Tamil books

Thursday 11 April 2013

எங்களூரில் அழகிரிசாமிகள் வாழ்ந்ததில்லை! கீரனூர் ஜாகிர் ராஜா





உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது வரைக்குமான என் பேச்சிலோ எழுத்திலோ எப்போதும் இந்தச் சங்கதி வெளிப்பட்டதேயில்லை. எனக்கான ரகசியக் குறிப்பில்கூட நான் எழுதி வைக்கவில்லை. என் மனதிற்குள்ளேயே அந்த வருத்தத்தை வைத்து வேறெங்கும் கசிந்து விடாத அளவிற்கு மணல் மூடைகளை அடுக்கி குறுக்கணை போட்டுத் தடுத்துவிட்டேன். ஆம்! கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு கதையில் வரும் சாரங்கனைப் போலவே நானும் என் பிராயத்தில் சிலரிடம் பிரியமாக சில புத்தகங்களைக் கோரி, அது கிடைக்காமல் போய் பெருமூச்செறிந்து ஏங்கி ஏங்கி அழுதிருக்கிறேன். அந்த நேரத்தில் சாரங்கனுக்குப் போலவே எனக்கும் வயிறு அசாதாரணமாகக் குழிந்து புடைத்து முகம் ரத்தம் போலச் சிவந்திருக்கிறது. கூப்பிட்ட குரலை மதியாமல் அவனைப் போலவே நானும் வெட்கப்பட்டு ஓடிப்போயிருக்கிறேன். ஆனால் அழகிரிசாமி எழுதுவதுபோல எனக்குப் புத்தகம் தரமறுத்தவர்கள் அதற்காக அத்தனை தூரம் விசனப்பட்டிருப்பார்களா என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அன்பளிப்பு கதையில் வரும் அந்த புத்தகம் சூழ்ந்த வீட்டுக்காரர் வேறு யாருமில்லை, அழகிரிசாமியேதான். என் துரதிருஷ்டம் எங்கள் ஊரில் அழகிரிசாமிகள் வாழ்ந்ததில்லை. இந்தக் கதைகளைத் தொகுத்திருக்கிற தமிழின் குறிப்பிடத் தகுந்த சிறுகதையாளர் தமிழ்ச்செல்வன் ஒரு நேர்காணலில் இப்படிக் குறிப்பிடுவார், ÔÔஅன்பளிப்பு போன்ற ஒரு கதையை என் வாழ்நாளில் எழுதிவிட மாட்டேனாÕÕ இது ஒருவகையில் ஏக்கச் சாயை படிந்த கேள்விதான். அன்பளிப்பு கதையை வாசிக்கிற ஒவ்வொருவரும் அடையும் உணர்வு அக்கதை உருவாக்கும் ஏக்கம்தான். என் கேள்வி, அன்பளிப்பை நாம் ஏன் கதையாகப் பார்க்க வேண்டும்? அது ஓர் நிகழ்வு. அனுபவம். வாழ்க்கையில் நாம் பார்த்தறியாத அல்லது பார்க்கத் தவறிய பக்கம். புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிற ஒவ்வொருவரும் அன்பளிப்பு கதையின் நாயகன் தானே? மறுநாள் ஞாயிறென்றால் இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிக்கிறவர்கள்தாமே? நமக்கு அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகள் எல்லோருமே, சாரங்கராஜன், பிருந்தா, சுந்தர்ராஜன், கீதா, சித்ரா தானே? இந்தப் புத்தகங்களை வைத்திருப்பதால் மட்டுமே நம்முடைய மேதைமை புரியவில்லையே என்று எத்தனை உள்ளங்களைப் புண்படுத்தியிருப்போம்? புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கிழித்துவிட்டதற்காக, கிறுக்கி வைத்ததற்காக, ஒழுங்கமைவைக் கலைத்தமைக்காக எத்தனை குழந்தைகளைக் கை நீட்டியிருப்போம்? அப்படிப்பட்ட நாம் ஏன் சாரங்கன் போன்றவர்கள் தாமே ஒரு டைரியை வாங்கிவருவதற்கு முன் முந்திக் கொண்டு Ôஎன் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்புÕ என்று எழுதி வைத்துக் காத்திருக்கக் கூடாது? அழகிரிசாமி இக்கதையின் மத்தியில் எழுதுகிறார். ÔÔஉலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்ÕÕ ** காவிரிக்கரை எழுத்தாளர்களையும், புதுமைப்பித்தனையும் இன்னும் பிறரையும் வாசித்தபின் அழகிரிசாமியை நான் வெகுவாகப் பிந்தி வாசித்தேன். அதற்கு தண்டனை போலவும், ஏதோ ஒரு மாயம் போலவும் மீண்டும் மீண்டும் அவரை வாசிப்பதற்கான சந்தர்ப்பங்கள் சமீபமாக தொடர்ந்து வாய்த்துக் கொண்டே இருந்தது எனக்கு ஆச்சரியம். எளிமையான குரலில் எதையும் துலக்கமாகச் சொல்லிவிடும் பாணி, அவருக்கு முன் பிரபலமாகியிருந்த தவளைப் பாய்ச்சல் நடையிலிருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியபடியே இருந்தது. என் கரிசல் பிரதேச நண்பர்கள் எல்லோரும் அவர் மேல் பெரிய காதல் கொண்டிருந்தார்கள். கடந்த ஆறேழு வருடங்களில் நிகழ்ந்த எங்கள் சந்திப்புகளில் உரையாடல்களில் அழகிரிசாமிக்கான முக்கியத்துவம் அதிகமிருந்தது. அவ்வகையில் நான் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். மௌனி, லா.ச.ரா. புதுமைப்பித்தன் என்று வாசித்தபிறகு அழகிரிசாமியை வாசிக்க எனக்கு இலகுவாக இருந்தது. நான் குறிப்பிடும் ÔஇலகுÕ மொழி அளவில்தான். அவர்களின் மொழியழகு தனி. ஆனால் அவர்களிடம் இல்லாத தனித்துவமிக்க எளிமை, கதைக்களம், உளவியல் அணுகுமுறைகள் இவரிடம் இருந்தன. அழகிரிசாமி தன் சிநேகிதர் கி.ரா.வைப் போல தான் சார்ந்த சமூகத்தின் பிரஜையாகத் தன்னைக் கதைகளில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் இனவரைவியலாளர் அல்ல. வட்டார வழக்கையும் கி.ரா. அளவிற்கு அவர் உபயோகிக்கவில்லை. அழகிரிசாமியின் எழுத்துப் போக்கு இலக்குகள், முன் முடிவுகளற்றது. வாழ்க்கையிலிருந்து இலக்கியம் என்பதற்கு ஏதுவாக அவருடைய கதைகளில் இடம் பெறும் சம்பவங்கள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை. (திருவொற்றியூர் வல்லி போன்ற சில கதைகள் நீங்கலாக) எல்லாக் கதைகளிலும் அவர் வாழ்க்கையை நுட்பமாக அவதானித்தவராகவே வெளிப்படுகிறார். இந்தக் கட்டுரையில் திரிபுரம் கதையைக் குறித்து எழுதக்கூடாது என்று ரொம்பவே என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன். இயலவில்லை. தொகுப்பாளர் ச.த.தன் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல உண்மையிலேயே அது வாசகரை நிம்மதியிழக்கச் செய்யும் கதைதான். நம்முடைய இரண்டு தலைமுறைகளுக்குப் பஞ்சம் என்றால் என்னவென்று அத்தனை துலக்கமாகத் தெரியாது. அதிகபட்சமாக என் பிள்ளைப்பிராயத்தில் தி.மு.க. ஆட்சியில் ஒரு வறட்சி வந்து அரிசிக்குப் பதிலாக மக்கள் மக்காச் சோளமும் மரவள்ளிக் கிழங்கு மாவும் சாப்பிட நேர்ந்த துரதிர்ஷ்டவசமான ஞாபகங்கள் மங்கலாக மனத்திரையில் ஓடுகின்றன. அப்போதும் கூட ஊர் விட்டு ஊர் இடம் பெயரும் அவலம் ஏற்பட்டதாக நினைவில்லை. எங்கள் ஊர் வீடுகளில் சமையலுக்குத் தேவையான பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது ÔÔஉள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்வதுÕÕ என்ற இசைவான வாக்கியம் ஒன்றைக் கூறுவார்கள். அது மாதிரித்தான் கூழோ, கஞ்சியோ காய்ச்சிக் குடித்துவிட்டு ஊரை விட்டுப் போகாமல் உயிரோடு கிடந்தார்கள். ஆனால் Ôபஞ்சம் வந்துவிட்டதுÕ என்கிற அபாய அறிவிப்புடன் அழகிரிசாமி தொடங்கும் திரிபுரம் கதை அதன் 10 பக்கங்களில் ஒரு பயங்கரத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறது. பயங்கரம் என்றால் என்ன? கொலை பாதகமும், கொடிய வன்முறையும், குண்டு வெடிப்புகளும் மட்டும்தானா? இல்லை! அழகிரிசாமி இவற்றையெல்லாம் சொல்லவில்லை. கணவனைப் பஞ்சத்துக்கு காவு கொடுத்துவிட்டு எங்கோ ஆந்திராவிலிருந்து கோவில்பட்டிக்குப் புலம் பெயரும் நரசம்மாவையும், அவளின் மகள் வெங்கட்டம்மாவையும் சூழ்ந்து கவ்வும் வயிற்றுப் பசியைக் குறித்துச் சொல்கிறார். இந்தப் பசியைத் தான் நான் Ôபயங்கரம்Õ என்கிறேன். இந்தப் பயங்கரத்துக்காக அவர்கள் சந்திக்கின்றவை யாவும் அதிபயங்கரங்கள். பஞ்சத்தைக் குறித்து, நிறையத் தரவுகளைத் திரட்டி வைத்துக் கொண்டு நாம் பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கிறோம். நாவல்களில், கதைகளில், கட்டுரைகளில் என விதவிதமான வடிவங்களில். ஆனால் அவை அழகிரிசாமியின் திரிபுரம் கதைக்கு முன் சுமார் தான் என்று எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. தாது வருஷப் பஞ்சம் குறித்து எழுதும்போது பத்திரிகைகள் வெளியிடுகின்ற படங்கள் நமக்குப் பீதியூட்டுகின்றன. அப்படியான எலும்புக் கூடான மனித ரூபங்களை படங்களாகப் பார்க்கக்கூட மனம் பதைத்து வேக வேகமாகப் பக்கங்களைப் புரட்டுகிறோம். திரிபுரத்தில் வரும் இந்த நான்கு காட்சிகளைப் படித்தால் நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ¥ கந்தல் ஆடை வழியாக வெங்கட்டம்மாவின் சரீரத்தை கடைக் கண்ணால் பார்க்கும் மனித சமூகத்திற்கு அஞ்சி தாய் நரசம்மா தன் புடவையை மகளுக்குத் தந்து விட்டு கந்தலைச் சுற்றிக் கொள்ளும் இடம் ¥ சாத்தூரில் தெருவிலே கிடந்த புழு அரித்த சொத்தை வெள்ளரிக்காயை நரசம்மா தின்ன ஆசை கொண்டு ஆனால் மகளின் முன் வெட்கப்பட்டு ÔÔஇது என்ன காய்Õ என்று தெரியவில்லையேÕÕ என்று பொய்யாகக் கேட்டு நடிக்குமிடம். ¥ அதே தாய் பசியின் கோரப் பிடியில் சிக்கி பத்து ரூபாய்க்கும், உணவிற்கும் மகளின் கற்பை ஓட்டல் பையன்களிடம் பேரம் பேசி, அவளை சம்மதிக்க வைக்க நடத்தும் போராட்டம். ¥ எல்லாம் முடிந்த பிறகு அம்மாவிடமிருந்து அவ்வளவு பணத்தையும் வாங்கி வலது கையிலிருந்து இடது கைக்கும் இடது கையிலிருந்து வலது கைக்கும் மாற்றிப் போட்டுக் குலுக்கி வெங்கட்டம்மா பைத்தியம்போல் சிரிக்கும் இடம். இதய பலகீனமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று சினிமாக்காரர்கள் அபத்தமாக ஒரு விளம்பரம் செய்வார்கள். அது வேறொன்றுமில்லை... ஒப்பனையும், பின்னணி இசையும் செய்யும் மாய்மாலம். எழுத்தால் இதயத்தை அசைத்துப் பார்ப்பதென்பது மிகப் பெரிய வித்தை. அது அழகிரிசாமிக்கு வலுவாக சித்தித்தது. ஏதோ ஒரு விதத்தில் எனக்கு புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையையும், அழகிரிசாமியின் திரிபுரம் கதையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இது தானய்யா கற்பு என்னும் பித்தனின் குரலுக்கும் ÔÔசிவன் சிரித்துத் திரிபுரத்தை எரித்தான்; இவள் சிரிப்பு என்ன செய்யப் போகிறதோ?ÕÕ என்கிற அழகிரிசாமியின் குரலுக்கும் ஒற்றுமை இருக்கவே செய்கிறது. இரண்டும் ஒரு நேர்கோட்டில் பயணிக்கிற படைப்புக் குரல்கள்தான். தன் வாழ்நாளில் அழகிரிசாமி மொத்தம் 106 சிறு கதைகள் எழுதினார். விமர்சகர்கள், அறிஞர்கள் அவருடைய கதை சொல்லும் திறனை ஆண்டன் செக்காவுடன் ஒப்பிட்டனர். புதுமைப்பித்தனுக்குப் பிறகு இன்னும் இருக்கிறது என்று க.நா.சு. மூவரை மட்டும் அடையாளம் காட்டினார். மௌனி, லா.ச.ரா. வரிசையில் அழகிரிசாமியையும் இணைத்துச் சொன்னதன் மூலம் க.நா.சு. தன் நேர்மையை நிரூபித்தார். தமிழ்ச் சிறுகதைத் தடத்தில் பிசிறில்லாமல் ஒலித்த குரல் அழகிரிசாமியினுடையது. சிக்கலும் சிடுக்குமில்லாத நேர்த்தியான எளிய மொழிஅழகு, ஒரு எட்டாம் வகுப்புப் பையன் வாசித்தாலும் புரிந்து கொள்ளும் தன்மை அவருடைய எழுத்தின் பலம். பழந்தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் என எவ்வளவோ வாசித்த அனுபவங்களிருந்தும் அவற்றின் சாயல் சுயபடைப்புகளில் துளியும் கவியாதது அவரைப் பல முன்னோடி எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அழகிரிசாமியின் மொத்தச் சிறுகதைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை இத்தொகுப்பின் மூலமாக தரிசிக்கத் தருவது தமிழ்ச்செல்வனின் திறமை. அது தேர்ந்த வாசிப்பு மற்றும் ரசனையைப் பொறுத்தது. காலத்தின் ரேகை படிந்த புதுமைப்பித்தனின் கதைகள் தொகுப்பிற்குப் பின் ச.த. செய்திருக்கிற சிறந்த முயற்சி இது. 

No comments:

Post a Comment