Tamil books

Thursday 21 April 2011

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும்

ப. பெருமாள்

இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நூலகங்களுள், சரஸ்வதி மகால் நூலகம் ஒன்றாகும். இந்நூலகம் கி.பி. 16ஆம் நூற்றண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்-தில் அரண்மனை நூலகமாக ஆரம்பிக்கப்பட்டு, பின் வந்த மராட்டிய மன்னர்களால் வளர்க்கப்-பட்டது. நாயக்க மன்னர்கள் தஞ்சையை கி.பி. 1535ஆம் ஆண்டு முதலாக ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்களுள் முக்கியமானவர்கள் ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆவர். இவர்களது காலத்தில் இம்மன்னர்கள் இயற்றிய நூல்கள் மற்றும் அரண்மனைப் புலவர்கள் இயற்றிய நூல்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நூலகம் சரஸ்வதி பண்டாரம் என அழைக்கப்பட்டது. கி.பி. 1676க்குப் பின் மராட்டிய மன்னர்கள் 1855 வரை ஆட்சி செய்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் கி.பி. 1684 முதல் கி.பி. 1712 வரை ஆட்சி செய்த சகஜி மன்னரும், கி.பி. 1798 முதல் கி.பி. 1832 வரை அரியணையிலிருந்த இரண்டாம் சரபோஜியும் ஆவர். சகஜி மன்னர் அதிகமாகப் புலவர்களை ஆதரித்ததனால் பல நூல்கள் எழுதப்பட்டன. இவர் காலத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி, மற்றும் மராத்தி ஆகிய நான்கு மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றின. சகஜி மன்னரும் நூல்கள் இயற்றி-யுள்ளார். அவர் திருவாரூர் தியாகராஜர் பேரில் பாடிய கீர்த்தனங்கள் மிகவும் குறிப்பிடத்-தக்கனவாகும்.
இரண்டாம் சரபோஜி மன்னர் இந்நூலகத்தை வளர்த்து உலகறியச் செய்தவர் ஆவார். இவருடைய கல்வி மற்றும் கலை ஆர்வத்தினால் அரிய சுவடிகள், ஓவியங்கள், உலக வரை-படங்கள் மேலை நாட்டு அச்சு நூல்கள் இந்நூல-கத்தில் சேர்க்கப்பட்டன. இவர் கி.பி. 1820இல் காசி யாத்திரை செல்லும்போது தன்னுடன் நூலகர்கள் மற்றும் எழுத்தர்களை அழைத்துச்-சென்று இந்நூலகத்தில் இல்லாத சுவடிகளைப் பிரதி செய்து சேர்த்துள்ளார்கள். மேலும் காசியில் உள்ள 64 படித்துறைகளின் ஓவியத்தை அரண்மனை ஓவியர்களால் வரையப்பெற்று இந்நூலகத்தில் சேர்த்துள்ளார். மராட்டிய மன்னர்களால் வட இந்தியாவிலிருந்து இராமேசுவரம் செல்லும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சத்திரங்களிலும் தான் அமைத்த -ஒரத்தநாடு சத்திரத்திலும் பள்ளிகள் ஆரம்பித்து, தமிழ், மராத்தி, வடமொழி கற்பிக்கப்பட்டது. மாணவர்களுக்குப் பாடப்புத்தகம் வழங்கு-வதற்காக கி.பி. 1803இல் கல்லால் ஆன தேவநாகரி அச்சகத்தை தோற்றுவித்தார். அவ்வச்சகத்தின் பெயர் நவ வித்யா எந்திரசாலா என்பதனை அவ்வச்சகத்தில் அச்சிடப்பட்ட குமாரசம்பவ சம்பு, அன்னம்பட்டா, அமரகோசம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம். தென்னிந்தியாவில் முதன்முதலில் ஆரம்பித்த தேவநாகரி அச்சுக்கூடம் இது என இந்தியன் ஆன்டிக்கொரி என்ற நூலில் குறிப்பிடப்பட்-டுள்ளது.
சரபோஜி மன்னர் மருத்துவத்தில் மிகவும் ஆர்வம் மிக்கவர். இவ்வரண்மனையில் ‘தன்வந்திரி மகால்’ என்னும் மருத்துவமனையை ஆரம்பித்து மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்தார். இம்மருத்துவமனையில் சித்த, ஆயுர்வேத, அலோபதி மற்றும் யுனானி மருத்துவமுறைகள் பயன்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மருத்துவமுறைகளைப் பிற்கால சந்ததியினர் அறியும் வகையில் அரண்மனைப் பண்டிதர்-களைக் கொண்டு ஓலைகளில் எழுதி வைக்கச் செய்துள்ளார். இது போன்று வானவியல், சோதிடம், தத்துவம் போன்ற பலதரப்பட்ட வல்லுநர்களைக் கொண்டு நூல் எழுதச் செய்து சேர்ப்பித்துள்ளார். இவருடைய காலத்தில் தஞ்சைக்கு வருகை புரிந்த ரெவரண்டு ஃபாதர் பிஷப்ஹீபர் மற்றும் வேலன்சியா போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து, இம்மன்னர் கல்வி மற்றும் கலைக்கு ஆற்றிய பணியினை அறிய முடிகிறது. இம்மன்னர் பதவிக்கு வந்தவுடன் இந்நூலகச் சுவடிகளுக்கு சரியான அட்டவணை இல்லை என்பதை அறிந்து, தகுந்த நபர்களை அமர்த்தி ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளுக்கு ஓலையிலும், காகிதச்சுவடிகளுக்குக் காகிதத்திலும் அகர-வரிசைப்படுத்தி அட்டவணை தயார் செய்-துள்ளார். இவ்வாறு இவர் இந்நூலகத்தை ஓர் அரிய கருவூலமாக மிளிரச் செய்தார். அவருடைய தொண்டினை உலகுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அவருடைய பெயரைச் சேர்த்து தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் என்று அழைக்கப்படுகிறது.
சுவடிகள், நூல்கள் தொகுப்பு
இந்நூலகம் கி.பி. 1918ஆம் ஆண்டு வரை அரண்மனை நூலகமாகவும் பின் தமிழக அரசின் ஆணையின்படி பொதுநூலகமாகவும் மாற்றி-யமைக்கப்பட்டது. மேலும் இந்நூலகத்தை மேம்படுத்த மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் உள்ள சுவடிகள் மன்னர்காலத்தில் தொகுக்கப்பட்டது மட்டுமின்றி, பல கல்வியாளர்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற சுவடிகளும் நூல்களும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 49,000 சுவடிகள் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மற்றும் மராட்டிய மொழிகளில் பனை ஓலைகளிலும், காகிதத்திலும், எழுதப்பட்டுள்ளன. இந்நூலகச் சுவடிகள் வேதாந்தம், புராணம், இசை, நாடகம், மருத்துவம், சோதிடம் போன்ற 18 பிரிவுகளைக் கொண்டுள்ளன. இந்நூலகத்தில் சுமார் 7,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ்மொழிச் சுவடிகள் உள்ளன. இச்சுவடிகள் பனைஓலைகளில் மட்டும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச்சுவடிகளை இலக்கியம் மற்றும் மருத்துவம் எனப் பல பிரிவு-களாகப் பிரித்து இருபத்தாறு தொகுதிகள் விவர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளன. இச்-சுவடிகள் இலக்கியம், சிற்றிலக்கியம், புராணம், தலபுராணங்கள், பக்தி இலக்கியங்கள், ஜோதிடம், தத்துவம், இசை, நாடகம், சித்த மருத்துவம் போன்ற தலைப்புகளில் உள்ளன. சில தமிழ்ச்-சுவடிகள் வடமொழி வார்த்தை கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச் சுவடிகளில் ஆண்டு, மாதம், நாள் மற்றும் கிழமை குறிப்பிட்டு இருப்பின் காலம் காணலாம். ஆனால் ஆண்டு, மாதம், நாள் மட்டும் குறிப்பிட்டிருப்பின் தமிழ் வருடங்களில் எந்தச் சுற்று எனக் காண்பது கடினம். தற்பொழுது சுவடிகளை நூல்களாகப் பதித்தல் போன்று முற்காலத்தில் மடாதிபதிகள் தங்கள் மாணாக்கர் மூலம் ஒரு சுவடிக்குப் பல பிரதிகள் தயாரித்து பலருக்குத் தானமாக கொடுத்துள்ளனர். இதனை கிரந்த தானம் என குறிப்பிடுவர். இதுபோன்ற செயல்பாட்டினாலும், பல அறிஞர்கள் தங்களுக்குத் தேவையான சுவடிகளை மற்றவர்களிடம் இருந்து பிரதி செய்தமையாலும் இன்று ஒரு தலைப்பில் பல சுவடிகள் கிடைக்கப் பெறுகின்றன.
அரிய சுவடிகள்
இந்நூலகச் சுவடிகள் சுமார் 400 ஆண்டு-களுக்கு முன் எழுதப்பட்டதாகக் கொள்ளலாம். இந்நூலகத்தில் உள்ள பல தலைப்புகளில் உள்ள சுவடிகள் இங்கு மட்டுமே உள்ளது, மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் சில சுவடிகள் அரியனவாகவும் கருதப்படுகிறது. அவற்றுள் வடமொழிப் பிரிவில் உள்ள ‘சப்தார்த்த சிந்தாமணி’ என்னும் நூலில் வலது பக்கம் இருந்து படித்தால் இராமனின் கதை-யாகவும் இடது பக்கத்தில் இருந்து படித்தால் கிருஷ்ணன் கதையாகவும் கூறும் வண்ணம் வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. ‘நிரோஷ்ட்ய சீதா கல்யாணம்’ என்னும் தெலுங்கு நூல் சீதா கல்யாணத்தை இரு உதடுகளும் சேராமல் உச்சரிக்கும் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ‘மேகமாலா மஞ்சரி’ என்னும் நூல் மேகக்கூட்டங்கள், விண்மீன்கள் போன்ற-வைகளைக் குறிப்பிடுவதுடன் மழை பெறும் அளவு, வானிலை போன்ற பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதுபோன்று தமிழ்ச் சுவடிகளில் ‘கூப சாத்திரம்’ என்னும் சுவடி நிலத்தடி நீர் பற்றிய ஆய்வின் முக்கிய நூலாகும். ‘பூமி சல்லியம்’ என்னும் பிறிதொரு சுவடி நிலத்தடி மூலங்களைப் பற்றிக் கூறுவதாகும். பஞ்சபட்சி சாத்திரம் என்னும் மிகச் சிறிய அளவு சுவடி (5 ஜ் 3 செ.மீ.) இந்நூலகத்தில் உள்ளது. மேலும் சில சுவடிகள் தமிழ் மொழியில் வேறு எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ‘பாவப்பிரகாசிகா’ என்னும் கண்நோயைப் பற்றிய நூலும், வீரசிவாஜிக்கு அவரது குரு சமர்த்த ராம்தாஸ் செய்த ‘தால போதம்’ என்னும் வேதாந்த உபதேசங்கள் தமிழ் மொழியில் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இதுபோன்ற பல அரிய சுவடிகள் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.
அரிய நூல்கள்
இந்நூலகத்தில் சுவடிகளுடன் சுமார் 65,-000 அச்சுநூல்கள் உள்ளன. இந்நூல்கள் மேலை நாட்டில் அச்சான சரபோஜி மன்னரின் நூல் தொகுப்புடன் கி.பி.1918க்குப் பின் தனியார்-களிடமிருந்து பெறப்பட்ட அன்பளிப்பு நூல்கள், மத்திய அரசின் மூலம் பெறப்பட்ட அன்பளிப்பு நூல்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியில் வாங்கப்பட்ட நூல்களும் ஆகும். சரபோஜி மன்னர் தொகுப்பில் சுமார் 4500 நூல்கள் ஆங்கிலம், ஜெர்மன், டேனிஷ், டச்சு போன்ற மொழிகளில் உள்ளன. இத்தொகுப்பில் மிகவும் பழைய அச்சுநூல் கி.பி. 1694இல் வெளியிடப்-பட்ட பிரெஞ்சு மொழி உலக வரைபட நூலாகும். அது போன்று தமிழகத்தில் கி.பி. 1712இல் தரங்கம்பாடியில் சீகன்பால் பாதிரியாரால் ஆரம்பிக்கப்பட்ட முதல் அச்சுக் கூடத்தில் கி.பி. 1806இல் அச்சடிக்கப்பட்ட ‘சாலமோன் ராசாவின் வாக்கியங்கள்’ என்ற நூல், மேல் நாட்டினர் தமிழ் கற்பதற்காக கி.பி. 1779 ஆம் ஆண்டு சென்னை வேப்பேரி அச்சகத்தில் சுமார் 6000, தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தத்துடன் பாதர் பெப்ரீசியஸ் அவர்களால் தொகுத்து ‘தமிழும் இங்கிலீசுமாயிருக்கிற அகராதி’ (கி விணீறீணீதீணீக்ஷீ ணீஸீபீ ணிஸீரீறீவீsலீ ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) போன்ற பழமையான நூல்களும் நூலகத்தில் உள்ளன. இந்நூலகத்தில் சுவடிகள், அச்சுநூல், அரிய வரைபடங்கள் ஓவியங்களுடன் மராட்டிய மன்னர்கள் காலத்தில் 250 ஆண்டுகால மராட்டிய மொழியில் மோடி என்னும் சுருக்கு எழுத்தால் எழுதப்பட்ட ஆவணங்கள் 1200க்கு மேற்பட்ட கட்டுகளும் (சுமார் 3,00,000 தாளில்) உள்ளன. இவ்வாவணங்கள் கி.பி. 1750 இலிருந்து 1855 வரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச் செய்திகள், கடிதங்கள், கணக்குகள் மற்றும் நாட்குறிப்புகள் கொண்ட ஆவணங்கள் ஆகும்.
இந்நூலகம் கி.பி. 1918 வரை அரண்மனை நூலகமாகவும் பின் தமிழக அரசின் ஆணையின்படி பொது நூலகமாகவும் மாற்றி அமைக்கப்பட்டது. தற்பொழுது மத்திய மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு பதிவு பெற்ற நிறுவனமாக உள்ளது. இந்நூலகத்தின் முக்கியப் பணிகள் சுவடிகளைத் தொகுத்தல், அட்ட-வணைப்-படுத்தல், பாதுகாத்தல், வெளிவராத சுவடிகளைப் பதிப்பித்து வெளியிடுதல் மற்றும் ஆய்வாளர்களுக்கு உதவுதல் ஆகும். பாதுகாப்புப் பணியாக இந்நூலகச் சுவடிகளைப் பிரதி செய்தல், மைக்ரோ ஃபிலிமில் பதிவு செய்தல், சுவடிகள், நூல்கள் அழியா வண்ணம் மரபு வழி மற்றும் நவீன முறை பாதுகாப்புப் பணிகள் செய்தல் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.
இந்நூலகத்தில் காகிதச்சுவடிகள், புத்தகங்-களைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கப் பூச்சிகள் விரும்பாத மணம் கொண்ட பொருட்-களான வசம்பு, கரும்சீரகம், இலவங்கப்பட்டை, மிளகு, கிராம்பு ஆகிய ஐந்து பொருட்களையும் நிழலில் காயவைத்துப் பொடிசெய்து ஒரு வெள்ளைத் துணியில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடி-யுடன் சிறு சூடக்கட்டியைச் சேர்த்துக் கட்டி பீரோக்களில் வைத்துப் பூச்சி-களின் பாதிப்-பிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
நூலக அட்டவணைகள்
இந்நூலகத்தில் உள்ள சுவடிகளுக்கு 1801இல் சரபோஜி மன்னர் காலத்தில் ஓலைச் சுவடி-களுக்கு ஓலை-யிலும், காகிதச் சுவடிகளுக்குக் காகிதத்திலும் அட்டவணை தயாரிக்கப்பட்-டுள்ளது. அதன் பின் அவரது மகன் இரண்-டாம் சிவாஜி காலத்திலும், 1855இல் தஞ்சையின் மாவட்ட ஆட்சியராக இருந்த ஹென்றி போர்ப் என்பவரது ஆணையின்படியும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.  1872இல் தஞ்சையில் செசன்சு நீதிபதியாக இருந்த டாக்டர் ஏ.சி. பர்னல் நான்கு ஆண்டுகள் இந்நூலகத்தி-லிருந்த வடமொழிச் சுவடிகளைப் பார்வையிட்டு அட்டவணைப்படுத்தி, 1880ஆம் ஆண்டு லண்டனில் இரு தொகுதிகளாக வெளியிட்டார். அதன்பின் 1918இல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட பின் இந்நூலகச் சுவடிகளைச் சரிபார்த்து முழுமையான விவர அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதுவரை 62 தொகுதி சுவடிகளுக்கான விவர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அட்டவணைப்படுத்தும் பணி முடிவுற்ற பின் நூல்கள் வெளியிடு-வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1938இல் கௌரவச் செயலராகப் பணியாற்றிய அட்வகேட் எஸ். கோபாலன் அவர்களால் நூலகத்திற்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வண்ணம் நூலகத்தில் உள்ள சிறிய சுவடிகளையும் மற்றும் சுவடிகள் பற்றிய தகவல்களை வெளியிட, வருடத்திற்கு மூன்று முறை வெளியிடும் வகையில் பருவஇதழ் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை வெளியிடப்-படுகிறது. பல சுவடிகளைப் பற்றிய தகவல், குறுஞ்சுவடிப் பதிப்புகள், பருவஇதழ் வாயிலாக வெளியிடப்படுகின்றன. 1948ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள இரண்டு சுவடிகள் நூலகங்-களான சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் சென்னையில் உள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகங்களில் உள்ள முக்கியச் சுவடி-களை நூல்களாக வெளியிட்டு மக்கள் பயன்-பாட்டிற்கு ஏற்படுத்த தமிழக அரசால் டி.எம். நாராயணசாமி பிள்ளை அவர்களைத் தலைவ-ராகக் கொண்ட வல்லுநர் குழு மக்களுக்குப் பயன்படும் மற்றும் அரிய, வெளிவராத சுவடிகளைத் தேர்வு செய்து தமிழக அரசின் நிதியுதவியில் பதிப்பித்து வெளியிடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு மொழிச் சுவடிகளை அந்தந்த மொழி வல்லுநர்களைக் கொண்டு தேர்வு செய்து பதிப்பித்து நூல்களாக வெளி-யிடப்பட்டன. அவ்வாறு வெளியிடப்பட்ட இந்நூலகத்தின் முதல் நூல் 1948இல் சமஸ்கிருதச் சுவடியிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் வி. இராகவன் அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ‘முத்ராக்சா நாடக கதா’ என்ற நூலாகும். அது போன்று தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட முதல் நூல் இந்நூலகப் பண்டிதர் கே. வாசுதேவ சாஸ்திரி மற்றும் டாக்டர் எஸ். வெங்கட்ராஜன் அவர்களால் பதிப்பித்து வெளியிடப்பட்ட ‘சரபேந்திர வைத்திய முறைகள்: குன்மரோக சிகிச்சை’ என்ற நூலாகும். 1948 முதல் 2008 வரை சுமார் 515 நூல்கள் சமஸ்கிருதம், தமிழ், மராத்தி, தெலுங்கு, மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  அவற்றுள் சுமார் 250 நூல்கள் தமிழ் மொழியில் வெளிவந்துள்ளன. சில நூல்கள் மற்ற மொழியிலிருந்து மொழி-பெயர்ப்பு நூல்களாக வந்துள்ளன. மற்ற மொழி நூல்கள் தமிழ் மொழி சுருக்கங்களுடன் வெளி-யிடப்பட்டுள்ளன. இந்நூலகப் பண்டிதர்கள் மட்டுமின்றி தஞ்சை மற்றும் பதிப்புப் பணியில் தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. நூல்கள் தேர்வு செய்ய அவ்வப்பொழுது மொழி வல்லுநர் குழு ஒன்றையும் அமர்த்தி தேர்வு செய்யப்படுகிறது.
இந்நூலகத்தில் இலக்கியம், சிற்றிலக்கியம், நிகண்டு, இலக்கணம், தத்துவம், மருத்துவம், ஜோதிடம், இசை, நாடகம், சிற்பம், நீதிநூல், தலபுராண நூல்கள், சமய நூல்கள் போன்ற தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன. அவற்றுள் இலக்கிய நூல்களாகப் பெருந்தேவனார் பாரதம், நாலடியார் உரைவளம், திருக்குறள் பழைய உரை, திருக்குறள் ஜைன உரை என்ற இலக்கிய நூல்களும், சிற்றிலக்கிய நூல்களான அரிச்சந்திரன் அம்மானை, அதிரியர் அம்மானை, சித்திர புத்திரன் அம்மானை, சீவகசிந்தாமணி அம்மானை, கஞ்சனம்மானை, மார்க்கண்டேயர் அம்மானை, ராமையன் அம்மானை, பார்கவநாதர் அம்மானை, திரௌபதி அம்மானை, சுந்தரி அம்மானை,  இராமர் அம்மானை, காஞ்சி மன்னன் அம்மானை நூல்களும், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ், கமலாலய அம்மன் பிள்ளைத்-தமிழ், சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் போன்ற பிள்ளைத்தமிழ் நூல்களும் குடந்தையந்தாதி, அருணகிரியந்தாதி, பிள்ளையந்தாதி, மருதூர் அந்தாதி போன்ற அந்தாதி நூல்களும், நாராயண சதகம், வடிவேல் சதகம், குமரேச சதகம் போன்ற சதக நூல்களும் ஞானக் குறவஞ்சி, வெள்ளைப்-பிள்ளையார் குறவஞ்சி நூல்களும், மாலைத் தொகுப்பு நூல்களான ராஜகோபால மாலை, திருவாய் மொழி வாசக மாலை போன்ற மாலை நூல்களும் வண்ணத்திரட்டு நூல்களும் குசலவன் கதை, மரியாதை ராமன் கதை, ஆழம் நபி பாட்டு, இராயர் அப்பாஜி கதை நூல்களும், தாது வருட கருப்பி கும்மி போன்ற கும்மி நூல்களும் நம்மாழ்வார் திருத்தாலாட்டு போன்ற தாலாட்டு நூல்களும், புராண நூல்களான அருணாசல புராணம், ஆத்திசூடி புராணம், கும்பகோணம் புராணம், கூர்ம புராணம், சரப்புராணம், ததீசீ புராணம், திருசோற்றுத்துறை தலபுராணம், திருநல்லூர் புராணம், திருப்பெருந்துறை புராணம், திருவாப்பூர் புராணம், திருவையாற்றுப் புராணம் போன்ற புராண நூல்களும் வெளியிடப்பட்-டுள்ளன. இலக்கண நூல்களான தொல்-காப்பியம் இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், யாப்பருங்கலம், சிதம்பரச் செய்யுட் கோவை, நிகண்டு நூல்களான ஆசிரியர் நிகண்டு, சோதிட நூல்களான காலப்பிரகாசிகா வராகர் ஓரசாத்திரம், ஜாதகலங்காரம், காலசக்கரம், ஜாதக சிந்தாமணி, பஞ்சபட்சி சாத்திரம், நட்சத்திர சிந்தாமணி, நீதி நூல்களான நீதி வெண்பா, நீதி சதகம், நீதி நூல் திரட்டு, தரும நெறி நீதிகள், சாணக்கிய நீதி சமுச்சியம், சித்த மருத்துவ நூல்களான சரபேந்திர வைத்திய முறை நூல்கள், அகத்தியர், ராமதேவர், போகர், தன்வந்திரி நூல்கள் வைத்தியர் ரத்னாவளி, சித்தமருத்துவச் சுடர், அனுபவ வைத்தியத் திரட்டு போன்ற வைத்திய நூல்கள் ராம நாடகக் கீர்த்தனைகள், சப்தம் என்னும் தாளச் சொற்கட்டு சிறு தொண்டர் நாயனார் இசை நாடகம், ஐந்து தமிழிசை நாட்டிய நாடகம், தமிழிசைப் பதிகங்கள் தாள சமுத்திரம் போன்ற இசை-நூல்கள், தனிப்பாடல் திரட்டு, மலையருவி போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களும், பண்டையகால கணக்குமுறைகளைக் கூறும் கணக்கதிகாரம் நூல்களும், திருமுரு-காற்றுப்படை, பக்தி இலக்கிய நூல்களும் சுவடி-களிலிருந்து வெளியிடப்படுகின்றன. சுவடிகள் இல்லாத ஆய்வு நூல்களாகத் தமிழக கோயிற்-கலை மரபு, தஞ்சை நாயக்கர் வரலாறு, தமிழகத்-தில் விஜயநகர ஆட்சி, மனோரா சரபோஜி மன்னர் ஆய்வுக் கோவை, கோவில் அரும்-பொருள் பாதுகாப்பு நூல், கொடுந்தமிழ், செந்தமிழ் என்னும் மதிப்பு நூல்களும் ஆனத கந்தம், ராஜமிருகாங்கம், பரதார்ணவம் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும் வெளியிடப்பட்-டுள்ளன.
இந்நூலகப் பண்டிதர்கள் மட்டுமின்றி, அடிகளாசிரியர், தி.வே. கோபாலையர், தி.வே. கங்காதரன், டாக்டர் வி. இராகவன், கீ. கோதண்ட-பாணி, சி. கோவிந்தராஜனார், டாக்டர். வெங்கட்ராமன், டாக்டர். சௌரிராஜன், டாக்டர் ரங்கராஜன் போன்ற சுவடியியல் அறிந்த பேராசிரியர்களைக் கொண்டு பதிப்பித்து, நுண்ணாய்வு செய்து நூல்கள் வெளியிடப்-படுகின்றன. இப்பணி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் பதிப்பித்த நூல்கள் வாசகர்களின் தேவைக்கேற்ப மறுபதிப்புகளாக வெளியிடப்படுகின்றன. இதுபோன்று இந்-நூலகம் தொடர்ந்து நூல்கள் வெளியிடுவ-துடன் மக்கள் பயன்படும் வகையில் சரபோஜி மன்னர் பிறந்தநாளையட்டி ஓரிரு மாதங்-களுக்கு ஒவ்வொரு வருடமும் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்கிறது. இவ்வாறாகப் பதிப்புப் பணியைச் செய்யும் நூலகத்தை நாம் பாதுகாத்துப் பயனடைய வேண்டும்.

1 comment: