Tamil books

Thursday 21 April 2011

தாகூரின் படைப்புகளும் காப்புரிமை மரபுகளும்

ஞாலன் சுப்பிரமணியன்*

மகாகவி, கல்வியாளர், ஓவியர், இசைமேதை, நூலாசிரியர், மானுடத்தைப் போற்றியவர், மேடைக்கலைக்குப் புத்துயிரூட்டியவர், விடுதலை இயக்கங்களின் நண்பர், உலகு தழுவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தியவர் _ இன்னும் பல சிறப்புகளுக்கு உரிய மாமனிதர் Ôகுருதேவர்Õ எனப் போற்றப்பட்ட ரவீந்திரநாத்தாகூர். காந்தியடிகளுக்கு ஈடாகக் கருதப்பட்டவர் அவர் காலத்தில் அவர் ஒருவரே. இந்திய மற்றும் ஆசியப் பண்பாட்டுத்தளத்தைச் செழுமைப்படுத்தியவர்களுள் முதன்மையானவர் அவரே என்பது மறுக்கவொணாத உண்மை. அவரது படைப்புகள் _ அச்சில் வந்தவையும் கையெழுத்துப்படிகளாக இன்னும் இருப்பவையும் _ ஏராளம்.  அவ்வாறே படியெடுக்கப்படாத ஓவியங்களும் பல உண்டு.
குருதேவர் படைப்புகளின் மூலப்படிவத்தை அச்சிடுதல், நகலாக்கல், நிகழ்கலை ஆக்கல் முதலியவற்றைச் செய்வதற்கான சட்டப்படியான தனி உரிமை, விசுவபாரதி (பல்கலைக்கழகம்)யிடம் இருந்தது. அவர் மறைந்து ஐம்பதாண்டுகள் (1991) சென்ற பின்பு இந்தப் பதிப்புரிமைக்காலம், 1957 _ ஆம் ஆண்டைய இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின்படி முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்தில் 1709_ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் 1914 _ ஆம் ஆண்டு காப்புரிமை விதிகள் நடைமுறைக்கு வந்தது. 1957 _ ஆம் ஆண்டு பல திருத்தங்கள், மற்றும் மாறுதல்களை ஏற்ற புதிய காப்புரிமைச் சட்டம் அமல் செய்யப்பட்டது. இச்சட்டத்தின் படி படைப்பாளி மறைந்து ஐம்பது ஆண்டுகள் அல்லது நூல் வெளியான நாளிலிருந்து ஐம்பதாண்டுகள் காப்புரிமைக்கான காலம் என வரையறுக்கப்பட்டது. பெரிய அளவில் சர்ச்சைகள் எழவில்லை ஆதலால் இதிலுள்ள சிறிய முரண், நீதிமன்றப் பரிசீலனைக்கு வரவில்லை. இடையே ஹிழிணிஷிசிளி நீஷீஸீஸ்மீஸீtவீஷீஸீ, ஙிமீக்ஷீஸீமீ நீஷீஸீஸ்மீஸீtவீஷீஸீ மற்றும் ஷிtஷீநீளீலீஷீறீனீ றிக்ஷீஷீtஷீநீணீறீ போன்ற மரபுச் சீர்முறைகள் பெரும்பாலான நாடுகளால் பின்பற்றப்பட்டன. மக்கள் சீனம் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் இந்த மரபுகளைப் புறந்தள்ளின. (அதற்குச் சில நியாயங்கள் முன்வைக்கப்பட்டன. சான்றாக ஒன்று: சென்ற நூற்றாண்டின் அறுபதுகள் வரை சீனம் _ ஆங்கில மொழி அகராதிகள் பெரும்பாலும் அமெரிக்கப்
பல்கலைக் கழகங்கள் உருவாக்கியவை. ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட சீனம் _ ஆங்கிலப் பேரகராதி புத்தகச்சந்தையில் 500 ரூபாய்க்கு விற்பனை ஆயிற்று. பொறுமை இழந்த மக்கள் சீன அரசு அதே அகராதியை அதே அளவில் ஆனால் மேம்பட்ட தாள் _ கட்டமைப்பில் உலகெங்கும் பரவியுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 100 ரூபாய் விலைக்கு வெளியிட்டது. சீனத்தில் பதிப்பிக்கப் பட்டது என்பதற்கான எந்த அடையாளமும் அதில் இருக்காது! பதிப்புரிமை மீறல் பற்றியும் கள்ளப்பதிப்பு பற்றியும் அமெரிக்கா ஏகமாக ஆரவாரம் செய்தது. அமெரிக்காவிலுள்ள புத்தகக் கடைகளிலும் சீனப்பதிப்புதான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது!  படிப்போரின் நலன்கள் தாம் முக்கியம் எனச் சீனம் மெல்லிய குரலில் சொன்னது!)
குருதேவரின் நூல்களுக்கான காப்புரிமை பெற்றிருந்த விசுவபாரதியின் சார்பில், இந்தக் காப்புரிமைக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரைச் சந்தித்து முறையிட்டது. (விசுவபாரதி பல்கலைக்கழகச் சட்டத்தின்படி நாட்டின் பிரதமர்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.) மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் தோழர் ஜோதிபாசு, விசுவபாரதியின் பக்கம் நின்றார். காலநீட்டிப்புக்கான அவசரச் சட்டம் உடனடியாகப் பிறப்பிக்கப்பட்டது.
சில வாரங்களுக்குப் பிறகு இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக, காப்புரிமைக் கால நீட்டிப்பு நோக்கத்தை உள்ளடக்கிய திருத்தங்களுடன் கூடிய மசோதா மக்களவை முன்பு பரிசீலனைக்கு வந்தது. கட்சி வேறு
பாடுகளை மறந்து விசுவபாரதியின் காப்புரிமைக்காலத்தைப் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்க உறுப்பினர்கள் ஆதரவு- காணப்பட்டது. விவாதங்களின் போது தோழர்கள் கீதா முகர்ஜி, மாலினி பட்டாச்சார்யா, மற்றும் பார்வர்ட்பிளாக் தலைவர் சித்த பாசு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் கே.வி.தாமஸ் போன்றோர் உணர்ச்சி பொங்கப் பேசினர். விசுவபாரதியின் காப்புரிமை பிற ஏகபோகங்களிலிருந்து  மாறுபட்டது என அவர்கள் கூறினர். விசுவபாரதியின் காப்புரிமை முடிவுக்கு வந்தால் வர்த்தக ரீதியில் செயல்படும் பதிப்பாளர்கள் பதிப்புத் தரத்தைக் குறைத்துவிடுவது மட்டுமின்றி, ஏழை எளிய வாசகர்கள் வாங்கிப் படிக்க இயலாத அளவு விலையையும் பன்மடங்கு ஏற்றிவிடுவர் என்று அவர்கள் கூறினர். அத்துடன் லாபநோக்குடன் செயல்படும் சந்தைப் பொருளாதார அமைப்பில் குருதேவரின் சிறந்த நூல்களைப் பள்ளி பிரகிருதி,  மனுஷேர் தர்மா, ஸ்வதேசி சமாஜ், அரூப் ரதன், நடராஜ் ரீது, ரங்கஷகலா, பீதிகா, பரிசாஷ் போன்றவற்றை அச்சுக்குக் கொண்டுவரமாட்டார்கள் என்றும் (இத்தகைய நூல்கள் அதிகம் விற்பனை ஆக மாட்டா என்பதால்) கீதாஞ்சலி, சஞ்சாயதா, கீதோ பிதான், கோரா, சேசேஷர் கவிதா, பாலகா போன்ற நன்கு விற்பனையாகும் (தீமீst sமீறீறீமீக்ஷீs) நூல்களை மட்டுமே பெருமளவில் வெளியிடுவர் என்றும் நூல் ஆர்வலர்களின் நலன்கள் அவர்களுக்கு முக்கியமில்லை என்றும் விளக்கினர். குருதேவரின் சில நூல்களுக்கு எப்படியோ பதிப்புரிமை பெற்ற ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ், மாக்மில்லன் போன்றோர் இன்று வரை கடைப்பிடிக்கும் வர்த்தக ஒழுக்கம் பற்றியும் அவர்கள் தம் வேதனையை வெளிப்படுத்தினர். (காப்புரிமைக்காலம் முடிந்து விட்ட இன்றைய காலத்தில் குருதேவரின் நூல்கள் பெருமளவில் ஒரு வெளியீட்டு நிறுவனத்தால் சந்தைப்படுத்தப் படுவதையும் அவற்றில் மலிந்து காணப்படும் பெரும்பிழைகள் கண்டு அறிவுலகம் செயலிழந்து நிற்பதையும் அனைவரும் அறிவர்.)
காப்புரிமைச் சட்டத்திருத்தம் குருதேவர் படைப்புகளின் பதிப்புரிமை விசுவபாரதியிடம் இருப்பதை முன்னிறுத்தியே கொண்டு வரப்பட்டது. பத்தாண்டுகள் என்ன, இருபதாண்டுகளுக்கு நீட்டிக்கலாமே என்றும் பல உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
குருதேவரின் படைப்புகள் பெரும்பாலும் வங்க மொழியிலேயே இருந்தன. சிலவற்றை அவரே ஆங்கிலத்தில் ஆக்கம் செய்திருந்தார். அவருடைய நூல்கள் அனைத்தும் இந்திய மொழிகள் அனைத்திலும் ஆக்கம் பெற்று வெளிவரல் வேண்டும் என்றும் தரத்தில் சமரசம் செய்யாமல் அதே சமயம் குறைந்த விலையில் அவை இருக்க வேண்டும் எனவும் பேசப்பட்டது. திருத்தங்களை ஏற்றுக் காப்புரிமைக்கால நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டது. விசுவபாரதி, நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதெமி, பங்க்ளா அகாதெமி போன்ற நிறுவனங்களின் சார்பில் ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் குருதேவரின் படைப்புகள் அனைத்தையும் அந்த அமைப்பு வெளியிட வேண்டும் என்றும் உயர்ந்த தரத்தில் அவற்றைப் பதிப்பிப்பதுடன் பெரும் பகுதி மக்கள் வாங்கிப் பயன் பெறத்தக்க முறையில் விலையை நிர்ணயிக்கலாம் என்றும் அதுவரை பதிப்புரிமை விசுவபாரதியிடமே இருக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. சட்டத்திருத்தம் ஒரு மனதாக நிறைவேறியது.
குருதேவரின் படைப்புகள் தேசிய முக்கியத்துவம் உடையவை. அவை அனைத்து வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தினர். அவ்வாறே பிரேம்சந்த், பங்கிம், ஜெய்சங்கர் பிரசாத், சூரியகாந்த் திரிபாதி, ÔநிராலாÕ பாரதியார் போன்றோர் படைப்புகள் சந்தைச்சக்திகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு வெகு மக்களைச் சென்றடைய வேண்டுமென்றும் நசிவு இலக்கியங் களின் ஆக்கிரமிப்பு ஊக்குவிக்கப்படக்கூடாது என்றும் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
அவர்கள் பேசினர்;  கலைந்து சென்றனர். விசுவபாரதியின் காப்புரிமைக்காலம் நீட்டிக்கப்பட்டது. ஆயினும் குருதேவரின் படைப்புகள் பல இன்னும் அச்சேறாத நிலை மட்டும் நீடிக்கிறது!


* கட்டுரையாளர் ஜனசக்தியின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். ஜீவாவின் மாணவர். சென்னை, விசுவபாரதி, பெய்ஜிங், சார்போன் ஆகிய பல்கலைக்கழகங்களில் பயின்றவர். Capitalism and Economic Forecasting, சீன இலக்கியத்தின் பொற்காலம் முதலிய நூல்களின் ஆசிரியர், ஆய்வாளர். ஒப்பியல் இலக்கியம், மொழி பெயர்ப்புக் கலைஇயல் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர். பாப்லோ நெருதா ஸ்பானிய - லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் இயக்குனராகக் கடமை ஆற்றுகிறார்.

No comments:

Post a Comment