Tamil books

Thursday 11 April 2013

உலக புத்தக தின கொண்டாட்டங்கள்





உலகப் புத்தக தின கொண்டாட்டங்களைக் குறித்த ஆலோசனைக் கூட்டம் எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்கள் தலைமையில் 20.03.2013 அன்று பாரதி புத்தகாலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரா. ச. மாடசாமி, பேரா. வீ. அரசு, நூலகத்துறை முன்னாள் இயக்குநர் ஆவுடையப்பன், சுப்பையா அருணாசலம் பதிப்பாளர்கள் முத்துகுமாரசாமி, காந்திகண்ணதாசன், சேது சொக்கலிங்கம், ஆர். நல்லதம்பி, , எழுத்தாளர்கள் யூமா.வாசுகி, இரா.தெ. முத்து, அ. குமரேசன், ப.கு.ராஜன், சூரிய சந்திரன், எஸ்.வி. வேணுகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாரதிபுத்தகாலயம் க. நாகராஜன் வரவேற்றுப் பேசி சில தீர்மானங்களை முன் வைத்தார். அதுகுறித்து பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டது. இறுதியில் அவற்றைத் தொகுத்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உலகின் அதி முக்கிய நூறுபுத்தகங்கள் குறித்த சுவரொட்டிகள் தயார்செய்வது, நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிடுவது.அவற்றை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காட்சிப்படுத்துவது. நிகழ்வுகளின் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு மூத்தஎழுத்தாளர் சா.கந்தசாமி தலைவராக இருப்பார். அவருடன் எல்லோரும் ஒத்துழைப்பது. புத்தகத்தினத்தன்று நூல் வாங்குவோருக்கு 15% கழிவு தரவேண்டுமென பதிப்பகங்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதற்காக பதிப்பக உரிமையாளர்களுடன் காந்தி கண்ணதாசன் தொடர்பு கொள்வார். புத்தகத்தினம் குறித்த சிறப்பு செய்திகளை வெளியிட ஊடகங்களை கேட்டுக்கொள்வது. பத்திரிகைகளில் இது தொடர்பான கட்டுரைகள் கவனஈர்ப்புச் செய்திகள் வெளியிடச்செய்வது. உலகப் புத்தகத்தினம் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளை நூலகங்களில் நடத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்வது. சென்னை பல்கலைக்கழகத்தில் உலகப் புத்தகத்தினத் தன்று பதிப்புத்துறை குறித்த கருத்தரங்கம் நடத்துவது. இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன. உலக புத்தக தினத் தயாரிப்பை முன்னிட்டு பதிப்பாளர்கள் கூட்டம் 25.03.2013 அன்று காந்தி கண்ணதாசன் தலைமையில் கவிதா பதிப்பகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமகள் நிலையம், பாரிநிலையம், மணிமேகலை பதிப்பகம், பழனியப்பா பிரதர்ஸ், மணிவாசகர் பதிப்பகம், கண்ணதாசன் பதிப்பகம், கவிதா பதிப்பகம், ராஜ்மோகன் பதிப்பகம், பயணீர் பதிப்பகம், பிரேமா பிரசுரம், அருணா பப்ளிகேஷன், சங்கர் பதிப்பகம், ஏகம் பதிப்பகம், ஹிஙிஷி ஞிவீstக்ஷீவீதீutஷீக்ஷீs, ஆனந்த நிலையம், செண்பகா பதிப்பகம், நக்கீரன் பப்ளிகேசன், பாரதி புத்தகாலயம், சிக்ஸ்த் சென்ஸ், நாதம் கீதம், உள்ளிட்ட பல பதிப்பகங்களிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டு உலக புத்தக தினத்தை சிறப்பாக கொண்டாடுவது. உலகின் மிக முக்கியமான 50 புத்தகங்கள், இந்தியாவின் மிக முக்கிய 25 புத்தகங்கள், தமிழின் முக்கிய 25 புத்தகங்களை தேர்வு செய்து இந்த புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் பற்றி 100 போஸ்டர் தயாரித்து 1000 இடங்களில் கண்காட்சி நடத்துவது. இந்த இடங்களில் உள்ளூர் எழுத்தாளர்களை அழைத்து கௌரவப் படுத்துவது. வாசகர்கள் தங்கள் கருத்துக்களை எழுத குறிப்பேடு வைப்பது. வாசகர்கள் ஒவ்வொருவரும் படித்து முடித்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் மேஜையில் வைத்துவிட்டு படிக்காத ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்வது. ஒவ்வொரு ஆண்டும் தமிழின் இரு முக்கிய எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டு அவர்களது எழுத்துக்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்வது அவ்வகையில் இந்த ஆண்டு கு.அழகிரிசாமி, ராஜம் கிருஷ்ணனை வாசிக்க ஏற்பாடு செய்வது. ‘உலகைக் குலுக்கிய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் தெருமுனை நாடகம், ‘புத்தகத் தேர்’ இழுப்பு, ‘புத்தக மரம்’, ‘புத்தகப் பயணம்’ மேலும் மாவட்ட வாரியாக புத்தகக் கண்காட்சிகள் என இந்நிகழ்வுகள் முடிவுசெய்யப்பட்டது. புத்தகக் காட்சி நடைபெறும் இடங்களில் வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வரும் தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களிலிருந்து பிடித்தமான பகுதியை வாசித்தல், புத்தக விமர்சனம், எனத் திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் அறிவுலகத்தைச் சார்ந்தவர்களும், வாசகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

No comments:

Post a Comment