Tamil books

Thursday 21 April 2011

மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை

கோ. கணேஷ்


தமிழ்ப்பதிப்பு வரலாறு என்பது தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைக்கும் முக்கியக் காரணியாகும். ஆனால் தமிழ்ச்சூழலில் துரதிருஷ்டவசமாக பதிப்பு குறித்தோ, அவற்றின் பின்புலம் குறித்தோ முறையான பதிவுகள் ஏதுமில்லை.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம், அச்சு வருகை குறித்தும், அதன் மூலம் உருவான பதிப்பு செயற்பாடுகள் குறித்தும், அச்செயற்பாட்டின் மூலம் தமிழ்ச் சூழலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அறிவுசார் பெருங்கூட்டத்தினை அறிய வேண்டிய அல்லது அடையாளப்படுத்த வேண்டிய தேவை இன்று நமக்கு உள்ளது. குறிப்பாகத் தமிழ்ப் பதிப்புச் சூழலில் தொடர்ச்-சியாக உருவான மாற்றங்களையும் அதன் தன்மைகளையும் அறிவதோடு மட்டுமில்லாமல் இன்றுள்ள பதிப்புச்சூழல் குறித்த புரிதல்களும் அவசியமாகிறது.
அந்த வகையில் இன்றைய பதிப்புச்சூழல் என்பது வறட்டுத் தன்மை கொண்டதாகவும், ‘லாபம்’ என்ற ஒன்றை மட்டுமே மையமிட்டுச் செயல்படுவதாகவும், அறிஞர்களின்(அ) ஆய்வாளர்களின் அறிவைச் சுரண்டுவதன் மூலம் தங்களைப் பெருமுதலாளியாக நிலைநிறுத்திக் கொள்வதாகவுமே பதிப்பகங்கள் போட்டி-யிடுகின்றன. தவிரவும் நூல்களின் உற்பத்தி பெருகியிருக்கின்றனவே ஒழிய ‘சிரத்தையான’ பதிப்புகளும், வரலாற்று, ஆய்வு நூல்களும் குறைவே. (இதில் ஒரு சில ‘விலக்கலுக்கு’ (ணிஜ்நீமீஜீtவீஷீஸீ) உரியனவாக வேண்டுமானால் இருக்கலாம்.) மேலும் அறிவு ஜீவிகளாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பதிப்பகத்தார்-களுக்கு வரலாறு குறித்த புரிதலும், சமூகம் குறித்த அக்கறையும் இருக்குமா என்பது கேள்விக்குறியே.
இதன் பின்னணியில் நாம் தொடக்ககால பதிப்பாசிரியர்களையும், வெளியீட்டுக் கழகங்களையும் பாராட்ட வேண்டிய (அ) மதிக்க வேண்டிய தேவையினை இன்றைய பதிப்புச் சூழலின் மூலமே உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. அவர்களின் தேடல் முயற்சிகளும் கடின உழைப்புமே இன்று தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை நிலைநிறுத்தியுள்ளது.
பதிப்பு முன்னோடிகள்
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான அச்சுப்பண்பாடு சார்ந்து சுவடிகளை அச்சேற்றுவதில் தீவிரமாக செயல்பட்டவர்களில், ஆறுமுக நாவலர் (1822_1879), சி.வை.தாமோதரம் பிள்ளை (1832_1901), உ.வே.சாமிநாதையர் (1855_1942), பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளை (1891_1966) ஆகியோரை பதிப்பு முன்னோடிகள் அல்லது பதிப்பாசிரியர்-களின் முதல் தலைமுறையினர் என்று குறிப்-பிடலாம்.
முதல்தலைமுறைப் பதிப்பாசிரியர்களின் காலகட்டத்திலேயே தமிழின் முக்கிய நூல்கள் அனைத்தும் பதிப்பிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள் போன்றவை அச்சேற்றப்பட்டிருந்தன. இவர்களின் தொடர்ச்சியாகவே பதிப்புத்-துறையில் அடுத்தகட்ட செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அவை குறிப்பாக பல பிரதிகளை வைத்து ஒப்பிட்டு திருத்தப்பதிப்புகள், உரைகளுக்கு உரை எழுதும் மரபு, விளக்கவுரை, குறிப்புரை மற்றும் அடிக்குறிப்புகள், மேற்கோள் அகராதி என்று முதற்பதிப்பை அடியற்றி மீள்பதிப்பு கொணர்தல் என்ற இரண்டாம் கட்ட வேலைகள், பதிப்புலகில் மேற்கொள்ளப்-படுகின்றன.
இவ்வாறு செயல்பட்டவர்களுள் கா.ர. கோவிந்தராஜ முதலியார், சி. கணேசய்யர் மற்றும் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை ஆகியோர் குறிக்கத்தக்கவர்கள். இதன் பின்னணியில் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் பதிப்புப் பணி, அவர் மேற்-கொண்ட இரண்டாம் கட்ட வேலைப்பாடுகள் மற்றும் திருத்தப் பதிப்பு-களை அவர் மேற்-கொண்டதன் காரணம் போன்றவை பதிப்பின் மற்றொரு முகாந்திர-மாகும். முன்னர் குறிப்-பிட்டது போன்று 19ஆம் நூற்றாண்டின் இறுதி, 20ஆம் நூற்றாண்-டின் தொடக்கத்தில் இவ்வா-றான செயற்பாடு-கள் பெருமளவில் நடந்-தன. வசதி கருதி இவர்-களை இரண்டாம் தலைமுறைப் பதிப்பாசிரியர்கள் என்று குறிப்பிடலாம்.
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை (வாழ்க்கைக் குறிப்புகள்)
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையின் இதுபோன்ற செயற்பாடுகளுக்குக் காரணங்களை ஆய்வோமாயின், அவரின் வாழ்க்கை குறித்த பின்னணி இதற்குச் சான்றாதாரமாக விளங்கு-வதினை அறிய முடியும். மே. வீ. வே. குறித்து இதுவரை பெருமளவில் யாராலும் பேசப்படாத நிலையில், குறிப்பாக அவரின் வாழ்க்கை வரலாறு வேறு யாராலும் முறையாகப் பதிவு செய்யப்படாத நிலையில், அவரின் மணிவிழா மலர், ‘இலக்கியச் சந்திப்பு’ இதழில் வெளிவந்த அவரின் நேர்காணல், ப. சரவணன் தினமணியில் (அக்.5. 2008) எழுதிய கட்டுரை, மா. சு. சம்பந்தன் தன் நூலில் (பக்305_307, அச்சும் பதிப்பும்) தந்துள்ள சில குறிப்புகள் ஆகியன இவரைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. இவை தவிர மே. வீ. வே. குறித்து வேறு எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து விரிவாக எழுத வேண்டிய தேவையுள்ளது.
மே. வீ. வேணுகோ-பாலப் பிள்ளை சைதாப்-பேட்டைக்கு மேற்கில் உள்ள மேட்டுப்பாளை-யம் என்னும் சிற்றூரில் யாதவ குலத்தில் வீராசாமிப் பிள்ளைக்கும் பாக்கியம் அம்மைக்கும் 31. 8. 1896ஆம் ஆண்டில் பிறந்தார். சைதாப்-பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சார்ந்த மாதிரிப் பள்ளியில் (ஜிமீணீநீலீமீக்ஷீ’s சிஷீறீறீமீரீமீ விஷீபீமீறீ ஷிநீலீஷீஷீறீ) தொடக்கக் கல்வி பயின்-றார். குடும்ப வறுமை காரணமாகப் படிப்பைப் பாதியில் விட்டு, மூன்று ரூபாய் ஊதியத்திற்கு சென்னை வேப்பேரியி-லுள்ள எஸ்.பி.ஸி.கே.1 அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் வேலையில் சேர்ந்து, அறிஞர் சிலர் நடத்திய இரவுப் பள்ளியில் தன் அறிவை பெருக்கிக் கொண்டார்.
சிறிது காலம் அஞ்சலகத்திலும், வழக்கறிஞ-ரிடத்திலும் வேலை பார்த்தார். தனக்கு வழி-காட்டிய பேரறிஞர்களாக டி. என். சேஷாசலம் ஐயர், வி.ஆர். அரங்கநாத முதலியார்,
கே. மாசிலாமணி, சி. நமச்சிவாய முதலியார், எம். தாமோதர நாயுடு, மோகனரங்கம் பிள்ளை ஆகியோரைப்பற்றி ‘என்னை வழிநடத்தியவர்கள்’ என்று குறிப்பிடுகிறார். (பக்.7, மணிவிழா மலர்)
மேலும் கா. ர. கோவிந்தராஜ முதலியாரிடத்-தில் பாடங் கேட்டுப் புலமை பெற்றார். சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் 1920_23இல் தமிழாசிரியராகவும், புரசைப்பாக்கம் லுத்தரன் மிஷன் பெப்ரீஷியஸ் நடுத்தரப் பள்ளியில் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். அப்போது ஜெர்மானிய அறிஞர் சிலருக்கும் பாடம்போதித்தார். அவர்களுள் டாக்டர். ஸ்டாலினும் அவரது மனைவி டபிள்யூ. கிராபேயும் உள்ளடங்குவர். ‘பெரிய-புராணத்தை ஜெர்மன் மொழியில் மொழி-பெயர்த்த டாக்டர். எல்வின் மகளான ஹில்டகார்டு என்பவருக்கு ஆசிரியராகப் பணியாற்றினேன்’ (பக்.14, மணிவிழா மலர்) என்று தனது ஆசிரியர் தொழிலைப் பெருமை-யாகக் கூறியுள்ளார். இவர் 1938இல் உடல் நலக்கேடு காரணமாக அத்தொழிலை விட்டார். பின்பு பதிப்புத்தொழிலையே முழுமையாக மேற்கொண்டார்.
இவ்வாறான பின்னணியின் மூலம் மே. வீ. வே. அவர்களின் பதிப்புப் பணிக்கும் அவரின் மற்ற படைப்புகளின் உருவாக்கத்திற்கும் பின்புலமாக அமைந்தவை ஆசிரியர் தொழில் சார்ந்த அனுபவமே எனக் கூற முடியும். குறிப்பாக அவர் தொடர்புகொண்ட நபர்களும், சமகால அறிஞர்களின் உறவும், பதிப்பகத்தார்-களின் நம்பிக்கையும் இவரைப் பதிப்புச் சூழலில் கால் கொள்ள வைத்தன.
பதிப்புத் துறையில் இவர் பெற்றுள்ள தேர்ச்சி-யைப் பயன்படுத்திக் கொண்ட பதிப்பகத்தினர்:_ பவானந்தர் கழகம், கே. பழனியாண்டிப் பிள்ளை, எம். ஆர். அப்பாதுரைப் பிள்ளை ஆகிய பதிப்பகத்தார்களின் வெளியீடுகள் பெரும்பாலும் மே.வீ.வே. அவர்களின் தலைமையிலே பதிப்-பானது. இதுபோன்ற பதிப்பகத்தார்களின் நெருங்கிய நட்பும், ஏற்கனவே இவர் செய்த அச்சுக்கோத்தல் தொழிலும், தமிழாசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் பதிப்புத்துறையில் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.
அடிப்படையில் இவர் ‘தமிழ்நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும், பிழையின்றித் திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதே என் வாழ்க்கையின் குறிக்கோள். ஆதலின் பதிப்புத்துறையில் என்னால் இயலும் வகையில் அறிவை வளர்க்கும் ஆங்கில நூல்கள் பலவற்றை யான் பெரிதும் பயின்று வந்துள்ளேன்’’ (இலக்கிய சந்திப்பு ஏப். 1973) என்று கூறுகிறார். மே.வீ.வே. அவர்கள் பதிப்புப் பணியை சிரத்தை-யாக மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தனது வாழ்நாள் குறிக்கோளாகவே கொண்டு அவற்றை செயல்படுத்தியும் காட்டி-னார்.
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையின் படைப்புகள்
மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பாசிரி-யராகவே அறியப்பட்டாலும் அவர் பல்வேறு படைப்புகளையும் இயற்றியுள்ளார். அவர் சிறுகதைகளையும், நாடக நூல்களையும் அவ்வப்-போது எழுதி வந்துள்ளார். மாணவர்களை மையமிட்டே சிறுகதைகளைப் படைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு பாடநூல் திட்டத்தின் கீழ் செயல்பட்டதாலும் இவர் தொடக்கப் பள்ளிக்கும், உயர்நிலைப் பள்ளிக்கும் ஏற்ற பல பாடநூல்களை எழுதிக் கொடுத்துள்ளார்.
சான்றாக, 1937இல் ‘கோபால் புதிய தமிழ் வாசகம்’ (ஏழாம் வகுப்பு) சென்னைப் புரசைப்-பாக்கம் லுத்தரன் மிஷன் உயர்கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியர் வித்துவான் மே. வீ. வேணு-கோபாலப்-பிள்ளை இயற்றியது’ என்றும் கிஜீஜீக்ஷீஷீஸ்மீபீ தீஹ் tலீமீ ஜிமீஜ்t தீஷீஷீளீ சிஷீனீனீவீttமீமீ விணீபீக்ஷீணீs க்ஷிவீபீமீ திஷீக்ஷீ ஷிt. நிமீஷீக்ஷீரீமீ  நிணீக்ஷ்ணீttமீ  றிரீ-455, பீணீtமீபீ 7.11.33’’ என்று தலைப்புப் பக்கத்துடன்
பி.ஜி.பால் அண்டு கம்பெனியால் வெளியிடப்பட்-டுள்ளது.
மேலும் இவர் கதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களின் பட்டியல் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கதைகள் அனைத்தும் பள்ளி மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டவை என்றும் விற்பனைக்கு உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் கதைகளுக்கு அணிந்துரை வழங்கியவர்களில் குறிக்கத்தக்கவர் கா. ர. கோவிந்தராஜ முதலியார். அவர் மே. வீ. வே. அவர்களின் கதைபற்றிக் கூறுவன பின்வருமாறு:_
“திருவாளர். மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை-யவர்கள் இக்கதையைத் தமிழில் இக்காலத்-திற்கேற்றவண்ணம் எழுதியிருக்கின்றனர். இக்கதையில் முன்பமைந்திருந்த சுவையிலும் பன்மடங்கு அதிகமான சுவை தோன்றும்படி இவர் இதனை எழுதியிருக்கிறார். இந்நூலின் நடை யாவரும் படித்துணர்ந்து களிகூரும்படி எளிமையும் இனிமையும் அமையப் பெற்றிருக்-கிறது. இவர்  இக்கதையில் அந்த அந்த இடங்க-ளுக்கேற்ற சில அணிகளை அமைத்திருக்கின்-றார். ‘அணியுள்ள கவிதை பணிவுள்ள வனிதை’ அல்லவா? பணிவுள்ள வனிதையின் தோற்றம் பார்ப்பவர்களது கண்களைக் கவர்வது போல இந்நூலும் படிப்பவர்கள் மனதைக் கவரும் என்பதில் ஐயமின்று’’
(கா.ர.கோ. துருவன் கதையின் அணிந்துரை)
கா. ர. கோவிந்தராஜ  முதலியார் குறிப்பிடும் இம்மேற்கோளினை ஊன்றிக் கவனித்தால் இஃது விளம்பர நோக்கத்துடன் விற்பனையை முன்-வைத்து எழுதப்பட்ட கதை என்பது விளங்கும். இதேபோன்று மே. வீ. வே. வின் எல்லாக் கதை-களும் ஏதோ விதத்தில் மாணவர்களுக்காகவும், விற்பனை நோக்கத்துடனும் எழுதப்பட்டவையே தவிர படைப்பு ரீதியாக எழுதப்பட்டவையன்று. இதிலும் இவரின் கதைகள் பெரும்பாலும் தழுவல் கதைகளே.
‘அம்பலவாணன் (அ) கற்பகவனத்தில் நடந்த கடுங்கொலை’ என்ற துப்பறியும் தமிழ்க்-கதையை மே. வீ. வே. பிள்ளையும், மங்கலம் குப்புசாமி முதலியாரும் சேர்ந்து 1925இல் எழுதியுள்ளனர். இதன் முன்னுரையில் ‘நவீனத்தைப் பற்றி நல்லெண்ணம் பலர்க்கும் தோன்றும்படி செய்யப் பல அறிவாளிகள் இப்பொழுது முயன்று வருகின்றார்கள். அவர்களைப் பின்பற்றியே நாங்களும் இச்சிறுநூலை இயற்றினோம்’ என்று குறிப்பிடுகின்றார்.
இதில் இக்கதையை யார் எழுதியது என்று சரிவர தெரியவில்லை. மேலும் நவீனம் குறித்த இவர்களின் புரிதலும் ஆங்கில_மேலைநாட்டு அறிஞர்களின் அறிமுகம் சார்ந்த விடயமாகவே இதனைக் காண வேண்டியுள்ளது. இவரின் புனைகதை வரலாற்றில் எங்ஙனம் சார்ந்து நிற்கிறது என்பதை அறிய முடியவில்லை. இஃது     மேலாய்விற்கு உரியதாகும். மேலும் இவரின் கதைகளுக்கு ஜிலீமீ பிவீஸீபீu நாளிதழில் அக்கால-கட்டத்தில் மதிப்புரைகளும் வெளிவந்துள்ளன என்பது கூடுதல் தகவலாகும்.
மே. வீ. வே. - நாடகத் தொடர்பு
பிள்ளையவர்கள் புரசைப்பாக்கம் எம். ஒய். எம். ஏ. இரவுப் பாடசாலையின் சார்பில் நடத்தப்-பெற்ற நாடகத்தில் நடித்துள்ளதாகவும் (பக்.36. இலக்கிய சந்திப்பு), ‘கண்ணப்பர் பரிசு’ என்ற நாடக நூல் ஒன்றை எழுதியுள்ளதாகவும் கூறி-யுள்ளார். (ஆனால் இஃது காணக் கிடைக்க-வில்லை.) மேலும் ‘விசுவநாதம்’ என்ற நாடக நூலினைப் பதிப்பித்துள்ளார். இவ்வாறு மே. வீ. வே. அவர்கள் வாய்ப்பு கிடைத்த இடங்களில் அதனைத் தவறவிடாது பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
மே.வீ.வே.வின் பதிப்புகள்
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பினை இரண்டாம் தலைமுறை என்று முன்னர் குறிப்-பிட்டது போன்று அவரின் பதிப்புப்பணிகள் மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாகும். குறிப்பாக இலக்கணப் புலமை பெற்ற  (இலக்கணத் தாத்தா என்று அழைக்கப்படுபவர்) மே. வீ. வே. அதில் ஆழ்ந்து அரிய முயற்சிகளின் ஊடாக தனது பதிப்பு நூல்களை பதிப்பித்துள்ளார்.
பள்ளி ஆசிரியராகவும், பாடநூல் செயற்-குழுவில் இருந்த காலங்களிலும் மாணவர்-களுக்கான நூல்களைப் பதிப்பித்தவர். ஆனால் பின்வருங்காலங்களில் தமிழ்ப்பதிப்பு நூல்களில் பெரிதும் ஈடுபாட்டுடன் மீள்பதிப்புகளையும், விளக்க_குறிப்புரைகளுடன் விரிவான பதிப்பு-களை அளித்து பதிப்பின் மற்றொரு தளத்தை அகலப்படுத்தியவர் எனலாம்.
பதிப்பித்த நூல்கள்   
பத்து நூல்களைப் பதிப்பித்துள்ளார் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்கள். இவற்றில் விளக்கக் குறிப்புரைகளுடன் பதிப்பிக்கப்படும் நூல் மறுபதிப்பாகக் குறிப்பிடப்படாமல் முதற்பதிப்பாகவே குறிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னிணைப்பில் தரப்பட்டுள்ள நூல்களின் பதிப்புகள் குறித்தும், அதன் மூலமான விடயப்-பொருள்களில் மே.வீ.வே. அவர்கள் கொண்-டுள்ள கருத்தின் போக்குகள் குறித்தும் காண்போம்.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம்:- மே.வீ.வே.
தொல்காப்பிய சொல்லதிகாரம் நச்சினார்க்-கினியர் உரையை சி. வை. தாமோதரம் பிள்ளை-யவர்களே முதன்முதலில் 1892இல் பதிப்பித்தார். இப்பதிப்பிற்குப் பின் நாற்பத்தொன்பது ஆண்டு கால இடைவெளியில் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு 1941இல் பதிப்பிக்கப்பட்டு பவானந்தர் கழகத்தால் வெளியிடப்பட்டது. இப்பதிப்பை மே.வீ.வே. பதிப்பித்ததற்கான காரணங்களைப் பதிப்புரையில் விரிவாகக் கூறுகிறார்.
மேலும் சி. வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பினைப் பெரிதும் போற்றும் இவர் அதே சமயம் அவரின் பதிப்பில் உள்ள குறைகளைப் போக்கவே இப்பதிப்பினைக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கிறார். அதாவது பல சுவடிகளைத் தேடி அழிவிலிருந்து காத்தவர் சி.வை.தா. என்று அவரின் பதிப்பு முயற்சிகளை-யும், தேடலையும் பெரிதும் பாராட்டுகிறார்.
மற்றொரு விடயமாக முதற்பதிப்பின் பிழைகளைச் சுட்டுகிறார். அவை பிள்ளைய-வர்கள் இந்நூலை வெளியிட்ட காலம், சங்க இலக்கியங்கள் மிகுதியும் பயிற்சியில்லாத காலமாதலின், அவ்விலக்கியங்களினின்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர், தமது உரையில் மேற்கோளாக எடுத்தாண்ட பகுதிகளிற் பல உண்மை உருவம் காணாதவாறு பதிப்பிக்கப்-பட்டன.’(பக். ஸ்வீவீவீ தொல்_சொல்_நச்)
‘யான் இந்நூலை என் சிற்றறிவிற்கும் பதிப்புத்தொழில் அனுபவத்திற்கும் பெருமுயற்-சிக்கும் இயைந்த வகையில் ஒருவாறு ஆராய்ந்து கிடைத்த ஏட்டுப் பிரதிகளின் உதவியினாலும் பேரறிஞர்களின் பெருமுயற்சியால் வெளிவந்த சங்க இலக்கியங்களின் துணையாலும், இந்நூலின் முதற்பதிப்பில் எனக்குப் புலனான வழுக்களைக் களைந்து, மேற்கோள்களுக்கு _ அடிக்குறிப்பில் ஆதாரம் காட்டி, பாட பேதங்-களைக் குறிப்பிட்டு, கடின சந்திகளைப் பிரித்துப் பொருள் அமைதிக்கேற்ப நிறுத்தக் குறிகளை அமைத்து அரும்பத முதலியவற்றின் அகராதியும், விஷய அகராதி, மேற்கோள் அகராதியும் தொகுத்து நூலின் இறுதியிற் சேர்த்தும் பதிப்பித்துள்ளேன்’(ப. வீஜ், தொல்_சொல்_நச்.).
இவ்வாறு விரிவான பதிப்புரையைத் தந்துள்ளார். மேலும் அவர் நச்சினார்க்கினியர் உரையினையுடைய ஓர் ஏட்டுப்பிரதியை உ.வே.சா. அவர்களிடமிருந்து பெற்றதாகக் குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் உ. வே. சா. இதனைப் பதிப்பிக்காமல் மே. வீ. வே. விடம் அளித்ததற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுவது குறிக்கத்தக்கது. மேலும் நாற்பத்-தொன்பது வருடங்கள் கழித்துதான் இப்பதிப்பு வெளிவருகிறது. உ.வே.சா.விடம் எவ்வளவு காலமாக இருந்திருக்கும் என்ற செய்தி எதையும் இதற்கான பதிவுகள் எதனையும் தனது நூலில் அவர் சுட்டவில்லை.
மேலும் சில ஏட்டுப்பிரதிகளை சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலிருந்து பெற்றதாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு பல பிரதிகளைக் கண்டு பாடபேதங்களை அறிந்து, மேற்கோள், அடிக்குறிப்பு, அகராதி சேர்த்து பதிப்பிக்கும் பணியினை இவர் சிறப்பாகச் செய்திருக்கிறார். இவ்வாறான செயற்பாடுகளில் அவர் தொல்காப்பியத்திற்கு சிறப்பான பதிப்பைக் கொடுத்தார் என்றாலும், சி.வை.தா.வின் பதிப்பின் பிழைகளைச் சுட்டுவது குறித்து இங்கு ஊன்றிப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இவரின் காலக்கட்டத்தில் சங்க இலக்கியம் அனைத்தும் ஒரு வழியாக அச்சேற்றப்பட்ட காலம் ஆதலால் மேற்கோள்களைக் குறிப்பிடுவது எளிது. (இஃது ஆய்வுக்குரியது)
யாப்பருங்கல விருத்தியுரை-பதிப்புப்பாடுகள்
சென்னைப் பவானந்தர் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கழக உறுப்பினராக இருந்தபோது பெரிதும் உழைத்து விளக்கக் குறிப்புகளுடனும், அருஞ்சொல்லகராதி, பொருட்குறிப்பகராதி, மேற்கோளகராதி முதலிய பிற்சேர்க்கைகளுடன், பல நூறு பக்கங்களில் யாப்பருங்கல விருத்தியுரையைத் திருத்தப் பதிப்பாக 1960இல் பதிப்பித்துள்ளார்.
இதனை பதிப்பித்ததற்கு முக்கிய காரணமாக அவர் குறிப்பிடுவதினை நோக்க வேண்டும். அதன் மூலமே இந்நூலின் மீது அவர் புரிந்த அறிவுச் செயல்பாட்டினை நாம் அறிய முடியும். “யான் இந்நூலை ஆசிரியரிடம் பாடங்கேட்ட போது, பல ஐயங்கள் எழுந்தன. அடிக்கடி அவ்வையங்-களை எழுப்பி விடைபெறுவதை அறிந்த என் ஆசிரியர் (யாரை குறிப்பிடுகிறார் என்பது குறித்து அறிய முடியவில்லை) ‘பிற்காலத்தில் இந்நூலில் உள்ள பிழைகளை ஆய்ந்து பதிப்பிக்க வேண்டுவது உனது கடமை’, என்று குறிப்பிடுகிறார். அஃது என் மனதில் ஆழ்ந்து பதிந்ததால் இந்நூலைப் பதிப்பிக்கும் கடமையை மேற்கொண்டேன்’’. பாடபேதங்களை களைவதற்கு வையாபுரிப்பிள்ளையிடம் இருந்து இரண்டு ஏட்டுச் சுவடிகளைப் பெற்றதாக குறிப்பிடுகிறார். இதன் மூலம் மற்ற பதிப்பாசிரி-யர்களிடத்தில் அவர் கொண்டிருந்த இணக்கப் போக்கை அறிய முடிகிறது.
இஃது தமிழ் இலக்கண நூல்களிலும், பதிப்புகளிலும் சிறப்பானதொரு பதிப்பு நூலாகத் தமிழறிஞர்களால் போற்றப்படுவது குறிக்கத்-தக்கது. இந்நூலினை விணீபீக்ஷீணீs  ளிக்ஷீவீமீஸீtணீறீ  விணீஸீusநீக்ஷீவீஜீts லிவீதீக்ஷீணீக்ஷீஹ் முதலில் வெளியிட்டது. இதனை 1998இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது.
தஞ்சை வாணன் கோவை : பதிப்புப்பாடுகள்
‘1939இல் எம்.ஆர். அப்பாதுரைப் பிள்ளையால் சென்னைப் புரசை லுத்தரன் மிஷன் உயர்கலாசாலைத் தலைமைத் தமிழா-சிரியர் வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை எழுதிய விளக்கக் குறிப்புரை முதலிய-வற்றுடன்’ வெளியிடப்பட்டது இப்பதிப்பு நூலாகும். (தமிழில் கோவை நூல்களில் மிகவும் குறிக்கத்தக்கது தஞ்சைவாணன் கோவையாகும்.) அகப்பொருளுக்கு இலக்கணம் உரைத்த இக்-கோவை நூலே பிறவற்றைவிட புகழ் வாய்ந்த-தாகும்.
அத்தகைய கோவையை அதன் ஆசிரியராகிய பொய்யாமொழிப் புலவரின் மரபில் தோன்றிய குன்றத்தூர் அட்டாவதானியார் சொக்கப்ப நாவலர் இயற்றிய பொழிப்புரையுடன் வெளி-யிடப்பட்டது முதற்பதிப்பாகும். பிறகு 1936இல் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரால் வித்துவான் ந.சுப்பையா பிள்ளையவர்களின் ஆராய்ச்சி விளக்கக்குறிப்புடன் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இது பழைய உரையினை ஏட்டிலுள்ளபடியே பதிப்பித்ததால் மாணவர்-கட்கு எளிதில் விளங்காமல் போனது.
அதனைப் போக்கும் பொருட்டே இப்-பதிப்பை 1937இல் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்கள் விளக்கக் குறிப்புரை, அரும்பத அகராதி முதலியவை தொகுத்து அச்சிட்டு வெளியிட்டார். இதற்கு ஆ. கார்மேகக் கோனார் அளித்த அணிந்துரையில் மே.வீ.வே. அவர்களின் பதிப்பைப் பெரிதும் பாராட்டுகிறார். ‘தஞ்சை-வாணன் கோவையின் இப்புதிய பதிப்பு நமக்குக் கிடைக்கும்படிச் செய்த இதன் விளக்கக் குறிப்புரையாசிரியர் மே. வீ. வேணுகோபால் பிள்ளையவர்களது, உழைப்பும் புலமைத்திறனும், தமிழ் அபிமானிகளால் பெரிதும் பாராட்டு-தற்குரியவராம்’ என்ற (தஞ்சைவாணன் கோவை. 1939) மேற்கோள் அவரின் புலமையின் சாரத்தைப் பறைசாற்றுகின்றன.
கூத்த நூல்கள்: (மே.வீ.வே.வின் முதல் பதிப்பு நூல்)
‘1968இல் தமிழ்நாட்டுச் சங்கீத நாடக சங்கம் மற்றும் மத்திய சங்கீத நாடக அகாடமி உதவியு-டன், கவிஞர் பாலபாரதி, ச. து. சு. யோகியார் அவர்களின் விளக்கக்குறிப்புகளுடனும், பொழிப்-புரையுடனும், திருமதி. ச. து. சு. யோகியார் வெளியீடாகிய சாத்தனார் அருளிச்செய்த ‘கூத்தநூல் தொகுதி_1’ என்ற நூலே மகாவித்து-வான் மே.வீ.வே. அவர்களின் முதல் முதற்பதிப்பு நூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்ட அனைத்து பதிப்புகளும் இரண்டாவது (அ) மூன்றாவது பதிப்பினைக் கொண்ட உரைகளுக்கு உரை என்ற மரபின் தொடர்ச்சியாகக் காணலாம்.
ஆனால் கூத்த நூலின் இரு தொகுதிகள் இவரின் பதிப்புலகில் முதற்பதிப்பாக அமைந்து சிறப்பிடத்தைப் பெறுகின்றன. இருப்பினும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பெ. தூரன் அவர்கள் இந்நூலின் பதிப்பு குறித்தோ, பதிப்பாசிரியர் குறித்தோ எந்தவொரு இடத்தி-லும் குறிப்பிடவில்லை. இஃது ஆய்விற்குரியது. இந்நூலை பதிப்பித்ததுடன் இதற்கு விரிவான பதிப்புரை ஒன்றையும் மே. வீ. வே. அவர்கள் அளித்துள்ளார்.
கூத்த நூல் இரண்டாம் தொகுதி
இத்தொகுதி சற்றுக் காலதாமதமாகவே வெளியிடப்பட்டது. அதற்கான காரணங்களும் அறிய முடியவில்லை. இஃது 1987இல் திருமதி. ச. து. சு. யோகியாராலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உதவியாலும், மே.வீ.வே. அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. சுமார் 19 வருடங்கள் கழித்து இந்நூல் பதிப்பிக்கப்படு-கிறது.
எவ்வாறு இருப்பினும் இஃது மே. வீ. வே. அவர்களின் பதிப்புகளின் வரலாற்றில் குறிப்-பிடத்தக்க நூலாகும் என்பது தெளிவான ஒன்றாகும்.
மேலும் முருகன் மற்றும் பஞ்சதந்திரப்பாடல் புகழ்மாலை போன்ற நூல்களையும் முறையே 1949, 1958இல் பதிப்பித்துள்ளார். இவையும் அவரின் வரலாற்றை எழுதுவோர்க்கும், மே.வீ.வே.வையும், அவரின் பதிப்பின் பின்னணி குறித்தான புரிதலையும் ஏற்படுத்தும். இவை மாணவர்களுக்கும் பக்தர்களுக்கும் என்ற குறிப்புடனே தெளிவாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இவ்வாறான நிலைகளில் மே.வீ.வே. அவர்களின் பதிப்பு குறித்தும், அதில் அவர் ஆற்றிய பங்கினையும், உழைப்பினையும் ஒருவாறு அறியக்கூடும்.
முடிவாக
மேலே தொகுக்கப்பட்ட தரவுகளை அடிப்-படையாக வைத்து மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையின், பதிப்பு வரலாற்றை ஒரு வழியாகக் கட்டமைக்க முடியும். குறிப்பாகத் தமிழ்ப் பதிப்புச் சூழலில் மே. வீ. வே. அவர்களின் இடம், பணி, இன்னது என்று அடையாளப்படுத்தும் முயற்சியாகவே இக்கட்டுரை அமைக்கப்பட்-டுள்ளது.
கீழ்க்காணும் மூன்று அடிப்படை நிலைகளில் மே. வீ. வே. அவர்களை உள்வாங்க வேண்டிய அவசியத்தை உணரலாம்.
- இளம் வயதில் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை, இடைவிடாது படிப்பின்மீது மேற்-கொண்ட விருப்பம் மற்றும் தொடக்கத்தில் அச்சகத்தில் வேலை. இவற்றின் மூலமாகப் பெற்ற அறிவும், அறிஞர் பெருமக்களின் வழிகாட்டு-தல்கள் குறிப்பாக டி. என். சேஷாசலம், கா. ர. கோவிந்தராஜ முதலியார் போன்றவர்களின் பழக்கம்.
- ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும், பள்ளிப் பாடநூல் கழகத்தின் மூலமான பொறுப்பு, மாணவர்களுக்குப் பாடம் போதித்தல், நூல் எழுதுதல் அனுபவம்.
- பதிப்பகங்களின் நட்புறவு-- -_ பவானந்தம் பிள்ளையின் பழக்கம் மற்றும் பவானந்தர் கழகத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம். ஆர். அப்பாதுரையவர்களின் உறவு இவை தொடர்பான பதிப்பு குறித்த தேடல்.
இவ்வாறான அடிப்படையில் மே. வீ. வே. அவர்கள் தனது வாழ்க்கையனுபவத்தின் வழியாக பெற்ற அறிவை தக்க தருணங்களில் வெளிப்படுத்தி தனக்கான இடத்தைத் தக்க-வைத்து கொண்டுள்ளார்.
மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை நிறுவன ரீதியாகவும், பொறுப்புகளின் வாயிலாகவும் சரியான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார். இரண்டாம் கட்டநிலை பதிப்பா-சிரியராக (அ) இரண்டாம் தலைமுறைப் பதிப்பாசி-ரியராக அடையாளப்படுத்தப்படும் இவர் தனக்கு முன் நிலவிய பதிப்புச் சூழலை நன்கு உள்வாங்கி இருந்தார் என்றே கூற வேண்டும்.
சி. வை. தா., உ. வே. சா. போன்ற முதல் தலைமுறைப் பதிப்பாசிரியர்கள் அனைத்தையும் அச்சேற்றிவிட்ட நிலையில் தனக்குக் கிடைத்த ஏட்டுப்பிரதிகளை வைத்துக்கொண்டு முதல் பதிப்போடு ஒப்பிட்டு, தன்னால் என்ன செய்ய முடியுமோ அந்த வகையில் இலக்கணப் பிழை-யில்லாமல், பாடபேதம் கண்டு, அடிக்குறிப்பு, மேற்கோள், அகராதி விளக்கக் குறிப்புரை போன்று ஜிணீதீறீமீ கீஷீக்ஷீளீ என்ற அடிப்படையில் திருத்தப் பதிப்பாகக் கொண்டு வருதல் என்னும் வேலையைச் சரிவரவே செய்திருக்கிறார்.
இக்கால கட்டத்தில் வாழ்ந்த மற்ற ஆசிரியர்-களில் எத்தனை பேர் இம்மாதிரியான வேலைகளை செய்துள்ளனர் என்பது கேள்விக்-குறியே. முதல் தலைமுறைப் பதிப்பாசிரியர்கள் விட்டுச் சென்ற இடத்தை இவர் அரிதின் முயன்று நிரப்பியுள்ளார்.
மேலும் இவரின் சிந்தனை முழுவதும் மாணவர்களை நோக்கியதாகவே இருந்திருக்-கிறது. தான் கல்வி கற்ற காலத்தில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை மனதில் வைத்து, புரியாத கடினமான பகுதிகளை எளிமைப்படுத்தும் பொருட்டே விளக்கவுரை, மேற்கோள் அகராதி போன்ற பணிகளைச் செய்துள்ளார். குறிப்பாக இவர் 1928இல் வித்துவான் பட்டத்திற்கு படிக்கும்போது சில செய்யுட்களுக்கு உண்மைப் பொருள் தெரிய ஏற்பட்டதை குறிப்பிட்டு பின்னாளில் அதற்கு விளக்கவுரை எழுதிப் பதிப்பித்திருப்பது இங்கு கவனத்திற்குரியது.
மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை அவர்க-ளின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய அதே நிலையில் அவரின் சில செயற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் முறையே.
- மே. வீ. வே. அவர்கள் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியத்தைப் பதிப்பிக்கும் போது, சி. வை. தா.வின் பதிப்புடன் பல பிரதிகளை ஒப்பிட்டு ஆய்ந்தேன் என்றும் அதாவது உ.வே.சா.விடமிருந்து ஏட்டுப்-பிரதியைப் பெற்றும், சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் சில பிரதிகளைப் பெற்றேன் என்றும் யாப்பருங்கல விருத்தியுரைக்கு வையாபுரிப்-பிள்ளையிடமிருந்து பெற்றேன் என்ற தகவலை-யும் தருகிறார்.  இவ்விரு பதிப்புரையில் மட்டும் குறிப்பிடும் மே.வீ.வே மற்றப் பதிப்புரைகளில் இவ்வாறான தகவல்களைப் பதிவு செய்யாமல் போவதேன் என்கிற வினா எழுகிறது.
- காஞ்சியில் சீவக சிந்தாமணியை சொற்பொழிவாற்றியதன் மூலம் ‘சிந்தாமணிச் செல்வர்’ என்ற பட்டமும், கம்பன் கழகத்தில் சேர்ந்து பணியாற்றுவதும் கதைகள், கதைப் பாடல்கள், பாடக்குறிப்புகள் (கோனார் உரை போன்றது) எழுதுவது போன்றவற்றிலும் வித்து-வான் பட்டத்தின் உள்ளீட்டைக் காணமுடி-கிறது.
- பதிப்பு வளர்ச்சியானது இவரின் காலக்கட்டத்தில் தொழில் வளர்ச்சியாகவும், பதிப்புகள், தொழில் சார்ந்த ஊடகமாகவும் மாற்றப்படுவதினை அறியலாம். பாடத்திட்டத்-தின் கீழ் உருவாக்கப்படும் அனைத்து செயல்-பாடுகளும் இதனை அறிவுறுத்தும் சான்றுக-ளாகும். மாண-வர்கள் அனைவரும் இதனை வாங்க வேண்டிய அவசியத்தினை உணர்ந்தே பாடத்திட்டத்தினை வரையறுத்து செயல்-படுத்தப்பட்டுள்ளன.
மே. வீ. வேணுகோபாலப்பிள்ளையை சி. வை. தா., உ. வே. சா. போன்று ஒளிவட்டம் கட்ட வேண்டிய தேவையில்லை என்றாலும், பதிப்பு வரலாற்றில் அவரின் பதிவு குறித்து இல்லாமல் இருப்பின் அஃது முழுமையான வரலாறாகா என்பதன் அவசியத்தையும் தேவையையும் நாம் உணரவேண்டும். அந்த வகையில் மே. வீ. வே குறித்து இன்னும்  பல ஆய்வுகள் நடக்குமாயின் ஏதோ ஒருவகையில் அஃது தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுப்புள்ளியையாவது தொடும். தமிழ்ப்பதிப்பு வரலாற்றை மேலும் விரிவடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment