Tamil books

Saturday 3 August 2013

இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்




இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம்
எம்.என்.ராய் தமிழில்: வெ. கோவிந்தசாமி
பாரதி புத்தகாலயம்

 கம்யூனிஸ்டுகள், சிறைகளில்  அடைபட்டுக் கிடக்கிற காலங்களில், சிறகுகள் விரித்துப் பறப்பதற்குப் புத்தகங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜூலியஸ் ப்யூசிக்கின் தூக்கு மேடைக்குறிப்பு முதல் இந்த நூல் வரை எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. 'முஸ்லிம் என்பவர் யார், அவர் நல்லவரா, கெட்டவரா தீவிர வாதியா என்றெல்லாம் பல கேள்விகள் மேலெழுந்து வந்து 'விஸ்வரூபம்' எடுத்திருக்கின்றன. 1939ல், எம்.என்.ராய் ராஜத்துரோகக் குற்றச்சாட்டுக்காக ஆறாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தபோது  அவர் எழுதியது இந்நூல். 'ஒரு முஸ்லிம் நாட்டில் இருப்பதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வரும் விசயத்தை யாருமே சரிவர உணர்ந்ததாகத் தெரியவில்லை' என்ற வேதனைக்குரல், இந்தப் புத்தகத்தின் அடிநாதம். 'இஸ்லாமை, இராணுவவாதத்துடன் சேர்த்துக் குழப்புவது, வரலாற்றை மொத்தமாக மிகத் தவறாகப் புரிந்து கொள்வதாகும். சொல்விளக்க வரலாற்றின்படி இசுலாம் என்பதன் பொருள் அமைதியை உருவாக்குவது என்பதே. வரலாற்றின் ஓர் அவசியமான விளைவே இஸ்லாம் ஆகும். இது மனித குல முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகும். ஒரு புதிய சமூக உறவின் கருத்தியலாக மலர்ச்சி பெற்ற இது, இதற்குக் கைம்மாறாக அம்மனிதர்களின் சிந்தனையைப் புரட்சிகரமானதாக மாற்றியது.' என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை முன்வைக்கிறார் ராய். மதக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புகலிடமாகவும் இசுலாமை ஆசிரியர் காண்கிறார். 'சமுகச் சிதைவு, ஆன்மீகக் குழப்பம் திவாலாகிப் போன அறிவுத் தலைமை ஆகியவற்றுக்கு மத்தியில் வேதனை அனுபவித்துக் கொண்டிருந்த சாமானிய மக்கள், இசுலாமின் ஓர் இறைக் கோட்பாட்டை, கடற்புயலின் நடுவே நம்பிக்கை தரும் நங்கூரமாகக் கருதி உற்சாகமாக வரவேற்றனர்' என்றும் கணிக்கிறார். சமூகக் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த இந்துத் தத்துவத்தைக் காட்டிலும், அதிலிருந்து மீண்டெழ இந்திய மக்களுக்கு ஒரு வழியைக் காட்டியது இசுலாம் என்கிறார். 13-14ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் அது வெற்றி கண்டது. காரணம், அதன் சமூக புரட்சிகரப் பண்பினாலேயே இங்கு அது தன் வேரை ஆழமாக ஊன்ற முடிந்தது' என்ற ஹேவலின் கருத்தையும் சான்று காட்டுகிறார் நூலாசிரியர். வெ.கோவிந்தசாமியின் செறிவான அதே சமயம் நேரடியான மொழியாக்கமும், நேர்த்திமிக்க மேலட்டை அச்சு முதலிய தொழில் நுட்பங்களும் நூலின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்துவன.

No comments:

Post a Comment