Tamil books

Monday, 5 August 2013

வாழ்க்கையே கதையாக... கலையாக....

தமுஎகச பரிசு பெற்ற படைப்பு

செள்ளு சிறுகதைத் தொகுப்பு

செல்வராஜ்தேனிசீருடையான் 

வறீதம்மை கணவனை இழந்த கைம் பெண்! இரண்டு பெண் மக்களின் தாய்! மீன் வாங்கி விற்றுப் பிழைப்பு நடத்தும் உழைப்பாளி! கணவன் இறந்த பின் வீட்டை விற்று மூத்தவளுக்குக் கல்யாணம் முடித் தாள். இளையவள் வசந்தி நன்கு படிக்கக் கூடியவள். அவளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் எவ் வளவோ அக்கறையோடு செயல்பட்டாள். சில கல்வி அறக் கட்டளைகளையும் சுய உதவிக் குழுக்களையும் உதவிக்கு நாடினாள். எதுவும் அமையவில்லை. உள் ளூர் கிறித்துவ அமைப்பின் கைவசம் கல்வி உதவித் தொகை 23 லட்சம் ரூபாய் செலவழிக்கப்படாமல் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்று மனு எழு திக் கொடுத்து மன்றாடுகிறாள். அந்தக் கடல் புறத்து மக்களை மார்க்கப்படுத்தும் அமைப்பு அது. அவளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அந்தத் தொகை கோயிலை விரிவுபடுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று முடிவாகிறது. வசந்தியை மால் வளாகத்துக்கு (பெரிய விற்பனைக் கூடங்கள்) வேலைக்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறாள். கல்விப் பணம் கோயில் கட்டிடப் பணி யாய் மாறும் அவலத்தை ஏக்கத்தோடு பார்த்தபடி தன் கையில் ஒட்டி இருக்கும் மீன் செள்ளுவை (மீன் செதில்) துடைத்து எறிகிறாள். செள்ளு கதையின் உள் ளோட்டம் இது. இந்த நூலின் தலைப்புக் கதையும் கூட. குமரி மாவட்ட நெய்தல் நில மக்களின் வாழ்க் கையைப் பேசும் அருமையான தொகுப்பு!

இத்தொகுப்பில் ஆறு கதைகள் இருக்கின்றன. ஆறும் ஆறு உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின் றன. மீனவ மக்களின் குறிப்பாக முக்குவ உழைப்பாளி மக்களின் வாழ்க்கை இயல்பு எந்த அலங்காரமும் இன்றி பதியம் செய்யப்பட்டுள்ளது. தூச்சம் என்றொரு சிறுகதை. பார்வை இழந்தவ ரைப் பற்றி மிக அரிதாக வெளிவரும் படைப்புக்களில் இதுவும் ஒன்று. பிறவியிலேயே கண் பார்வை இழந்த வன் தூச்சம். பார்வை உள்ளவர்களால் மட்டுமே விளையாட முடியும் என நம்பப்படுகிற கட்டி விளை யாட்டு கண் தெரிந்தவர்களால் மட்டும்தான் நிகழ்த்த முடியும் என்று நம்பப்படுகிற கட்டு மரத்தில் சென்று மீன் பிடிக்கும் வேலை முதலியவற்றை அனாயசமா கச் செய்கிறான். பார்வை இழப்பு பற்றிய அறிவியல் பூர்வமான புரிதல் இந்தக் கதையில் இருக்கிறது. கட லில் இறங்கிக் குளிப்பது, எல்லாப் பொருட்களின் இருப்பிடத்தையும் உணர்வுகளால் அறிந்து கொள்வது என்று அவனுடைய நடவடிக்கைகள் பார்வையுள்ள சகலருடையதையும் போல இருக்கின்றன. “அவனுக்கு கண்ணுல இருக்க வேண்டிய ஒளி பூராவும் அவ னோட ஒவ்வொரு அவயவங்களுலயும் இருந்தது” என்ற வரி மிக முக்கியமானது. “ஒனக்கு எல்லாமே கறுப்பாத்தான் தெரியுமா? என்ற கேள்விக்கு கறுப்பா? அப்படின்னா?” என்று திருப்பிக் கேட்கிறான். பிறவியி லேயே பார்வையற்றவர்களின் உலகம் நிறமற்ற வஸ் துக்களால் நிரம்பிக் கிடக்கிறது. தூச்சம் அன்னம் மாவை ஒருதலையாய்க் காதலிக்கிறான் என்பது கதையின் புறத்தோற்றம். அகத் தோற்றமாய் இருப்பது பிறவியிலேயே பார்வையிழந்தவர்களின் வாழ்க்கை இயல்பு.

நீர் நிலைகள் களவாடப்படுவதை மகேசுவரியும் தெக்கு ஆறும் கதையும் கனிம வளங்கள் திருடப்படு வதை நண்டுவும் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கின்றன. முதல் மதிப்பெண் பெற்றுத் தேரும் மாணவன் அந் தோணி, வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடி யாத அவலத்தைப் பிரதிபலிக்கிறது ஒரட்டி. மதுப் பழக்கம் எல்லை தாண்டும் போது குடும்ப சந்தோ ஷம் சிதைவதை நனைந்த பட்டாசுகள் படம் பிடித் துக் காட்டுகிறது. மேலே கூறப்பட்டவை எல்லாம் உள்ளடக்கப் பிம்பங்கள் மட்டுமே. உருவ அழகையும் அழகியல் நேர்த்தியையும் வாசித்துத்தான் அனுப விக்க வேண்டும்.

முக்குவ மக்களின் பேச்சு மொழி இனிமை ததும் பும் இசை லயம் போல ஒலிக்கிறது. இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும் போது ஒரு புது மொழியைக் கற் றுக் கொண்ட வித்துவ ஆற்றல் வாசகரின் மனசுக்குள் பதிவு பெறுகிறது. சமீப காலத்தில் வெளி வந்திருக்கிற மிக முக்கியமான நவீன சிறுகதைத் தொகுப்பு செள்ளு. புரியா மொழி வாக்கியங்களின் தொகுப்பை நவீனப் படைப்பு என்று பிரகடனப்படுத்தும் அறிவு ஜீவிகளைக் கேலி செய்யும் விதமாய் நல்லாப் புரியும் நவீன கதைகளை எழுதி இருக்கிறார் செல்வராஜ். வறீதம்மை தன் கையில் ஒட்டி இருக்கும் செள் ளுவைத் தட்டிபிட்டுப் போகிறாள் என்ற ஒரு வாக்கி யப் படிமத்தில் போங்கடா நீங்களும் ஒங்க ஒதவியும் என்று உதாசீனப்படுத்துகிற மனித வீரியம் பொங்கி எழுகிறது. மௌனமாய் உறைந்து கிடக்கிற இது போன்ற அகவெட்டுச் சங்கதிகள் எல்லாக் கதைக ளிலும் பிரதிபலிக்கின்றன. ஆறு கதைகளும் நெய்தல் நில மக்களின் வாழ்வியலைத் துல்லியமாய்ப் பேசு கின்றன. பேசுகின்றன என்பதைவிட அந்த வாழ்க் கையைப் பிரதிபலிக்கின்றன என்று சொல்லலாம். கதை வேறு வாழ்க்கை வேறு என்று பிரிக்க முடிய வில்லை. வாழ்க்கையே கதையாக, கலையாகப் பரி ணாமப் பட்டிருக்கிறது.

ஆகவே, கதை சொல்லும் திறத்தால், மொழி நடையால், வாழ்க்கையே கதையாகப் பரிணமிக்கும் கலை ஆற்றலால், வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் பாத்திரச் சித்தரிப்பால் இத்தொகுப்பு மேன்மை உடையதாய்த் திகழ்கிறது.மேன்மையான மனித வாழ்க்கைக்கு அடிப்படை யாய்த் தேவைப்படுகிற உணவு, உடை, உறைவிடம் இவற்றோடு நான்காவதாக கல்வியையும் சேர்த்துக் கொள்ளத் தூண்டுகிறது இந்தத் தொகுப்பு. 


வெளியீடு பாரதி புத்தகாலயம்