Tamil books

Thursday 21 April 2011

தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி: சிறு குறிப்பு

உல. பாலசுப்பிரமணியம்


உலகில், மனிதன் தன் எண்ணங்களை வெளிப்படுத்த மொழி ஒலியைக் கண்டறிந்தது போலே, அவற்றைப் பதிவுசெய்ய மொழி ஒலியின் வடிவையும் கண்டறிந்து, அவற்றைப் பதிவுசெய்யும் வழியையும் தமிழ்நிலம் இயற்கை-யாய் கண்டெடுத்த வழியே கல்லெழுத்தும் ஓலையெழுத்தும். காலப்போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியில் இப்பதிவைச் செய்யவந்த அச்சு-முறை தமிழ்மொழியை உலகறியச் செய்தது என்றால், அது மிகையாகா. இதன்வழி, தமிழ்-மொழி, இலக்கியப் பரப்பு உலக முழுதும் பரவியது.
உலகம், தமிழிலக்கியப் பரப்பின் வளத்தை உணர்வதற்கு இலக்கியத்திற்கும் இலக்கணத்-திற்கும் காலந்தோறும் உரைசெய்த உரையாசிரி-யன்மார் அருந்தொண்டு காரணமாய் இருந்து வருமாறுபோலே, அச்சு வருகைக்குப் பின்னர் ஏற்பட்ட பதிப்புப் பணியும் பெரும்பங்கு கொண்டு திகழ்கிறது. இப்பதிப்புப் பணி இன்றேல் தமிழ்மொழி செம்மொழியாமாறு எங்ஙனம் என எண்ணுமாப்போலே இப்பணி இன்றியமையாப் பணியாய் விரிந்து கிடக்கிறது.
பதிப்புப் பணி
இப்பதிப்புப் பணியின் பயன் பெரிது. அதுபோல பதிப்புப் பணியைச் செய்வாரின் பொறுப்பு பெரிது மட்டுமன்று; அருஞ்சாதனை. ஏனெனில் கல்லிலிருந்தும் ஓலையிலிருந்தும் அச்சிற்குக் கொணரும் இப்பணி கொஞ்சம் கவனக்குறைவாயின் ஏற்படும் இடரோ பெரிதாம். ‘என் சிறு பிராயத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த சில நூல்கள் இப்போது தமிழ்நாடெங்கும் தேடியும் அகப்-படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்-களுங் கெட்டுச் சிதைந்து கிடக்கும் நிலைமை-யைத் தொட்டுப் பார்த்தாலன்றோ தெரியவரும்! ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகின்றது; கட்டு அவிழ்க்கும்போது இதழ் முறிகின்றது; ஒன்றைப் புரட்டும்போது துண்டாய்ப் பறக்கிறது’ என்பர் சி.வை. தாமோதரம் பிள்ளை (கலித்-தொகை, முன்னுரை, 46).
இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அச்சுமுறை அடியற்றி தமிழ்ப் பதிப்புலகம் இடையறவுபடாது இயங்கி வருகிறது. இவ்-வியக்கத்தில் தனி மனிதர்களும் அமைப்புகளும் நிறுவனங்களும் பலவாறு ஈடுபட்டு தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் மு. அருணாசலம் என்னும் தமிழறிஞரைத் தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவும் இலங்கையும் நன்கறியும்.
இவர் தோன்றிய ஊர், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள காவிரியின் வடகரையில் உள்ள திருச்சிற்றம்பலம். இவர் சைவமரபில் தோன்றி, சைவ சமய நூல்களை நன்கு கற்றுணர்ந்தவர். சமய நூற்கடலின் விரிவை நன்கு அளந்து கண்டவர்.
அறிஞரின் தமிழ்ப் பணி
இவ்வறிஞரின் தமிழ்ப்பணி பன்முகப் பரிமாணம் கொண்டது. வரலாற்று நூல்கள்; இலக்கிய வரலாறு, புலவர் வரலாறு என; சைவசமய நூல்கள், ஆதாரக்கல்வி நூல்கள், சிறுவர் நூல்கள், கட்டுரைகள், பதிப்புப் பணி என விரியும்.
இவர் தமிழ் இலக்கியத்தை வரலாற்று நிலையில் பலவாறு ஆய்ந்து கண்ட பெரு-மகனார். தமிழ் இலக்கிய வரலாற்றினை நூற்றாண்டுதோறும் பல தொகுதிகளாகப் புதுமுறையில் வெளியிட்ட பேரறிஞர்.
அறிஞரின் பதிப்புப் பணி
இடர் பெரிதுடைய இப்பணியில் நோக்கம் இன்றியமையாதது. யாருக்காக, என்ன நோக்கோடு நூல் பதிப்பிக்கப்படுகின்றது என்பதனை ஒட்டிப் பதிப்புகள் அமையும். தமிழ் நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதே ஆசிரியரின் பதிப்பு நோக்கங்களில் முக்கியமாய் இருந்திருக்கிறது. ‘நூல் முழுமையும் நன்கு பரி-சோதித்துத் தொடர்-பின்றி இருப்பவற்றை நன்கு தொடர்புபடுத்திய ஆராய்ச்சிப் பதிப்பு இன்றியமையாத தேவை. லிங்க்விஸ்டிக்ஸ் என்ற பெயரில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி வளர்ந்து வரும் இன்றைய நாளில் நிகண்டு நூல்-களுக்குச் சிறந்த ஆராய்ச்-சிப் பதிப¢பு வெளிவராதது பெருங்குறை’ (மு. அருணா-சலம், தமிழ் இலக்கிய வரலாறு, 9ஆம் நூற்றாண்டு-1, 1975, 208) என்ற எண்ணமும் அறிஞரைப் பதிப்புப் பணியில் முழுமையாக ஈடுபடச் செய்துள்ளது.
இவர் தமிழகம் முழுக்க பல ஊர்களிலும் ஏடுகள் தேடி அவற்றைப் பதிப்பில் கொணர்ந்-தார். “உறவினர் ஒருவரிடத்தில் உங்கள் வீட்டில் ஏடுகள் இருக்கின்றனவா?” என்று கேட்டு வைத்தேன்.
‘இருக்கு’ என்றார் அவர்.
‘பார்க்கலாமா?’ என்றேன்.
‘கொண்டு வரச் சொல்லுங்கள்?. . .’
சில ஏடுகளை பிரித்துப் படித்துப் பார்த்தேன்.
‘பூவனுட. . . பிள்ளை குமாரர் குமாரசாமிப் பிள்ளைக்குப் பந்தநல்லூர் சந்திரசேகரர் உபாத்தியாயர் எழுதியது . . .’ என்றெல்லாம் விவரங்கள் எழுதப் பெற்றிருந்தன.
இவற்றைப் பார்த்தபோது ஏடுகளைப் பற்றிய பல உண்மைகள் எனக்கு நினைவு வந்தன.’’ (மு. அருணாசலம், புத்தகமும் வித்தகமும், 13, 1957).
பதிப்பித்த நூல்கள்
அம்பிகாபதி கோவை, திருமலை முருகன் பள்ளு, திருஆனைக்கா உலா, முக்கூடற்பள்ளு, சிதம்பரக் குறவஞ்சி, தத்துவப் பிரகாசம் உரை, தசக்கிரமக் கட்டளை, திருக்களிற்றுப்படியார் உரை, பிரபந்த மரபியல், அரசுத் தொன்னூல் நிலைய வெளியீடு. ஸ்ரீ வேங்கடேச மகத்துவம் (புராணம்_-செய்யுள்)
சிதம்பரக் குறவஞ்சி, தமிழ் நூலகம், சென்னை, 1949.
சிதம்பரக் குறவஞ்சி-யென்பது, சிதம்பரம் நடராசப் பெருமானைப் பாட்டுடைத் தலைவ-ராகக் கொண்டு, அவர்மீது ஒரு பெண் காதல் கொண்ட-தாகவும், அவளுக்குக் குறத்தியருத்தி குறி சொல்லியதாகவும் பாடப்பெற்ற ஒரு சிறு பிரபந்தம். இதன் ஆசிரியர் பெயரோ ஊரோ காலமோ தெரியவில்லை. இதில் இப்போது கிடைத்துள்ள பாடல்கள் 62. கிடைத்த ஏட்டுப்பிரதியில் நூலின் தொடக்கத்தில் சில பகுதி சிதைந்து-போனமையால், காப்பு, கடவுள் வணக்கம், அவையடக்கம் முதலிய பாடல்கள் கிடைக்க-வில்லை. மங்களம் என்ற பகுதியுடன், நூல் தொடங்குகிறது. இடையிலும் சிற்சில சொற்க-ளும் அடிகளும் சிதைந்து போயின. நூலின் இடையில் வரும் வசனப்பகுதி, இராக தாளக் குறிப்பு ஆகியவை ஏட்டில் கண்டவை.
பழமையான இப்பிரபந்தம் இறவாமல் காக்கும் நோக்கத்துடனேயே இப்போது இதை வெளியிடுகிறேன். இதுபோன்ற சிறு நூல்கள் இன்னும் சிலவுள்ளன. மற்றவை வெளியிடும் போது, விரிவான ஆராய்ச்சி சேர்த்து வெளியிட எண்ணியிருக்கிறேன். முகவுரை, 4.
(தத்துவப் பிரகாசம் மூலமும் உரையும், 1965)
சைவ சித்தாந்த மகா சமாஜ அறுபதாம் ஆண்டு நிறைவு விழா மலராக 1965இல் வெளியிடப்பட்டது (பதிப்பாசிரியர் குறிப்புடன்).
‘இப்போது வெளியாகின்ற பதிப்பு, (1893இல் வெளியான) பழைய பதிப்பையும் எம்மிடமுள்ள ஓர் ஏட்டுப் பிரதியையும் வைத்து ஒப்புநோக்கிச் செப்பம் செய்து வெளியிடப்படுகிறது. . . ஏட்டினால் திருந்திய இடங்கள் பல’ (முகவுரை; 8)
நூல் முழுமையும் அச்சிட்டு, சிதம்பரம் மௌனமடத்து ஏடு ஒன்றை ஸ்ரீசபாபதி சுவாமிகள் உதவினார்கள். இது மூலம் மட்டும் உள்ளது. இதில் கண்ட சிறப்பான பேதங்கள் அனுபந்தம்-3, அ பிரிவாக 518ஆம் பக்கத்தில் சேர்க்கப் பெற்றுள்ளன. இங்ஙனமே, பின்னர் பார்க்க நேர்ந்த மற்றோர் ஏட்டில் சிறப்பான பாடபேதங்கள் கிடைக்காவிட்டாலும், ‘தன்னை அறிவிக்கும்’ என்ற இந்நூற் சிறப்புப் பாயிரத்தின் பின் (பக்கம்-477) மேலும் மூன்று சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் எழுதப் பெற்றிருந்தன. இவை இங்கு அனுபந்தம் 3 பிரிவு ஆ என்று (பக்கம் 520) அச்சிடப் பெற்றுள்ளன (பக்கம் 9).
மெய்கண்டார் பரம்பரையைக் காட்டும் விளக்க அட்டவணை ஒன்றும் இறுதியில் உள்ளது. நூல் மரபை அறிய விரும்புவோருக்கும், கால ஆராய்ச்சிக்கும், இலக்கிய வரலாற்-றாராய்ச்சிக்கும் இது பெரும்பயன் தரும். தொடக்கத்திலுள்ள முன்னுரையானது பல்வேறு வகையான ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்-டது. முன்னுரையில் சொல்லிய செய்திகள் யாவும் ஆசிரியர் _ உரையாசிரியர் வரலாறுகள், வடமொழி நூல்கள், நூற்சிறப்புகள் போன்ற பகுதிகள் சைவ உலகுக்கும் தமிழுலகுக்கும் புதியவை.
முக்கூடற்பள்ளு, சாது அச்சுக்கூடம், சென்னை, 1940.
பிற்காலத்திலே, பாமர மக்கள் பாடி ஆடுவதற்கு ஏற்றவை பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் என்ற மூவகைப் பிரபந்தங்கள் தோன்றலாயின. . . இவற்றுள் பள்ளுப் பிரபந்தத்தின் பூர்வ சரித்திரத்தை மட்டும் இங்கே சிறிது ஆராயலாம் (5).
அழகராலயத்தில் சேர சோழ பாண்டிய-ரென்னும் மூவேந்தரின் சாசனங்களும் பொறிக்-கப்பட்டுள்ளன. பாண்டியன் சடையன் மாற-னுடைய சாசனங்களும் இராசராச சோழனுடைய சாசனங்கள் பதினொன்றில் சிலவும் வட்டெழுத்தில் உள்ளன. வீர இராசேந்திர சோழன் சாசனமொன்றும், முதற் குலோத்துங்க சோழன் சாசனமொன்றும், முதல் இராசராச சோழன் (1012-_44) சாசனங்களிரண்டும் தமிழெழுத்-துக்களில் பொறிக்கப்பட்டிருக்-கின்றன. . . அசோக சாசனத்தையத்த எழுத்து-களும் இங்கே புத்த சமயம் பரவியிருந்ததைக் காட்டும்.
பரிசோதித்த ஏடுகள் ஒன்றிலும் இவர் பெயர் காணப்படவில்லை. இந்நூல் தோன்றிய காலத்தையறிய இரண்டு குறிப்புகள் இதனகத்தே கிடைக்கின்றன (17).
திருக்களிற்றுப்படியா£¢ (மூலமும் பழைய அனுபூதி உரையும்), 1962.
சைவசித்தாந்த மகா சமாஜ 57ஆவது மகாநாட்டு நினைவு மலராக 1962இல் வெளியிடப்பட்டது.
இந்நூல் இரண்டு ஏடுகளை ஒப்பிட்டு முதன்முதலில் இவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூல் உரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது. காலத்தால் முந்திய உரை எனக் குறிப்பிடப்-பட்டுள்ளது. இவ்வுரை காழிக் கண்ணுடைய வள்ளல் ஆக இருக்கலாம் என்ற குறிப்பும் உள்ளது.
அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளதோடு, அடியார் வரலாறுகள், பழமொழிகள், அருஞ்சொல் தொடர்கள் முதலியன தொகுக்கப்பட்டு நூலிறுதியில் தரப்பட்டுள்ளது பதிப்பின் செம்மை.
உந்திகளிறு பழைய பொழிப்புரைகள், இருபா இருபதின் சீர்காழித் தத்துவநாதர் உரை ஆகிய அச்சாகாத உரைகளும் அனவரத விநாயகம் பிள்ளை அவர்களிடமிருந்த பிரதிகளிலிருந்து இவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. (சமாஜப் பதிப¢பு).
“சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் சித்தாந்த சாத்திர இரண்டாம் பதிப்பு முழுமையும் எனது பார்வையில் 1940இல் வெளியாயிற்று. இங்கு உந்தி, களிறு இரண்டிற்கும் அதுகாறும் அச்சா-காத பழைய உரைகள் வெளியாகி உள்ளன. இவை எளிய பொழிப்புரைகள்; ஆயினும் சிறப்புடைய பழைய உரைகள். இவற்றை ஆதாரமாக வைத்தே முற்கூறிய சிவப்பிரகாசர் உரை எழுந்தது என்று கருத இடமுண்டு. இப்பொழிப்புரை திருக்களிற்றுப்படியார் தோன்றிய வரலாற்றை விளக்கமாக உரைக்கிறது. மேலும் இப்பதிப்பில் இருபா இருபதின் மிகப் பழைய உரையாகிய சீகாழித் தத்துவ நாத உரையும் வெளிவந்தது.
அடுத்து வெளிவந்தது 1942இல் தருமபுரத்து மூலப்பதிப்பு. இப்பதிப்பு சென்னை சாது அச்சுக்கூடத்தில் அச்சான காரணத்தால், மிகப் பலவான ஏட்டுப் பிரதிகளை வைத்து என்னால் பரிசோதித்துச் செப்பம் செய்யப் பெற்றது; பாட ஆராய்ச்சிக்கு மிகச் சிறந்த கருவியாக இன்னும் விளங்குவது. (திருக்களிற்றுப்படியார், முன்னுரை, 14).
தசக்கிரமக் கட்டளை, 1940.
இது பழைய சிறுநூல், 1940இல் ‘சித்தாந்தம்’ இதழில் வெளிவந்தது.
ஸ்ரீ வேங்கடேச மகத்துவம், ஆசிரியர் வேங்கடதாசர், காந்தி வித்தியாலயம், 1983.
திருவேங்கடத்தின் மகிமையைக் கூறும் தலபுராண செய்யுள் நூல். வேங்கடதாசர் தஞ்சை சிவாஜி மன்னனின் அமைச்சர்களில் ஒருவர். இந்நூல் செய்த காலம் சகம் 1788 மேடமதி (கி.பி. 1866) இவர் சொல்லியுள்ள சொல்லாட்சிகள் சிலவும் விந்தையாக உள்ளன. மனன் (மன்னன்), மினாள் (மின்னாள்), எணி (எண்ணி), எணற்க (எண்ணற்க), அனான் (அன்னான்) - முதலானவை. அவற்றுள் சில வடிவங்கள். இவர் சொல்லும் சில அருஞ்சொற்-களை ஒரு தனி அகராதியாகத் தந்திருக்கிறார் பதிப்பாசிரியர்.
வேங்கடம் என்ற சொல்லுக்கு இவர் கூறும் பொருள் ஒரு விசித்திரமானது; ‘வெம்மைகடத்து காரணத்தினால் அம்மலையை வேங்கடமென்று அன்னாள் பிரம்மன் வாழ்த்தினான்’ (119) என்கிறா£¢.
பயன்கருதி ஒவ்வொரு படலம்தோறும் கதைச்சுருக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதியில் அருஞ்சொல்லகராதியும், அரும்பொருளகராதியும் உள்ளன.
முடிவுரை
அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் பதிப்பு நூல்கள் யாவும் அவர்களுடைய கல்விப் பெருக்கு, தமிழறிவு, ஆங்கிலப்புலமை, ஆராய்ச்-சியின் திறன், ஆழங்காற்பட்ட சமயவுணர்ச்சி, அயராத உழைப்பு, இலக்கிய இரசனை, சர்வோதயம், உரைக்குறிப்பு எழுதுவதிலுள்ள நேர்மை, நூலின் காலம் அறியும் அவா ஆகியனவற்றை வெளிக்காட்டுவனவாய் உள்ளன.
சைவ ஆதீனங்கள் அறிஞரைத் தக்கவாறு பயன்கொண்டன எனலாம். அதனால்தான் அறிஞர் சைவ நூல்களைப் பெருமளவு பதிப்பித்திருக்கிறார்கள். ஆதீனங்கள் பதிப்பித்த பல நூல்களுக்குப் பலநிலைகளில் பதிப்பு சார்ந்த பணிகளைச் செய்துள்ளார்கள். ‘சித்தாந்தம்’ இதழின் வாயிலாக இவர் செய்த பணி பெரிது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருஞ்சொல்-லகராதிப் பணியில் முதன்மைப் பதிப்பாசி-ரியராகக் கொண்டு பணி தொடங்கியது.
இந்தியாவின் வடபுலத்தில் பணியாற்றிய-மையும் வடநூலறிவும் அறிஞரின் தமிழ், வடமொழி சார்ந்த கண்ணோட்டத்தைத் தனித்தன்மை வாய்ந்ததாக அமைத்தது. தமிழே, தமிழ்ப் பண்பாடே, தமிழின் கருத்தோட்டமே இந்தியா முழுமைக்குமானது. தமிழின் வளத்திலிருந்தே வடமொழி கொண்டது என்னும் கருத்தைத் தன்னுடைய எந்நூலிலும் வலியுறுத்தும் தகைஞர்.

No comments:

Post a Comment