Tamil books

Saturday 17 August 2013

கூர் தீட்டப்பட்ட வைரங்களைக் குறித்த குறிப்புகள் /இரா.முரளி

திரைப்படக் கல்லூரி ஆளுமைகள்
கிராபியென் ப்ளாக்
பக்.144 ரூ.80
புதிய கோணம், 421, அண்ணாசாலை, சென்னை 18 044 24332924

திரைப்படக் கல்லூரி ஆளுமைகள் எனும் இப்புத்தகம் சென்னை தரமணியிலுள்ள திரைப்படக் கல்லூரியில் பயின்ற கலைஞர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள், ஒலிப்பதிவாளர், நடிகர்கள் மற்றும் எழுத்தாளுமைகளை எவ்வகையிலெல்லாம், திரைப்படக் கல்லூரி கூர் தீட்டியது என்பதை பதினொரு கட்டுரைகளில் விளக்குகிறது இப்புத்தகம். வி.எஸ்.மூர்த்தி 1963-1966ம் ஆண்டுகளில் திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவு பயின்றவர். ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இவரின் வகுப்புத் தோழர்.
படிக்கும் காலத்தில் கல்லூரியில் தொழில் நுட்பக் கருவி வசதிகள் இல்லாததையும், அவற்றிற்காக போராடிப் பலன் கிடைக்காமல் இரண்டு மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்பட்ட நிகழ்வையும் மூர்த்தி இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார். பெரும்பாலான கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகப் பேசுவதாகவே அமைந்துள்ளன.
1967-69ல் திரைப்படக் கல்லூரியில் படம் பதனிடும் பிரிவில் பயின்ற மாணவர் சிவராமன். அன்று முதல் இன்று வரை படம் பதனிடும் தொழில் நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களைக் கண்டவர். கருப்பு-வெள்ளை சினிமாவிலிருந்து, கலர்சினிமா வரை பல ஃபிலிம் சுருள்களைப் பதனிட்டவர். இக்கட்டுரையில் படம் பதனிடுதல் குறித்த பல்வேறு நுட்பங்களைக் குறிப்பிட்டுள்ளதும் ஃபிலிம் வகைகளில் பாலியஸ்டர் ஃபிலிமின் தன்மைகள் உள்ளிட்ட பல தகவல்களைக் கொடுத்துள்ளதும் பயனுள்ளவை.
திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுப் பிரிவில் பயின்று இயக்குனராகப் பரிணமித்து, தொடர்ந்து குறும்பட / ஆவணப்படச் சூழலில் இயங்கிவரும் அருண்மொழி தான் இயக்கிய படங்கள் குறித்தும், சினிமாக் கலைஞர்கள், நாடக நடிகர்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள தகவல்கள் இத்தொகுப்பை மிகவும் செழுமையாக்குகின்றன. எழுத்தாளர் நகுலன் பற்றிய ஆவணப்படமும், இளையராஜா  மற்றும் இந்திய தேசிய ராணுவப்படை (மிழிகி) பற்றிய ஆவணப்படமும் அவருடைய படைப்புலகில் முக்கியமானவை என இக்கட்டுரை மூலம் உணர முடிகிறது.
நடிகர் ரகுவரனுடனான தன் அனுபவங்களை அருண்மொழி ஒரு தனிகட்டுரையாக கொடுத்துள்ளது சிறப்பு. ரகுவரனின் சினிமா ஞானம், கவிதை ஆர்வம் போன்றவற்றுடன் ரகுவரனின் தொடக்கநிலை படிப்படியாக எவ்வாறு அவர் முன்னேறிப் பிரபலமானார் என்பன பற்றியும், ரகுவரனின் மறைவு குறித்தும் அருண்மொழி எழுதியுள்ளது மனதைத் தொடுகிறது. ரகுவரனை வைத்து ‘ஏழாவது மனிதன்’ இயக்கிய கே. ஹரிஹரனின் நினைவுகளும் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.என்.ஞான சேகரன் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்கள் ஒருபுறம் தொழில்நுட்பம் குறித்த தகவல்களாகவும் மறுபுறம் படம் உருவான வரலாறாகவும் அமைகின்றது. தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர் இயக்குநர் மணிஸ்ரீதர் மற்றும் நடிகர் ராஜேந்திரநாத் ஆகியோரின் அனுபவப் பகிர்வுகள் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வாழ்வியல் உலகிற்கான சாளரமாக அமைந்துள்ளன.
இவற்றைத் தொடர்ந்து ‘அவள் அப்படித்தான்’ இணை இயக்குநரும் திரைப்படக் கல்லூரியின் ஆசிரியருமான பாபுராமசாமி தன் மாணவர்களான ஆபாவாணன், அரவிந்தராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, யூகிசேது, செல்வராஜ், தியாகராஜன் ஆகியோரைப் பற்றி நினைவுகூர்ந்தும், மத்திய திரைப்படப்பிரிவில் தன் அனுபவத்தைக் குறிப்பிட்டும் எழுதியுள்ள கட்டுரை சுவாரஸ்யமானது. பெலாஸின் ‘சினிமா கோட்பாடு’ புத்தகத்தை தமிழில் கொடுத்த எம்.சிவக்குமாரின் நினைவுகள் சிறப்பானவை. ஆபாவாணன் என்ற சின்னச்சாமியின் நேரடி அனுபவப் பகிர்வு இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வராதது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய கலந்துரையாடலை கிராபியென் ப்ளாக் கொடுத்துள்ளார். இதில் படைப்புலகம் கலைக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு,  நாவலுக்கும் சினிமாவுக்கும் உள்ள சிக்கல்கள் குறித்தும், இன்னும் பல நுட்பமான விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் இடம் பெறுகின்றன.
கிராபியென் ப்ளாக்

இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சியை மேற்கொண்ட தொகுப்பாளர் கிராபியென் ப்ளாக் பாராட்டுக்குரியவர். இந்நூல் முக்கியமானதும் அதே சமயம் வித்தியாசமானதும் கூட எனக் கூறலாம்.

No comments:

Post a Comment