Tamil books

Friday 2 August 2013

ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வைச் சித்தரிக்கும் பாடல்கள்


. தமிழ்ச்செல்வன்
கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள்
தி.நடராஜன்
பாரதி புத்தகாலயம்
பக்.352 ரூ.250

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எழுத இயக்கம் என்னைப் பணித்திருக்கும் சூழலில் இந்தப்புத்தகம் வருவது எனக்குப் பெரிய பொக்கிஷம் கிடைத்ததுபோல உணர்கிறேன். அதிலும் குறிப்பாக தஞ்சை மண்ணின் செங்கொடி இயக்க வரலாற்றில் கீழத்தஞ்சைக்கு ஆகப்பெரிய பங்கும் பாத்திரமும் உண்டு. இங்குதான் பண்ணைகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. சாட்டையடியும் சாணிப்பாலும் அந்த நாட்களின் அன்றாடமாக இருந்தது. பண்ணையடிமைகளின் தினசரி வாழ்வின் துயர்மிக்க பக்கங்கள் கீழத்தஞ்சை மண்ணில்தான் எழுதப்பட்டன. அந்தக் கொடுமைகளுக்கு எதிராக திகைத்து நிற்காதே திருப்பி அடி என்று மக்களை எழுச்சியுறச்செய்த செங்கொடி இயக்கமும் இங்குதான் வீறு கொண்டு எழுந்தது.

ஹைதராபாத்தில் இருந்து கொண்டு இங்கு பண்ணையம் பார்த்த மடத்துக்கு எதிராக தென்பரையில் வெடித்துக்கிளம்பிய கிசான் சபாவின் இடிமுழக்கம் இங்குதான் முதலில் கேட்டது. தமிழகத்துக்கே முன்னோடியான விவசாயிகளின் போராட்டமும் நாகையில் தமிழகத்தை உலுக்கிய ரயில்வே தொழிலாளர் போராட்டமும் இந்த மண்ணில்தான் மண்கீறிக்கிளம்பியது. அதிகாரப்பூர்வமானவை எனச்சொல்லப்பட்ட வரலாறுகளில் இந்த மக்களின் போராட்டங்களுக்கு இன்றுவரை இடமில்லை. இலக்கிய உலகத்தால் கொண்டாடப்படும் நவீன இலக்கியங்கள் எதிலுமே சாட்டையடிகளின் சத்தம் கேட்கவில்லை. அதிலெல்லாம் கொலுசுகளின் சிμங்கல் மொழியே பதிவாகியிருந்தது. சகதியிலே நம் மக்கள் முங்கிக்கிடந்தபோது அந்த இலக்கியங்கள் மோகத்தில் முத்தெடுத்துக்கொண்டிருந்தன.
நமக்கான இலக்கியங்களை நாமே படைப்போம் எனப் பாடிவைத்த பாட்டாளி மக்களின் மொழியை இப்புத்தகத்தில் அப்படியே படம் பிடித்துக்கொண்டு வந்துள்ளார் தோழர் தி.நடராஜன். எத்தனை அரிய முயற்சி இது.
குறிப்பாக இப்பாடல்கள் யாவும் இப்பகுதியின் பள்ளர் மற்றும் பறையர் சாதி மக்களிடமிருந்து தொகுக்கப்பட்டுள்ளது முக்கியமானது. பல ஆய்வாளர்கள் பாடல்கள் எந்தச்சாதி மக்களிடமிருந்து திரட்டப்பட்டது என்பதைக் குறிப்பிடாமலே விட்டு விடுவார்கள். அது மானுடவியல் சார்ந்தும் சமூகவியல் சார்ந்தும் செய்யப்படும் பிற்கால ஆய்வுகளுக்கு உதவாது. அக்குறையை உணர்ந்தே தோழர் நடராஜன் தகவலாளிகள் பற்றிய முழு விவரத்தோடும் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.
பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் துவக்கி வைத்த பணி இது. .சிவசுப்பிரமணியன்அறு.இராமநாதன், பேராசிரியர் முப்பால்மணி போன்ற ஆளுமைகளால் மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பணி இது. தமுஎகச கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமாகக் கையிலேடுத்துள்ள பணி இது. இப்பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்புத்தகத்தை நான் மதிக்கிறேன்.

ஆறு பாகங்களாக 25 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ள 200க்கு மேற்பட்ட இப்பாடல்கள் கீழத்தஞ்சை மண்ணின் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வையும் அரசியல் பொருளாதார வாழ்வையும் தம் வரிகளில் ஏந்தி நிற்கின்றன. வாழ்க்கை வட்டச் சடங்குப்பாடல்களில் கூட தம் வாழ்நிலையை மக்கள் பதிவு செய்துள்ளனர் தாலாட்டுப் பாடலில்பசியா பசிக்குது பசி வந்து மூடுது ஏனப்பா நீயழுதே என்று பசியைப் பேசியுள்ளார்கள். “பாத்து நடந்து வாப்பா பழிகாரப்பட்டணத்தே என்றும்சுண்டி நடந்து வாப்பா சூதுகாரப் பட்டணத்தே என்றும் பாடுகிறார்கள். பட்டணம் என்பதை நாம் சந்தை என்றும் முதலாளித்துவம் என்றும் கொள்ள வேண்டும்.
சோபனப்பாடல்கள் என்னும் வகை நான் எங்கள் வட்டாரத்தில் அதிகம் அறியாதது. எங்கள் பகுதியில் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த பெண்கள் இது போன்ற சோபனப்பாடல்களைப் பாடுவார்கள் என பேராசிரியர் .சிவசுப்பிரமணியன் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அச்சோபனப் பாடல்கள் பெண்கள் ருதுவானது பற்றியும், முதலிரவு பற்றியும் என ஒருவகையான பாலியல் கல்விக்கான பாடல்கள் போல இருக்கும். தோழர் தி. நடராஜன் தொகுத்துள்ள இப்பாடல்களிலும் அத்தன்மைகள் உள்ளன. ‘பட்டுப்பொடவையிலே ஒரு பொட்டும் தெறிச்சதப்போ என்று ரத்தப்போக்கு பற்றிக் குறிப்பிடும் வரிகள் உள்ளன. சோபனப்பாடல்களில் மக்கள் பலவிதமான உணவுவகைகளைப் பட்டியலிடுகிறார்கள். அது என்னை மிகவும் ஈர்த்தது. அன்றாட வாழ்வில் தமக்குக் கிட்டாத அதேசமயம் தம் கனவுப் பதார்த்தங்களாயிருப்பவற்றையே மக்கள் இப்பாடல்களில் பட்டியலிட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். நிஜ வாழ்வில் கிட்டாதா என ஏங்கும் ஒன்றைப் படைப்பில் கொண்டு வருவதுதானே கலையின் அடிப்படை என்று யேனான் சொற்பொழிவில் தோழர் மாசேதுங் அவர்கள் குறிப்பிட்டது நின¬வுக்கு வருகிறது.
இத்தொகுப்பு குறித்துப் பேசுகையில் முக்கியமாகக் குறிக்க வேண்டிய ஒன்று என்னவெனில் சில சினிமாப்பாடல்களும் அறிவொளி இயக்கப்பாடல்களும் பாவலர் வரதராசன் குழு போன்ற இடதுசாரி இயக்கக் கலைக்குழுக்கள் பாடிய பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பாடல்கள் அப்படியே வந்துள்ளன. வார்த்தைகளில் மக்கள் மொழி உள்ளது. அதே சமயம்எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டுச் சென்றாரடி என்கிற திரைப்படப்பாடல் மக்கள் பாடலாக மாற்றம் பெற்று
எட்டடுக்கு மாளிகையா ஏற்றிவச்ச என் தலைவன்/ ஊரை விட்டுச் செனறாரடி தலைவி வேறுபட்டு நின்றாரடி / மெட்ராசு தந்தி வந்து கொடங்கயோரம் பேசுதம்மா / அம்மாவும் பதறியழுதா தம்பியும் துடிச்சுழுந்தா / பட்ட கரவேட்டி பாசமலர் துண்டு போட்டு / ஊரை விட்டுச் சென்றாரடி /” என்று பாடல் செல்கிறதுஇவற்றையெல்லாம் நாட்டுப்புறப்பாடல்கள் என்று சொல்லலாமா என்கிற சுவையான விவாதத்தை இப்பாடல்களை முன் வைத்து நாம் நடத்தலாம்.
எழுதி வச்சது யாரென்று தெரியாதவையே நாட்டுப்புறப் பாடல்களாகும். மக்களைப் பொறுத்தவரை இப்பாடல்களை எழுதியது யாரென்று அறிய மாட்டார்கள். அவை அறிவொளி இயக்கக் கலைக்குழுக்கள் பாடியிருக்கலாம். பாவலர் வரதராசன் பாடியிருக்கலாம். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அவை அவர்களுக்குச் செவிவழியே கிடைத்த பாடல்கள்தாம் தவிர அவற்றை அவர்கள் உள்வாங்கித் தங்கள் மொழியில் பாடியுள்ளபடியால அவற்றை நாட்டுப்புறப்பாடல்கள் என்றே சொல்ல வேண்டும். இது குறித்து அமரர் நா.வா. அவர்களின் காலம் தொட்டே ஒரு விவாதம் இருந்து வருகிறது. நாமும் தொடர்ந்து விவாதிக்கலாம். எப்படியானாலும் யாரோ ஒருவர் எழுதிய அல்லது கட்டிய பாட்டுத்தானே மக்களிடம் சென்று பரவி சில காலம் கழித்து நாட்டுப்புற இலக்கியமாக ஆகி விடுகிறது.

ஒரு நல்ல விஷயம் என்னவெனில் தோழர் தி.நடராஜன் மக்களிடம் கிடைத்த பாடல்களில் தன் கையை வைக்காமல் தன் அறிவுத்திறனைக் காட்டாமல் சொன்னது சொன்னபடி அப்படியே பதிவு செய்துள்ளார். இந்த அறம் பல ஆய்வாளர்களிடம் காணக்கிடைக்காத குணம். அதற்காகவும் அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.


தனது பார்வைப் பிரச்சனையைத் துச்சமாக மதித்துத் துணிவுடன் களமிறங்கி பல முக்கியமான பாடல்களை அவர் தொகுத்துள்ளார். அவரது அரசியல் பார்வையின் தெளிவு அவருக்குக் கை கொடுத்து அழைத்துச் சென்றுள்ளதை நாம் அனைவரும் கைதட்டிப் பாராட்ட வேண்டும். இன்னும் தொகுக்கப்படாத பாடல்களே அதிகம். அப்பணி தொடரப்பட வேண்டும்.

No comments:

Post a Comment