந்து கொள்ள முடிய-வில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். அரபு மொழியும் தமிழும் கலந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஆசிரியர்கள் தமிழிலும் சரி அரபு மொழியிலும் சரி புலமை பெற்றவர்களல்ல என்றும் அவர் விமர்சித்தார்.
இங்கே ஒரு விஷயம் குறிப்பிடப்பட வேண்டும்; அது என்னவெனில் தாவூத் ஷா, தொடக்கத்தில் ‘முஸ்லிம் சங்க முதற்கமலம்’ என்ற தலைப்பிலான ஒரு சர்ச்சைக்குரிய பிரசுரத்தை எழுதியவர் என்பதுதான்; அந்தப் பிரசுரம் 1919லும் 1921லும் நாச்சியார்கோவிலில் வெளியிடப்பட்டது. இந்த அபூர்வமான பிரசுரங்களின் இரண்டு தொகுப்புகள் அஞ்சுமான் நுஸ்ரத்துல் இஸ்லாம் நூலகத்தில் வைக்கப்பட்-டிருந்தன; கோட்டக்குப்பம் மசூதியுடன் இணைந்த அந்த நூலகத்தில் ஏனைய அபூர்வமான தமிழ் முஸ்லிம் புத்தகங்களுடனும் பருவ இதழ்களுடனும் அந்த இரு தொகுப்புகளும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. நான் அந்த நூலகத்தை நேரடியாக பார்வையிட்டு அந்தப் பிரசுரங்களையும் ஏனைய நூல்களையும் பார்த்தேன். நான் கடந்த 1980ஆம் ஆண்டுகளின் கடைசிப் பகுதியில் அந்த நூலகத்திற்குச் சென்றிருந்தபோது அவையெல்லாம் பொதுவாக நன்கு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன; அவை நல்ல நிலைமையில்தான் இருந்தன. ஆனால், அந்த மசூதி நிர்வாகிகள், பழைய மற்றும் அபூர்வமான நூல்களைப் பராமரிப்பதற்கான நவீன வசதிகள் எதனையும் ஏற்படுத்தாததால் காலப்போக்கில் அவைகளுக்கு என்ன நேரிடும் என கணிக்க முடியாது. தமிழ் நாட்டின் ஏனையப் பகுதிகளில் மசூதிகளுடன் இணைக்கப்-பட்டுள்ள நூலகங்கள், பழைய மற்றும் பெரும் மதிப்புமிக்க தமிழ் முஸ்லிம் புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் ஏராளமானவற்றைக் கொண்டுள்-ளன; அவை, ஆவணமயமாக்கப்படுவதும் பட்டிய-லிடப்படுவதும் பராமரிக்கப்படுவதும் அவசிய-மாகும்.
தாவூத் ஷா 1920ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு மாத இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதன் பெயர் தத்துவ இஸ்லாம் என்பதாகும். 1921இலிருந்து தொடங்கப்பட்ட சீர்திருத்த தமிழ் முஸ்லிம் பருவ இதழான தார்_உல்_இஸ்லாம் என்னும் பருவஇதழின் ஆசிரியராகவும் இருந்தார். 1932ஆம் ஆண்டில் ரஞ்சித மஞ்சரி என்னும் பருவ இதழுக்கு ஆசிரியரானார். இந்தக் காலக்கட்டங்களில் வேறு சில தமிழ் முஸ்லிம் பருவ இதழ்களும் வெளிவந்தன; அவை அஜைபுல்அலாம் (1910_லிருந்து), இஸ்லாம் நேசன் (1910_லிருந்து), ஹகிம் பி. முகமது அப்துல்லா என்பவரின் சுகபோதினி (1910_லிருந்து), சைஃபுல் இஸ்லாம் (1916_லிருந்து), தொண்டன் (1918_லிருந்து) அல்_கலாம் (1924_லிருந்து), கே.மஸ்தான் என்பவரின் ஞானசூரியன் (1922_லிருந்து, திருவாரூர்), அல்ஹக் (1926லிருந்து கோட்டக்-குப்பம்), 1930ம் ஆண்டுகளில் ஏ.என்.யூசுஃப் பாகவி என்பவரை ஆசிரியராகக் கொண்ட ஹிஃபஸத்_உல் இஸ்லாம், நூருல் இஸ்லாம், 1928ஆம் ஆண்டில் மவுல்வி அப்துல்ரஹ்மானை ஆசிரியராகக் கொண்டு பாண்டிச்சேரியிலிருந்து வெளியிடப்பட்ட ஜவஹருல் இஸ்லாம் ஆகியனவா-கும்.14
முஸ்லிம் நூலாசிரியர்களால் நடத்தப்பட்ட மருத்துவ நூல்களைப் பொறுத்தவரையில் பாபுராஜாபுரத்தைச் சேர்ந்த பாவாசாஹிபின் மகன் ஹகிம் பி. முகமது அப்துல்லாவின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் யுனானி மருத்துவத்தில் ஒரு நிபுணராக இருந்தார். சித்தா, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவங்களிலும் அவருக்கு நல்ல ஞானம் இருந்தது. அவர் 19வது நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளிலிருந்து பல மருத்துவ நூல்களை வெளியிட்டிருந்தார்.   அவருடைய நூல்களில் பல, இந்திய அலுவலக நூலகத்தில் காணப்பட்-டன. சில நூல்கள் சென்னையைச் சேர்ந்த சையத் முகமது ‘ஹாசன்’ என்பவரிடம் இருந்தன. முஹம்மது அப்துல்லாவின் வம்சாவளியைச் சேர்ந்தவரே இவர் என்று கருதப்படுகிறது.
தமிழ் முஸ்லிம் நூல்களின் இயல்பு
இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நூல் பட்டியல்களை, குறிப்பாக நான் முஸ்லிம்களின் அடையாளம் குறித்து எழுதிய புத்தகத்தில் நான் தயாரித்துச் சேர்த்துள்ள பட்டியலைக் கவனித்துப் பார்த்தால், உடனடியாக முஸ்லிம்-களின் பிரதான இலக்கியப்போக்குகளைக் கிரகித்துக் கொள்ள முடியும். மேலும் அவர்-களின் கவலைகள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள், மதச்சாய்வுகள், மதவழிப்பட்ட பரிணாம வளர்ச்சி, மனப்பான்மை, உளவியல் போக்குகள்  ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட தமிழ் முஸ்லிம் இலக்கியங்களில் பெரும்பாலா-னவை, மிக நெருக்கமாக இஸ்லாமுடன் சம்பந்தப்பட்டவையாகும். இவற்றை 10 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முதல் பிரிவானது, தீர்க்கதரிசி முகமதுநபி, அவருடைய வெற்றிகரமான பயணங்கள் மற்றும் வெற்றிகள் சம்பந்தமான நூல்கள், சீறாபுராணம் போன்று முகமது நபியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் கவிதை இலக்கியங்கள், நபியின் நண்பர்கள், உறவினர்கள், வம்சாவழியினர் ஆகியோரைப் பற்றிய கவிதைகள், இஸ்லாமிய அருட்தொண்டர்கள் ஆகியோரின் பாரம்பரியங்-களைப் பற்றிய கவிதைகள், எகிப்து, பாரசீகம் போன்ற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அலீஃபாக்கள் மற்றும் துறவிகள் பற்றிய கதைகள் ஆகியவற்றைக் கொண்டதாகும்.  இந்த நூல்களெல்லாம் தமிழ் முஸ்லிம் இலக்கியத்தின் முதல் பிரிவைச் சேர்ந்தவை. இந்தப் பிரிவில் சீறாப்புராணம் தான் பெருமை மிகு இடத்தைப் பிடிக்கிறது. இது, பதிப்பிக்கப்படுவதற்கு ஏற்ப பல தடவை சரி செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த தமிழ் இஸ்லாம் நூலைக் காட்டிலும் இந்த நூலுக்குத்தான் அதிகமான அளவில் உரைகள் எழுதப்பட்டுள்ளன.
தமிழ் இஸ்லாமிய நூல்களின் 2வது பிரிவில் உள்ளடங்கியவை, தீர்க்கதரிசி முகமது நபி, அவருடைய நண்பர்கள், வம்சாவளியினர், அருட்தொண்டர்கள், அரசர்கள், பிற இஸ்லா-மியப் பிரமுகர்கள் ஆகியோரை பாராட்டி எழுதப்பட்ட நூல்களும் கவிதைகளுமாகும். இவை பெரும்பாலும் தமிழ் இலக்கியப் பாணியில் எழுதப்பட்ட போதிலும், இவற்றின் உள்ளடக்கம் இஸ்லாமியக் கோட்பாடுகளாகும். இத்தகைய 2வது பிரிவு நூல்கள், முதல் பிரிவு நூல்களைப் போலன்றி, அளவில் சிறியவை, சுருக்கமானவை.
மேலே குறிப்பிடப்பட்ட முதல் இரண்டு பிரிவு நூல்களும் மட்டும் என்னுடைய ஆய்வுக் காலத்தின்போது (1833_1947) வெளியான மொத்த தமிழ் முஸ்லிம் நூல்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக உள்ளன.
தமிழ் இஸ்லாமிய நூல்களின் 3வது பிரிவில், இஸ்லாமிய கோட்பாடுகள், வழிபாடுகள், சட்டங்கள், நன்னெறிகள், சடங்குகள், திருமண முறைகள், முஸ்லிம் கலாச்சாரத்தின் ஏனைய அமசங்கள் ஆகியவை சம்பந்தமான 300க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. முக்கியமாக முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தமான சில நூல்கள், இந்தப் பிரிவில் உள்ளன. பொதுவாக தமிழ் முஸ்லிம்கள், ஃபிக் (திவீஹீலீ _ சட்டம்) குறித்து விமர்சனக் கருத்துகளை எழுதுவதில் அதிக அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. இந்நூல்களில் (3வது பிரிவு நூல்களில்) பெரும்பாலானவை, சுருக்கமானவை-யாக உள்ளன. நீண்டதாக இல்லை. சில நூல்கள் இந்துஸ்தானி, பாரசீகம், அரபு ஆகிய மொழி-களில் உள்ள மூல நூல்களிலிருந்து மொழி-யாக்கம் செய்யப்பட்டுள்ளன. மொழியாக்கம் செய்யப்பட்ட இந்நூல்களுக்கு எந்த முயற்சியும் இருந்ததில்லை. சில தமிழ் முஸ்லிம் மொழி-பெயர்ப்பாளர்கள் அல்கஸாலி போன்ற இஸ்லாமிய நூல்களை அரேபிய  மூலத்தி-லிருந்து தமிழாக்கம் செய்யாமல், பெரும்பாலும் இந்துஸ்தானியிலிருந்து தமிழாக்கம் செய்துள்-ளனர். இது, தமிழ் முஸ்லிம்களிடையே அரேபிய மொழியில் போதுமான புலமை இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்தப் போதாமை, குரானையும் ஹதிஸ் இலக்கியத்தையும் தமிழாக்கம் செய்ததிலும் அவற்றைப் பற்றி எழுதப்பட்ட உரைகளிலும் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்கள் தமிழ் முஸ்லிம் இலக்கியங்களில் 4வது பிரிவாக அமைகின்றன.
இத்தகைய உள்ளடக்கத்துடன் ஒருசில நூல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. குரான், தமிழில் தமிழாக்கம் செய்யப்பட்ட நூலாக வெளிவருவதற்கு 1940ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
ஐந்தாவது பிரிவில் மறைஞான நூல்களும் ஏனைய மதரீதியான நூல்களும் உள்ளடங்கும். மறைஞான நூல்கள், இந்திய முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகுந்த முக்கியத்துவம் கொண்-டிருந்தன. அநேகமாக இந்தியாவில் முஸ்லிம் மதவாழ்க்கை குறித்த எந்தவொரு அம்சம் குறித்தும் மறைஞானம் என்ற அம்சத்தைக் காட்டிலும் அதிகமான நூல் எழுதப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறப்படுகிறது.15 இது-வேண்டுமானால் வட இந்தியாவில் உண்மையாக இருக்கலாம். ஆனால் இது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உண்மையாகத் தோன்றவில்லை; ஏனெனில், தமிழைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மறைஞான நூல்கள் குறைந்த அளவில்தான் இருந்தன. இருப்பினும் இந்த நூல்கள் தமிழ் முஸ்லிம் மத வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டுள்ளன.
இஸ்லாமிய மறைஞான நூல்களில் மிகப் பிரபலமான நூல், குணங்குடி அப்துல்காதர் மஸ்தான் சாஹிபின் நூலாகும். அவர், காதிரியா (னிணீபீபீவீக்ஷீக்ஷீவீஹ்ணீ) வம்சத்தைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. அவருடைய பிரபலமான நூல்கள் ‘திருப்பாடற்றிரட்டு ’ என்ற தலைப்பில் 1847இல் வெளியாகின. அதன் பின்னர் அவர் நூல்கள் பல பதிப்புகளில் வெளியிடப்பட்டன. இந்த நூல்களை வெளியிடுவதில் குறிப்பாக இந்துக்கள் ஈடுபாடு கொண்டனர்; ஏனெனில் அவர்கள் மஸ்தான் சாஹிபை தங்களில் ஒருவராகவே கருதினர்.
மஸ்தான் சாஹிபின் கவிதைகளில், ஏனைப் பெரும்பாலான தமிழ் முஸ்லிம் நூல்கள் போலல்லாமல், சில சில அரேபிய மற்றும் பாரசீக வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன. தன்னுடைய கவிதைகளில் மஸ்தான் சாஹிப் பல இந்து அம்சங்களையும் கருத்துக்களையும் பயன்படுத்திய போதிலும் அவை, இஸ்லாமியக் கோட்பாடுகளில் ஆழம் மிக்கவையாகவும், தீர்க்கதரிசி முகமதுநபியையும் அருட்தொண்டர்-களையும் முழுமையாகப் புகழ்ந்துரைப்பதாகவும் உள்ளன. பொதுவாகப் பேசுமிடத்து, மஸ்தான் சாஹிப் போன்ற தமிழ்நாட்டு சூஃபிகளின் இஸ்லாமிய அடையாளமானது, மறுக்க முடியாததாகும். இது அவர்களுடைய நூல்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளைக் கவனமாகப் படித்தால் தெளிவாகத் தெரியும்.
தமிழ் முஸ்லிம் நூல்களின் 6வது பிரிவில் இஸ்லாமியக் கொள்கைகள் குறித்த கதைகள், நாவல்கள், நாடகங்கள் உள்ளடங்கும். இந்நூல்களில் ஏராளமானவை இந்துஸ்தானி, அரபு மொழி, பாரசீக மொழி ஆகியவற்றிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையாகும். இந்தக் கதைகள், நாடகங்கள், நாவல்கள் ஆகியவற்றின் கதாபாத்திரங்கள் முற்றிலும் இஸ்லாமியத் தன்மை கொண்டவையாகும். பொதுவாக, இந்தக் கதைகள், ஒரு சிலவற்றைத் தவிர, இஸ்லாமிய நாடுகளில் எழுதப்பட்டவை. இது அரபு, பாரசீக, இந்துஸ்தானி மொழிகளுடன் தமிழ் முஸ்லிம்க-ளுடனான நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்து-கிறது. இம்மொழிகள், இஸ்லாமுடன் நெருக்க-மாக இணைந்தவை என்று தமிழ் முஸ்லிம்கள் கருதினார்கள்.
மருத்துவம் குறித்த நூல்கள் 7வது பிரிவைச் சேர்ந்தவையாகும். இந்தப் பிரிவில் உள்ள பெரும்பாலான நூல்கள், முஸ்லிம் மருத்துவமாக கருதப்படும் யுனானி மருத்துவம் சம்பந்தப்பட்ட-வையாகும். ஆனால் ஆர்வத்தை ஏற்படுத்தக்-கூடிய நூல்கள் சிலவும் உள்ளன; அவை யாகோபு சித்தர், ஹகிம் முகமது பி. அப்துல்லா சாஹிப் போன்ற தமிழ் முஸ்லிம் மருத்துவர்-களால் எழுதப்பட்ட சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ நூல்களாகும். இவர்களில் ஹகிம் முகமது பி. அப்துல்லா சாகிப், உண்மையில் தமிழ் முஸ்லிம் மருத்துவத்தில் ஒரு மெய்யான நிறுவனமாக விளங்கியவர். அவர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் ஏனைய எந்த-வொரு தமிழ் முஸ்லிமையும் விட அதிகமான மருத்துவநூல்களை எழுதியவராவார்.
தமிழ் முஸ்லிம் நூல்களில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது பிரிவுகள், மிகச்சிறியவை. எட்டாவது பிரிவு, தமிழ் முஸ்லிம்களால் எழுதப்பட்ட சர்ச்சைக்குரிய நூல்கள் சிலவாகும். இந்நூல்கள், முஸ்லிம்களிடையே விவாதங்களை -ஏற்படுத்தக்கூடியனவாகவும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிராக கடுமையான விமர்சனங்களுடன் எழுதப்பட்டனவாகவும் உள்ளன. முற்றிலும் மதசார்பின்மைக்காக தமிழ் முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட மதசார்-பின்மை ஆதரவு நூல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது எப்போதும் முக்கியமானதாக இருந்ததில்லை. ஒட்டுமொத்தத்தில் தமிழ் முஸ்லிம்கள், பொதுமக்களின் நலனுக்கான உண்மையான மதசார்பின்மை ஆதரவு நூல்களை வெளியிடுவதில் அக்கறை கொண்டிருக்கவில்லை. மதசார்பற்ற நோக்குடனான சில நூல்களை அவர்கள் வெளியிடுவதாக இருந்தால்கூட, அது பிரதானமாக முஸ்லிம்களுக்கானதாகவே இருந்தது. இவ்வாறு அச்சிடும்முறை சந்தேகத்திற்-கிடமின்றி மதசார்பின்மையைச் சார்ந்து இருந்-தாலும், இது இன்னும் தமிழ் முஸ்லிம்களிடையே மதசார்பின்மை பற்றிய அறிவு ஞானம் ஏற்படுவ-தற்கும் அதிகமான மதசார்பின்மை குறித்த நூல்களின் வெளியிடலுக்கும் அதிக அளவில் பங்களிக்கவில்லை என்று முடிவு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.
மேலே குறிப்பிடப்பட்ட அச்சடிக்கப்பட்ட நூல்களைத் தவிர, முஸ்லிம் புத்தகங்களில் விசேஷமான பத்தாவது பிரிவு ஒன்றும் உள்ளது. அவை லித்தோகிராபி முறையில் தயார் செய்யப்-பட்ட நூல்களாகும். என்னுடைய ஆய்வுக்குரிய காலக்கட்டத்தில் இத்தகைய முறையில் சுமார் 400 நூல்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம். லித்தோகிராப் முறையை தமிழ் முஸ்லிம்கள் முற்றிலும் தாமதமாக மேற்கொண்டபோதிலும் ஒரு விஷயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்; அது என்னவெனில், அந்நூல்களில் பெரும்-பாலானவை இஸ்லாமிய ரீதியானவை அல்லது இஸ்லாம் சம்பந்தப்பட்டவையாகும் என்பதுதான்.  தமிழ் முஸ்லிம்கள், இஸ்லாமுடனோ, அரபு மொழியுடனோ பாரசீக மொழியுடனோ தொடர்பு கொண்டிராத புத்தகங்களை, அவை லித்தோகிராப் முறையில் தயாரிக்கப்பட்ட-தாயினும் சரி அச்சடிக்கப்பட்டதாயினும் சரி, மிகவும் அபூர்வமாகவே எழுதினர் அல்லது வெளியிட்டனர்.
1835க்கும் முன்பும் முக்கியமாக அந்த ஆண்டுக்கு பின்பும் வெளியான தமிழ் முஸ்லிம் இலக்கியங்கள் குறித்த எனது இதுவரையான விமர்சனக் கண்ணோட்டம் ஒரு விஷயத்தை தெளிவாக வெளிக் கொணர்கிறது. அது என்ன-வெனில், தமிழ் முஸ்லிம் நூல்களில் ஒரு சில பிரச்சினைக்குரிய நூல்கள் மற்றும் மதசார்-பின்மை ஆதரவு நூல்கள் தவிர பெரும்பாலா-னவை அடிப்படையில் மதரீதியான தன்மையைக் கொண்டிருந்தன அல்லது இஸ்லாமுடனோ அல்லது பாரசீக மற்றும் அரபு மொழிகளுடனோ தொடர்புடையதாக இருந்தன. இந்தப் போக்குகள் 1835ஆம் ஆண்டிலிருந்து அச்சிடும் முறை கடைப்பிடிக்கப்பட்டு பிரபலமான-போதிலும் 16வது நூற்றாண்டிலிருந்து 1947 வரை ஒரு வரலாற்று ரீதியான தொடர்ச்சியாக இருந்து வந்தன. தமிழ் முஸ்லிம்கள், தங்களுடைய நூல்களில் தமிழ் இலக்கியப் பாணிகளையும் அம்சங்களையும் கடைப்பிடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்கள் ஒருபோதும் தங்களுடைய நூல்களின் இஸ்லாமிய இயல்பு-களை மூடிமறைத்ததில்லை. உண்மையில், அரபு மொழியும் இஸ்லாமும் தமிழ் முஸ்லிம்களின் இலக்கியத்தையும் சமூகத்தையும் தமிழ் இலக்கியம் மற்றும் சமூகத்திலிருந்து வேறுபடுத்தியே பார்க்கின்றன. ஆனால் இத்தகைய விஷயங்கள் ஒருபோதும் கெட்டிதட்டிப் போனவையாக இருக்கவில்லை. மாறாக, அவை மாறுதலுக்கும் பரிணாமத்திற்கும் உள்ளாகின்றன. உதாரணமாக இன்று, அரபு மொழியின் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி அரபுத் தமிழில் எழுதுவது அவ்வளவாக விரும்பப்படுவதில்லை. மேலும்,  கே. எம். ஷெரீஃப், மணவை முஸ்தபா, முகமது இஸ்மாயில் போன்ற பல நவீன தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள், பல்வேறு சூழ்நிலைமைகள் காரணமாக பொதுமக்களுக்கு புரியக்கூடிய ஒரு தமிழில் எழுதுவதை மேற்கொண்டிருக்கின்றனர்; இதன் பொருட்டு அந்த எழுத்தாளர்கள் தங்களு-டைய நூல்களில் அரபு அல்லது பாரசீக மொழி வார்த்தைகளைத் தவிர்த்து விடுகின்றனர்; ஏனென்-றால் அரபு அல்லது பாரசீக வார்த்தைகள் வரலாற்று ரீதியாகப் பார்த்தால், தமிழ் முஸ்லிம் நூல்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்குப் புரியாதவையாக ஆக்கியுள்ளன.
1835ஆம் ஆண்டுக்கு முன்பு படைக்கப்பட்ட இலக்கியங்களின் எண்ணிக்கையையும் தமிழ் முஸ்லிம்கள் நூல் அச்சிடும் முறையைப் பின்பற்-றிய 1935க்கு பின்பு படைக்கப்பட்ட இலக்கியங்-களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் வெளிப்படையாகத் தெரியும்; அது என்னவெனில், அச்சிடுவதற்கான தொழில்நுட்பமானது நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களையும் இலக்கியங்-களையும் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் கொண்டு வந்துள்ளது என்பதுதான். எழுத்தா-ளர்-களின் எண்ணிக்கை, இலக்கியத் தயாரிப்-புகள், இலக்கிய வெளியீடுகள் ஆகியவைகளில் ஏற்பட்ட அபரிமிதமான அதிகரிப்புக்கு அச்சடிக்கப்பட்ட நூல்களின் விரிவான பரவல், அறிவுஞானத்தை எளிதாக இருப்பு வைத்தல், வணிகரீதியான ஆதாயங்களுக்கான சாத்தியப்-பாடுகள் ஆகியவை உள்ளிட்ட அச்சிடுதல் குறித்த தொழில்நுட்ப வசதிகளே காரணம். ஆனால், தமிழ் முஸ்லிம்கள் அச்சிடும் முறை-யைக் கையாண்ட போதிலும் அதற்காக அவர்கள் தங்களுடைய அடிப்படையான கலாசார, மற்றும் மத அடையாளத்தை ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. உண்மையில், அச்சிடும் முறையும் அச்சிடப்பட்ட நூல்களும் என்னுடைய ஆய்வுக்குரிய காலக்கட்டத்தின்-போது தனது சொந்த சமூக _ அரசியல் பின்விளைவுகளைக் கொண்டிருந்த தமிழ் முஸ்லிம் அடையாளத்தை உறுதிப்படுத்துவற்குப் பெரும் பங்காற்றியிருந்தன.