Tamil books

Thursday, 21 April 2011

பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி

புதுவை ஞானகுமாரன்


செந்தமிழ்த் தென் புதுவை’ என்று பாரதியால் புகழப்படும் புதுச்சேரி மண் மொழி, பண்பாடு, அரசியல், இலக்கியம் முதலானவற்றில் தமிழகத்தின் நீட்சியாகக் கருதப்பட்டாலும் இம்மண்ணுக்கே உரித்தான பல தனித்தன்மை-களையும் கொண்டு விளங்குகிறது.
ஆனந்தரங்கர், பாரதி, அரவிந்தர், வ.வே.சு, பாரதிதாசன்,  தமிழ் ஒளி, பிரபஞ்சன்... எனப் பலரின் வரலாற்று, இலக்கிய ஆளுமைகளைக் கொண்டதே புதுவையின் இலக்கிய வரலாறு.
பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜெர்மனியிலும், அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவிய அச்சுக்கலை, இந்தியாவிற்கு ஒரு நூற்றாண்டு கழித்து பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்-தான் வந்து சேர்ந்தது.
இந்திய மொழிகளில் முதலில் கலைக்களஞ்-சியம், பேரகராதிகள் வெளியானதும், முதல் அச்சு  நூல் வெளியான இந்திய மொழியும் தமிழ்தான். 1554ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் ‘லுசோ தமிழ்ச்சமய வினா_விடை’ என்ற முதல் தமிழ் நூல் அச்சானது; 1557இல் இந்தியாவில் அச்சிடப்பட்ட முதல் நூல் ‘தம்பிரான் வணக்கம்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மற்றப் பகுதிகளில் பிரிட்டி-ஷார் ஆட்சி நிலவியபோது, புதுச்சேரியில் பிரெஞ்சி-யராட்சி நடைபெற்றது; அவ்வாட்சியில்தான் முதன் முதலாக 1710ஆம் ஆண்டு அச்சகம் ஏற்படுத்தப்பட்டது. அச்சு எந்திரம் வந்து பல்லாண்டுக்காலம் பிரெஞ்சு அரசின் அறிக்கைகள், விளம்பரச் செய்திகள் முதலா-னவை மட்டுமே அச்சிட்டு வெளியிடப்பட்டன; பிரெஞ்சு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அச்சிடப்பட்டன. 1778ஆம் ஆண்டு காவல்-துறையின் அனுமதியின்றி நூல்களோ, செய்தி அறிக்கைகளோ அச்சிடப்படக்கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது. அதன்பின் 1815இல் சிலர் தமிழ்ச் சுவடிகளை அச்சிட்டு வெளி-யிட்டனர்.
பிரெஞ்சிந்திய அரசு 1816இல் அரசாங்கத்-துக்குச் சொந்தமான அரசு அச்சகம் ஒன்றைத் தொடங்-கியது. அதன்பின் அவ்வச்சகத்தில் அரசின் அறிவிப்புகள், ஆணைகள், துறை-வாரியான சட்டங்கள் முதலானவை அச்சிடப்-பட்டன; பல வார, மாத அரசிதழ்கள் வெளியிடப்பட்டன.
1838ஆம் ஆண்டு திரு. இலட்சுமணன் என்பவர் முதன்முதலாக தமிழில் மட்டுமான அச்சுக்கூடத்தை அமைத்தார்; 1804இல் பொனான் என்ற பாதிரியார் தொடங்கிய, ‘ஜென்மராக்-கினிமாதா கோயில் அச்சுக்கூடம்’ முதலில் கிறித்தவ சமய நூல்களையும், பின்னர் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களையும் அச்சிட்டது.
பிரெஞ்சு அரசிடம் அச்சகத்-திற்கு அனுமதி பெறுவது கடினமான பணியாய் இருந்த-தால் பெரிய அளவில், நூலாக்கம் செய்யும் அளவி-லான அச்சகங்-கள் அப்போது அதிகம் வளர-வில்லை. அச்-சூழலிலும் முத்து-சாமிப் பிள்ளை, நயனப்ப முதலியார், தாண்டவராய முதலியார் ஆகியோர் பெரிதும் பாடுபட்டு, சாதாரண அச்சகங்-களிலேயே பல நூல்களை வெளியிட்டனர்.
தமிழ், ஆங்கிலம், இலத்தீன், தெலுங்கு, வடமொழி எனப் பல மொழிப் புலமையாளரான முத்துசாமிப் பிள்ளை 1820இல் வேத விகற்ப அதிகாரம், 1822இல் வீரமாமுனிவரின் வேத விளக்கம், 1835இல் நன்னூல் அகப்பொருள் மூலம் வெண்பாமாலை, 1847இல் வீரமாமுனிவர் வரலாறு (தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்) 1847ல் ஆத்துமவுத்தியான, 1868இல் நரசைக்கலம்பகம், 1885இல் ஞானக்கதிர்க் கலம்பகம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
புதுச்சேரியில் பிறந்து, சென்னைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிய நயனப்ப முதலியார் தமிழ் நாட்டில் கிடைத்த பல அரிய ஓலைச்சுவடிகளைப் புதுவை அச்ச-கங்கள் மூலம் வெளியிட்டார். திருச்சிற்றம்பலக் கோவை, தஞ்சைவாணன் கோவை (1835), ஒரு துறைக் கோவை, நாலடியார், திவாகர நிகண்டு, சூடாமணி நிகண்டு 11ஆம் பகுதி (1839), சித்தாந்த சைவர்களின் உண்மைநிலை (1844) முதலான நூல்களை வெளியிட்டார்.
புதுவைக்கருகில் சூணாம்பேட்டை வில்லிவாக்கத்தில் பிறந்தவரும் தமிழறிஞருமான தாண்டவராய முதலியார் தமிழ் இலக்கண வினா_விடை (1828) சதுரகராதி மூன்று பகுகிகள் (1824), கதாமஞ்சரி நூல் (1826), சேந்தன் திவாகர நிகண்டு(1935), சூடாமணி நிகண்டு பத்து பகுதிகள் (1839), மன்மதவிலாசம் நாடகம் (1880) முதலான நூல்களை வெளியிட்டார்.
புதுச்சேரியில் சமயத் தொண்டு புரியவந்த லூயி சவனியன் துய்புய் (1806_1874) பிரெஞ்சு, இலத்தீன் மொழியறிவுடன் வந்து, தமிழையும் கற்றுப் புலமை பெற்றார்; அவர் போன்-று புதுவைக்கு வந்தவரான லூயி முஸ்ஸே (1808_1888) என்பா-ருடன் சேர்ந்து, ஜென்மராக்கினி அச்சகம் வாயிலாகத் தமிழ் _ பிரெஞ்சு, பிரெஞ்சு _ தமிழ் (1855), இலத்தீன் _ பிரெஞ்சு _ தமிழ் (1846), தமிழ் அகராதி முதலிய நூல்களை வெளியிட்-டனர். மேலும் துய்புய் பிரெஞ்சு இலக்கணம், வேத தர்க்கம், தேவசினேக முயற்சி, தேவ-சினேக முகாந்திரம், துறவற உதயணம், இல்லற உதயணம் முதலிய நூல்களையும் வெளி-யிட்டார். அருள் துறவியருடன் அன்றாட வாழ்க்கை முறைகள், தேவமாதாவின் திரு இருதய அனுசரணம், மேல்நிலைத் தலைவர்கட்கு ஒரு வழிகாட்டி முதலான மொழிபெயர்ப்பு நூல்களையும் துய்புய் வெளியிட்டார்.
புதுவைக்கு வந்த பிரெஞ்சு இராணுவ அதிகாரியான எதுவார் அரியேல் (1818 _ 1854) தமிழில் புலமை பெற்று திருக்குறளில் சில அதிகாரங்களையும், திருக்கோவையார் (1848), கல்லாடம், ஆத்திசூடி போன்றவற்றையும் பிரெஞ்சு மொழியில் வெளியிட்டார். அவரைப் போன்றே காரைக்காலுக்கு வந்த முய்லியேன் வேன்சான் (1843_1926) பிரெஞ்சு, தமிழ் கலந்த பல கட்டுரை நூல்களை வெளியிட்டார்; கபிலர் அகவல் (1869) பிரெஞ்சிந்தியாவும் இந்தியக் கல்வியும் (1884), தமிழ்ச் சொல் அகராதி (1909) முதலான பல நூல்களை வெளியிட்டுள்ளார். கம்ப ராமாயணம், பெரிய புராணம், சீவக சிந்தாமணி ஆகியவற்றின் பல பாடல்களையும், வில்லியனூர் தலபுராணமான வில்லைப்புராணம் ஆகியவற்றையும் பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
காரைக்காலில் நீதிபதியாயிருந்த பெ.ஆடம் ஆத்திசூடி முதலான பல நீதிநூல்களையும், திருவள்ளுவரின் வரலாற்றையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்து, அந்நூல்கள் பிரான்சிலும், புதுவையிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
மேற்கண்ட மொழிபெயர்ப்பு நூல்கள் பலவும் புதுவை ஜென்மராக்கினி மாதா கோயில் அச்சகத்திலும் சில பிரான்சிலும் பதிப்பிக்கப்பட்-டுள்ளன; 19ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலேயே பெரும்பாலான நூல்களும், ஒரு சில 20ஆம் நூற்-றாண்டின் தொடக்க ஆண்டு-களிலும் வெளிவந்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் புத்தகங்கள், பதிப்பகங்கள் வளர்ச்சி
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பண்டைய இலக்கிய, இலக்கண நூல்களும், பிரெஞ்சு மொழி-பெயர்ப்பு நூல்களும், சமய இலக்கியங்கள் அதிலும் குறிப்பாகக் கிறித்துவ இலக்கியங்களே வெளிவந்த நிலையில், இருபதாம் நூற்றாண்டில் இந்திய சமூக, அரசியல் சூழலுக்கேற்ப நிலைமை மாறியது; படைப்பிலக்கியங்கள் ஏராளமாக வெளிவரத் தொடங்-கின.
இந்திய விடுதலைப் போராட்-டம், திராவிட, தேசிய, பொது-வுடைமை இயக்கங்களின் செல்வாக்கு புதுவையிலும் பரவியமை, தொழில்வளர்ச்சி, உயர் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி போன்ற வரலாற்று நிகழ்வுகளின் காரணமாகத் தமிழகம் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் அதற்கு முந்தைய காலத்தைவிட அதிக-மாகக் குடியேறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
அவ்வாறான சூழலில்தான் பாரதி, அரவிந்தர், வ. வே. சு., சுத்தானந்த பாரதி, சங்கரதாஸ் சுவாமிகள் முதலானோர் இந்-நூற்றாண்டின் தொடக்கத்திலும், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கலை_-இலக்கிய ஆய்வாளர்கள்... என ஏராளமானோர் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் புதுச்சேரியில் குடியேறி, இம்மக்களின் கலை, பண்பாட்டுணர்வோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து, புதுவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஏராளமான நூல்கள் உருவாக வழி வகுத்தனர்.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த, புதுச்சேரி மண்ணின் படைப்பாளிகளாக பாவேந்தர் பாரதிதாசன், பு.அ. பெரியசாமிப்பிள்ளை, வாணிதாசன், தமிழ் ஒளி, புதுவைச்சிவம் (ச. சிவப்பிரகாசம்), சுந்தர சண்முகனார், மு.த. வேலாயுதனார், சி.வ. கண்ணப்பர், கவி வெ. நாரா, ம.ரா. பூபதி,
தி.வே. கோபாலையர், திருமுடி சேதுராமன், பாகூர் குப்புசாமி, அரியபுத்திரன், ஆ. சிவலிங்கனார், அ. செபஸ்டியான், தமிழ்வேள், தேவிதாசன், கு.காசிநாதன், மு. இறைவிழியன் எனப் பலரைக் குறிப்பிடலாம். இதில் சிலரது பெயர்கள் விடுபட்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
கிறித்துவப் பாதிரியாரான அடிகளார் எழுதிய ஞான உபதேசப்பர்வதம் (1900), பு.அ. பெரியசாமிப்பிள்ளையின் புதுவைக்கலம்பகம் (1902), ஸ்ரீமத் இராமாயண சங்கிரகம் (1902), மயிலத்தந்தாதி (1909) ஆகிய நூல்கள், காரைக்காலில் ம. காதிருகனி எழுதிய காரை மஸ்தான் காரணச்சரித்திரம் (1903), அதோலப்ஃர் பதிப்பித்த காம்ரூப் கதை (1904) ச. செயராயலு நாயகர் பதிப்பித்த பாடல் திரட்டு (1904), பாலபாரதி கிருஷ்ணமாசாரியார் எழுதிய கீர்த்திப்படலம் (1906) முதலானவை 1900_1910 வரையிலான முக்கிய வெளியீடுகளாகும்.
பாரதியாரின் படைப்புகள்
1908 முதல் 1918வரை பத்தாண்டுக் காலம் புதுவையில் வாழ்ந்த காலத்தில்தான் அவரது முக்கியமான படைப்புகள் ஜன்மபூமி, ஸ்வதேசகீதங்கள் _ இரண்டாம்பாகம் (1909), கனவு _ சுயசரிதை (1910), ஆறிலொரு பங்கு _ கதை (1910), பாஞ்சாலிசபதம் (1912), புதிய ஆத்திசூடி (1913), குயில்பாட்டு (1914_15), கண்ணன் பாட்டு (1917) ஜிலீமீ திஷீஜ் ஷ்வீtலீ tலீமீ நிஷீறீபீமீஸீ ஜிணீவீறீ (1914) -ஆகியவை புதுச்சேரி அச்சகங்களில் அச்சிடப்பட்டு வெளியாயின. மாதா மணிவாசகம் (1914) ஆப்பிரிக்க நாட்டு டர்பன் நகரில் அச்சாகி புதுவைக்கு வந்தது. அவற்றுள், தமிழகத்தில் ஆஷ்கொலை வழக்கு விசாரணையின் போது கிடைத்த நூல்கள் என்ற காரணத்திற்காக கனவு, ஆறிலொரு பங்கு இரண்டும் பிரெஞ்சு அரசாலும் ‘தடை’ செய்யப்பட்ட பெருமை பெற்றன. பாரதி புதுவையினின்று வெளியேறிய பின் விநாயகர் நான்மணிமாலை 1919இல் வெளிவந்தது.
சுத்தானந்த பாரதி
புதுவையில் பல்லாண்டுக் காலம் வாழ்ந்த சுத்தானந்த பாரதியின் நூல்களை அவருடைய நண்பரான பாலசுப்பிரமணியம் என்பவர், தாம் வெளியிடுவதற்காக ‘பாரதசக்தி நிலையம்’ எனும் பதிப்பகத்தைத் தொடங்கினார். அரவிந்த பிரகாசம், ஸ்ரீஅரவிந்தயோக விளக்கம், கீதை காட்டும் பாதை, ஸ்ரீரமண விஜயம், அறிவியல், ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார், ஸ்ரீ அன்னை ஆகிய நூல்களுடன் அவரது புகழ்பெற்ற படைப்பான 50,000 வரிகள் கொண்ட ‘பாரத சக்தி மகாகாவியம்’ என்னும் நூலும் பாரதசக்தி நிலையம் மூலம் வெளிவந்தன. பின்னாட்களில் ‘புதுயுக நிலையம்’ பதிப்பக வெளியீடாகவும் சுத்தானந்த பாரதியின் ஏழைபடும்பாடு, நவரச நடனாஞ்சலி முதலிய நூல்கள் வெளியாயின. பாரதசக்தி நிலையம் பின்னர் பாரதிதாசனின் குடும்பவிளக்கு, இசையமுது நூல்களையும் வெளியிட்டது.
வ.வே.சு.வின் கம்ப நிலையம்
விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சு. அவர்களும் பாரதியைத் தொடர்ந்து புதுவையில் பல ஆண்டுகள் வசித்தார். சிறந்த எழுத்தாளராக-வும் விளங்கிய வ.வே.சு., தம் நூல்களை வெளியிடுவதற்காகவே, ‘கம்பநிலையம்’ என்ற பதிப்பகம் தொடங்கினார். அதன்வழியே தமிழின் முதல் சிறுகதை எனக் கூறப்படும் ‘குளத்தங்கரை அரசமரம்’ அடங்கிய ‘மங்கையர்க்கரசியின் காதல்’ முதலிய கதைகள் (1915), தாகூர் கதைகளின் மொழிபெயர்ப்பான காபூல்காரன் (1916), சந்திரகுப்த சக்கரவர்த்தி சரித்திரம் (1918), கம்பராமாயணச் சுருக்கம் _  பாலகாண்டம், புக்கர் டி. வாஷிங்டன் சரித்திரம் (1919), தன்னம்பிக்கை (1919), ஜிலீமீ ரிuக்ஷீணீறீ ஷீக்ஷீ tலீமீ விணீஜ்வீனீs ஷீயீ ஜிலீவீக்ஷீuஸ்ணீறீறீuஸ்ணீக்ஷீ (1916)  -ஆகிய நூல்கள் வெளியாயின.
‘தமிழின் முதல் சிறுகதையாசிரியர் பாரதி என்றார் சி.சு. செல்லப்பா. பலரும் இக்கருத்தை ஏற்கின்றனர் எனில், முதல் சிறுகதை புதுச்சேரி-யில் எழுதப்பட்டது எனலாம். என் கருத்தில் வ.வே.சு. ஐயரே முதல் சிறுகதை ஆசிரியர். அவரது ‘மங்கையர்க்கரசியின் கதைகள்’ தொகுப்பு 1915ஆம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து வெளியாயிற்று. முதல் சிறுகதையாசிரியர் பாரதியோ, ஐயரோ எவராயினும், அந்த முதல் கதை, புதுச்சேரியிலிருந்து எழுதப்பட்டது’.
_ பிரபஞ்சன், ‘20ஆம் நூற்றாண்டு புதுவைக்கதைகள்’ முன்னுரையில்
அரசு அச்சக வெளியீடுகள்
புதுச்சேரியில் பிரெஞ்சியர் ஆட்சி செய்த போது 1816இல் குவர்னமா அச்சகம் என்ற பெயரில் அரசால் தொடங்கப்பட்ட அச்சகம், அரசுத் திட்ட விளக்க நூல்கள், பல துறைகள் தொடர்-பான நூல்களை வெளியிட்டது. இருபதாம் நூற்றாண்டில், கவிஞர் சவரிராயலு நாயக்கர் வாழ்க்கை வரலாறு, ஆனந்தரங்கரின் நாட்-குறிப்புத் தொகுதிகள், புதுச்சேரி விடுதலை வரலாறு, பாரதியார் தொடர்பான கட்டுரைகள், பாரதிதாசன், புதுவைச்சிவம், வாணிதாசன் ஆகியோரின் படைப்புகள், அகராதிகள் எனப் பல நூல்கள் புதுவை அரசு வெளியீடுகளாக அச்சடித்து ஒரு பதிப்பகப் பணியை ஆற்றி வருகிறது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூல்களைத் தொடக்கத்தில் பாரதசக்தி நிலையம், கலாநிதி அச்சகம் ஆகியவை வெளியிட்டன. பாரதிதாசன் தாமே ‘பாரதிதாசன் பதிப்பகம்’ என்ற பெயரில் தனது பல நூல்களையும் வெளியிட்டார். பின்னாட்களில் அவை தமிழகத்தின் வேறு பதிப்பகங்கள் வாயிலாக வெளியாயின.
கவிஞர் புதுவைச்சிவம் 1940இல் ஞாயிறு பதிப்பகம் தொடங்கி பெரியார், அண்ணா, நெடுஞ்செழியன், பாரதிதாசன் முதலானவர்கள் நூல்களுடன் தனது கவிதைகள், நாடகங்கள் முதலானவற்றையும் வெளியிட்டார். அப்பதிப்-பகத்தின் இருபதுக்கும் மேற்பட்ட வெளியீடு-களில் அண்ணாவின் தீ பரவட்டும், ஆரிய மாயை, பாரதியார் பற்றி பாரதிதாசன் எழுதிய வரலாறு முதலியவை குறிப்பிடத்தக்கன. பின்னாட்களில் பூங்கொடி பதிப்பகம் எனும் பெயரிலும் புதுவைச்சிவம் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் வாணிதாசன் ‘ஐயைப் பதிப்பகம்’ தொடங்கி தன் நூல்களை மட்டும் வெளியிட்-டார்; தமிழகப் பதிப்பகங்களுக்கு விற்பனை-யுரிமை வழங்கினார்.
மக்கள் இயக்கக் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகள் சென்னை புகழ்ப்பதிப்பகம் செ.து. சஞ்சீவியால் வெளியிடப்பட்டு வருகின்றன. சில கட்டுரை, கதை நூல்களை மட்டும் வேறு சில தமிழகப் பதிப்பகங்களும் வெளியிட்டன.
தமிழறிஞர் மு.த. வேலாயுதனார் நற்றமிழ்ப்-பதிப்பகம் தொடங்கி இலக்கியம், இலக்கணம், வரலாறு, புவியியல், கதைக்கொத்து, பிரெஞ்சு மொழிப் பாடம் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.
பேராசிரியர் சுந்தர சண்முகனார் ஆய்வறிஞர்; அவர் ‘புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் தொடங்கி தனது எழுபத்திரண்டுக்கும் மேலான நூல்களுடன் நூற்றுக்கும் மேலான நூல்களை வெளியிட்டார். தமிழ்_இலத்தீன் பாலம், கெடிலக்கரை நாகரிகம், வீடும் விளக்கும், வள்ளுவர் இல்லம், கௌதம புத்தர் காப்பியம், உலகு உய்ய... முதலான பல நூல்கள் குறிப்பிடத் தக்கவையாகும்.
புதுவை வரலாற்றுச் சங்கம் 1911 முதல் இன்று வரை புதுவை வரலா-று, பண்பாடு, அகழாய்வு, கல்வெட்டாய்வு முதலான பல்வேறு நிகழ்வு-களை நடத்தி, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.
பிரெஞ்சு அரசு உதவியுடன் புதுவையில் செயல்படும் பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் எனப்படும் ஆய்வு நிறுவனம் வடமொழி, பிரெஞ்சு, தமிழ், அறிவியல், வரலாறு எனப் பல்வேறு துறைகளி-லும் ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகிறது.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு நூல்கள், பாரதிதாசன் கவிதை மொழிபெயர்ப்பு, ஆனந்தரங்கர் நாட்குறிப்பு முழுமையாக 10 தொகுதிகள் எனப் பல நூல்களை வெளியிட்டு வருகிறது.
புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் பன்மொழிகள் அச்சகம் அமைத்து அதன் வழியே பிரெஞ்சு, ஆங்கிலம், சீனம், ஜெர்மன், தமிழ், வங்கம், இந்தி எனப் பல மொழிகளிலும் அரவிந்தர், அன்னை தொடர்பான நூற்றுக்-கணக்கான நூல்களைத் தொடர்ந்து வெளி-யிட்டு வருகிறது. தொடக்கத்தில் சுத்தானந்த-பாரதி இந்நிறுவனத்தில் பணியாற்றியபோது சுப்பிரமணிய பாரதி, சுத்தானந்த பாரதி, பாரதி-தாசன் ஆகியோரின் சில நூல்களும் வெளியிடப்-பட்டன.
புதுவை அறிவியல் இயக்கம் தனித்தும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்-தும் பல அறிவியல் நூல்களை வெளியிட்டு வருகிறது. விழுப்புரத்தில் உள்ள முத்துப் பதிப்பகம் பல்லாண்டுகளாக புதுவைக்கவிஞர்கள், எழுத்தாளர்கள் முதலானோரின் நூற்றுக்கணக்-கான நூல்களை வெளியிட்டு அறிமுக எழுத்தாளர்கள், வளர்ந்த எழுத்தாளர்கள் பலருக்கும் உதவி செய்து வருகிறது.
தற்போது வாழும் படைப்பாளிகளின்
நூல் வெளியீடுகள்
புதுவையில் கல்லூரிகள், பல்கலைக்கழகம் மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், வேறு பணிகள் புரிந்து கொண்டு எழுதுவோர் என இப்போதும் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பல்துறைப் படைப்-பாளிகள் இயங்கி வருகின்றனர். இவர்களது பல நூல்களைத் தமிழ்ப் புத்தகாலயம், காவ்யா, அன்னம், அகரம், சேகர், கவிதா, வானதி, கங்கை, மணிமேகலைப் பிரசுரம், விழுப்புரம் முத்துப் பதிப்பகம், மீனா பதிப்பகம், சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் முதலான தமிழகத்தின் பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன. மற்றும் பல எழுத்தாளர்கள் தங்களால் இயன்றபோது தாங்களே முதலீடு செய்து தங்கள் நூல்களையும், தங்கள் நண்பர்கள் நூல்களையும் வெளியிடுகின்றனர். சில நூல்களைத் தாங்களும், சில நூல்களைப் பதிப்பகங்கள் வழியேயும் வெளியிடுவோரும் உண்டு.
பேராசிரியர்கள் க.ப. அறவாணன்,
ப. மருதநாயகம், அ. அறிவுநம்பி, அறிவுடைநம்பி, கரு. அழ. குணசேகரன், ஆ. திருநாகலிங்கம், இளமதி சானகிராமன், நலங்கிள்ளி,
எஸ். ஆரோக்கியநாதன், ம. மதியழகன்,
பாஞ். இராமலிங்கம், அரிமதி இளம்பரிதி... எனப் பலர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாக இருந்து பல நூல்களை வெளியிட்டு வருகின்-றனர்.
பேராசிரியர்கள் ம.இலெ. தங்கப்பா,
க. பஞ்சாங்கம், ராஜ்கௌதமன், தேவமைந்தன், க. நாராயணன், மு. சாயுபு மரைக்காயர்,
வே.ச. திருமாவளவன், அ. சோதி, நா. இளங்கோ, அ. தில்லைவனம், அ. பாண்டுரங்கன்,
எ.மு. ராசன், பி. ராஜ்ஜா, வி. அசோக்குமார்,
சு. கலிவரதன், சா. நசீமாபானு,
பா. கிருஷ்ண-மூர்த்தி, பரிமளம், சிவ. மாதவன், பா. பட்டம்மாள், வாசுகி, இரா. வசந்தமாலை, இரா. தட்சிணாமூர்த்தி, ராஜலட்சுமி, கிருங்கை சேதுபதி... என முடிவுறாத பட்டியலாகத் தொடரும் கல்லூரிப் பேராசிரியர்கள், விரிவுரை-யாளர்கள் பலரும் பல்துறை நூல்களையும் பல்வேறு பதிப்பகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.
பேராசிரியர்கள் பொன். கோதண்டராமன், ப. அருளி, தி.வே. கோபாலையர், மதன கல்யாணி, இல. இராமமூர்த்தி, சத்தியசீலன், சுதர்சன்,
த. பரசுராமன், அரிமளம். பத்மநாபன், மு. சுதர்சன், இரா. சம்பத், பக்தவத்சல பாரதி, பிரகதி, பிலவேந்திரன், சிலம்பு நா. செல்வராசு, நூலகர் கு. இராசேந்திரன், நாக. செங்கமலத்தாயார்,
இரா. கனகராசு எனப் பட்டியல் நிறைவு பெறாத பல ஆய்வாளர்கள் தங்களது பல நூல்களைப் பல்வேறு ஆய்வு, பதிப்பக நிறுவனங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.
மூத்த எழுத்தாளரான கி.ரா. கரிசல் எழுத்தாளராக அறியப்பட்டாலும், அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரி வாசத்தில் எழுதிய படைப்புகளாலேயே சாகித்ய அகாடமி விருது பெற்றார்; புதுவையில் பிறந்து வாழும் எழுத்தாளரான பிரபஞ்சனும் புதுவை வரலாற்றுப் பின்னணியை வைத்து எழுதிய புதினத்தால் சாகித்ய அகாடமி விருது பெற்றார்; புதுவையைச் சேர்ந்த பாவண்ணன் பணியின் காரணமாகத் தொடர்ந்து பெங்களூருவில் வசித்தாலும் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்று, புதுவைக்குப் பெருமை சேர்த்துள்ளார்; இவர்கள் நூல்களெல்லாம் தமிழகப் பதிப்பகங்களால் மட்டுமே வெளியிடப்-பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் முனைவர் இரா. திருமுருகன், அரிமதி தென்னகன், சித்தன், பாரதிதாசன் புதல்வரான மன்னர் மன்னன், மா. இராமகிருஷ்ண பாரதி, பிரேம் _ ரமேஷ், செவ்வேள், தமிழ் மல்லன்,
சு. வேல்முருகன், கல்லாடன், இலக்கியன், இரா. வெங்கடேசன், சீனு. இராமச்சந்திரன், புதுவை நாகி, கோ. தனபாலன், வில்லியனூர்
ந. வெங்கடேசன், எம்.கே. இராமன்,
காசி. வில்லவன், சு. குமாரகிருஷ்ணன், பாகூர் அப்பாசாமி, சிவ. இளங்கோ, அரிமாப்பா மகன் புதுவை சந்திரஹரி, ப. முருகேசன், புதுவை நித்திலன், மகரந்தன், அ. உசேன், வில்லியனூர் பழனி, எழில்முதல்வன், அரங்க. நடராசன், சி.எஸ். முருகேசன், பாரதிவசந்தன், ரா. ரஜினி, துரை. மாலிறையன், இரா. அரங்கநாதன், புதுவை பிரபா, பிரெஞ்சு இலக்கிய மொழிபெயர்ப்பாளர் க. சச்சிதானந்தம், சி.எஸ். இராமநாதன், யுகபாரதி, சீனு. தமிழ்மணி, புதுவை தமிழ்நெஞ்சன், செந்தமிழினியன், குப்புலிங்கம், விசித்திரன், புதுவை ஞானகுமாரன், அசோகா சுப்பிரமணியம் எனப் பல்துறை படைப்பாளிகளும் நிறைவு பெற்றுவிட முடியாத பட்டியலாக இருந்து தங்கள் நூல்களைச் சொந்த வெளியீடுகளாகவோ, பிற பதிப்பக வெளியீடுகளாகவோ வெளியிட்டு வருகின்றனர்.
விசாலாட்சி தங்கப்பா, பா. விசாலம், மாலதி மைத்ரி, சூரிய விசயகுமாரி, பூங்கொடி பராங்குசம், ஜெ. செல்வக்குமாரி, கலா விசு, வைத்தி. கஸ்தூரி, காந்திமேரி, மணிமேகலை குப்புசாமி, வ.விசயலட்சுமி, மார்கரெட், கு. அ. தமிழ்மொழி, இரா. ஸ்ரீவித்யா, இரா. விசாலாட்சி எனக் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களும் ஆ. கோவிந்தராஜலு, ஆர்ப்மியான், பரிதிவெங்கடேசன், பூதலூர் முத்து, மு. நடராசன், தங்க. சிவராசன், பாரதி சிவா, வெ. கலிவரதன், ச. அன்பழகன், எஸ். சங்கர் எனச் சிறுவர் இலக்கியப் படைப்பாளிகளும், காரைக்காலைச் சேர்ந்த பகவானந்ததாசன், திருமேனி நாகராசன், சேத்தூர் அன்பழகன், செல்லூர் கணேசன், இரா. இராமமூர்த்தி, தெ. தட்சிணாமூர்த்தி, காரை ஆடலரசன், ஹ.மு. நத்தர்சா, காரைஅலீம், பரகாலன், காரை இறையடியான்... எனப் பலரும் பல்துறை நூல்களை வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது வாழும் படைப்பாளிகள் எண்ணிக்கையையும் அவர்களது நூல்கள் எண்ணிக்கையையும் யாரும் எத்தகைய விடுதலுமின்றி முழுமையாகப் பட்டியலிட்டு விட முடியாது. ஒவ்வொரு படைப்பாளியும் குறைந்தது மூன்று நூல்கள் முதல் அதிக அளவாக 150 நூல்கள் வரை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பதிப்பகம் இல்லா இடர்நிலை
இவ்வாறாக, புதுவைப் படைப்பாளிகளின் நூல்கள் பதிப்பு என்பது 1810ல் தொடங்கி இருநூறு ஆண்டுகளாக பெருமளவில் நிகழ்ந்து கொண்டுள்ளது. தமிழகத்தின் ஒரு மாவட்ட அளவே கொண்ட புதுச்சேரி பலநூறு படைப்பாளிகள், பல்லாயிரம் படைப்புகள் என்ற நீண்ட நெடிய வரலாறு கொண்டுள்ளது. பண்டை மரபிலக்கிய, இலக்கண நூல்கள், புத்திலக்கியச் சிறுகதை, புதுக்கவிதைப் படைப்புகள், தலித்தியம், பெண்ணியம் தொடர்பான படைப்புகள், இந்திய, பிறநாட்டுப் பன்மொழி நூல்கள், வெளியீடுகள் என உலகளாவிய பார்வை கொண்ட நூல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளன.
ஆனால் புதுவைப் படைப்பாளிகளின் மிகப்பெரிய குறையும் இடர்ப்பாடும் என்னவெனில் புதுவைப் படைப்பாளிகளின் நூல்களைப் புதுவை மண்ணிலிருந்து பதிப்பித்து, வெளியிட்டு, தமிழகத்திற்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் சேர்க்கக்கூடிய பெரிய பதிப்பகங்கள் இல்லை; நூலை எழுதும் திறமையுடன், செலவு செய்து வெளியிடும் பொருளாதாரமும், அதை நூலகங்களுக்கும், வாசகர்களுக்-கும் சேர்க்கும் வியாபாரத் திறனும் இல்லாத படைப்பாளி-களின் நூல்கள் பரவலான வாசிப்புக்குச் செல்ல முடிவ-தில்லை.
எனவே பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் அவுஸ், காவ்யா, அன்னம், அகரம், வானதி, மணிமேகலை போன்று ஏதாவது ஒரு பெரிய பதிப்பகத்-தைப் புதுவை மண்ணில் அமைத்து, புதுவைப் படைப்-பாளி-களின் நூல்களை வெளியிடுவார்களேயானால் புதுவையரசின் பொது நூலகங்கள், பள்ளி நூலகங்கள், உயர்கல்வி நிறுவன நூலகங்கள், வாசகர்கள் மற்றும் தமிழக அரசின் நூலகத்துறை என்று ஒரு நூலின் இரண்டாயிரத்-திற்கும் மேற்பட்ட பிரதிகளை மிக எளிதில் விற்பனை செய்யலாம்.
எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, புதுவை அல்லது தமிழ்நாட்டின் பதிப்புத்துறை-யில் நாட்டம் உடையவர்கள் புதுவையில் பெரிய அளவிலான பதிப்பகத்தை உருவாக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கட்டுரைக்குத் துணை நின்ற நூல்கள்
1. புதுவை பேணும் தமிழ், கு. இராசேந்திரன், தாய் பதிப்பகம், 2, ஓங்கார வீதி, முதலியார் பேட்டை, புதுவை _ 4.
2. இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரி இலக்கியப் பதிவுகள், கு. இராசேந்திரன் மேற்படி வெளியீடு.
3. இருபதாம் நூற்றாண்டுப் புதுவைத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள், முருகன் & சுந்தரகோபாலன், நண்பர்கள் தோட்டம் வெளியீடு, புதுவை.
4. இருபதாம் நூற்றாண்டு புதுவைக் கதைகள், பிரபஞ்சன் & பாரதிவசந்தன், கவிதா பப்ளிகேஷன், சென்னை _ 17.