Tamil books

Thursday 21 April 2011

தமிழ்ப் பதிப்பு வரலாறு: ரா. இராகவையங்கார்

தமிழ் மொழி, இனம், பண்பாடு, வரலாறு குறித்த திடகாத்திரமான விவாதங்கள் தமிழ் நூல்களின் பதிப்பிற்குப் பிறகே வலுக்கொண்டன. 19ஆம் நூற்றாண்டில் வெகுவாகக் கவனிக்கப்-பட்ட பதிப்பு வரலாற்றை அறியின் அவை விளங்கும். பழந்தமிழ் நூல்களின் பதிப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பதிப்பாசிரியர்கள் மூலநூல்/உரையாசிரியர்களுக்கும் மேலாக மதிக்கப்பட்-டனர். ‘பரிசோதனையாசிரியர்’ என்று போற்றப்-பட்டனர். மழவை மகாலிங்கையர், ஆறுமுக-நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை என நீளும் பட்டியலில் கவனிக்கப்பட வேண்டியவர்
ரா. இராகவையங்கார். இராகவையங்காரின் பதிப்பு முறைமை பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
சமூகப் பின்புலம்
1870இல் சிவகங்கை சமீனைச் சார்ந்த தென்னவராயன் புதுக்கோட்டையில் நைந்துருவ காசிப கோத்திரத்தில் இராமானுஜ ஐயங்காரின் மகனாக இராகவையங்கார்  பிறந்தார். இவர் வைணவர் என்பது வெளிப்படை. மு.இராக-வையங்-காரின் தந்தையான முத்துசாமி ஐயங்காரின் (மாமன்) ஆதரவில் வளர்ந்து தமிழ்க் கல்வியை முறையாகப் பயின்றவர். சேதுசமஸ்-தான அரசவைப் புலவராகச் செயல்பட்டவர். பாண்டித்-துரைத் தேவரால் தொடங்கப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் மற்றும் அதன் வெளி-யீடாக வந்த ‘செந்தமிழ்’ இதழ் இராகவை-யங்காரை புலமையாளராக அடையாளங்காண வைத்தது.
மகாவித்வான், பாஷா கவிசேகரர், சேது சமஸ்தான அரசவைப் புலவர், செந்தமிழ் பத்திராசிரியர், அண்ணாமலைப் பல்கழைக்கழக ஆய்விருக்கையில் பணி எனப் பல்வேறு பதவிகளையும் சிறப்புப் பட்டங்களையும் பெற்ற இராகவையங்கார் நல்ல பதிப்பாசிரியராகவும் இனங் காணப்பட்டார்.
இலக்கியம், உரைநடை, ஆய்வுக் கட்டுரைகள், மரபுச்செய்யுள், மொழி பெயர்ப்பு என இலக்கியச் செயல்பாடுகள் அனைத்திலும் தடம் பதித்த அவர் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். 1902 தொடங்கி அவரின் இறுதிக்காலம் வரையிலான ஏறத்தாழ 45 ஆண்டுகால கல்விப் பணி முக்கியமானதாகும். 19ஆம் நூற்றாண்டு தொடங்கிய தமிழ்ப் பதிப்பு நூல்களையும் பாண்டித்துரைத் தேவரின் முயற்சியால் சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை-யும் ஒருங்கே வாசிக்கும் சூழலில்தான் அவர் செயல்படத் தொடங்குகிறார். ஆறுமுகநாவலர், சி.வை.தா. போன்ற இலங்கை சைவர்களின் செயல்பாடுகளைக் கவனித்தும் உ.வே.சா. போன்ற பதிப்பாசிரியர்களை முன்மாதிரியாகக் கொண்டும் தனக்கான நிலைப்பாட்டினை உருவாக்கிக் கொண்டவர்.
பழந்தமிழ் நூல்கள் பெரும்பகுதி பதிப்பிக்-கப்பட்ட சூழலில் பதிப்புத்துறைக்கு வந்த இராகவையங்கார் முன்பு பதிப்பான நூல்களை-யும் இனி பதிப்பிக்கப்பட வேண்டிய நூல்கள் பற்றியும் சிந்தனை கொண்டவராக இருந்தார். பதிப்பான நூல்களின் மீது விமர்சனத்தையும் வைத்திருக்கிறார். இராகவையங்காரின் பதிப்புப் பணியினை வசதிக்காகப் பின்வருமாறு பகுத்துக் கொள்ளலாம்.
1. சங்க இலக்கியப் பதிப்புகள்
2. இலக்கணப் பதிப்புகள்.
3. பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்புகள்
4. பிறநூல் பதிப்புகள்
சங்க இலக்கியப் பதிப்புகள்
பழந்தமிழ் நூல்களில் கிடைப்பனவற்றுள் முதன்மையானதும் முக்கியமானதுமாக அமைவது சங்க இலக்கியம். இரண்டாம் கட்ட பதிப்பாசிரியர்கள் என்கிற வரையறையை இங்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதாவது 19ஆம் நூற்றாண்டு வரையிலான பதிப்பாசிரியர்களை முதல்கட்ட பதிப்பாசிரியர்-களாகவும் அதற்கடுத்த காலகட்ட பதிப்பாசிரி-யர்களை இரண்டாம் கட்ட பதிப்பாசிரியர்-களாகவும் கொள்ளலாம்.
சங்க இலக்கியப் பதிப்பு என்பது சி.வை.தா. வின் கலித்தொகை (1887) பதிப்பில் இருந்தே தொடங்குகிறது. அதே சமயம் திருமுருகாற்றுப் படை நச்சினார்க்கினியர் உரையுடன் 1834இல் சரவணப் பெருமாளை-யரால் பதிப்பிக்கப்பட்டது. உ.வே.சா.வின் பத்துப்பாட்டு பதிப்பு 1889லும் புறநானூறு 1894லும் பதிப்பாயின. மற்றவை அனைத்தும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பதிப்பிக்கப்பட்டன. சங்க இலக்கியங்களில் இறுதியாகப் பதிப்பிக்கப்பட்ட அகநானூற்றின் (1918) பதிப்பு வரலாறு என்பது முக்கியமானது.
இறையனார் களவியலின் இரண்டாம் பதிப்பினை 1899இல் சி.வை.தா. வெளியிடுகிறார். அதில் “இப்பொழுது யான் பரிசோதித்து வரும் அகநானூறு போதுமான கையெழுத்துப் பிரதிகள் அகப்படாமையால் இன்னும் அச்சிற்குப் போகத் தடைபடுகின்றது. ஏட்டுப் பிரதி வைத்திருக்கும் பெரியோர் தத்தம் பிரதிகளை சில காலத்திற்கு எனக்கு இரவலாகத் தருவதாயின் நூல் அச்சானவுடனே அவரவர் அனுப்பிவைத்த புத்தகத்துடன் ஒவ்வொரு புத்தகத்திற்கு இவ்-விரண்டு அச்சுப் பிரதியும் என் நன்றிக்குறியாக உபகாரமாய் அனுப்புவேன்’’ என்று எழுதிச் செல்கிறார்.
அவ்வாறே உ.வே.சா.வும் தனது பதிப்புரையில் அகநானூற்றினைப் பதிப்பிக்கப் போவதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இருவர் முயற்சியும் நிறைவடையவில்லை. 1918இல் இராஜகோபா-லாசாரியன் என்பவரால் அகநானூறு களிற்று-யானைநிரை மட்டும் பதிப்பாகிறது. 1923இல் முழுமையாக வெளியிடப்-படுகிறது. அதில் ரா.இராக-வையங்காரின் முன்னுரை இடம்பெற்றி-ருக்கிறது. “யான் அக-நானூற்றை இச்சங்க ஸ்தாபனத்திற்கு முன்-தொட்டு ஆராய்ந்து கொண்டிருத்தலைத் தெரிந்தவர்களாதலால், என்னையே இந்நூலை அச்சிட்டு வெளியிடும்படி வேண்டினார்கள். அவர்கள் வேண்டுகோட்படி இன்றைக்கு ஓரிருபது வருடங்கட்கு முன் மதுரைத் தமிழ்ச் சங்கத்து என்னால் இவ்வக-நானூறு அச்சிடத் தொடங்கப்பட்டு சிறிது தூரம் நடைபெற்றது’’ என்று எழுதிச் செல்கிறார். சி.வை.தா., உ.வே.சா., ரா.இரா. ஆகியோரின் அகநானூற்றுப் பதிப்பு முயற்சி சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றோடு கவனிக்கத்தக்கது.
இராகவையங்காரின் அகநானூற்றுப் பதிப்பு நிறைவடையவில்லை. அதே சமயம் பதிப்பான சங்க இலக்கியப் பதிப்பில் இருந்த சிதைந்த பாடல்கள் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்திருக்-கிறார். அது பற்றி பேசுவதற்கான ஒரு சூழலை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வழி செயல்பட்ட கல்லூரி மற்றும் செந்தமிழ் இதழ் உருவாக்கித் தந்திருக்கிறது. 1902இல் வெளியான செந்தமிழ் முதல் இதழில் ‘மீனுண் கொக்கின் என்னும் புறப்பாட்டு’ என்னும் தலைப்பில் ஒரு சிறிய ஆய்வினை நிகழ்த்துகிறார்.
  புறநானூற்றினை 1894இல் உ.வே.சா. பதிப்பிக்கிறார். அப்பதிப்பில் சில பாடல்கள்/அடிகள் சிதைந்து காணப்பட்டன. குறிப்பாக 277ஆம் பாடலின் முதல் அடி இல்லை. இதனை விவாதத்திற்கு உட்படுத்தும் இராகவையங்கார் “இதுகாறும் வெளிவராத இப்புறநானூற்றுச் செய்யுள் மதுரைக் கீழைச் சித்திர வீதியிலுள்ள மதுரை நாயக ஓதுவாரவர்கள் வீட்டுப் புறநானூற்றுப் பாடல்கள் சில அடங்கிய பிரதி-யன்றிற் கண்டது. இவ்வேடு மேற்படியூர் புத்திரர் சுந்தரபாண்டிய ஓதுவாரவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குத் தந்தது’’ என்று கூறி அப்பாடலினை முழுமையாகத் தருகிறார். அது புறநானூற்றின் 277ஆம் பாடல். அதன் முதல் அடி இல்லாமல் உ.வே.சா பதிப்பில் இருக்கிறது. இன்னும் அப்பாடலின் முதலடி தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலின் 24ஆம் நூற்பாவிற்கு அமைந்த நச்சினார்க்கினியர் உரையில் ‘பேரிசை மகனைச் சுற்றிய சுற்றமாய்ந்த பூசன்மயக்கத்தானும்’ எனும் துறைக்கு சான்றாக ‘மீனுண் கொக்கின் என்னும் புறப்பாட்டும் அது என முதற்குறித்த செய்யுள் இதுவேயாதல் கண்டு கொள்க’ என்று எழுதியிருப்பதையும் காட்டு-கிறார். ‘மாற்றருங் கூற்றம்’ என்னும் சூத்திர-வுரையில், ‘மீனுண்கொக்கின் என்னும் புறப்பாட்டு-மது’ என்று நச்சினார்க்கினியர் இனியரெடுத்துக் காட்டிய முதற்குறிப்புச் செய்யுள் ஒரு பிரதியிலும் கிடைத்திலது’ (புறநானூறு) என்று உ.வே.சா. கூறியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
இங்கு அறியவேண்டியது என்னவென்றால் உ-.வே.சா. பதிப்பின் மீதான அவரின் விமர்சனம். சுவடியாகவும், உரைகளிலும் காணப்படும் முழுமைத் தன்மையை உ.வே.சா. கவனிக்கத் தவறியதைத் தொட்டுக் காட்டுகிறார். இன்னும் சொல்வதென்றால் 1929இல் வெளியான புறநானூற்று இரண்டாம் பதிப்பில் அதனைச் சரிசெய்து உ.வே.சா. வெளியிட்டிருக்கிறார். உ.வே.சா.வின் பதிப்பு முறைகளும் கவனிக்கத்தக்க புலமைச் செயல்பாடுகளில் ஒன்று. ஒவ்வொரு நூலையும் இரண்டு மூன்று முறை பதிப்பித்தது. ஒவ்வொரு பதிப்பிற்குமான அவரின் சுவடி சேகரிப்பு, பாடபேதம் சரிசெய்தல் முதலியவற்றை செய்தல். அப்படியான நிலைப்பாட்டில் அவரை இயங்க வைத்தது இராகவையங்கார் போன்றவர்-களின் எடுத்துரைப்புத் தன்மைதான் என்று வாதிடவும் இடமுண்டு.
‘செந்தமிழ்’ முதல் இதழிலே இன்னொரு விடயத்தையும் இராகவையங்கார் செய்கிறார். ‘பரிபாடலுரையாசிரியர் பரிமேலழகர் என்பது’ எனும் கட்டுரையினை எழுதுகிறார். இதற்குப் பின்பே 1918இல் உ.வே.சா. பரிபாடல் பரிமேலழகர் உரையினைப் பதிப்பிக்கிறார். பரிபாடலையே இராகவையங்கார் வழிதான் அறிந்தார் என்பதில்லை. பரிபாடலுக்கான உரை பரிமேலழகருடையது என்பதை உறுதிபடுத்த இராகவையங்காரின் கட்டுரை துணை செய்தது என்று சொல்லலாம். உ.வே.சா.வின் பரிபாடல் பதிப்புரையை வாசிப்பின் அவை அறிய வரும். 1915இல் குறுந்தொகையைப் பதிப்பித்த சௌரி பெருமாள் அரங்கன் பரிபாடலைப் பதிப்பிக்க இருப்பதாகத் தனது பதிப்புரையில் சொல்கிறார். ஆனால், அது நிறைவடையவில்லை என்பதும் இங்கு அறியத்தக்கது.
இராகவையங்கார் பாடம் நடத்துதல் என்ற நிலையில் அதாவது தனது இறுதிக் காலத்தில் 1935 முதல் 1941 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றுகிறார். அப்போது மாணவர்களுக்கு சங்க இலக்கியத்தைப் பாடம் சொல்லுதல் நிலையில் குறுந்தொகை, பெரும்பாணாற்றுப்-படை (1949), பட்டினப்பாலை (1951) ஆகிய நூல்-களுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். ஆனால் அவை அவரின் மறைவிற்குப் பிறகே அச்சாகின.
இலக்கணப் பதிப்புகள்
செந்தமிழ் இதழ் வழி தம் அறிவுச் செயல்-பாட்டை வெளிக்கொணர்ந்த இராகவையங்கார் தொல்காப்பியம் உள்ளிட்ட பல இலக்கண நூலை செந்தமிழ் இதழ்வழி செயல்பட்ட பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். அவரின் இலக்கணப் பதிப்புகளில் கவனிக்கத்தக்கது தொல்காப்பியச் செய்யுளியல் உரைப்பதிப்பு.
1848இல் மழைவை மகாலிங்கையரால் தொடங்கப்பட்டது தொல்காப்பியப் பதிப்பு. இதன் தொடர்ச்சியாக சி.வை.தா.வும் தொல்-காப்பியத்தைப் பதிப்பிக்கிறார். சி.வை.தா. தமிழ்ப் பதிப்பாசிரியர்களின் முக்கிய ஆளுமை கொண்ட-வராக மதிப்பிட பல காரணங்கள் இருந்தன. சி.வை.தா.வின் வீரசோழியம் (1881) மற்றும் கலித்தொகை (1887) பதிப்புகளின் முகவுரையில் அவர் முன்வைக்கும் கருத்துகள் முக்கிய-மானவை. “இதுதான் ஆசிரியரெழுதிய சுத்தரூபமென்று கொள்ளற்க. அனைத்து மாறுபடுந்திருத்தி ஆதிரூபங் காட்டுதல் இனி எத்துனை வல்லார்க்கும் அரிது’ (வீரசோழியப் பதிப்புரை) என்றும் “இந்நூல் பதிப்பில் யாவர்க்காயினும் குற்றங்கூற இஷ்டமுளதாயின், அன்னோர் இன்னும் அச்சிற்றேற்றாத நற்றிணை பரிபாடல் அகம் புறமென்றிவற்றி லொன்றைத் தாமாகப் பரிசோதித்து அச்சிடுவித்து அதன் மேற் குறை கூறும்படி வேண்டிக் கொள்கிறேன்’’ (கலித்தொகை பதிப்புரை) என்றும் கூறுவன. எப்படியாவது தமிழ் நூல்கள் அனைத்தும் அச்சேற வேண்டும் என்கிற எண்ணம் வெளிப்-படி-னும் தனது பதிப்புகள் புலமை மீது முழு நம்பிக்கை கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.
ஆறுமுக நாவலர், சி.வை.தா. போன்ற யாழ்ப்பாணப் பதிப்பாளர்களின் செயல்பாட்-டினை கவனித்து வந்த தமிழகப் புலமையாளர்-கள் அதனை எதிர்கொண்டு செயல்பட்டனர். குறிப்பாக சி.வை.தா.வின் மேற்கூறிய கூற்றின் வழி தங்களின் புலமைச் செயல்பாட்டை பதிப்புத் துறை-யில் காட்டியவர்களில் ஒருவராக இராக-வையங்-காரைச் சொல்ல முடியும்.
சி.வை.தாமோதரம் பிள்ளை 1885இல் தொல். பொருள். நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பிக்கிறார். இதனை எதிர்கொண்ட இராக-வையங்கார் செந்தமிழ் முதல் இதழில் ‘அச்சிட்ட தொல்காப்பியச் செய்யுளில் உரை-காரர் பேராசிரியர் என்பது’ எனும் கட்டுரை-யினை எழுகிறார். சி.வை.தா. தொல். பொருள். நச்சினார்க்கினியர் உரையில் செய்யுளில் முதலாக இடம்பெறும் இறுதிநான்கு இயலுக்கான உரையும் நச்சினார்க்கினியருடையது இல்லை. அது பேராசிரியர் உரை என்று அதில் நிறுவு-கிறார். அது மட்டும் அல்லாது செய்யுளியலுக்-கான நச்சினாக்கினியர் உரையையும், செந்தமிழ் இதழ் வழி வெளியிடுகிறார். அது 1917இல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு 10ஆவதாக வெளியாகிறது.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இறுதி நான்கு இயலுக்கு பேராசிரியர் உரை செய்திருக்-கிறார் என்பதும் செய்யுளியலுக்கு வேறொரு பழைய உரை இருக்கிறதென்றும் அது உரை-யாசிரியர் உரையென்றும் காட்டுகிறார். நச்சினார்க்-கினியரின் செய்யுளியல் பதிப்பின் அடிக்குறிப்பில் உரையாசிரியர் உரையினையும் தருகிறார். உரையாசிரியர் உரை என்று அவர் குறிப்பிடுவது இளம்பூரணர் உரையை. தொல்-காப்பிய பொருளதிகார இளம்பூரணர் உரை அதற்குப் பின்பே வருகிறது. தொல்காப்பியப் பொருளதிகார உரைகளை ஒழுங்குபடுத்தி தமிழ் அறிவு மரபிற்கு தந்ததில் இராகவையங்காரின் பங்கு அளப்பரியது. தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் இது முக்கியமானதாகும்.
மேலும் நேமிநாதம், பன்னிரு பாட்டியல் ஆகிய இரண்டு நூல்களைப் பதிப்பித்தார். 1903இல் செந்தமிழ்ப் பிரசுர வெளியீட்டின் 6ஆவது நூலாக நேமிநாத மூலமும் உரையையும் பதிப்பித்தார். அதன் இரண்டாம் பதிப்பு 1923இல் வெளியானது. அவ்வாறே பன்னிரு பாட்டி-யலையும், 1904இல் செந்தமிழ்ப் பிரசுரத்தின் 12ஆவது வெளியீடாக இராகவையங்கார் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். நேமிநாதம் மூலம் மட்டும் 1886இல் அ.இராமசுவாமி அவர்களால் பதிப்பிக்கப்பட்டாலும் உரை-யுடனான முதல்பதிப்பு இதுவே. பதிப்புரையில் நூல் பற்றிய தெளிவான விளக்கத்தையும், சுவடி-களைத் தந்து உதவியவர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. விளங்காத இடங்களை அடிக்குறிப்பிட்டு விளக்கியும் பதிப்பித்திருக்-கிறார். இவ்வாறு இராகவையங்காரின் இலக்கணப் பதிப்பினை அடையாளப்படுத்த முடியும். றி.ஷி. சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்களின் ‘தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு’ (1930) எனும் நூல் ரா. இராகவை-யங்காரின் பாயிரத்-துடன் பதிப்பிக்கப்பட்-டிருக்கிறது.
பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்புகள்
பழந்தமிழ் நூல்களின்  பதிப்பு முறைமையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பு கவனிக்கத்தக்கது. 1812இல் பதிப்பிக்கப்பட்ட திருக்குறள், நாலடியார் பதிப்பினைத் தொடர்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்-டிருக்கின்றன. பதினென்கீழ்க்கணக்கு நூல்களின் பழம்பதிப்புகள், குறிப்பாக இனியவை நாற்பது, இன்னா நாற்பது முதலியன பாடல் / அடிகள் சிதைவுடன் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஆசாரக்கோவை பதிப்பு ‘ஆசாரக்-கோவை நச்சினார்க்கினியர் உரையுடன்’ என்று அச்சாகியுள்ளது. இதனை ஒழுங்குபடுத்த முயன்ற-வர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ரா. இராகவை-யங்கார், எஸ். வையாபுரிப்பிள்ளை போன்றோர். ஐந்திணை ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது ஆகிய இரண்டு நூல்களையும் முதலில் பதிப்-பித்ததோடு, இனியது நாற்பது, நான்மணிக்கடிகை முதலான நூல்களையும் பதிப்பித்தார் இராக-வையங்கார். மதுரைத் தமிழ்ச்சங்க செந்தமிழ்ப் பிரசுரத்தின் முதல் வெளியீடாக ஐந்திணை-யம்பது வெளியானது. ”இம்மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்று வெளியாகின்ற ‘செந்தமிழ்’ப் பத்திரிகைக்குரிய முதற்பிரசுரமாவது, இவ்வாறே இதுகாறும் அச்சிடப்படாமலுள்ள பொருளாற்-பெரியவும் அளவாற் சிறியவும் ஆகிய பண்டை-யோருரைத்த தண்டமிழ் நூல்கள் பலவற்றை இச்செந்தமிழ் வாயிலாக வெளியிடக் கருதி-யிருத்தலின், அப்பழைய ஏடுகளுடைய நல்லோர் அவற்றை இச்சங்கத்திற்கனுப்பி யருளுமாறு அவரைப் பன்முறை வேண்டுகிறேன்’’, எனக் குறிப்பிடுகிறார்.  இப்பதிப்புகளில் இடம்-பெறும் முன்னுரைகள் முக்கியமானவை.
பிறநூல் பதிப்புகள்
முத்தொள்ளாயிரம், திருநூற்றந்தாதி, கனாநூல், புலவராற்றுப்படை முதலான நூல்களை இராகவையங்கார் பதிப்பித்திருக்கிறார். தமிழர் வரலாறு குறித்த இலக்கியச் சான்றாதா-ரத்தில் முத்தொள்ளாயிரத்தின் பங்கு கவனிக்கத்-தக்கது. இதனை, “இந்நூல் இந்நாட்டுத் தமிழ்க்குடிகளும் தமிழரசர்களுமே நிலவிய மிகப்பழைய காலத்தே இயற்றப்பட்டதாதலின், இதனால் அத்தொன்மைக் காலவியல்புகள் பல  நன்கறியலாகுமெனத் தெரிகின்றது’’ என்று பதிப்புரையில் ரா. இரா. பதிவு செய்கிறார்.   இம்முத்தொள்ளாயிரத்தை முதன்முத-லில் பதிப்பித்தது இவரே. 1905இல் அதனைப் பதிப்பித்திருக்கிறார்.
சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைவழி அறியப்பட்ட கனாநூல் என்பதனை 1903இல் பதிப்பிக்கிறார். “யான் இத்தமிழ்ச் சங்கத்திற்கு ஒரு ஏடு தேடிச் சென்ற காலத்தில் இந்நூற்பிரதி ஒன்று ஆழ்வார் திருநகரியிற் கள்ளபிரான்நாதர் வீட்டினின்று கிடைத்தது. இந்நூலால், கனவுப் பயனைப் பற்றி முதலில் தேவகுருவாகிய வியாழனால் ஓர்நூல் செய்யப்பட்டுள்ளதென்-றும், அதன்பொருளை விளக்கி அம்பர் என்னும் நகரத்திலிருந்த கணப்புரத்தேவன் என்பான் சொல்ல, அவன் சொன்னவாறு பொன்னவன் என்பான் இந்நூலை அந்தாதியாக முப்பது பாடல்களாற் செய்த கனாநூல்...’’ என்று அந்நூல் பற்றிய அறிமுகத்துடன் பதிப்பித்திருக்கிறார்.
திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் இருந்து பல பழந்தமிழ்ச் சுவடிகளை இராகவையங்கார் தேடிக் கண்டெடுத்திருக்கிறார். அவ்வூரைச்சேர்ந்த இரத்தினகவிராயர் என்பவரால் இயற்றப்பட்ட ‘புலவராற்றுப்படை’ எனும் நூலை 1903இல் பதிப்பித்திருக்கிறார். திருநூற்றந்தாதியை 1904இல் பதிப்பித்தார். முத்தொள்ளாயிரப் பதிப்பின் இறுதியில் ‘தொட்டிக்கலைக் கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை’ எனும் நூலையும் பதிப்பித்திருக்-கிறார். அதன் முதற்பக்கத்தில் “இந்நூல் தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவரால் இயற்றப்பெற்றது. இம்முனிவர் இன்றைக்கு 115 வருடங்கட்கு முன்பு விளங்கியவரென்பதும், திருவாவடுதுறை ஆதினத்து ஸ்ரீசிவஞானயோகி-களுடைய அருமை மாணாக்கர் பன்னிருவருள் ஒருவரென்பதும், அமிர்தவாக்மி என்பதும் பலரும் நன்கறிந்தது’’ என்று விளக்கிச் செல்கிறார்.
நிறைவாக
தமிழில் பரிசோதனையாசிரியர் மரபில் இராகவையங்காரின் செயல்பாடுகள் 1902 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் அவதானிக்கத்-தக்கதாக உள்ளது. இலக்கியம், இலக்கணம் என இரண்டு நிலை நூல்களையும் பதிப்பித்திருக்-கிறார். முகவுரை, தொகையகராதி, அரும்பத-அகராதி, மேற்கோள் விளக்கம், இடம் விளங்கா மேற்கோள், உரைமேற்கோள் நூல்கள், செய்யுள் முதற்குறிப்பகராதி, பிழைதிருத்தம் என அனைத்-தையும் தனது பதிப்பில் செய்திருக்கிறார். செந்-தமிழ் இதழின் பத்திராசிரியராக இருந்தபோது பதித்த நூல்கள்தான் அதிகம். அவை 1903முதல் 1905 வரையிலான இரண்டு ஆண்டுகளில் நடந்தேறியது. தொல்காப்பியம் செய்யுளியல் நச்சர் உரை 1917இல் வெளியானது. அதன்பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணி-செய்த காலகட்டத்தில் சில பதிப்புகளைச் செய்தார்.
சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சா. போன்றோர்களை எதிர்கொண்டு செயல்பட்ட இராகவையங்காரின் பதிப்புப்பணியில் என்றும் அழியாது நிற்பது தொல்காப்பியம் பொரு-ளதிகார செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரை பதிப்பு ஒன்றே. பதிப்பாசிரியராகவும், ஆய்வறி-ஞராகவும், கல்வி கற்பிக்கும் ஆசிரியராகவும் செயல்பட்ட ரா. இராகவையங்காரின் பணியைத் திரும்பத்திரும்ப நினைத்துப்பார்த்தல் வருங்கால புலமை பாரம்பரியத்திற்கு அவசியமானதாகும்.
பதிப்பித்த நூல்கள்
1. தொல்காப்பியம், செய்யுளியல், நச்சினார்க்-கினியருரை, உரையாசிரியருரையுடன், ஸேது-சமஸ்தான வித்வான், ரா. இராகவையங்கார் பரிசோதித்தது, மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பிரசுரம், 10, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, 1917.
2. குணவீரபண்டிதர் இயற்றிய நேமிநாத-மூலமும் உரையும், இவை ஸேது சமஸ்தான வித்வானும், செந்தமிழ் பத்திராசிரியருமான, ரா.இராகவையங்காராற் பரிசோதிக்கப்பட்டன. செந்தமிழ்ப் பிரசுரம் 6, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, 1903.
3. சங்கத்துச் சான்றோர் இயற்றிய, பன்னிரு-பாட்டியல், சேதுசமஸ்தான வித்வானும், செந்-தமிழ்ப் பத்திராசிரியருமான, ரா. இராகவையங்-காரால், பதிப்பிக்கப்பெற்றது. செந்தமிழ்ப் பிரசுரம் 12, மதுரை, தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு, 1904.
4. மாறன் பொறையனார் அருளிச் செய்த ஐந்திணையைம்பது மூலமும் உரையும், சேது சமஸ்தான வித்துவானும், செந்தமிழ்ப் பத்திராசிரி-யருமாகிய, ரா. இராகவையங்காரால் பரிசோதிக்-கப்பட்டன. செந்தமிழ்ப் பிரசுரம் _ 1, மதுரை, தமிழ்ச்சங்க முத்திரசாலைப் பதிப்பு, 1903.
5. கணிமேதாவியார் அருளிச்செய்த திணை மாலை நூற்றைம்பது மூலமும் உரையும், சேது-சமஸ்தான வித்வானும், செந்தமிழ்ப் பத்திராசிரிய-ருமான, ரா. இராகவையங்காரால், பதிப்பிக்கப்-பெற்றன. செந்தமிழ்ப்பிரசுரம் 8, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, 1904.
6. பூதஞ்சேந்தனார் அருளிச் செய்த, இனியது நாற்பது மூலமும் உரையும், இவை சேது ஸமஸ்தான வித்வானும், செந்தமிழ்ப் பத்திராசி-ரியருமான, ரா. இராகவையங்காரால், வெளி-யிடப்பட்டன. செந்தமிழ்ப் பிரசுரம் _5, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசலைப் பதிப்பு, 1903.
7. நான்மணிக்கடிகை மூலமும் உரையும், ஸேதுஸமஸ்தான வித்வானும், செந்தமிழ் பத்திராசிரியருமான, ரா. இராகவையங்காரால் பதிப்பிக்கப்பெற்றன. செந்தமிழ்ப் பிரசுரம் 13, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1905.
8. முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் (105), ஸேதுஸமஸ்தான வித்வானும், செந்தமிழ்ப் பத்திராசிரியருமான, ரா. இராகவையங்காரால், பதிசோதிக்கப்பெற்றன. செந்தமிழ்ப் பிரசுரம் 14 மதுரை தமிழ்ச்சங்க முத்திரசாலைப் பதிப்பு, 1905
9. கனாநூல், இது சேதுசமஸ்தான வித்வானும், செந்தமிழ்ப் பத்திராசிரியருமான ரா. இராகவையங்காரால் பரிசோதிக்கப்பட்டது. செந்தமிழ்ப் பிரசுரம் 2, மதுரை, தமிழ்ச் சங்க முத்திராசலைப் பதிப்பு 1903.
10. திருக்குருகூர் சிறிய இரத்தின கவிராயர் இயற்றிய, புலவராற்றுப்படை, சேதுசமஸ்தான வித்துவானும், செந்தமிழ்ப் பத்திராசிரியருமாகிய, ரா. இராகவையங்காரால் பரிசோதிக்கப்பட்டது. செந்தமிழ்ப் பிரசுரம் 4, மதுரை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, 1903.
11. திருநூற்றந்தாதி, மூலமும் உரையும், இவை ஸேதுஸமஸ்தான வித்துவான், ரா. இராகவையங்-காரால் பரிசோதிக்கப்பட்டது. செந்தமிழ்ப் பிரசுரம் 8, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை 1904.

No comments:

Post a Comment