Tamil books

Tuesday 13 August 2013

புரட்சிப் பாதையில் மாணவர் வாலிபர் இயக்கம்


புரட்சிப் பாதையில்  மாணவர் வாலிபர் இயக்கம்
பி. சுந்தரய்யா
1974 ஜனவரி 2 முதல் 6ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் இரண்டாவது மாநாட்டைத் தொடங்கிவைத்து தோழர் பி.சுந்தரய்யா ஆற்றிய முழுமையான உரையே 'புரட்சிப் பாதையில் மாணவர் வாலிபர் இயக்கம்' என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது. மிகச் செறிவான அடர்த்தியான உரை என்றும் தோழர் சுந்தரய்யா தான் பேசுவது உணர்வுப் பூர்வமான மாணவர்களுக்கிடையில் என்னும் பிரக்ஞையுடன் ஆற்றிய உரை என்றும் இதைக் குறிப்பிடலாம். முது பெரும் தோழர்கள் முசாபர் அகமது மற்றும் சதீஷ் பக்ராஷி இருவரையும் அவர்களின் தன்னலமற்ற இயக்கப் பணிகளையும் மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்கிய அவர் ரஷ்ய, சீனப் புரட்சிகளையும் அதனால் இந்திய இடதுசாரிகள் பெற்ற உத்வேகத்தையும், ஆனால் இந்தியாவில் புரட்சியைச் சாதிக்க முடியாமல் போனது குறித்தும் பேசிச் செல்கிறார். 1970-களின் சர்வதேச நிலைமைகளைத் தனது உரையில் கோடிட்டுக் காட்டும் அவர் ஏகாதிபத்தியத்துக் கெதிராக நடைபெற்ற விடுதலைப் போராட்டங்கள், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகள், சோசலிஸ முகாம்களின் பலம், சோவியத் சீன வேற்றுமைகள் என விரிவாகப் பேசியுள்ளது குறிப்பிடத் தக்கது.

 'நமது இலக்கியத்தை மறந்து விடுகிறோம். முற்போக்கு இலக்கியம் எது வருகிறது? ஏதாவது நல்ல இலக்கியம் கிடைத்தால் நமது மகிழ்ச்சிக்காக மட்டுமின்றி இளம் தலைமுறை வளர்ச்சிக்காகவும் வாசிக்க வேண்டும். நமது இந்திய நாட்டில் பதினைந்து வரை பிரதானமொழிகள் உள்ளன. அவைகளில் சிறந்த சாரம், சுயம் இருக்கிறது.

 நமது இளம் தலைமுறை அவரவர் தாய்மொழியின் மூலம் அறிவு பெற வேண்டும்'. என்றும் பேசுகின்ற தோழர் சுந்தரய்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவர். அவரது உரையைக் கேட்க வாய்ப்பில்லாதவர்களுக்கு இளம் தோழர்களுக்கு சிறந்த வகுப்பெடுப்பு இந்த நூல்.

வெளியீடு பாரதி புத்தகாலயம்
விலை:ரூ.35
044 24332924

No comments:

Post a Comment