Tamil books

Saturday 31 August 2013

கெட்ட புத்தகம்

சா.கந்தசாமி


மனிதர்களில் சிலர் தங்களின் உச்ச பட்சமான அறிவால் சமூக, அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், தத்துவம் பற்றி ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். வேறு சிலர் கவிஞர்கள். என்ன எழுதுகிறோம் என்பது பற்றி அதிகமாக விளக்கிச் சொல்லாமல் எதைச் சொன்னார்களோ அதைப் பூரண அழகோடும் அமைதியோடும் எழுதி வைத்து இருக்கிறார்கள். பின்னது படைப்பு இலக்கியம். அது ஞானத்தால் எழுதப்பட்டது. முன்னது முழுக்க முழுக்க அறிவால் ஆராய்ந்து எழுதப்பட்டது. அதிகமாகப் பலன் சார்ந்தது. இன்னது செய்யத் தக்கது என்று சொல்வது, பிரச்சினைகளையும் அதன் காரண காரியங்களையும் ஆராய்ந்து தீர்வும் சொல்வதாகும்.
புத்தகங்கள் படிப்பதற்காகவே எழுதப்படுகின்றன. அதுமட்டும் அதன் பயன்பாடு கிடையாது. புத்தகம் சமூக மாற்றத்திற்கும் மனிதர்களின் மன மாற்றத்திற்கும் காரணமாக உள்ளன. சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெரும்பான்மையான காரியங்களுக்கு புத்தகங்கள் காரணமாக இருக்கின்றன. அதற்கு நாடு, இனம் மொழி என்பது கிடையாது. ஒரு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் அதற்குள்ளாகவே ஜீவிப்பது இல்லை. ஏனெனில் மனிதன் கருத்துக்களை எந்தமொழியிலும் அறிந்துகொள்ளும் ஆற்றல் பெற்று இருக்கிறான்.
மனிதனை நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று பிரித்து வைத்திருப்பதுபோல - மனிதனால் எழுதப்பட்ட புத்தகங்களையும் நல்ல, புத்தகம் கெட்ட புத்தகம் என்று பட்டியல் இட்டு பிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் அரசுகளின் பங்களிப்பு, நிறுவனங்களின் தலையீடு, தனிமனிதர்களின் கொள்கைகள் எல்லாம் உண்டு. எவையெல்லாம் அரசாலும் சமூகத்தாலும் அங்கீகாரம் பெற்று நடைமுறையில் உள்ளதோ அதனை மறுக்கின்ற அம்சங்கள் கொண்ட புத்தகங்கள் கெட்ட புத்தகங்களாகி விடுகின்றன. ஆனால் அவைதான் அசலான புத்தகங்கள் வாழ்கின்ற புத்தகங்கள் என்று குறிப்பிட வேண்டும்.
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் கெட்ட புத்தகங்கள் என்று இருக்கும் பட்டியலில் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் சேர்த்து இருக்கிறார்கள். நூறு புத்தகங்கள் கெட்ட காரியங்கள் செய்ய  செய்யத் தூண்டுகின்றன என்கிறார்கள்.
கெட்ட புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற புத்தகங்கள் மகத்தான புத்தகங்களாகவும் உலகத்தின் சிந்தனையை மாற்றி அமைத்தவைகளாகவும் இருப்பது ஆச்சரியம். கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை, காரல் மார்க்ஸ் மூலதனம், மா-சே-துங் எழுத்துக்கள், டார்வின் பரிணாம வளர்ச்சி, சிக்மன் பிராயிடு கனவுகளின் மறு பக்கம், ஆகியவற்றோடு ரோசன் லூயிஸ் கார்ஸன் எழுதிய அமைதியான வசந்தம் இடம் பெற்று இருக்கின்றன.
1962-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அமைதியான வசந்தம் வெளிவந்தது. கட்டுரை புத்தகம் விலை ஐந்து டாலர். எழுதியவர் ரோச்சர் லூயீஸ் கார்ஸன் என்ற பெண்மணி. 1907ஆம் ஆண்டில் பிறந்தார். இலக்கியம் படிக்க விரும்பினார். ஆனால் கடல் சார்ந்த மெரீன் படிப்புப் படித்தார். அரசு சார்ந்த கடல், கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வுநிறுவனத்தில் பணியாற்றினார். இளம்பருவத்தில் இருந்தே இயற்கை மீது, தாவரங்கள், பறவைகள், நீர் வாழ், உயிரினங்கள் மீது அக்கறை கொண்டு இருந்தார். அவை தன் கண்களுக்கு முன்னால் மறைந்து வருவதின் காரண காரியங்கள் பற்றி ஆராய ஆரம்பித்தார்.
சூரியன் காய்கிறது. வெய்யில் அடிக்கிறது. மழை பொழிகிறது. செடி கொடிகள் பூக்கின்றன. பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றன. மனிதர்கள் குழந்தைகள் பெற்றெடுக்கிறார்கள். ஈக்கள், கொசுக்களால் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. அதில் முக்கியமானது மலேரியா. ஆப்பிரிக்காவிலும், ஆசிய நாடுகளிலும் ஏராளமான மக்கள் மலேரியாவால் செத்துக் கொண்டிருந்தார்கள். மலேரியாவை ஒழிக்க வேண்டுமானால் முதலில் கொசுக்களைக் கொல்ல வேண்டும். அதற்குப் பல விஞ்ஞானிகள் உழைத்தார்கள். அவர்களில் ஒருவர் பால்ஹெர்மன் முல்லர். ஜெர்மனியில் இருந்து சுவிட்சர்லாந்திற்குப் புலம் பெயர்ந்தவர். அடிப்படையில் கெமீஸ்ட். அவர் 1939-ஆம் ஆண்டில் உயிர் உள்ளவற்றை கொல்லக்கூடிய நச்சுதன்மை கொண்ட திரவத்தைக் கண்டு பிடித்தார். Dichloro -Dipheny- Trichlo­rothane
என்று பெயர். சுருக்கமாக டிடிடி என்றழைத்தார்கள். அதற்கு காப்புரிமை பெற்றார். இரண்டாவது உலக யுத்தத்தில் போர் வீரர்கள் கூடாரங்களில் தூங்க முடியாமல் கொசுக்களால் அவதிப்பட்டார்கள். அங்கு டிடிடி அடிக்கப்பட்டது. கொசுக்கள் ஒழிந்தன.
எனவே ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் பெருமளவில் டிடிடி பயன்படுத்தப்பட்டது. மேலும் அது நவீன கண்டு பிடிப்புக்களில் உச்சமென்றும் உயிர் காக்கக்கூடியது என்றும் சொல்லப்பட்டது. 1948ஆம் ஆண்டில் பால் ஹெர்மன் முல்லர்க்கு மருத்துவத் துறையில் நோபல்பரிசு வழங்கப்பட்டது. அதனால் அவரும், அவர் கண்டுபிடிப்பும் பிரபல மாகியது.
டிடிடி-யை வேளாண்மைத் துறையில், பயிர் விளைச்சலை பாதிக்கும் பூச்சிகள் மீது தெளிக்க ஆரம்பித்தார்கள். அதனால் பூச்சிகள் மடிந்தன. மகசூல் கூடியது. எனவே கோதுமை வயல்கள், ஆப்பிள் தோட்டங்கள், திராட்சை தோட்டங்கள், வனங்கள், நீர் நிலைகள், அலுவலகங்கள் வீடுகள் என்று ஒவ்வொரு இடத்திலும் பூச்சிக்கொல்லியை அடிக்க ஆரம்பித்தார்கள். அதனால் பல்வேறு நிறுவனங்கள் வீரியம் மிகுந்த பூச்சிக் கொல்லி மருந்தைத் தயாரித்து விற்பனைக்கு விட்டன. வேளாண்மையின் நவீன உரத்தோடு பூச்சிக் கொல்லி மருந்தான டிடிடி-யும் சேர்ந்து கொண்டு விட்டது.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மலேரியாவை ஒழித்துக் கட்ட டிடிடி-யை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். அதனால் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டது. அதோடு வனங்களிலும் நகரங்களிலும் இருந்த பலவகையான பூச்சிகள் இறந்தன. மருந்தடித்த மனிதர்கள் நோயுற்று மெல்ல மெல்ல இறந்தார்கள். ஆனால் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. பசுமைப் புரட்சியின் மகத்துவம் பற்றி, மகசூல் பெருகியது பற்றி அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது.
இருபத்தைந்து ஆண்டுகளில் அமெரிக்க விளை நிலங்களிலும், நீர் நிலைகளிலும், வனங்களிலும் அதிகமான அளவிற்கு டிடிடி- அடிக்கப்பட்டதால் , கொசு ஆகியவற்றோடு வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், மண் புழுக்கள், தவளைகள், மீன்கள் உட்பட பலவிதமான நீர்வாழ் உயிரினங்கள் அமெரிக்க தேசிய சின்னமாகிய கழுகு உட்பட பலவிதமான பறவைகள் அழிந்துகொண்டே வந்தன.
கார்ஸன் தன் ஆய்வாலும், இயற்கை மீதும் சுற்றுப்புற சூழல் மீதும் கொண்ட அக்கறையாலும், மனிதர்கள் தங்களின் கண்டுபிடிப்பு மூலமாகவே வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்கிறார்கள்; அது தொடருமானால் மனிதர்கள் கடினமான பிரச்சனைகளிலும் மீள முடியாமல் சிக்கிக் கொண்டு விடுவார்கள் என்ற தொனியில்தான் அமைதியான வசந்தம் எழுதினார். அதில் என் வீட்டுத் தோட்டத்தில் வந்து பாடும் ராபீனுக்கு விஷம் வைத்துக் கொல்ல யார்க்கும் உரிமை இல்லை என்றார். அது இயற்கை ஆர்வலர்கள் ஈடுபாட்டை போராட்டமாக்கியது. நச்சுப் பொருளைப் பயன்படுத்தி காரியங்கள் செய்து பணம் பண்ணுவது வாழ்க்கை இல்லையென பேரணிகள் நடத்தினார்கள்.
டிடிடி- உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் அமைதியான வசந்தம் கெட்ட புத்தகம். அதை எழுதிய ரோஸன் லூயிஸ் கார்ஸன் மனநோயாளி. விஞ்ஞான வளர்ச்சியின் விரோதி. லட்சக்கணக்கான மக்கள் மலேரியாவில் செத்துமடிவதைப் பற்றிக் கவலைப்படாமல் மண்புழு, பறவைகள், மீன்கள் பற்றி எழுதும் மக்கள் விரோதி என்று பேசியும் எழுதியும் இயக்கம் நடத் தினார்கள்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப். கென்னடி அமைதியான வசந்தம் படித்தார். அது பற்றி மேலும் தெரிந்துகொள்ள வல்லுநர்கள் கொண்ட விசாரணைக் கமிஷனை அமைத்தார். அதன் முன்னே கார்ஸன் ஆஜராகி, தான் மக்கள் விரோதி இல்லையென்றும், தீவிரமான நச்சுத்தன்மை கொண்ட திரவத்தை தெளித்து நன்மை புரியும் புழு பூச்சிகளையும் பறவைகளையும் அழிக்கக் கூடாது. எதற்கும் வரம்பு உண்டு என்றார்.
ஜனாதிபதி அமைத்த கமிஷன் டிடிடி- மீது கட்டுப்பாடுகள் விதித்தது. அதன் வீரியம் குறைக்கப்பட்டது. ஆனால் வளரும் நாடுகளிலும், ஏழ்மையான நாடுகளிலும் மலேரியாவை கட்டுப்படுத்தவும் அதிகமான மகசூல் வேண்டியும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டிடிடி தயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்று தடை விதிக்கப் பட்டது.
அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பதை முன்னெடுத்து சென்றவர்கள்போல இயற்கை பாதுகாப்பு, பல்லுயிர் வாழ்வதற்கு பூமி உரியது என்ற சித்தாந்தத்தைத் தன் எழுத்துக்கள் மூலமாக நிலைநாட்டி வந்த ரோசன் லூயீஸ் கார்ஸன் திருமணம் செய்துகொள்ளவில்லை. படிப்பதும், இயற்கையைப் பற்றி எழுதுவதுமாக வாழ்ந்து 1964ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய் கண்டு காலமானார்.
2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிகச் சிறந்த சாதனையாளர்களுக்கான ஜனாதிபதி விருது மரணத்திற்குப் பிறகு கார்ஸனுக்கு வழங்கப்பட்டது. அமைதியான வசந்தம் எழுதப்பட்ட காலத்தைவிட நிகழ்காலத்திற்கு அவசியமான புத்தகம். அது பூமியின் பாதுகாப்பு பற்றி ஒவ்வொருவரையும் கவனம் கொள்ள வைத்துக்கொண்டு இருக்கிறது. அதனால் அது அதிகமான கவனம் பெறுகிறது. ஐம்பதாண்டுகளாக தொடர்ந்து படிக்கப்படும் வாழும் புத்தகங்களில் ஒன்றாக அமைதியான வசந்தம் இருக்கிறது. அதனை கெட்ட புத்தகம் என்று ஒதுக்கிவிட முடியாது. நல்ல, மிக நல்ல புத்தகம். எனவே உலகத்தில் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறார்கள்.

( தமிழில் இந்நூலின் சுருக்கப் பட்ட வடிவத்தை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.)

No comments:

Post a Comment