Tamil books

Monday 19 August 2013

அந்நிய முதலீடு: ஒரு ஜீபூம்பா அல்ல




சாவித்திரி கண்ணன்

 48 பக்கம் கொண்ட சிறிய நூல்
 ஆசிரியர் வே.மீனாட்சி சுந்தரம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர். ஆகவே இடதுசாரி தத்துவார்த்தப் பார்வையில் சில்லறை வர்த்தகம், அந்நிய முதலீடு போன்றவற்றை ஆய்வு செய்துள்ளார்.
 உலக வங்கி, அமெரிக்கா குறித்த கடுமையான விமர்சனங்களை சுலபத்தில் நிராகரிக்க முடியாது. அந்நிய முதலீடு இந்தியாவிற்குள் வந்ததால் இங்கு என்ன இதுவரை மாற்றம் நிகழ்ந்துள்ளது? என்ற கேள்வியை வைக்கிறார்.
 வேலையில்லாத் திண்டாட்டம், மின்சாரப் பஞ்சம், தண்ணீர்க் கட்டுப்பாடு, வறுமை... என எதுவே அந்நிய முதலீட்டால் குறையவில்லை, மாறவில்லை என்கிறார். பங்குச்சந்தை வர்த்தகம் பொருளாதாரச் சூழல்களை பாழ்படுத்துவதைக் கூறுகிறார். 1980ல் 52 நாடுகளில் தான் பங்குச் சந்தை செயல்பட்டன. தற்போது 142 நாடுகள் பங்குச் சந்தையில் ஈடுபடுகின்றன. இதில் அமெரிக்காவே அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. எப்படிப் பார்த்தாலும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு ஆபத்தானது. மொத்த வர்த்தகத்தையும் முழுங்கிவிடக்கூடியது. எனவே தான்  இடதுசாரிக்  கட்சிகள்  பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  கடுமையான போராட்டங்களை நடத்துகின்றன என்கிறார்.
  இந்தப் புத்தகத்தில் இதுதவிர முதலாளித்துவ பணவியலின் மோசடி என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. கடைசிக் கட்டுரையான முல்லை பெரியார் அணையும் தீர்வும் குறிப்பிடத்தக்க ஒன்று. இப்பிரச்சனையில் தமிழகத் தரப்பு வாதங்களை மட்டுமே வலியுறுத்தாமல் கேரளத் தரப்பின் கருத்துக்களையும், வாதங்களையும் கவனத்தில் கொண்டு இப்பிரச்சனையை அணுகியுள்ளார். இப்பிரச்சனையை சோசலிசக் கோட்பாடுடன்  தீர்க்க முடியும் என்கிறார். பிரிட்டிஷ் ஆட்சி நிலவரிக்காக மன்னர்கள் வசமிருந்த அண்டை ராஜ்ஜியங்களிலிருந்து நீரைக் கொண்டு வர எடுத்த முயற்சியாகவே முல்லை பெரியாறு அணையைப் பார்க்கிறார் ஆசிரியர். அதுவும் அண்டை ராஜ்ஜியத்தை நிர்ப்பந்தித்து இதை பிரிட்டிஷ் அரசு சாதித்தது. அதேசமயம் பாரம்பரிய முறைப்படி எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட அணை கட்டுமானப் பணியும், அதைக் காட்டிலும் மலையைக் குடைந்து அதுவும் வெறும் கடப்பாறை, மண்வெட்டி  மூலமாகவே  1738.5 மீ¢ட்டர் சுரங்கப்பாதை அமைத்தது இமாலய சாதனை என புகழ்கிறார். அதே சமயம் இந்த அணை கட்டுமானத்திற்காக தொழிலாளர்கள் இலவசமாக வேலை  வாங்கப்பட்டனர். பென்னிகுயிக் பிரிட்டிஷார் தந்த நிதியைக் கூடுதலாக செலவழித்துவிட்டதால் தான் அவருக்கு மனைவியின் நகையை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்கிறார் மீனாட்சி சுந்தரம்.
 பென்னிகுயிக் மீதான ஆசிரியரின் இரண்டு குற்றச்சாட்டுகளும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. அணைகட்டுமானத்திற்கு  பாடுபட்ட தொழிலாளிகளின் உழைப்பை பென்னிகுயிக் சிரமமானதாகப் பெற்றுக் கொண்டார். அந்த மக்கள் தாங்களும் தங்கள் சந்ததிகளும் பெறவுள்ள அளப்பரிய  நன்மைகளுக்காக தங்கள் உழைப்பை ஈந்தனர் என்பதே உண்மை. அதனால்தான் அப்பகுதி தமிழக மக்கள் பென்னிகுயிக்கை நன்றியோடு நினைவுகூர்கின்றனர். மேலும் ஆசிரியர் வைத்துள்ள குற்றச்சாட்டின்படி பிரிட்டிஷார் தந்த நிதியை பென்னிகுயிக் இதன் மூலம் கூடுதலாக செலவழித்தாரா? மிச்சப்படுத்தினரா? என்பதற்கு விடை கிடைத்துவிடும்.

  உண்மையில் இந்த மகத்தான திட்டத்திற்கு பிரிட்டிஷார் தந்த நிதி போதாத காரணத்தால் தான் தன் சொந்தப் பொறுப்பில் பொதுநலனுக்காக தன் சொத்தையும், மனைவியின் நகைகளையும் அர்பணித்தார் பென்னிகுயிக்.  இதுதான் வரலாறு மற்றும்  வழிவழியாக வந்த வாய்மொழிச் செய்தியுமாகும். இதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதைத் தகுந்த ஆதாரத்துடன் ஆசிரியர் கூறலாம்.
 அதேசமயம்  தீர்வுக்காக ஆசிரியர் தொகுத்துள்ள நிபுணர்களின் கருத்துகளை நிறைவேற்றினால் இரு தரப்புமே பலன் பெறும். கேரளாவின் புதிய அணை அவர்களுக்கே ஆபத்தானது, தேவையற்றது. ஆனால் அணையின் நீர்மட்டத்தைக் கூட்டாமலே புதிய கால்வாய்களை ஏற்படுத்துவதன் மூலமும், இருக்கும் கால்வாயை அகலப்படுத்துவதன் மூலமும் கூடுதல் நீரைத் தமிழகம் பெறலாம் என்பது சிறப்பான தீர்வு தான்.
 அப்படிக் கிடைக்கும் நீரை தற்போதுள்ளபடி  விரயமாக்காமல் ஏரி, குளங்களை முறையாகத்   தூர்வாரிப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் கூறுகிறார். முல்லை பெரியாறு முடிவுக்கு வராமல் இருப்பதற்கு இருதரப்புக்குமான நீர்ப் பகிர்வு மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பது குறித்த பிரச்சனைகளே உண்மைக்காரணம் என்றும் போட்டு உடைக்கிறார்.

சில்லறை வர்த்தகத்தில் 
அந்நிய முதலீடு
வே.மீனாட்சி சுந்தரம்
பாரதி புத்தகாலயம் | ரூ35. பக்.48 
044 24332924

No comments:

Post a Comment