Tamil books

Tuesday, 27 August 2013

நீலக்குறிப்பேடு

               
 தத்துவங்கள் படிப்பது, இலக்கியம் படிப்பது, பொது அறிவை வளர்த்துக் கொள்ளப் படிப்பது ஆகியவற்றுக்கிடையில் வரலாற்றைக் கற்பதற்கும், தலைவர்களின் வாழக்கை வரலாறு வாழக்கை சம்பவங்களைப் படிப்பதற்கும் ஒரு தனியிடம் உண்டு. அவற்றைப் படிக்கும்போது அவர்களது தனிப்பட்ட  குணாம்சங்களைத் தெரிந்து கொள்ள முடிவதுடன் நெருக்கடியான சமயங்களில் அவர்கள் அவற்றை எப்படி எதிர் கொண்டார்கள். சமாளித்தார்கள் என்ற விஷங்களை படிபபது நமக்கு வழிகாட்டியாக இருக்கும், பேராட்டங்களுடன் இணைந்த அவர்களது வாழ்க்கை தமக்கு உத்வேகமூட்டும்,
                இந்த வகையில் பாரதி புத்தகாலயம் சில புத்தகங்களை வெளியிட்டுள்ளது, இதில் புரட்சியாளர் லெனின் பெட்ரோகிராப் அருகில் ஒரு கிராமத்தில் தலைமறைவு வாழக்கை நடத்தியதைப் பற்றியது, நீலக் குறிப்பேடு
நீலக்குறிப்பேடு
                1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி மேகம் சூழ்ந்திருந்த காலம். ஜார் மன்னன் துரத்தப்பட்டு விட்டாலும் மென்ஷவிக் தலைமையிலான கெரன்ஸ்கி அரசு ஆட்சியை கைப்பற்றி போல்ஷ்விக்குகள் மீது கடும் அடக்குமுறையை ஏவிவிட்டது, லெனின் ஒரு காமாந்தகர் என்றும் பல்வேறு விதமாகவும் அவர் மீது கட்டுக்கதைகள் கட்டப்பட்டு அவரை ஒழித்துவிடும் முயற்சியும் நடந்து கொண்டிருந்தது,
அப்போது லெனின் ஒரு பின்லாந்தைச்சேர்ந்த புல்லறுக்கும் தொழிலாளிபோல் வேடமிட்டு தமது தோழர் எமல்யானவ் என்பவரது வீட்டில் தலைமறைவாக இருந்தார். அந்த தலைமறைவு வாழ்க்கையை ப் பற்றியதே இந்தப் புத்தகம். அவர் தலைமறைவாக இருந்த ஏரியின் கரையும், சூழலும் மிகச் சிறப்பான அகத்தூண்டலை ஏற்படுத்தும் வண்ணம் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
                  புரட்சிகரமான அரசியல், தொழிற்சங்க வாழ்வில் அரசின் அடக்கு முறைக்கிடையில் தலைமறைவு வாழ்க்கை தவிர்க்க இயலாததாகி விடுகிறது. அந்த வாழ்க்கையை எப்படி நடத்துவது என்பதன் செயல்முறை விளக்கமாகவும் இப்புத்தகம் அமைகிறது,
                தலைமறைவான வாழ்க்கையை இன்னொருவர் வீட்டில் வாழ நேரும்போது அங்குள்ள சூழ்நிலைக்கும் அங்கு வசிப்பவர்களுக்கு ஏற்றவாறும் தம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, லெனின் எமல்யானவ் வீட்டில் கிடைக்கும் சிறு வசதிக்கேற்றவாறு தம்மை விரைவில் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறார். எதிர்காலத்தில் நாட்டின் தலைவராகவே விளங்கப்போகும் ஒரு தலைவர் இவ்வளவு எளிமையாக இருப்பது, பழகுவது கண்டு எமல்யானவ் குடும்பத்தினர் வியந்து போகின்றனர். அவரை பாதுகாப்பது, அவருக்கு தேவையான செய்தி பத்திரிகைகளை தினமும் யாரும் சந்தேகித்துவிடாமல் வாங்கிவருவது, அதற்காக பல்வேறு இடங்களில் பத்திரிகைகளை வாங்குவது என எமல்யானவ் குடும்பத்தினரும் அந்த தலைமறைவு வாழ்க்கையின் அங்கமாகி விடுகிறார்கள். எமல்யானவின் கடைசி புதல்வன் கோல்யாவுடன் லெனின் நட்பு சுவாரசியமானது. அவரே அவனது நண்பனாகவும். ஆசிரியராகவும் மாறி விடுகிறார்.
                இடையிடையே லெனினை காண்பதற்கு மற்ற தலைவர்கள் வந்து போகின்றனர். அவர்களுடன் இவர் கிளர்ச்சியுடன் உரையாடுவது, விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது என விரிகிறது புத்தகம். போராட்டக் களத்தில் தாம் இல்லை என்ற மன வருத்தத்தை தனது உரையாடல்கள் மூலம் ஓரளவு போக்கிக்கொள்கிறார் லெனின்
                அங்கு தம்மை சந்திக்க வரும் தோழர்களிடம் தாம் குறிப்புகள் எழுதி வைத்திருந்த ஒரு நீல நிற குறிப்பேட்டை தம்மிடம் கொண்டுவந்து கொடுக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறார். அது கடைசியில் வந்து சேருகிறது, அது என்ன-? நாளை போல்ஷ்விக்குகள் பதவி ஏற்றதும் அரசை எப்படி நடத்துவது என்பதற்கான திட்டம், வழிகாட்டுதல்தான் அந்த குறிப்புககள் _ அதுதான் பின் நாட்களில் லெனினின் புகழ்பெற்ற புத்தகமான அரசும் புரட்சியும்``.
                லெனினுடன் அவருக்கு துணையாக இருக்கும் ஒரு தோழர் முரண்பட்டு நிற்கிறார். அவருடன் லெனின் நடத்தும் பல உரையாடல்கள் பல கேள்விகளுக்கு விடை கூறுகின்றன.
                இறுதியில் லெனின்  வேறு ஒரு மறைவிடத்திற்குச் செல்லவேண்டும் என முடிவாகிறது. லெனினும் தனது உடமைகளுடனும், நீலக்குறிப்பேட்டுடனும், புது மறைவிடத்திற்கு புறப்படுகிறார். அங்கு அவர் சென்ற பின் வந்து சேரும் கோல்யா, மனவருத்தத்துடன் அவர் சென்ற திசை நோக்கி விடை கொடுக்கிறான். நாமும் விடைபெறுகிறோம்.
_ கி.ரமேஷ்
நீலக்குறிப்பேடு``
ஆசிரியர் : .கஸாகேவிச்
தமிழில்  : பி.சிவகாம சுந்தரி
பக்கம்  : 144 விலை: ரூ.90/-_
கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை
சென்னை _ 18.