Tamil books

Friday 30 August 2013

குழந்தைகளைக் கொண்டாடுவோம்


அண்மையில் படித்த புத்தகம் குழந்தைகளைக் கொண்டாடுவோம்
சோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் ஷ.அமனஷ்வீலி ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தியது, பாடம் நடத்துவதற்கு முன் ஆசிரியரின் மனநிலை, பாடம் நடத்துவதற்காக அவர் தயாரித்த முன் தயாரிப்புகள் - மனதாலும், செய்கையாலும் போன்றவற்றை விவரிக்கும் நூல். ஷ.அமனஷ்வீலி கைவசம் இருந்த 800 பக்க நாட்குறிப்பின் அடிப்படையில் , பள்ளி திறந்த 1வது நாள், 20,84,122,170-வது நாட்களிம் நிகழ்ந்தவைகளை படம் பிடித்துக் காட்டும் நூல்.

26.12.2011 விஜய் டி.வி.யில் நடந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் (ஆசிரியர்கள் & மாணவர்கள்) ,ஒரு மாணவர் "ஆசிரியர்கள் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் வந்து எதையாவது பேசி வகுப்பைப் போரடிக்கவைத்து காலத்தைக் கடத்துகிறார்கள் "எனக்குறிப்பிட்டார். கல்லூரி மாணவ,மாணவிகள் புரிந்துகொள்வார்கள் -ஆசிரியர் தயாரிப்போடு வந்திருக்கிறாரா, இல்லையா என்று. ஆனால் 6 வயதுக் குழந்தைகள் புரிந்துகொள்ள இயலுமா? புரிய இயலாத குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்போகும்போது எவ்வளவு தயாரிப்போடு போகவேண்டும், அப்படிச் சென்றால் வகுப்பில் எவ்வளவு வெற்றி பெற முடியும் , எவ்வளவு தூரம் அந்தப் பிள்ளைகள் மனதில் இடம்பிடிக்க முடியும், இந்தப் புத்தகத்தைப் படித்தால் உணரலாம்.குழந்தைகள் பற்றி அக்க்றை உள்ள யாரென்றாலும் அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம்,பெற்றோர்களாக இருக்கலாம், கல்வியாளர்களாக இருக்கலாம், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம் அவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

"குழந்தைகள் என் ஆசிரியர்கள் " என்றுதான் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. கற்றுக்கொள்ள எவ்வளவு விசயங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றன என்பதனை உணர்த்துகிறார். " நாங்கள் பிறந்ததிலிருந்து நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள் " எனக் குழந்தைகள் கூறுவார்கள் என பக்கம் 16-ல் குறிப்பிடுகின்றார். பெரும்பாலான பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன நம்மைச் சுற்றி . நல்லவர்களாக வரும் குழந்தைகளை கெட்டவர்களாக ஆக்குவதற்காக.

"குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்கவேண்டும்.அவர்களின் மூலம் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காணவேண்டும்,என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழவேண்டும் " பக்கம் 39

" இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும்.சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அசைவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும் " -பக்கம் 45
"உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை,இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர் " பக்கம் 24

இப்படி நூற்றுக்கணக்கான மேற்கோள்களை இப்புத்தகத்தில் காட்டலாம். ஒரு மணி நேரத்திற்குமேல் இப்புத்தகம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், பெற்றொர்கள் முன் பேசலாம் அந்தளவிற்கு நிறைய அனுபவங்களை சொல்லும் நூலாக உள்ளது இப்புத்தகம். தமிழில் மறுவரைவு செய்த முனைவர் அ.வள்ளி நாயகம்,வ.அம்பிகா,மொழி பெயர்த்த டாக்டர் இரா.பாஸ்கரனை இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பதன் மூலம் பாராட்டலாம். இப்புத்தகத்தை என்னிடம் அளித்த(விற்பனை செய்த) மதுரை புத்தகத்தூதன் பா.சடகோபன் (9443362300) அவர்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தால் அதில் வரும் திருப்தி ......................படித்துப் பார்த்தால்தான் தெரியும்.

வா.நேரு 
 28.12.11
 — in Chennai.

நூலின் தலைப்பு : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ரஷ்ய மூலம் : ஷ.அமனஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
தமிழில் மறுவரைவு : முனைவர் அ.வள்ளிநாயகம், வ.அம்பிகா
முதல் வெளியீடு : டிசம்பர் 2007,புக்ஸ் பார் சில்ரன்
விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம்,சென்னை-18 -044-24332924
மொத்த பக்கங்கள் : 158
விலை : ரூ 80

No comments:

Post a Comment